பைபிள் படிப்பை நடித்துக் காட்டியிருக்கிறீர்களா?
வீட்டுக்காரரிடம், பைபிள் படிப்பு ஏற்பாடு பற்றி சொல்லும்போது சிலர் அதில் ஆர்வம் காட்டாதிருக்கலாம் அல்லது தங்களுடைய சர்ச்சில் ஏற்கெனவே பைபிள் படிப்பு நடத்தப்படுவதாகச் சொல்லலாம். அவர்கள், நாம் நடத்தும் பைபிள் படிப்பை சர்ச்சில் நடத்தப்படுகிற பைபிள் படிப்போடு ஒப்பிடுகிறார்கள்; அதனால், நாம் நடத்துகிற பைபிள் படிப்பு எவ்வளவு அறிவுப்பூர்வமானது, சந்தோஷத்தை அளிக்கக்கூடியது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. எனவே, பைபிள் படிப்பு ஏற்பாடு பற்றி வெறுமனே சொல்வதற்கு பதிலாக அதைச் சில நிமிடங்களில் நடித்துக் காட்டுங்கள். உதாரணத்திற்கு, “நான் நல்லா சமைப்பேன், நான் போய் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வருகிறேன்” என்று சொல்வதற்கு பதிலாக அப்போதே அதை ருசித்துப் பார்க்க உதவுங்கள். ஜனவரி 2006 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 6-லுள்ள ஒர் அணுகுமுறையைப் பயன்படுத்தி சில நிமிடங்களிலேயே பைபிள் படிப்பு நடத்துவதை இப்படிச் செய்து காட்டலாம்.
நீங்கள் சொல்லும் செய்தியில் ஒருவர் உண்மையாகவே ஆர்வம் காட்டினால், அவரிடம் இவ்வாறு சொல்லலாம்: “இந்த வார்த்தைகள் என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று நினைக்கிறீர்களா?” [ஏசாயா 33:24-ஐ வாசித்துவிட்டு, பதில் அளிக்க அனுமதியுங்கள்.] இந்த விஷயத்தின் பேரில் ஆர்வமூட்டும் ஒன்றைக் காட்டுகிறேன்.” வீட்டுக்காரரிடம் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பக்கம் 36-லுள்ள பாரா 22-ஐ பார்க்க சொல்லுங்கள். அந்தப் பக்கத்தின் கீழிருக்கும் கேள்வியை வாசித்த பின்பு பாராவை நீங்கள் வாசிக்கையில் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்கும்படி வீட்டுக்காரரிடம் சொல்லுங்கள். மீண்டும் அந்தக் கேள்வியைக் கேளுங்கள், அதற்கு அவர் சொல்லும் பதிலைக் கவனியுங்கள். அந்தப் பாராவிலுள்ள மற்றொரு வசனத்தையும் அவரோடு சேர்ந்து வாசியுங்கள். பின்பு, வேறொரு கேள்வியைக் கேட்டு அதற்கு அடுத்த முறை பதிலளிப்பதாகச் சொல்லுங்கள். மீண்டும் எப்போது சந்திக்கலாம் என்பதைக் கேளுங்கள். இப்போது நீங்கள் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்துவிட்டீர்கள்!