உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w14 6/15 பக். 3-6
  • தடைகளைத் தகர்த்தெறியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தடைகளைத் தகர்த்தெறியுங்கள்
  • கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்
  • “பாதையைச் சரிப்படுத்து”
  • தொடர்ந்து முன்னேறுங்கள்
  • இளம் பிள்ளைகளே, ஆன்மீக இலக்குகள்மீது கவனமாக இருக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • இளைஞர்களே, உங்கள் மகத்தான சிருஷ்டிகரை இப்போதே நினையுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • ஆவிக்குரிய இலக்குகளை நாடுவதற்கு உற்சாகப்படுத்துங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • ஆன்மீக இலக்குகளால் உங்கள் படைப்பாளருக்கு மகிமை சேருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
w14 6/15 பக். 3-6
அநேக தடைகள் உள்ள பாதை

தடைகளைத் தகர்த்தெறியுங்கள்

பாபிலோனிலிருந்து கி.மு. 537-ல் யெகோவாவுடைய மக்கள் தாயகம் திரும்பினார்கள். அப்போது, “ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்” என்று அவர்களிடம் யெகோவா சொன்னார். (ஏசா. 62:10) யூதர்கள் இதை எப்படிச் செய்திருப்பார்கள்? ஒருவேளை சிலர் மட்டும் முதலில் சென்று அந்தப் பாதையில் இருக்கும் கற்களை அப்புறப்படுத்தியிருக்கலாம், மேடு பள்ளங்களையும் கரடுமுரடான பாதைகளையும் சரிசெய்திருக்கலாம். அவர்கள் அப்படிச் செய்தது பின்னால் வந்தவர்கள் சுலபமாக நடக்க உதவியிருக்கும்.

ஆன்மீகப் பாதையில் பயணிக்கும்போதும் இதேபோல்தான் செய்ய வேண்டும். தம்முடைய ஊழியர்கள் எந்தத் தடையும் இல்லாமல் ஆன்மீக பாதையில் முன்னேற வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். “உன் பாதையைச் சரிப்படுத்து; அப்போது நீ வெற்றி பெறுவாய்” என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (நீதி. 4:26, NW) இந்த அறிவுரை இளைஞர்கள், பிள்ளைகள் என எல்லோருக்கும் பொருந்தும்.

சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்

‘நீ பெரிய ஆளா வருவ,’ ‘உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.’ இதுபோன்ற வார்த்தைகளை இளைஞர்களிடம் அநேகர் சொல்வதுண்டு. இளைஞர்கள் துடிப்புடன் செயல்படுகிறார்கள், எதையும் சுலபமாகக் கற்றுக்கொள்கிறார்கள்; வெற்றி பெறும் ஆசை அவர்களுக்குள் பற்றியெரிகிறது. “வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 20:29) தங்கள் பலத்தையும் திறமைகளையும் யெகோவாவுடைய சேவைக்கென்று பயன்படுத்தும் இளைஞர்கள் ஆன்மீக இலக்குகளை அடைகிறார்கள், உண்மையான சந்தோஷத்தைப் பெறுகிறார்கள்.

யெகோவாவைச் சேவிக்கும் இளைஞர்களின் திறமைகளை இந்த உலகமும் போற்றிப் புகழ்கிறது. வாழ்க்கையில் முன்னுக்குவர, உயர் கல்வியைத் தேர்ந்தெடுக்கும்படி கெட்டிக்கார மாணவர்களை ஆசிரியர்களும் கூடப்படிப்பவர்களும் வற்புறுத்தலாம். விளையாட்டில் திறமைசாலிகளாக இருப்பவர்களை, அதைத் தங்கள் வாழ்க்கையின் இலக்காக்கும்படி அநேகர் வற்புறுத்தலாம். உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ இதுப்போன்ற சூழ்நிலை வந்திருக்கிறதா? இதுபோன்ற நேரங்களில் ஞானமான தீர்மானம் எடுக்க எது உதவும்?

சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க பைபிள் உங்களுக்கு உதவும். “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்று பிரசங்கி 12:1 சொல்கிறது. ஓர் இளைஞன் எப்படித் தன் ‘வாலிப வயதில் படைப்பாளரை நினைக்க’ முடியும்?

மேற்கு ஆப்பிரிக்காவில் எரிக்a என்ற சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். கால்பந்து விளையாடுவதென்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். 15 வயதானபோது தேசிய அளவில் விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீக்கிரத்திலேயே ஐரோப்பாவில் மிகச்சிறந்த பயிற்சி பெறும் வாய்ப்பும் அவருக்கு இருந்தது. அவர் அப்படிச் செய்திருந்தால் ‘வாலிப வயதில் படைப்பாளரை நினைக்க’ முடியுமா? எரிக் என்ன தீர்மானம் எடுத்தார்? அதிலிருந்து இன்றைய இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

பள்ளியில் படித்தபோதே எரிக் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பித்தார். மனிதர்களுடைய பிரச்சினைகளுக்குப் படைப்பாளர் மட்டும்தான் நிரந்தர தீர்வு கொண்டுவர முடியும் என்று கற்றுக்கொண்டார். தன்னுடைய நேரத்தையும் பலத்தையும் கடவுளுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று புரிந்துகொண்டார். அதனால், ஞானஸ்நானம் எடுத்து ஆன்மீக முன்னேற்றம் செய்தார், உதவி ஊழியரானார்; மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளியிலும் கலந்துகொண்டார்.

கால்பந்து விளையாட்டைத் தேர்ந்தெடுத்திருந்தால் அவருக்குப் பணமும் புகழும் கிடைத்திருக்கும். ஆனால், பணம் பாதுகாப்பு தராது என்பதை அவர் பைபிளிலிருந்து புரிந்துகொண்டார். (நீதி. 18:11) பணத்தால் வரும் பாதுகாப்பு நிரந்தரம் கிடையாது. அதோடு, பண ஆசைப்பிடித்தவர்கள் “பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”—1 தீ. 6:9, 10.

முழுநேர சேவையைத் தேர்ந்தெடுத்த அநேக இளைஞர்கள் சந்தோஷமாகவும் ஆன்மீக விதத்தில் பாதுகாப்பாகவும் வாழ்கிறார்கள். ‘முழுநேர சேவை செய்றவங்கள்ல ஒருத்தரா இருக்கிறத நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் தர்ற வேலை வேறெதுவும் கிடையாது. சரியான பாதைய காண்பிச்சதுக்காக யெகோவா தேவனுக்கு நன்றி சொல்றேன்’ என்கிறார் எரிக்.

இதிலிருந்து இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? திறமையையும் பலத்தையும் உலகத்துக்காகப் பயன்படுத்தாமல், பயனியர் சேவை செய்தால் வாழ்வில் ‘வெற்றி பெறலாம்.’—“படிப்பால் தர முடியாததை படைப்பாளர் தந்தார்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

“பாதையைச் சரிப்படுத்து”

ஒரு கணவன்-மனைவி, அமெரிக்கக் கிளை அலுவலகத்தைச் சுற்றி பார்க்கச் சென்றார்கள். அங்கு, சகோதர சகோதரிகள் சந்தோஷமாக யெகோவாவைச் சேவிப்பதைக் கவனித்தார்கள். அந்த மனைவி சொல்கிறார்: “இவ்வளவு நாளா அன்றாட வேலையிலேயே நாங்க மூழ்கி போயிருந்தோம்.” அதனால், அவர்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கி யெகோவாவை இன்னும் அதிகமாகச் சேவிக்கத் தீர்மானித்தார்கள்.

ஆரம்பத்தில் அவர்கள் செய்ய நினைத்த மாற்றங்கள் மலை போல் தெரிந்தது. ஒருநாள் தினவசனத்தில் யோவான் 8:31-ஐ படித்தார்கள்: “நீங்கள் என் வார்த்தையில் நிலைத்திருந்தால் நிஜமாகவே என் சீடர்களாக இருப்பீர்கள்.” அவர்கள் செய்யும் எந்தத் தியாகமும் வீண்போகாது என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். அவர்களுடைய சொகுசான வீட்டை விற்றார்கள்; தேவையில்லாத பொருள்களை ஏறக்கட்டினார்கள்; தேவை அதிகம் இருக்கும் சபைக்கு மாறினார்கள். இப்போது பயனியர் சேவை செய்கிறார்கள், ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியில் உதவுகிறார்கள், மாநாடுகளில் மனமுவந்து வேலை செய்கிறார்கள். “இப்போதான் நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம். அமைப்பு சொல்றமாதிரி எளிமையா வாழ்றோம்.”

தொடர்ந்து முன்னேறுங்கள்

“உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்குமுன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது” என்று சாலொமோன் எழுதினார். (நீதி. 4:25) வாகனம் ஓட்டுபவர் கண்களை அலைபாயவிடாமல் இருக்க வேண்டும். அதேபோல், நம் ஆன்மீகப் பாதையில் கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும்.

1. ஆன்மீக இலக்குகளை எட்ட முயலும் இளம் யெகோவாவின் சாட்சிகள்; 2. தடைகள் தகர்க்கப்பட்ட பாதை

என்ன ஆன்மீக இலக்குகளை இளைஞர்கள் வைக்கலாம்? முழுநேர சேவை செய்யலாம்; உள்ளூரில் தேவை அதிகம் இருக்கும் சபைக்கு மாறிச் செல்லலாம்; மூப்பர்கள், உதவி ஊழியர்கள் தேவைப்படும் சபைக்குச் செல்லலாம். இப்படி நீங்கள் செய்ய நினைத்தால் அதைப்பற்றி உங்கள் வட்டாரக் கண்காணியிடம் பேசுங்கள். தேவை அதிகம் இருக்கும் சபைகளைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.b

ஆரம்பத்தில் பார்த்த சம்பவத்தை மீண்டும் கவனியுங்கள். தாயகத்திற்குத் திரும்பும் மக்கள் சுலபமாகச் செல்வதற்காக, யூதர்கள் சிலர் அந்தப் பாதையைச் சரிசெய்ய கடினமாக உழைத்திருப்பார்கள். அதேபோல், ஆன்மீக இலக்குகளை அடைவதற்கு நீங்களும் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள். உங்கள் இலக்கை அடைய தடையாக இருப்பவற்றைத் தகர்த்தெறிய ஞானம் தரும்படி யெகோவாவிடம் மன்றாடுங்கள். அவர் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்.—நீதி. 4:26.

a பெயர் மாற்றப்பட்டுள்ளது.

b யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 111-112-ஐ பாருங்கள்.

“படிப்பால் தர முடியாததை படைப்பாளர் தந்தார்”

ஃப்லாவியா

சிறுவயதில் ஃப்லாவியாவுக்கு யெகோவாவின் சாட்சியாக இருந்த அவளுடைய பாட்டி, பைபிளைப் பற்றிக் கற்றுத்தந்தார். ஆசிரியரான அவளுடைய அப்பா இயற்கை சம்பந்தமான உயர் கல்வியைப் படிக்கும்படி அவளை ஊக்குவித்தார். “உங்கள மாதிரி இளைஞர்கள்தான் உலக அழிவ தடுக்க முடியும்” என்று மற்றவர்களும் அவளை உற்சாகப்படுத்தினார்கள். அப்பாவின் உதவியோடு ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் சேர்ந்தாள். காற்றை மாசுபடுத்தாத எரிபொருளைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டாள்.

ஆனால், கல்லூரியில் படித்த யாருக்குமே பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை என்று ஃப்லாவியா சீக்கிரத்தில் புரிந்துகொண்டாள். கல்லூரியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்குப் பெரிய பெரிய நிறுவனங்களின் பண உதவி தேவைப்பட்டது. அதனால், ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர்கள் அந்த நிறுவனங்களுக்குச் சாதகமாகவே செயல்பட்டார்கள். அது ஃப்லாவியாவிற்கு நெருடலாக இருந்தது. ஒருநாள் யெகோவாவின் சாட்சிகள் அவளைச் சந்தித்தார்கள். அவர்களுடன் சேர்ந்து பைபிளைப் படிக்க அவள் மிகவும் ஆர்வமாக இருந்தாள். பாட்டி கற்றுக்கொடுத்த பைபிள் சத்தியங்களை அது அவளுக்கு ஞாபகப்படுத்தியது.

சத்தியத்தை அவள் மிகவும் நேசித்தாள். சீக்கிரத்தில் ஞானஸ்நானமும் எடுத்தாள். ஆனால், அதிகநேரம் ஊழியம் செய்ய கல்லூரி படிப்பு தடையாக இருந்தது. ஒரு வட்டாரக் கண்காணி கொடுத்த பேச்சில், “சரியானதைச் செய்ய ஒருவனுக்குத் தெரிந்திருந்தும் அதை அவன் செய்யாதிருந்தால், அது பாவமாகும்” என்ற வசனத்தை விளக்கினார். (யாக். 4:17) இந்த வார்த்தைகள் ஃப்லாவியாவை சிந்திக்க வைத்தது. “யெகோவாவுடைய ஆசீர்வாதமும் வேணும், ஆராய்ச்சிலையும் வெற்றி பெறணும்னு நினைச்சேன். ஆனா இப்போ எனக்கு எது முக்கியம்னு முடிவெடுத்தே ஆகணும்.”

ஃப்லாவியா படிப்பை நிறுத்தினாள். அதற்காக அவள் வருத்தப்பட்டாளா?

“படிப்பால் தர முடியாததை படைப்பாளர் தந்தார். யெகோவா எனக்கு நல்லதையே செஞ்சிருக்கிறார். அன்பான கணவனையும் அருமையான எதிர்காலத்தையும் கொடுத்திருக்காரு. மத்தவங்ககிட்ட அன்பா, தயவா நடந்துகிறதுக்கும் ஆன்மீக விதத்தில மத்தவங்களுக்கு உதவுறதுக்கும் கத்துக்கொடுத்திருக்காரு. யெகோவாவால மட்டும்தான் இந்த பூமிய காப்பாத்த முடியும்னு புரிஞ்சிக்கிட்டேன். யெகோவாவுடைய மனச கஷ்டப்படுத்துற மாதிரி எப்பவும் நடந்துக்க மாட்டேன்.” இப்போது ஃப்லாவியாவும் அவரது கணவரும் தலைமை அலுவலகத்தில் சந்தோஷமாகச் சேவை செய்கிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்