யெகோவாவின் நிகரற்ற பண்புகளைப் போற்ற உதவுங்கள்
1 ஊழியத்தில் அடிப்படை பைபிள் சத்தியங்களை ஜனங்களுக்குக் கற்பிப்பதுடன் அவர்கள் யெகோவாவை ஒரு நபராக அறிந்துகொள்வதற்கும் அவருடைய நிகரற்ற பண்புகளைப் போற்றுவதற்கும் உதவுகிறோம். கடவுளைப் பற்றிய சத்தியத்தை நல்மனமுள்ளவர்கள் கற்றுக்கொள்ளும்போது, அது அவர்களைச் செயல்படத் தூண்டுவிக்கிறது; ‘கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடப்பதற்கு’ தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய அது அவர்களை உந்துவிக்கிறது.—கொலோ. 1:9, 10; 3:9, 10.
2 படிப்புக்கு உதவும் புதிய புத்தகம்: பைபிள் கற்பிக்கிறது புத்தகம் ஆரம்பத்திலிருந்தே யெகோவாவின் பண்புகளிடம் வாசகரது கவனத்தைத் திருப்புகிறது. முதல் அதிகாரத்திலேயே பின்வரும் கேள்விகளுக்குப் பதில் காணப்படுகிறது: கடவுளுக்கு உங்கள் மீது நிஜமாகவே அக்கறை இருக்கிறதா? கடவுள் எப்படிப்பட்டவர்? கடவுளிடம் நெருங்கி வர முடியுமா? இந்த அதிகாரம், யெகோவாவின் பரிசுத்தத்தையும் (பாரா 10), அவருடைய நீதியையும் அக்கறையையும் (பாரா 11), அவருடைய அன்பையும் (பாரா 13), அவருடைய வல்லமையையும் (பாரா 16), அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் பொறுமையையும் உண்மையையும், அவர் மன்னிக்கத் தயாராய் இருப்பதையும் (பாரா 19) சிறப்பித்துக் காட்டுகிறது. பாரா 20 பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்துரைக்கிறது: “யெகோவாவைப் பற்றி எந்தளவுக்கு அதிகமாகக் கற்றுக்கொள்கிறீர்களோ அந்தளவுக்கு நிஜமான ஒரு நபராக அவர் உங்களுக்குத் தெரிவார், அதோடு அவரை நேசிப்பதற்கும் அவரிடம் நெருங்கி வருவதற்கும் இன்னுமதிகமான காரணங்கள் இருப்பதை உணருவீர்கள்.”
3 பைபிள் மாணாக்கர்கள் யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை நாம் எப்படிப் பயன்படுத்தலாம்? கடவுளின் பண்புகளில் ஒன்றை விளக்கும் பாராவை சிந்தித்த பிறகு, “இதிலிருந்து ஒரு நபராக யெகோவாவைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொள்கிறீர்கள்?” அல்லது “தனிப்பட்ட விதத்தில் உங்களிடம் கடவுள் அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதை இது எப்படிக் காட்டுகிறது?” இத்தகைய கேள்விகளைப் படிப்பு நடத்துகையில் அவ்வப்போது பயன்படுத்தும்போது, மாணாக்கர்கள் தாங்கள் படிக்கும் விஷயங்களை ஆழ்ந்து சிந்திக்கக் கற்றுக்கொடுக்கிறோம், யெகோவாவின் நிகரற்ற பண்புகளைப் போற்றவும் அவர்களுக்கு உதவுகிறோம்.
4 மறுபார்வை பெட்டியைப் பயன்படுத்துங்கள்: ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும் “பைபிள் கற்பிப்பவை” பெட்டியிலுள்ள ஒவ்வொரு குறிப்பின் பேரிலும் சொந்த வார்த்தைகளில் பதில் சொல்வதற்கு மாணாக்கரை ஊக்குவியுங்கள். மேற்கோள் காட்டப்படாத பைபிள் வசனங்களிடம் கவனத்தைத் திருப்புங்கள். மாணாக்கரின் மனதிலுள்ளதை அறிந்துகொள்ள சில சமயங்களில் நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “இந்தக் குறிப்பின் பேரில் பைபிள் கற்பிக்கும் விஷயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” இவ்வாறு செய்யும்போது, அதிகாரத்திலுள்ள முக்கியக் குறிப்புகளை வலியுறுத்திக் காட்டுவதோடுகூட மாணாக்கர் உண்மையிலேயே எதை நம்புகிறார் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளவும் முடியும். இது யெகோவாவிடம் அவர் நெருங்கி வரத் தொடங்குவதற்கு உதவும்.