‘ஆ! கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானது!’
“ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள் எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நியாயத்தீர்ப்புகள் ஆராய்ந்தறிய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!”—ரோ. 11:33.
1. ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பாக்கியம் எது?
உங்களுக்கு இதுவரை கிடைத்த பாக்கியங்களிலேயே மிகப் பெரிய பாக்கியம் எது? நீங்கள் சபையில் பெற்ற ஏதோவொரு நியமிப்போ, பள்ளியில் அல்லது வேலை செய்யும் இடத்தில் பெற்ற ஏதோவொரு வெகுமதியோ முதலில் உங்கள் மனதிற்கு வரலாம். ஆனால், ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்களாகிய நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பாக்கியம், ஒரே உண்மைக் கடவுளாகிய யெகோவாவிடமுள்ள நெருங்கிய பந்தமாகும். இந்தப் பந்தத்தின் காரணமாக நாம் ‘கடவுளால் அறியப்பட்டிருக்கிறோம்.’—1 கொ. 8:3; கலா. 4:9.
2. யெகோவாவை அறிந்துகொள்வதும் அவரால் அறியப்பட்டிருப்பதும் ஏன் மிகப் பெரிய பாக்கியம்?
2 யெகோவாவை அறிந்துகொள்வதும் அவரால் அறியப்பட்டிருப்பதும் ஏன் மிகப் பெரிய பாக்கியம்? ஏனென்றால், அவர் இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக உயர்ந்தவர்; அதோடு, அவரது அன்புக்குரியவர்களுக்கு அரணாகத் திகழ்பவர். அவரது சக்தியின் தூண்டுதலால் நாகூம் தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.” (நாகூ. 1:7; சங். 1:6) சொல்லப்போனால், உண்மைக் கடவுளையும் அவரது மகனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொண்டால்தான் நமக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்.—யோவா. 17:3.
3. கடவுளை அறிந்துகொள்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
3 கடவுளை அறிந்துகொள்வதற்கு அவருடைய பெயரைத் தெரிந்துகொள்வது மட்டுமே போதாது. ஒரு நண்பரைத் தெரிந்துகொள்வதுபோல் அவரைத் தெரிந்துகொள்ள வேண்டும்; ஆம், அவருடைய விருப்புவெறுப்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப வாழ்வது, நாம் அவரை நன்றாக அறிந்திருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான முக்கிய வழியாகும். (1 யோ. 2:4) அதேசமயத்தில், யெகோவாவை அறிந்துகொள்ள நாம் உண்மையிலேயே விரும்பினால் வேறொன்றைச் செய்வதும் அவசியம். அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், அதை எப்படிச் செய்திருக்கிறார், ஏன் அப்படிச் செய்திருக்கிறார் என்ற விவரங்களையும் அலசி ஆராய வேண்டும். யெகோவாவுடைய நோக்கங்களை நாம் மேன்மேலும் புரிந்துகொள்ளும்போது, ‘கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானது!’ என மேன்மேலும் வியப்போம்.—ரோ. 11:33.
நோக்கமுள்ள கடவுள்
4, 5. (அ) பைபிளில் ‘நோக்கம்’ என்ற வார்த்தை எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) ஒரு நோக்கத்தைப் பல்வேறு வழிகளில் எப்படி அடையலாம் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.
4 யெகோவா நோக்கமுள்ள ஒரு கடவுள்; அவருடைய ‘நித்திய நோக்கத்தை’ பற்றி பைபிள் சொல்கிறது. (எபே. 3:10, 11) அப்படியானால், நோக்கம் என்றால் என்ன? பைபிளில் ‘நோக்கம்’ என்ற வார்த்தை, பல்வேறு வழிகளில் அடைய முடிந்த ஒரு குறிப்பிட்ட இலக்கை, அதாவது குறிக்கோளை, அர்த்தப்படுத்துகிறது.
5 இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒருவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போக விரும்பலாம். அந்த இடத்திற்குப் போவது அவருடைய குறிக்கோளாக, அதாவது நோக்கமாக, ஆகிறது. அங்கு பல்வேறு வாகனங்களிலும் பல்வேறு வழிகளிலும் போக அவரால் முடியலாம். அவற்றில் ஏதோவொரு வழியில் அவர் போய் கொண்டிருக்கையில், திடீரென வானிலை சரியில்லாமல் போகலாம், போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம், அல்லது சாலை மூடப்பட்டிருக்கலாம்; ஆகவே, அவர் வேறு வழியில் போக வேண்டியிருக்கலாம். ஆனால், எப்படிப்பட்ட மாற்றங்களை அவர் செய்ய வேண்டியிருந்தாலும், போக வேண்டிய இடத்திற்குக் கடைசியாகப் போய்ச் சேரும்போது அவருடைய குறிக்கோளை அடைந்திருப்பார்.
6. யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற தம் வழியை மாற்றிக்கொள்கிறார் என்பதற்கு உதாரணம் தருக.
6 யெகோவா தம்முடைய நித்திய நோக்கத்தை அடைய அதேபோல் தேவைக்கேற்ப தம் வழியை மாற்றிக்கொள்கிறார். புத்திக்கூர்மையுள்ள தமது படைப்புகளுக்குச் சுயமாய்த் தீர்மானிக்கும் சுதந்திரத்தைத் தாம் வழங்கியிருப்பதை அவர் கருத்தில் கொள்கிறார்; ஆகவே, தமது நோக்கத்தை நிறைவேற்ற உடனடியாகத் தம் வழியை மாற்றிக்கொள்கிறார். உதாரணத்திற்கு, முதல் மனித ஜோடியிடம், ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள்’ என்று அவர் சொன்னார். (ஆதி. 1:28) ஏதேன் தோட்டத்தில் அந்த மனித ஜோடி கலகம் செய்தபோது, அவருடைய அந்த ஆரம்ப நோக்கம் முறியடிக்கப்பட்டதா? இல்லவே இல்லை! அந்தப் புதிய சூழ்நிலையைக் கையாள யெகோவா உடனடியாகச் செயல்பட்டார்; ஆம், தமது நோக்கத்தை அடைய வேறொரு “வழியில்” சென்றார். அந்தக் கலகத்தால் உண்டான சீரழிவைச் சரிப்படுத்த ஒரு “வித்து,” அதாவது சந்ததி, தோன்றுமென அவர் முன்னறிவித்தார்.—ஆதி. 3:15; எபி. 2:14-17; 1 யோ. 3:8.
7. யாத்திராகமம் 3:14-ல் யெகோவா தம்மைப் பற்றிச் சொல்லியிருக்கும் விவரிப்பிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
7 யெகோவா புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தம் வழிகளை மாற்றிக்கொள்ளும் திறன்படைத்தவர்; இந்தத் திறன், அவரைப் பற்றி அவரே சொன்ன விவரிப்புக்குக் கனக் கச்சிதமாகப் பொருந்துகிறது. மோசே, தான் பெற்ற நியமிப்பை நிறைவேற்றுவதில் வரவிருந்த சிக்கல்களைச் சொன்னபோது யெகோவா அவரிடம், “நான் என்னவாக ஆவேனோ அவ்வாறே ஆவேன்” என்ற உறுதியளித்தார்; அதோடு, “நீ இஸ்ரவேலர்களிடம், ‘அவ்வாறே ஆவேன் என்பவர் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று சொல்ல வேண்டும்” என்றார். (யாத். 3:14, NW) ஆம், யெகோவா தம் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற என்னவாக ஆக வேண்டுமோ அவ்வாறே ஆகும் திறன்பெற்றிருக்கிறார்! இந்த உண்மையைத்தான் ரோமர் 11-ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலன் பவுல் ஓர் உதாரணத்துடன் அழகாக விவரிக்கிறார். அங்கே, ஓர் அடையாளப்பூர்வ ஒலிவ மரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த உதாரணத்தை நாம் சற்று அலசிப் பார்த்தால், யெகோவாவுடைய ஞானத்தின் ஆழத்தை இன்னும் உயர்வாக மதிக்க ஆரம்பிப்போம்; நாம் பரலோகத்திற்குச் செல்லும் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் சரி, பூமியில் முடிவில்லாமல் வாழும் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் சரி, இதுவே உண்மை.
முன்னறிவிக்கப்பட்ட சந்ததி குறித்த யெகோவாவின் நோக்கம்
8, 9. (அ) ஒலிவ மர உதாரணத்தைப் புரிந்துகொள்ள என்ன நான்கு உண்மைகள் நமக்கு உதவும்? (ஆ) எந்தக் கேள்விக்கான பதில், யெகோவா தம் நோக்கத்தை நிறைவேற்ற வளைந்துகொடுக்கிறார் என்பதைக் காட்டும்?
8 ஒலிவ மர உதாரணத்தை நாம் புரிந்துகொள்வதற்கு முன்பு, நான்கு உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும்; அவை, முன்னறிவிக்கப்பட்ட சந்ததி குறித்த யெகோவாவுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தில் உட்பட்டுள்ள உண்மைகள். முதலாவதாக, அவர் ஆபிரகாமிடம், “உன் சந்ததியின் மூலம் பூமியிலுள்ள சகல தேசத்தாரும் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள்” என்று வாக்குறுதி தந்தார். (ஆதி. 22:17, 18, NW) இரண்டாவதாக, ஆபிரகாமின் வம்சத்தில் வந்த இஸ்ரவேல் தேசத்தாருக்கு, ‘குருத்துவ ராஜ்யமாக’ ஆகும் வாய்ப்பைத் தந்தார். (யாத். 19:5, 6, NW) மூன்றாவதாக, அந்த இஸ்ரவேலரில் பெரும்பாலோர் மேசியாவை ஏற்றுக்கொள்ளாதபோது, ‘குருத்துவ ராஜ்யத்தை’ உருவாக்க யெகோவா வேறு நடவடிக்கைகளை எடுத்தார். (மத். 21:43; ரோ. 9:27-29) நான்காவதாக, ஆபிரகாமுடைய சந்ததியின் முக்கியப் பாகமாக இயேசு இருக்கிறபோதிலும், அதன் பாகமாக ஆகும் பாக்கியத்தை மற்றவர்களுக்கும் கொடுத்தார்.—கலா. 3:16, 29.
9 இந்த நான்கு உண்மைகளின் அடிப்படையில், வெளிப்படுத்துதல் புத்தகம் கூடுதலான விவரத்தைச் சொல்கிறது; அதாவது, மொத்தம் 1,44,000 பேர் இயேசுவுடன் சேர்ந்து ராஜாக்களாகவும் குருமார்களாகவும் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வார்கள் எனச் சொல்கிறது. (வெளி. 14:1-4) அவர்களை ‘இஸ்ரவேல் வம்சத்தினர்’ என்றும் குறிப்பிடுகிறது. (வெளி. 7:4-8) அப்படியென்றால், அந்த 1,44,000 பேரும் இஸ்ரவேலர்களா, அதாவது யூதர்களா? இதற்கான பதில், யெகோவா தம் நோக்கத்தை நிறைவேற்ற எந்தளவு வளைந்துகொடுத்து தம் வழியை மாற்றிக்கொள்கிறார் என்பதைக் காட்டும். இந்தப் பதிலைக் கண்டுபிடிக்க அப்போஸ்தலன் பவுல் ரோமர்களுக்கு எழுதிய கடிதம் நமக்கு எப்படி உதவுகிறதென இப்போது பார்க்கலாம்.
‘குருத்துவ ராஜ்யம்’
10. என்ன விசேஷ வாய்ப்பு இஸ்ரவேலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது?
10 முன்பு குறிப்பிட்டபடி, ‘குருத்துவ ராஜ்யமாகவும் பரிசுத்த தேசமாகவும்’ ஆகும் விசேஷ வாய்ப்பு இஸ்ரவேலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. (ரோமர் 9:4, 5-ஐ வாசியுங்கள்.) வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி வந்தபோது என்னவானது? ஆபிரகாமுடைய சந்ததியின் இரண்டாம் பாகமான அடையாளப்பூர்வ இஸ்ரவேலரில் அனைவரும், அதாவது 1,44,000 பேரும், பூர்வ இஸ்ரவேல் தேசத்திலிருந்து வந்தவர்களா?
11, 12. (அ) பரலோக ‘குருத்துவ ராஜ்யத்தின்’ அங்கத்தினர்கள் எப்போதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், அச்சமயத்திலிருந்த யூதர்களில் பெரும்பாலோர் என்ன செய்தார்கள்? (ஆ) ஆபிரகாமுடைய சந்ததியாக ஆகவிருந்தவர்களின் ‘எண்ணிக்கையை’ யெகோவா எவ்வாறு ‘நிறைவு’ செய்தார்?
11 ரோமர் 11:7-10-ஐ வாசியுங்கள். ஒரு தேசமாக, முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூதர்கள் இயேசுவை நிராகரித்துவிட்டார்கள். ஆகவே, ஆபிரகாமின் சந்ததியாக ஆகும் விசேஷ வாய்ப்பை இழந்தார்கள். என்றாலும், பரலோக ‘குருத்துவ ராஜ்யத்தின்’ அங்கத்தினர்கள் கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாள்முதல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நல்மனமுள்ள யூதர்களில் சிலர் தங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். சில ஆயிரங்களே இருந்த அவர்கள், முழு யூத தேசத்தோடு ஒப்பிட மிகச் சொற்பமானவர்களாக, அதாவது ‘மீந்திருப்பவர்களாக’ இருந்தார்கள்.—ரோ. 11:5.
12 என்றாலும், ஆபிரகாமுடைய சந்ததியாக ஆகவிருந்தவர்களின் ‘எண்ணிக்கையை’ யெகோவா எவ்வாறு ‘நிறைவு’ செய்தார்? (ரோ. 11:12, 25) அப்போஸ்தலன் பவுல் தந்த பதிலைக் கவனியுங்கள்: “கடவுளுடைய வார்த்தை நிறைவேறாமல் போய்விட்டதென அர்த்தமாகாது. ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தில் தோன்றுகிற அனைவரும் உண்மையில் [அடையாளப்பூர்வ] ‘இஸ்ரவேலர்’ அல்ல. அதேபோல், அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் அனைவரும் உண்மையில் அவருடைய [அடையாளப்பூர்வ] பிள்ளைகளும் அல்ல; . . . ஆகவே, இயல்பான முறைப்படி ஆபிரகாமுக்குப் பிறந்த பிள்ளைகள் கடவுளுடைய பிள்ளைகளாக எண்ணப்படுவதில்லை, வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகளே ஆபிரகாமின் சந்ததியாக எண்ணப்படுகிறார்கள்.” (ரோ. 9:6-8) ஆகவே, வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி ஆபிரகாமின் வம்சத்தாராகத்தான் இருக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கவில்லை.
அடையாளப்பூர்வ ஒலிவ மரம்
13. பின்வருபவை எதை அல்லது யாரைக் குறிக்கின்றன: (அ) ஒலிவ மரம், (ஆ) அதன் வேர், (இ) அதன் அடிமரம், (ஈ) அதன் கிளைகள்?
13 அப்போஸ்தலன் பவுல், ஆபிரகாமுடைய சந்ததியாக ஆகவிருந்தவர்களை ஓர் அடையாளப்பூர்வ ஒலிவ மரத்தின் கிளைகளுக்கு ஒப்பிட்டார்.a (ரோ. 11:21) இந்தத் தோட்டத்து ஒலிவ மரம், ஆபிரகாமிய ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தைக் குறிக்கிறது. இந்த மரத்தின் வேர் அர்ப்பணிக்கப்பட்டதாக, அதாவது பரிசுத்தமானதாக, இருக்கிறது; அது, அடையாளப்பூர்வ இஸ்ரவேலரை உருவாக்குபவரான யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. (ஏசா. 10:20; ரோ. 11:16) இதன் அடிமரம், ஆபிரகாமுடைய சந்ததியின் முதல் பாகமான இயேசுவைக் குறிக்கிறது. இதன் கிளைகள், ஆபிரகாமுடைய சந்ததியின் இரண்டாம் பாகமான 1,44,000 பேரைக் குறிக்கின்றன.
14, 15. தோட்டத்து ஒலிவ மரத்திலிருந்து யார் ‘வெட்டப்பட்டார்கள்,’ அவர்களுக்குப் பதிலாக யார் அதில் ஒட்ட வைக்கப்பட்டார்கள்?
14 ஒலிவ மர உதாரணத்தில், “வெட்டப்பட்ட” கிளைகள் இயேசுவை நிராகரித்த யூதர்களைக் குறிக்கின்றன. (ரோ. 11:17) இயேசுவை நிராகரித்ததால் அவர்கள் ஆபிரகாமுடைய சந்ததியின் பாகமாக ஆகும் வாய்ப்பை இழந்தார்கள். அப்படியென்றால், அவர்களுடைய இடத்தை யார் நிரப்பினார்கள்? ஆபிரகாமுடைய வம்சத்தினரென மார்தட்டிக்கொண்ட அவர்களுக்கு, அது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால், யெகோவா விருப்பப்பட்டால் கற்களிலிருந்தும்கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்குவாரென யோவான் ஸ்நானகர் ஏற்கெனவே அவர்களை எச்சரித்திருந்தார்.—லூக். 3:8.
15 அப்படியென்றால், யெகோவா தம் நோக்கத்தை நிறைவேற்ற என்ன செய்தார்? தோட்டத்து ஒலிவ மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளைகளுக்குப் பதிலாகக் காட்டு ஒலிவ மரத்தின் கிளைகள் ஒட்ட வைக்கப்பட்டதாக பவுல் விளக்குகிறார். (ரோமர் 11:17, 18-ஐ வாசியுங்கள்.) ஆகவே, பரலோக நம்பிக்கைகொண்ட புறதேசக் கிறிஸ்தவர்கள் இந்த ஒலிவ மரத்தில் அடையாளப்பூர்வமாக ஒட்ட வைக்கப்பட்டார்கள்; உதாரணத்திற்கு, ரோமாபுரிச் சபையிலிருந்த சிலர் அப்படி ஒட்ட வைக்கப்பட்டார்கள். இவ்வாறு, அவர்கள் ஆபிரகாமுடைய சந்ததியின் பாகமாக ஆனார்கள். ஆரம்பத்தில் அவர்கள் காட்டு ஒலிவ மரத்தின் கிளைகளைப் போல் இருந்தார்கள்; அதாவது, இந்த விசேஷ ஒப்பந்தத்தின் பாகமாக ஆகும் வாய்ப்பே இல்லாதிருந்தார்கள். ஆனால் அடையாளப்பூர்வ யூதர்களாக ஆகும் வாய்ப்பை யெகோவா அவர்களுக்குத் தந்தார்.—ரோ. 2:28, 29.
16. அடையாளப்பூர்வ புதிய தேசம் உருவானதை அப்போஸ்தலன் பேதுரு எவ்வாறு விளக்குகிறார்?
16 அந்தச் சூழ்நிலையை அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு விளக்குகிறார்: “எனவே, விசுவாசிகளாக இருக்கிற உங்களுக்கு [புறதேசக் கிறிஸ்தவர்கள் உட்பட, அடையாளப்பூர்வ இஸ்ரவேலருக்கு] அவர் [இயேசு கிறிஸ்து] மதிப்புமிக்கவராக இருக்கிறார்; ஆனால் விசுவாசிகளாக இல்லாதவர்களுக்கு, ‘கட்டிடம் கட்டுகிறவர்களால் ஒதுக்கித்தள்ளப்பட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது.’ அதோடு, ‘தடைக்கல்லாகவும், தடுக்கிவிழ வைக்கும் கற்பாறையாகவும் ஆனது.’ . . . நீங்களோ இருளிலிருந்து தமது அற்புதமான ஒளியின் பக்கம் உங்களை அழைத்தவருடைய ‘மகத்துவங்களை எங்கும் அறிவிப்பதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருடைய விசேஷ சொத்தாகவும்’ இருக்கிறீர்கள். முன்பு நீங்கள் கடவுளுடைய மக்களாக இருக்கவில்லை, இப்போதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்பு நீங்கள் இரக்கம் பெறாதவர்களாக இருந்தீர்கள், இப்போதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.”—1 பே. 2:7-10.
17. ‘இயற்கைக்கு மாறான’ ஒன்றை யெகோவா எப்படிச் செய்தார்?
17 யாரும் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத ஒன்றை யெகோவா செய்தார். பவுல் விளக்கியபடி, அது ‘இயற்கைக்கு மாறானதாக’ இருந்தது. (ரோ. 11:24) எப்படி? ஒரு காட்டு ஒலிவ மரக் கிளையைத் தோட்டத்து ஒலிவ மரத்தில் ஒட்ட வைப்பது விநோதமானதாக, ஏன், இயற்கைக்கு மாறானதாகக்கூட தோன்றலாம்; ஆனால், அதைத்தான் முதல் நூற்றாண்டிலிருந்த சில விவசாயிகள் செய்தார்கள்.b அதேபோல், யெகோவாவும் அசாதாரணமான ஒன்றைச் செய்தார். அதாவது, யார் நல்ல கனி தர முடியாதென யூதர்கள் நினைத்தார்களோ அதே புறதேசத்தாரை அவர் நல்ல கனி தரும் ‘மக்களின்’ பாகமாக ஆக்கினார். (மத். 21:43) அடையாளப்பூர்வ ஒலிவ மரத்தில் ஒட்ட வைக்கப்படும் வாய்ப்பை விருத்தசேதனம் செய்யப்படாத புறதேசத்தாருக்கு கி.பி. 36 முதற்கொண்டு வழங்கினார்; அந்த வருடத்தில்தான் ஒரு புறதேசத்தார் முதன்முதலாக கடவுளுடைய சக்தியைப் பெற்று கிறிஸ்தவரானார்; அவர்தான் கொர்நேலியு.—அப். 10:44-48.c
18. கி.பி. 36-க்குப்பின் யூதர்களுக்கு என்ன வாய்ப்பு இருந்தது?
18 அப்படியென்றால், கி.பி. 36-க்குப்பின், ஆபிரகாமுடைய சந்ததியின் பாகமாக ஆகும் வாய்ப்பு யூதர்கள் யாருக்குமே கிடைக்கவில்லையா? அப்படிச் சொல்ல முடியாது. பவுல் இவ்வாறு விளக்கினார்: “அவர்கள் [யூதர்கள்] விசுவாசமில்லாமல் நடப்பதை விட்டுவிட்டு விசுவாசம் வைக்க ஆரம்பித்தால் அவர்களும் ஒட்ட வைக்கப்படுவார்கள்; அவர்களைக் கடவுளால் மறுபடியும் ஒட்ட வைக்க முடியும். காட்டு ஒலிவ மரத்திலிருந்த நீங்களே வெட்டப்பட்டு, தோட்டத்து ஒலிவ மரத்தில் இயற்கைக்கு மாறாக ஒட்ட வைக்கப்பட்டீர்கள் என்றால், இயற்கையாக வளர்ந்த கிளைகளாகிய அவர்கள் தங்களுடைய மரத்திலேயே ஒட்ட வைக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்!”d—ரோ. 11:23, 24.
“இஸ்ரவேலர் எல்லாரும் மீட்புப் பெறுவார்கள்”
19, 20. யெகோவா எதையெல்லாம் நிறைவேற்றப் போகிறார்?
19 ஆம், “கடவுளுடைய இஸ்ரவேலர்” சம்பந்தப்பட்ட யெகோவாவின் நோக்கம் அருமையான விதத்தில் நிறைவேறி வருகிறது. (கலா. 6:16) பவுல் சொன்னபடி, “இஸ்ரவேலர் எல்லாரும் மீட்புப் பெறுவார்கள்.” (ரோ. 11:26) யெகோவாவுடைய குறித்த காலத்தில், “இஸ்ரவேலர் எல்லாரும்,” அதாவது அடையாளப்பூர்வ இஸ்ரவேலரின் மொத்த எண்ணிக்கையினரும், பரலோகத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவிப்பார்கள். யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதைத் தடுக்க யாராலும் முடியாது!
20 முன்னறிவிக்கப்பட்டபடி, ஆபிரகாமுடைய சந்ததியான இயேசு கிறிஸ்துவும் 1,44,000 பேரும் “உலகத்தாருக்கு” ஆசீர்வாதங்களைப் பொழிவார்கள். (ரோ. 11:12; ஆதி. 22:18) இந்த ஏற்பாட்டினால் கடவுளுடைய மக்கள் அனைவருமே நன்மை பெறுவார்கள். ஆக, யெகோவாவுடைய நித்திய நோக்கத்தின் நிறைவேற்றத்தைக் குறித்துச் சிந்திக்கையில், “ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள் எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை!” என்று நம்மால் வியக்காமல் இருக்க முடியுமா?—ரோ. 11:33.
[அடிக்குறிப்புகள்]
a இந்த அடையாளப்பூர்வ ஒலிவ மரம், பூர்வ இஸ்ரவேலருக்குப் படமாக இருக்கவில்லை. பூர்வ இஸ்ரவேலரில் சிலர் ராஜாக்களாகவும் சிலர் குருமார்களாகவும் ஆனபோதிலும், இஸ்ரவேல் தேசம் ஒரு குருத்துவ ராஜ்யமாக ஆகவில்லை. இஸ்ரவேலின் ராஜாக்கள் குருமார்களாகச் சேவிக்கக் கூடாதெனத் திருச்சட்டம் சொன்னது. ஆகவே, பூர்வ இஸ்ரவேலர் இந்த அடையாளப்பூர்வ ஒலிவ மரத்திற்குப் படமாக இருக்கவில்லை. ஒரு ‘குருத்துவ ராஜ்யத்தை’ உருவாக்க வேண்டுமென்ற கடவுளுடைய நோக்கம் எவ்வாறு அடையாளப்பூர்வ இஸ்ரவேலரில் நிறைவேறுகிறது என்பதைத்தான் பவுல் இந்த உதாரணத்தின் மூலம் விளக்குகிறார். இந்த விளக்கம், ஆங்கில காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1983 பிரதியில், பக்கங்கள் 14-19-ல் கொடுக்கப்பட்ட விளக்கத்தை மாற்றீடு செய்கிறது.
b “காட்டு ஒலிவ மரக் கிளைகள் ஒட்ட வைக்கப்பட்டது எதற்காக?” என்ற பெட்டியைப் பாருங்கள்.
c அடையாளப்பூர்வ புதிய தேசத்தின் பாகமாக ஆகும் வாய்ப்பு யூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட அந்த மூன்றரை வருடக் காலப்பகுதியின் முடிவில் இது நடந்தது. 70 வார வருடங்களைப் பற்றிய தீர்க்கதரிசனம் இதைப் பற்றி முன்னறிவித்தது.—தானி. 9:27.
d ரோமர் 11:24-ல் “தோட்டத்து” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை, “நல்ல” அல்லது “அருமையான” என்ற அர்த்தத்தைத் தருகிறது. என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதை நிறைவேற்றுகிற ஒன்றைக் குறிக்க அந்த வார்த்தை முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்றும் விதத்திலிருந்து அவரைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?
• ரோமர் 11-ஆம் அதிகாரத்தில் காணப்படும் பின்வரும் வார்த்தைகள் எதை அல்லது யாரைக் குறிக்கின்றன:
ஒலிவ மரம்
அதன் வேர்கள்
அதன் அடிமரம்
அதன் கிளைகள்
• கிளைகளை ஒட்ட வைப்பது ஏன் ‘இயற்கைக்கு மாறானதாக’ இருந்தது?
[பக்கம் 24-ன் பெட்டி/படம்]
காட்டு ஒலிவ மரக் கிளைகள் ஒட்ட வைக்கப்பட்டது எதற்காக?
▪ லூஷியஸ் ஜூன்யஸ் மாடரேட்டஸ் கால்யமெலா என்பவர் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ரோமப் போர்வீரர், விவசாயி. நாட்டுப்புற வாழ்க்கையைப் பற்றியும் விவசாயத்தைப் பற்றியும் அவர் எழுதிய 12 புத்தகங்கள் பெரும் புகழ் பெற்றவை.
அவர் தனது ஐந்தாவது புத்தகத்தில் இந்தப் பூர்வ பழமொழியைக் குறிப்பிட்டிருந்தார்: “ஒலிவத் தோட்டத்தை உழுகிறவன், கனி தரும்படி கேட்கிறான்; அதற்கு உரமிடுகிறவன், கனிக்காகக் கெஞ்சிக் கூத்தாடுகிறான்; அதைக் கத்தரித்துவிடுகிறவனோ, கனிகள் காய்த்துக் குலுங்கும்படிச் செய்கிறான்.”
செழித்தோங்கி வளர்ந்தாலும் கனி தராமல் போகும் மரங்களைப் பற்றி விவரித்த பிறகு அவர் பின்வரும் முறையைச் சிபாரிசு செய்தார்: “ஒரு கருவியால் துளைபோட்டு, அந்தத் துளையில் ஒரு காட்டு ஒலிவ மரத்தின் பசுங்கிளையைத் திணித்து வைக்க வேண்டும்; அதன்பின், கனிதரும் ஒரு கிளை இணைக்கப்பட்டிருப்பதால் அந்த மரம் ஏராளமாகக் கனி கொடுக்க ஆரம்பித்துவிடும்.”
[பக்கம் 23-ன் படம்]
அடையாளப்பூர்வ ஒலிவ மரத்தின் உதாரணம் உங்களுக்குப் புரிகிறதா?