வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கிறிஸ்தவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய வேலையில் இருந்தால் நல்மனச்சாட்சியைக் காத்துக்கொள்ள முடியுமா?
குடும்ப அங்கத்தினர்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பை—கடவுள் தந்துள்ள பொறுப்பை—உலகம் முழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் மனப்பூர்வமாய் நிறைவேற்றி வருகிறார்கள். (1 தீமோத்தேயு 5:8) என்றபோதிலும், சில வேலைகள் பைபிள் நியமங்களை நேரடியாக மீறுவதாய் இருப்பதால், அவற்றை கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு, சூதாட்டம், இரத்தத்தைத் தவறாக பயன்படுத்துவது, புகையிலை பொருள்களை விளம்பரப்படுத்துவது போன்றவற்றோடு சம்பந்தப்பட்ட வேலைகளைத் தவிர்க்க வேண்டும். (ஏசாயா 65:11, NW; அப்போஸ்தலர் 15:28, 29; 2 கொரிந்தியர் 7:1; கொலோசெயர் 3:5) ஆனால், வேறுசில வேலைகள் பைபிளில் நேரடியாகக் கண்டனம் செய்யப்படவில்லை; இருந்தாலும், ஒருவருடைய மனசாட்சிக்கு அல்லது மற்றவர்களுடைய மனசாட்சிக்கு விரோதமாக அவை இருக்கலாம்.
துப்பாக்கியை அல்லது வேறொரு ஆயுதத்தை ஏந்த வேண்டிய ஒரு வேலையை தேர்ந்தெடுப்பது அவரவருடைய சொந்த தீர்மானத்திற்கு உட்பட்டது. எனினும், அப்படிப்பட்ட வேலையை தேர்ந்தெடுக்கும் ஒருவர், அந்த ஆயுதத்தை உபயோகிக்க வேண்டிய சூழ்நிலையை எதிர்ப்படலாம்; அப்போது அவர் இரத்தப்பழிக்கு ஆளாகலாம். ஆம், அவசரநிலை ஏற்படும்போது, ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு நொடிப்பொழுதில் தீர்மானிக்க வேண்டியிருக்கலாம்; அந்தத் தீர்மானம் மற்றவருடைய உயிரையே பறிக்கலாம்; ஆகவே, இத்தனை பெரிய பாரத்தை ஏற்க தான் தயாரா என்பதை கிறிஸ்தவர் ஜெபசிந்தையோடு யோசித்துப் பார்க்க வேண்டும். ஆயுதத்தை ஏந்தி வேலை செய்கிறவர்களுக்கு மற்றொரு ஆபத்தும் இருக்கிறது. எதிராளி தாக்குகையில் அல்லது பழிவாங்குகையில் அவர்கள் காயப்படலாம் அல்லது கொல்லப்படலாம்.
அதுமட்டுமின்றி, அவர்களுடைய தீர்மானம் மற்றவர்களையுங்கூட பாதிக்கலாம். உதாரணத்திற்கு, ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டியதுதான் ஒரு கிறிஸ்தவனுடைய தலையாய கடமை. (மத்தேயு 24:14) “எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” என்று மற்றவர்களுக்கு போதித்துவிட்டு அதே நேரத்தில் அவர் ஆயுதங்களை ஏந்தி வேலை செய்துகொண்டு இருக்க முடியுமா? (ரோமர் 12:18) பிள்ளைகள் அல்லது மற்ற குடும்ப அங்கத்தினர்கள் பற்றி என்ன? வீட்டில் ஒரு கைத்துப்பாக்கியை வைத்திருப்பது அவர்களுடைய உயிருக்கு ஆபத்து உண்டாக்குமா? அதோடு, இந்த விஷயத்தில் எடுக்கப்படும் தீர்மானம் மற்றவர்களை இடறலடையச் செய்யுமா?—பிலிப்பியர் 1:11.
இந்த “கடைசிநாட்களில்” ‘கொடுமையுள்ளவர்களையும், நல்லோரைப் பகைக்கிறவர்களையுமே’ நாம் அதிகமதிகமாகப் பார்க்கிறோம். (2 தீமோத்தேயு 3:1, 3) ஆயுதங்களை ஏந்திய ஒரு வேலையில் ஈடுபடுபவருக்கு அப்படிப்பட்ட மனிதர்களோடு பிரச்சினைகள் ஏற்படலாம். இந்தச் சூழலில் அவரால் ‘குற்றஞ்சாட்டப்படாதவராக’ இருக்க முடியுமா? (1 தீமோத்தேயு 3:10) நிச்சயம் இருக்க முடியாது. இதன் காரணமாக, பைபிள் சார்ந்த அறிவுரைகளை சபை அன்போடு அளித்த பிறகும் ஒருவர் ஆயுதம் ஏந்தவேண்டிய வேலையைச் செய்துகொண்டிருந்தால் அவர் ‘குற்றஞ்சாட்டப்படாதவர்’ என கருதப்பட மாட்டார். (1 தீமோத்தேயு 3:2; தீத்து 1:5, 6) எனவே, அப்படிப்பட்டவர் சபையில் எந்த ஒரு விசேஷ நியமிப்பிற்கும் தகுதிபெற மாட்டார்.
ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் தருகிறவர்கள், தங்களுடைய வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளைக் குறித்து அளவுக்கு மிஞ்சி கவலைப்பட வேண்டியதில்லை என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு உறுதியளித்தார். (மத்தேயு 6:25, 33) ஆம், யெகோவாவின்மீது நாம் முழு நம்பிக்கை வைத்தோமானால், ‘அவர் நம்மை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.’—சங்கீதம் 55:22.