முழு ஆத்துமாவோடு செய்யும் உங்கள் சேவையை யெகோவா போற்றுகிறார்
“நீங்கள் எதைச் செய்தாலும், மனிதருக்கென்று அல்ல, யெகோவாவுக்கென்றே முழு ஆத்துமாவுடன் அதைச் செய்யுங்கள்.”—கொலோசெயர் 3:23, NW.
1, 2. (அ) நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய சிலாக்கியம் என்ன? (ஆ) கடவுளைச் சேவிப்பதில் நாம் விரும்புகிற எல்லாவற்றையும் செய்ய முடியாதவர்களாய் ஏன் சிலசமயங்களில் இருக்கலாம்?
யெகோவாவைச் சேவிப்பதே நமக்குக் கிடைக்கக்கூடிய எல்லாவற்றிலும் மிகப் பெரிய சிலாக்கியம். ஊழியத்தில் தங்களை ஈடுபடுத்தும்படி, முடிந்தபோதெல்லாம் ‘இன்னுமதிக முழுமையாகவுங்கூட’ சேவிக்கும்படி, நல்ல காரணத்துடன்தானே இந்தப் பத்திரிகை நெடுங்காலமாக கிறிஸ்தவர்களை ஊக்குவித்து வந்திருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:1, NW) எனினும், கடவுளைச் சேவிப்பதில் நம்முடைய இருதயம் ஆவல்கொள்ளும் எல்லாவற்றையும் நாம் எப்போதும் செய்ய முடிகிறதில்லை. “என் சூழ்நிலைமையின் காரணமாக நான் முழுநேர வேலைசெய்ய வேண்டியிருக்கிறது” என்று, முழுக்காட்டப்பட்டு ஏறக்குறைய 40 ஆண்டுகளாகியிருந்த மணமாகாத ஒரு சகோதரி விளக்குகிறார்கள். “நான் வேலைக்குப் போவதற்கு காரணம், விலையுயர்ந்த புதுநடைப்பாணியான உடைகளை வாங்கவேண்டும் என்பதோ, மிகுந்த பணசெலவை உட்படுத்தும் உல்லாசப் பயணம் செல்லவேண்டும் என்பதோ அல்ல, ஆனால் மருத்துவ மற்றும் பல் சிகிச்சைக்கான செலவுகள் உட்பட, அவசியமானவற்றிற்கு ஓரளவு பணம் தேவை என்பதற்காகத்தான். இதனால் மீந்திருப்பதையே நான் யெகோவாவுக்குக் கொடுப்பதுபோல உணருகிறேன்.”
2 கடவுளின்மீதுள்ள அன்பே, பிரசங்க ஊழியத்தில் நம்மால் முடிந்தளவு செய்ய விரும்பும்படி நம்மைத் தூண்டுகிறது. ஆனால், வாழ்க்கையின் சூழ்நிலைமைகள் நாம் செய்யக்கூடியதை அடிக்கடி மட்டுப்படுத்துகின்றன. குடும்ப கடமைகள் உட்பட, வேதப்பூர்வமான மற்ற பொறுப்புகளைக் கவனிப்பது, நம்முடைய நேரத்தையும் சக்தியையும் பேரளவாக எடுத்துக்கொள்ளலாம். (1 தீமோத்தேயு 5:4, 8) ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்,’ வாழ்க்கை மேலும் மேலுமாகச் சவால் மிகுந்ததாக ஆகிறது. (2 தீமோத்தேயு 3:1, NW) ஊழியத்தில் நாம் விரும்புகிற எல்லாவற்றையும் செய்ய முடியாமல் இருக்கையில், நம்முடைய இருதயம் ஓரளவுக்கு நம்மைச் சங்கடப்படுத்தலாம். நம்முடைய வணக்கம் கடவுளுக்குப் பிரியமாக இருக்கிறதோ இல்லையோ என்று நாம் சந்தேகப்படலாம்.
முழு ஆத்துமாவோடு செய்யும் சேவையின் அழகு
3. நம்மெல்லாரிடமிருந்தும் யெகோவா எதிர்பார்ப்பதென்ன?
3 “நமது உருவம் இன்னதென்று அவருக்குத் [யெகோவாவுக்குத்] தெரியும்; நாம் மண்ணே என்று நினைவுகூருகிறார்” என சங்கீதம் 103:14-ல் பைபிள் கனிவுடன் நமக்கு உறுதியளிக்கிறது. நம்முடைய வரம்புகளை, மற்ற எவரைப் பார்க்கிலும் அவர் புரிந்துகொள்கிறார். நம்மால் முடிகிறதற்கு மேலாக அவர் நம்மிடம் கேட்கிறதில்லை. அவர் எதிர்பார்ப்பது என்ன? அவரவருடைய வாழ்க்கை சூழ்நிலைமை என்னவாக இருந்தாலும், எல்லாருமே செய்யமுடிந்த ஒன்றைத்தான்: “நீங்கள் எதைச் செய்தாலும், மனிதருக்கென்று அல்ல, யெகோவாவுக்கென்றே முழு ஆத்துமாவுடன் அதைச் செய்யுங்கள்.” (கொலோசெயர் 3:23, NW) ஆம், நாம்—நாமெல்லாரும்—தம்மை முழு ஆத்துமாவோடு சேவிக்கும்படி யெகோவா எதிர்பார்க்கிறார்.
4. கடவுளை முழு ஆத்துமாவோடு சேவிப்பது என்பதன் அர்த்தமென்ன?
4 யெகோவாவை முழு ஆத்துமாவோடு சேவிப்பது என்பதன் அர்த்தமென்ன? “முழு ஆத்துமாவோடு” என்று மொழிபெயர்த்திருக்கிற அதன் கிரேக்கப் பதம், “ஆத்துமாவிலிருந்து” என்று சொல்லர்த்தமாய்க் குறிக்கிறது. “ஆத்துமா” என்பது ஆளை, அவனுடைய உடல் மற்றும் மன சம்பந்தமான எல்லா திறமைகளும் உட்பட, முழுமையாகக் குறிக்கிறது. இவ்வாறு முழு ஆத்துமாவோடு சேவிப்பது நம்மையே அளிப்பதை, நம்முடைய எல்லா திறமைகளையும், ஆற்றல்களையும் கடவுளுடைய சேவையில் முடிந்தளவு முழுமையாக பயன்படுத்துவதைக் குறிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், நம்முடைய ஆத்துமா செய்ய முடிகிற எல்லாவற்றையும் செய்வதை அது அர்த்தப்படுத்துகிறது.—மாற்கு 12:29, 30.
5. ஊழியத்தில் எல்லாரும் ஒரே அளவு செய்ய வேண்டியதில்லை என்று அப்போஸ்தலர்களின் முன்மாதிரி எவ்வாறு காட்டுகிறது?
5 முழு ஆத்துமாவோடு சேவிப்பது, ஊழியத்தில் நாம் எல்லாரும் ஒரே அளவு செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறதா? அது பெரும்பாலும் சாத்தியமல்ல, ஏனெனில், ஆத்துமாவுக்கு ஆத்துமா சூழ்நிலைமைகளும் திறமைகளும் வேறுபடுகின்றன. இயேசுவின் உண்மையுள்ள அப்போஸ்தலர்களைக் கவனியுங்கள். அவர்கள் எல்லாராலும் ஒரே அளவு செய்யமுடியவில்லை. உதாரணமாக, கானானியனாகிய சீமோன், அல்பேயுவின் குமாரன் யாக்கோபு ஆகியோரைப் போன்ற, அப்போஸ்தலர்களில் சிலரைப் பற்றி நாம் வெகு சொற்பமே அறிகிறோம். அப்போஸ்தலர்களாக அவர்களுடைய நடவடிக்கை ஓரளவு மட்டுப்பட்டதாக ஒருவேளை இருந்திருக்கலாம். (மத்தேயு 10:2-4) மாறாக, பேதுரு, முக்கியமான பல பொறுப்புகளை ஏற்கக்கூடியவராக இருந்தார்—‘ராஜ்யத்தின் திறவுகோல்களையுங்கூட’ இயேசு அவருக்குத் தந்தாரே! (மத்தேயு 16:19) எனினும், மற்றவர்களுக்கு மேலாக பேதுரு உயர்த்தப்படவில்லை. வெளிப்படுத்துதலில் (ஏறக்குறைய பொ.ச. 96-ல்) புதிய எருசலேமின் தரிசனத்தை யோவான் பெற்றபோது, 12 அஸ்திபாரக் கற்களையும், அவற்றின்மீது “பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும்” பொறிக்கப்பட்டிருந்ததையும் கண்டார்.a (வெளிப்படுத்துதல் 21:14) சிலர், மற்றவர்களைவிட அதிகம் செய்ய முடிந்தபோதிலும், எல்லா அப்போஸ்தலருடைய சேவையையும் யெகோவா மதிப்பு வாய்ந்ததாகக் கருதினார்.
6. விதைக்கிறவனைப் பற்றிய இயேசுவின் உவமையில், “நல்ல நிலத்தில்” விதைக்கப்பட்ட விதைக்கு என்ன நடக்கிறது, என்ன கேள்விகள் எழும்புகின்றன?
6 அவ்வாறே, நம்மெல்லாரிடமிருந்தும் ஒரே அளவான பிரசங்க ஊழியத்தை யெகோவா வற்புறுத்திக் கேட்கிறதில்லை. விதைகளை விதைப்பதற்கு இந்தப் பிரசங்க ஊழியத்தை ஒப்பிட்டு, விதைக்கிறவனுடைய உவமையில் இயேசு இவ்வாறுக் குறிப்பிட்டார். வெவ்வேறு வகைப்பட்ட நிலங்களில் விதைகள் விழுந்தன; இவை, செய்தியைக் கேட்போர் வெளிப்படுத்துகிற வெவ்வேறு வகையான இருதய நிலைமைகளைச் சித்தரித்துக் காட்டின. இயேசு இவ்வாறு விளக்கினார்: “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்டு உணருகிறவனாய் ஒன்று நூறாகவும் ஒன்று அறுபதாகவும் ஒன்று முப்பதாகவும் பலன் தருகிறான்.” (மத்தேயு 13:3-8, 18-23, திருத்திய மொழிபெயர்ப்பு.) இந்தப் பலன் என்ன? இது ஏன் பல்வேறு அளவுகளில் விளைச்சலை உண்டாக்கிற்று?
7. விதைக்கப்பட்ட விதையின் பலன் என்ன, ஏன் பல்வேறு அளவுகளில் பலன் தந்தது?
7 விதைக்கப்படுகிற விதை ‘ராஜ்யத்தின் வசனமாக’ இருப்பதால், பலன் என்பது அந்த வசனத்தை மற்றவர்களிடம் பேசி பரவச் செய்வதைக் குறிக்கிறது. (மத்தேயு 13:19) விளைந்த பலனின் தொகை—திறமைகளும் வாழ்க்கை சூழ்நிலைமைகளும் வேறுபடுவதால்—முப்பது மடங்கிலிருந்து நூறுமடங்கு வரையாக வேறுபடுகிறது. நல்ல உடல்நலமும் பலமுமுள்ள ஒருவர், தீராத நோயுற்ற நிலைமையால் அல்லது முதிர்வயதால் பலன் குன்றியிருக்கிற ஒருவரைப் பார்க்கிலும் பிரசங்க ஊழியத்தில் அதிக நேரத்தை செலவிடக்கூடியவராக இருக்கலாம். குடும்பப் பொறுப்புகள் இல்லாதிருக்கும் மணமாகாத இளைஞர் ஒருவர், குடும்பத்தைப் பராமரிப்பதற்காக முழுநேரம் வேலை செய்ய வேண்டியவராக இருக்கும் ஒருவரைப் பார்க்கிலும் அதிகம் செய்ய முடிகிறவராக இருக்கலாம்.—நீதிமொழிகள் 20:29-ஐ ஒப்பிடுக.
8. தங்கள் முழு ஆத்துமாவோடு மிகச் சிறந்ததைக் கொடுக்கிறவர்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
8 முழு ஆத்துமாவுடன் உழைக்கிறவராக, முப்பது மடங்கு பலன் தருகிறவர், நூறு மடங்கு பலன் தருகிறவரைப் பார்க்கிலும் குறைந்த பக்தியுடையவராக கடவுளுடைய பார்வையில் இருக்கிறாரா? இல்லவேயில்லை. பலன்தரும் அளவு வேறுபடலாம்; ஆனால், செய்யப்பட்ட அந்தச் சேவை, நம்முடைய முழு ஆத்துமாவோடு செய்யமுடிகிற மிகச் சிறந்ததாக இருக்கிற வரையில் யெகோவா மகிழ்ச்சியடைகிறார். ‘நல்ல நிலமாக’ இருக்கிற இருதயங்களிலிருந்தே பலன்கள் வெவ்வேறுபட்ட அளவுகளில் தோன்றுகின்றன என்பதை நினைவில் வையுங்கள். “நல்ல” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க பதம் (கலாஸ்), “அழகாக” இருப்பதும், “இருதயத்தை மகிழ்வித்து, கண்களுக்கு இன்பத்தைத் தருவதுமான” ஒன்றை விவரிக்கிறது. நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை நாம் செய்கையில், நம்முடைய இருதயம் கடவுளுடைய பார்வையில் அழகாக இருக்கிறது என்பதை அறிவது எவ்வளவாய் ஆறுதலளிக்கிறது!
ஒருவரோடொருவர் ஒப்பிட்டு அல்ல
9, 10. (அ) எதிர்மறையான என்ன வகைப்பட்ட சிந்தனைக்கு நம்முடைய இருதயம் நம்மை வழிநடத்தக்கூடும்? (ஆ) நாம் செய்யும் ஊழியத்தை, மற்றவர்கள் செய்வதுடன் யெகோவா ஒப்பிடுகிறதில்லை என்பதை 1 கொரிந்தியர் 12:14-26-ல் உள்ள உதாரணம் எவ்வாறு காட்டுகிறது?
9 எனினும், காரியங்களை நம்முடைய அபூரண இருதயம் வேறு முறையில் தீர்க்கக்கூடும். நம்முடைய சேவையை மற்றவர்கள் செய்யும் சேவையுடன் ஒருவேளை ஒப்பிடக்கூடும். ‘ஊழியத்தில், மற்றவர்கள் என்னைவிட எவ்வளவோ அதிகம் செய்கிறார்கள். யெகோவா எவ்வாறு என் சேவையில் மகிழ்ச்சியடைய முடியும்?’ என்று அது விவாதிக்கலாம்.—ஒப்பிடுக: 1 யோவான் 3:19, 20.
10 யெகோவாவின் நினைவுகளும் வழிகளும் நம்முடையவற்றைப் பார்க்கிலும் மிகப் பேரளவாக உயர்ந்தவை. (ஏசாயா 55:9) நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சிகளை யெகோவா எவ்வாறு கருதுகிறார் என்பதைப் பற்றி ஓரளவு உட்பார்வையை 1 கொரிந்தியர் 12:14-26-லிருந்து நாம் பெறுகிறோம். அதில் சபையானது, கண்கள், கைகள், பாதங்கள், காதுகள் போன்ற பல உறுப்புகளைக்கொண்ட ஓர் உடலுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. சொல்லர்த்தமான உடலை ஒரு விநாடி கவனியுங்கள். உங்கள் கண்களை உங்கள் கைகளுடன், அல்லது உங்கள் பாதங்களை உங்கள் காதுகளுடன் ஒப்பிடுவது எவ்வளவு பொருத்தமற்றதாக இருக்கும்! ஒவ்வொரு உறுப்பும் அதனதற்குரிய வெவ்வேறு செயலை நடப்பிக்கிறபோதிலும், அந்த எல்லா உறுப்புகளும் பயனுள்ளவையாகவும் மதிக்கப்படுபவையாகவும் இருக்கின்றன. அவ்வாறே, உங்களைப் பார்க்கிலும் மற்றவர்கள் அதிகமாய் அல்லது குறைவாய்ச் செய்துகொண்டிருந்தாலும், முழு ஆத்துமாவுடன் செய்யும் உங்கள் சேவையை யெகோவா போற்றுகிறார்.—கலாத்தியர் 6:4.
11, 12. (அ) தாங்கள் ‘பலவீனமுள்ளவர்கள்’ அல்லது ‘கனவீனமானவர்கள்’ என்பதாகச் சிலர் ஏன் உணரக்கூடும்? (ஆ) யெகோவா நம்முடைய சேவையை எவ்வாறு கருதுகிறார்?
11 உடல்நலக் குறைவால், முதிர்வயதால், அல்லது மற்ற சூழ்நிலைமைகளால், மட்டுப்படுத்தப்படுகையில் நாம் ‘பலவீனமுள்ளவர்கள்’ அல்லது ‘கனவீனமானவர்கள்’ என்பதாக சிலசமயங்களில் நம்மில் சிலர் உணரக்கூடும். ஆனால் யெகோவா காரியங்களை அவ்வாறு நோக்குவதில்லை. பைபிள் நமக்கு இவ்வாறு சொல்கிறது: “அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் அவசியமானவைகள். மேலும், சரீரத்தில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிகக் கனத்தைக் கொடுக்கிறோம்; . . . கனத்தில் குறைவுள்ளதற்குக் கடவுள் அதிகக் கனத்தைக்கொடுத்துச் சரீரத்தைப் பொருத்தியிருக்கிறார்.” (1 கொரிந்தியர் 12:22-24, தி.மொ.) ஆகையால் ஒவ்வொரு தனி நபரும் யெகோவாவுக்கு அருமையானவராக இருக்கமுடியும். நம்முடைய வரம்புகளுக்கு மத்தியில் நாம் செய்யும் சேவையை அவர் மதித்துப் போற்றுகிறார். புரிந்துகொள்பவரும் அன்புள்ளவருமான இப்பேர்ப்பட்ட கடவுளை சேவிப்பதில் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய ஆவல்கொள்ளும்படி உங்கள் இருதயம் உங்களைத் தூண்டுவிக்கிறதல்லவா?
12 ஆகையால், யெகோவாவைப் பொறுத்தமட்டில், வேறு ஒருவர் செய்கிற அளவுக்கு நீங்களும் செய்யவேண்டும் என்பதல்ல, ஆனால் நீங்கள்தாமே—உங்கள் ஆத்துமாதானே—செய்ய முடிகிற அளவுக்கு செய்ய வேண்டும் என்பதே முக்கியம். நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சிகளை யெகோவா மதிக்கிறார் என்பதை இயேசு, பூமியில் தம்முடைய வாழ்க்கையின் கடைசி நாட்களின்போது, மிக வித்தியாசமாக இருந்த இரண்டு பெண்களைக் கையாண்ட மிகக் கனிவான முறையில் காட்டினார்.
நன்றிமதித்துணர்ந்த ஒரு பெண்ணின் “விலையேறப்பெற்ற” அன்பளிப்பு
13. (அ) மரியாள், இயேசுவின் தலையிலும் பாதங்களிலும் நறுமணத் தைலத்தை ஊற்றினது சம்பந்தப்பட்ட சூழ்நிலைமைகள் யாவை? (ஆ) மரியாளின் நறுமணத் தைலத்தின் விலைமதிப்பு என்னவாக இருந்தது?
13 நிசான் 8, வெள்ளிக்கிழமை மாலையில், இயேசு பெத்தானியாவுக்கு வந்துசேர்ந்தார். இது எருசலேமிலிருந்து ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஒலிவ மலையின் கிழக்குச் சரிவிலிருந்த ஒரு சிறிய கிராமம். இந்த ஊரில் இயேசுவுக்கு அன்பான நண்பர்களாயிருந்த மரியாளும், மார்த்தாளும், அவர்களுடைய சகோதரன் லாசருவும் இருந்தார்கள். இயேசு அவர்களுடைய வீட்டில் ஒருவேளை அடிக்கடி, விருந்தாளியாக போயிருக்கலாம். ஆனால் சனிக்கிழமை மாலையில் இயேசுவும் அவருடைய நண்பர்களும், முன்பு குஷ்டரோகியாயிருந்த சீமோனின் வீட்டில் உணவருந்தினார்கள்; இவர் இயேசுவினால் சுகப்படுத்தப்பட்டவராக இருக்கலாம். இயேசு மேசையினருகே உட்கார்ந்திருந்தபோது, மரியாள், தன் சகோதரனை உயிர்த்தெழுப்பின மனிதரிடமாக, தன் உள்ளார்ந்த அன்பை வெளிப்படுத்தின ஒரு தாழ்மையான காரியத்தைச் செய்தாள். “விலையேறப்பெற்ற” நறுமண தைலம் அடங்கிய ஒரு குப்பியை அவள் திறந்தாள். நிச்சயமாகவே மிக விலையுயர்ந்தது! முந்நூறு திநாரிய விலைமதிப்புடையதாக அது இருந்தது; இது ஏறக்குறைய ஓர் ஆண்டு சம்பளத்திற்கு சமமானது. இந்த நறுமண தைலத்தை இயேசுவின் தலையிலும் அவருடைய பாதங்களிலும் அவள் ஊற்றினாள். தன் தலைமயிரினால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்.—மாற்கு 14:3; லூக்கா 10:38-42; யோவான் 11:38-44; 12:1-3.
14. (அ) மரியாளின் செயலுக்கு சீஷர்களின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? (ஆ) இயேசு எவ்வாறு மரியாளின் சார்பாக பேசினார்?
14 சீஷர்கள் கோபமடைந்தனர்! ‘இந்த வீண்செலவு என்னத்திற்கு?’ என்று அவர்கள் கேட்டார்கள். யூதாஸ், ஏழைகளுக்கு உதவிசெய்கிறதற்கு ஆலோசனை கூறுபவனைப்போல் தன் திருட்டு நோக்கத்தை மறைத்து: “இந்தத் தைலத்தை முந்நூறு திநாரியத்துக்கு விற்று ஏன் தரித்திரருக்குக் கொடுக்கவில்லை” என்றான். மரியாள் மௌனமாயிருந்தாள். எனினும் இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: “அவளை விடுங்கள்; அவளை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? நல்ல செய்கை [ஒருவிதமான காலாஸ்] எனக்குச் செய்தாளே, . . . இவள் தன்னால் கூடியதைச் செய்தாள்; என் அடக்கத்திற்கென்று என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள். சுவிசேஷம் உலகமுழுவதிலும் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவள் செய்ததும் இவள் ஞாபகார்த்தமாய்ச் சொல்லப்படுமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” இயேசுவினுடைய இந்த வார்த்தைகளின் கனிவு, மரியாளின் இருதயத்தை எவ்வளவாக அமைதிப்படுத்தியிருக்க வேண்டும்!—மாற்கு 14:4-9; யோவான் 12:4-8, தி.மொ.
15. மரியாள் செய்தது இயேசுவின் உள்ளத்தை ஏன் அவ்வளவு அதிகமாய்க் கனிவித்தது, அதிலிருந்து, முழு ஆத்துமாவோடு செய்யும் சேவையைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
15 மரியாள் செய்தது இயேசுவின் உள்ளத்தைக் கனிவித்தது. அவள் போற்றத்தக்க ஒரு செயலைச் செய்ததாக இயேசு மதிப்பிட்டார். அந்த அன்பளிப்பின் பொருள்சம்பந்தமான விலைமதிப்பை அல்ல, அவள் ‘தன்னால் கூடியதைச் செய்ததே’ இயேசுவுக்கு முக்கியமாக இருந்தது. அவள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தன்னால் முடிந்ததைக் கொடுத்தாள். வேறு மொழிபெயர்ப்புகள் இந்த வார்த்தைகளை, “அவள் தன்னால் இயன்றதையெல்லாம் செய்துவிட்டாள்” அல்லது, “அவள் தன் வசதிக்கு முடிந்ததைக் கொடுத்தாள்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. (அன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன்; த ஜெரூசலம் பைபிள்) மரியாளின் அன்பளிப்பு முழு ஆத்துமாவோடு செய்யப்பட்டது, ஏனெனில் அவள் தன் மிகச் சிறந்ததை அளித்தாள். முழு ஆத்துமாவோடு செய்யப்படும் சேவை என்பது இதுவே.
ஒரு விதவையின் ‘இரண்டு காசுகள்’
16. (அ) ஓர் ஏழை விதவையின் காணிக்கையை இயேசு எவ்வாறு கவனிக்க முடிந்தது? (ஆ) அந்த விதவை போட்ட காசுகளின் மதிப்பு எவ்வளவாக இருந்தது?
16 இரண்டு நாட்களுக்குப் பின்பு, நிசான் 11 அன்று, இயேசு பெரும்பாலான நேரத்தை ஆலயத்தில் செலவிட்டார். அங்கே அவருடைய அதிகாரத்தைக் குறித்து கேள்விகேட்கப்பட்டது; அங்கே வரிகளையும், உயிர்த்தெழுதலையும், மற்ற காரியங்களையும் பற்றி கேட்கப்பட்ட தந்திரமான கேள்விகளுக்குப் பதிலளித்தார். மற்ற காரியங்களோடுகூட, ‘விதவைகளின் வீடுகளைப் பட்சித்ததற்காக’ வேதபாரகரையும் பரிசேயரையும் வெளிப்படையாகக் கண்டனம் செய்தார். (மாற்கு 12:40) பின்பு அவர் ஓரிடத்தில் உட்கார்ந்தார், அது பெண்களின் பிராகாரமாகத் தோன்றுகிறது. அங்கே, யூத பாரம்பரியத்தின்படி, 13 காணிக்கைப் பெட்டிகள் இருந்தன. அவர் சிறிது நேரம் உட்கார்ந்து, ஜனங்கள் தங்கள் நன்கொடைகளைப் போடுகையில் கவனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார். ஐசுவரியவான்கள் பலர் வந்தனர்; சிலர் ஒருவேளை சுயநீதிக்குரியத் தோற்றத்துடன், பகட்டாரவாரத்தோடுங்கூட இருந்திருக்கலாம். (மத்தேயு 6:2-ஐ ஒப்பிடுக.) இயேசு ஒரு குறிப்பிட்ட ஸ்திரீயைக் கவனித்தார். அவளை அல்லது அவளுடைய காணிக்கையைப் பற்றி குறிப்பிடத்தக்க எதையும் சாதாரண ஆளின் கண்கள் ஒருவேளை கவனித்திருக்க முடியாது. ஆனால், மற்றவர்களின் இருதயங்களை அறியக்கூடியவராக இருந்த இயேசு, அவள் “ஏழையான ஒரு விதவை” என்று அறிந்திருந்தார். அவளுடைய அன்பளிப்பின் மதிப்பையும் அவர் சரியாக அறிந்திருந்தார். அது, ‘ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசே.’b—மாற்கு 12:41, 42.
17. அந்த விதவையின் காணிக்கையை இயேசு எவ்வாறு மதிப்பிட்டார், இவ்வாறு, கடவுளுக்குக் கொடுப்பதைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
17 இயேசு தம்முடைய சீஷர்களைத் தம்மிடம் வரும்படி அழைத்தார்; ஏனெனில், தாம் அப்போது கற்பிக்கவிருந்த பாடத்தை அவர்கள் நேரில் காணவேண்டும் என அவர் விரும்பினார். “காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள்” என்று இயேசு சொன்னார். அவருடைய மதிப்பீட்டில், மற்ற எல்லாரும் போட்ட மொத்தத் தொகையைப் பார்க்கிலும் அவள் அதிகமாகப் போட்டாள். “தன் ஜீவனுக்கு உண்டாயிருந்ததெல்லாம்”—தன் கடைசி துட்டு வரையாக— அவள் கொடுத்துவிட்டாள். அவ்வாறு செய்ததன்மூலம், யெகோவாவின் கவனித்துக் காக்கும் கரங்களில் அவள் தன்னை வைத்தாள். இவ்வாறு, கடவுளுக்கு கொடுப்பதில் ஒரு முன்மாதிரியாகத் தனிப்படுத்திக் காட்டப்பட்ட நபர், பொருள்சம்பந்தமாக மதிப்பிடுகையில் சொற்பமான அன்பளிப்பைக் கொடுத்தவரே. எனினும், கடவுளுடைய பார்வையில் அது விலையேறப்பெற்றதாக இருந்தது!—மாற்கு 12:43, 44; யாக்கோபு 1:27.
முழு ஆத்துமாவோடு செய்யும் சேவையைப் பற்றிய யெகோவாவின் கருத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்
18. அந்த இரண்டு பெண்களின் காரியத்தில் இயேசு கையாண்ட முறைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
18 முழு ஆத்துமாவோடு செய்யும் சேவையை யெகோவா எவ்வாறு கருதுகிறார் என்பதைப் பற்றிய இருதயத்தைக் கனிவிக்கும் சில பாடங்களை, இந்த இரண்டு பெண்களின் காரியத்தில் இயேசு கையாண்ட முறைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். (யோவான் 5:19) இயேசு, அந்த விதவையை மரியாளோடு ஒப்பிடவில்லை. மரியாளின் “விலையேறப்பெற்ற” தைலத்தை அவர் மதித்த அளவிலேயே அந்த விதவையின் இரண்டு காசுகளையும் அவர் மதித்தார். அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய மிகச் சிறந்ததைக் கொடுத்ததனால், கடவுளுடைய பார்வையில் அவர்கள் இருவருடைய அன்பளிப்புகளும் மதிப்புள்ளவையாக இருந்தன. ஆகையால், யெகோவாவைச் சேவிப்பதில் நீங்கள் விரும்புகிற எல்லாவற்றையும் செய்ய முடியாதவர்களாக இருப்பதனால், தகுதியற்றவர்களாக இருப்பதைப் போன்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் எழும்பினால், மனக்கசப்படையாதீர்கள். நீங்கள் கொடுக்க முடிகிற மிகச் சிறந்ததை ஏற்றுக்கொள்வதில் யெகோவா மகிழ்ச்சியடைகிறார். யெகோவா, “இருதயத்தைப் பார்க்கிறார்,” ஆகையால் உங்கள் இருதயத்தின் ஆவல்களை முழுமையாக அறிந்திருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள்.—1 சாமுவேல் 16:7.
19. கடவுளைச் சேவிப்பதில் மற்றவர்கள் செய்கிறவற்றைப் பற்றி குற்றங்குறை கூறுவோராக நாம் ஏன் இருக்கக்கூடாது?
19 முழு ஆத்துமாவோடு செய்யும் சேவையைப் பற்றிய யெகோவாவின் கருத்து, நாம் ஒருவரையொருவர் மதித்து நடத்தும் முறையில் செல்வாக்கு செலுத்த வேண்டும். மற்றவர்களின் முயற்சிகளைப்பற்றி குற்றங்குறை கூறுவது அல்லது ஒருவரின் சேவையை மற்றொருவரினுடையதோடு ஒப்பிடுவது எவ்வளவு அன்பற்றதாயிருக்கும்! வருந்தத்தக்கதாய், ஒரு கிறிஸ்தவ பெண் இவ்வாறு எழுதினாள்: “நீங்கள் பயனியராக இல்லையென்றால் நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர் என்ற எண்ணத்தை சில சமயங்களில் சிலர் கொடுக்கின்றனர். ஒழுங்கான ராஜ்ய பிரஸ்தாபிகளாக ‘வெறுமனே’ இருப்பதற்கே போராடிக்கொண்டிருக்கிற நாங்களுங்கூட போற்றப்படுவோராக உணரவேண்டும்.” எது முழு ஆத்துமாவோடு செய்யும் சேவை என்பதை, ஒரு உடன் கிறிஸ்தவரின் விஷயத்தில் தீர்மானிக்க நமக்கு அதிகாரம் இல்லை என்பதை நினைவில் வைப்போமாக. (ரோமர் 14:10-12) உண்மையுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளாக இருக்கும் லட்சக்கணக்கானோர் ஒவ்வொருவரும் முழு ஆத்துமாவோடு செய்யும் சேவையை யெகோவா போற்றுகிறார், நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.
20. நம்முடைய உடன் வணக்கத்தாரை எவ்வகையில் கருதுவது பொதுவாய் மிகச் சிறந்ததாக இருக்கிறது?
20 எனினும், ஊழியத்தில் தாங்கள் செய்ய முடிகிறதைப் பார்க்கிலும் குறைவாகச் செய்வதாய் சிலரைக் கண்டால் என்ன செய்வது? உடன் விசுவாசியின் ஊழியம் குறைந்திருப்பது, உதவியை அல்லது ஊக்குவிப்பைத் தேவைப்படுத்துகிறதென்பதை அக்கறைக்குரிய மூப்பர்களுக்கு உணர்த்தலாம். அதே சமயத்தில், சிலருக்கு முழு ஆத்துமாவோடு செய்யும் சேவை, மரியாளின் விலையேறப்பெற்ற தைலத்தைவிட அந்த விதவையின் சிறிய காசுகளுக்கே அதிகமாய் ஒத்திருக்கலாம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நம்முடைய சகோதரரும் சகோதரிகளும் யெகோவாவை நேசிக்கிறார்கள் என்றும், அத்தகைய அன்பு, சொற்பமானதை அல்ல, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும்படி அவர்களைத் தூண்டியியக்கும் என்றும் கருதுவது பொதுவாய் மேம்பட்டதாக இருக்கிறது. கடவுளைச் சேவிப்பதில், யெகோவாவின் மனச்சாட்சியுள்ள ஊழியர் எவரும் தன்னால் முடிந்ததைப் பார்க்கிலும் குறைவாகச் செய்ய நிச்சயமாகவே விரும்ப மாட்டார்!—1 கொரிந்தியர் 13:4, 7.
21. நற்பலனுள்ள என்ன வாழ்க்கைப் போக்கை பலர் மேற்கொள்கின்றனர், என்ன கேள்விகள் எழும்புகின்றன?
21 எனினும், கடவுளுடைய ஜனங்கள் பலருக்கு, முழு ஆத்துமாவோடு செய்யும் சேவை, மிக அதிக நற்பலனுள்ள வாழ்க்கைப் போக்காகிய பயனியர் ஊழியத்தை மேற்கொள்வதைக் குறித்திருக்கிறது. என்ன ஆசீர்வாதங்களை அவர்கள் பெறுகிறார்கள்? இன்னும் பயனியர் செய்ய முடியாமல் இருக்கிற நம்மில் சிலரைப் பற்றியதென்ன—நாம் எப்படி பயனியர் மனப்பான்மையைக் காட்டலாம்? இந்தக் கேள்விகள் அடுத்தக் கட்டுரையில் ஆலோசிக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a யூதாஸுக்குப் பதிலாக அப்போஸ்தலனாக அவனுடைய ஸ்தானத்தை மத்தியா ஏற்றதால், அவருடைய பெயரே—பவுலினுடையதல்ல—அந்த 12 அஸ்திபாரக் கற்களின்மீது காணப்பட்டிருக்க வேண்டும். பவுல் ஒரு அப்போஸ்தலராக இருந்தபோதிலும், அந்தப் பன்னிருவரில் ஒருவராக அவர் இல்லை.
b இந்தக் காசுகள் ஒவ்வொன்றும், அந்தச் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட யூதக் காசுகளில் மிகச் சிறியதான ஒரு லெப்டாவாக இருந்தது. இரண்டு லெப்டாக்கள், ஒரு நாளுக்குரிய கூலியின் 1/64 பாகத்திற்குச் சமமாக இருந்தன. மத்தேயு 10:29-ன்படி, ஒரு அசாரியன் காசுக்கு (எட்டு லெப்டாவுக்களுக்குச் சமமானது), இரண்டு குருவிகளை ஒருவர் வாங்கலாம். இவை உணவாக ஏழைகளால் பயன்படுத்தப்பட்ட மிக மலிவான பறவை வகைகளில் ஒன்றாகும். ஆகையால் இந்த விதவை நிச்சயமாகவே ஏழையாக இருந்தாள், ஏனெனில், ஒரே ஒரு குருவியை வாங்குவதற்குத் தேவைப்பட்ட தொகையில் பாதியளவே அவளிடமிருந்தது; ஒரு வேளை சாப்பாட்டுக்கும் போதியதாக இல்லை.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவாவை முழு ஆத்துமாவோடு சேவித்தல் என்பதன் அர்த்தமென்ன?
◻ யெகோவா நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுகிறதில்லை என்பதை 1 கொரிந்தியர் 12:14-26-ல் உள்ள உதாரணம் எவ்வாறு காட்டுகிறது?
◻ மரியாளின் விலையேறப்பெற்ற தைலத்தையும் விதவையின் இரண்டு சிறிய காசுகளையும் பற்றியவற்றில் இயேசு சொன்ன குறிப்புகளிலிருந்து, முழு ஆத்துமாவோடு கொடுப்பதைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
◻ முழு ஆத்துமாவோடு செய்யும் சேவையைப் பற்றிய யெகோவாவின் கருத்து, நாம் ஒருவரையொருவர் கருதும் முறையை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
மரியாள் “விலையேறப்பெற்ற” தைலத்தை இயேசுவின் உடலில் ஊற்றி, தன்னால் இயன்றதில் மிகச் சிறந்ததைக் கொடுத்தாள்
[பக்கம் 16-ன் படம்]
விதவையின் காசுகள்—பொருள்சம்பந்தமாய் சொற்பமே, ஆனால் யெகோவாவின் கண்களில் விலையேறப்பெற்றவை