அதிமுக்கியமான வேலை
1. பிரசங்க வேலையை நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம் என்றால் என்னென்ன தியாகங்களைச் செய்யத் தூண்டப்படுவோம்?
1 பிரசங்க வேலைக்காக நம்முடைய நேரம், சக்தி, பொருள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று நாம் ஏன் அடிக்கடி ஊக்குவிக்கப்படுகிறோம்? ஏனென்றால், இதைவிட முக்கியமான வேலை வேறு எதுவும் இல்லை! மறுபடியும் செய்யப்படாத இந்த வேலையினால் கிடைக்கிற பெருமளவு பலன்களைச் சிந்தித்துப் பார்த்தோம் என்றால் இதில் ஈடுபடுவதற்கான நம் ஆசை அதிகரிக்கும்.—அப். 20:24.
2. யெகோவாவின் மகத்தான பெயரைப் பரிசுத்தப்படுத்த பிரசங்க வேலை எப்படி உதவுகிறது?
2 யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறது: இயேசு கிறிஸ்துவினால் ஆளப்படுகிற யெகோவாவுடைய அரசாங்கம் எல்லா மனித அரசாங்கங்களையும் நீக்கிவிடும்; அதுமட்டுமல்ல, மனிதகுலத்தின் பிரச்சினைகளையெல்லாம் அடியோடு அகற்றிவிடும்; நாம் செய்கிற பிரசங்க வேலையின் மையக் கருத்து இதுதான். (மத். 6:9, 10) நோயிலிருந்தும் மரணத்திலிருந்தும் யெகோவாவினால் மட்டுமே நம்மை விடுவிக்க முடியும் என்பதால் பிரசங்க வேலை அவருக்குப் புகழ் சேர்க்கிறது. (ஏசா. 25:8; 33:24) நாம் அவருடைய பெயரைத் தாங்கிய மக்களாக இருப்பதால், நம்முடைய நன்னடத்தையும் ஊழியத்தில் நாம் காட்டுகிற பக்திவைராக்கியமும் அவருக்கு மகிமை சேர்க்கின்றன. (1 பே. 2:12) ஆகவே, உன்னதப் பேரரசரான யெகோவாவின் பெயரை உலகெங்கும் அறிவிப்பது நமக்கு எவ்வளவாய்த் திருப்தியளிக்கிறது!—சங். 83:17.
3. நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு எப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
3 உயிர்களைப் பாதுகாக்கிறது: ‘ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்றே யெகோவா விரும்புகிறார்.’ (2 பே. 3:9) என்றாலும், யெகோவாவின் பார்வையில் எப்படிப்பட்ட நடத்தை சரியானது, எப்படிப்பட்ட நடத்தை தவறானது என்பதை யாராவது கற்பிக்காவிட்டால் மக்கள் எப்படித் தெரிந்துகொள்வார்கள்? (யோனா 4:11; ரோ. 10:13-15) அவர்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு, கெட்ட பழக்கங்களை விட்டுவிடும்போது, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது. (மீ. 4:1-4) அதுமட்டுமல்ல, முடிவில்லா வாழ்வைப் பெறுகிற நம்பிக்கையும் அவர்களுக்குக் கிடைக்கிறது. பிரசங்க வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் நாம் மும்முரமாய் ஈடுபடும்போது நாமும் மீட்படைவோம், நம்முடைய போதனைக்குச் செவிகொடுப்பவர்களையும் மீட்படையச் செய்வோம். (1 தீ. 4:16) இந்த மிக முக்கியமான வேலையில் ஈடுபடுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
4. பிரசங்கித்துச் சீடராக்கும் வேலைக்கு நாம் ஏன் முதலிடம் கொடுக்க வேண்டும்?
4 சீக்கிரத்தில் வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தின்போது அநீதியான இந்த உலகத்திற்குத் திடீர் முடிவு வரும். யெகோவாவை வணங்குகிறவர்கள் மட்டுமே தப்பிப்பிழைப்பார்கள். எனவே, பிரசங்கித்துச் சீடராக்கும் வேலையே இன்று செய்யப்படுகிற மிக முக்கியமான, அவசரமான, பயனளிக்கிற வேலையாகும். இந்த வேலைக்கு நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்போமாக!—மத். 6:33.