யாக்கோபு ஆன்மீக விஷயங்களை உயர்வாக மதித்தார்
யாக்கோபின் வாழ்க்கையே போராட்டமும் துன்பமுமாக இருக்கிறது. இரட்டையரில் மற்றொருவனாகிய ஏசா கொலை வெறியுடன் தன்னை துரத்தி வருவதால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தப்பியோடுகிறார். தான் விரும்பிய பெண்ணிற்குப் பதிலாக முதலில் வேறொரு பெண் இவர் தலையில் கட்டப்பட்டு வஞ்சிக்கப்படுகிறார். கடைசியில், நான்கு மனைவிகளோடு வாழ வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்படுகிறது, இதனால் பல துன்பங்களும் அவரை சூழ்ந்துகொள்கின்றன. (ஆதியாகமம் 30:1-13) தன்னை சுரண்டிப் பிழைக்கும் ஒருவருக்காக 20 வருடங்கள் மாடாய் உழைக்கிறார். ஒரு தேவதூதனுடன் போராடியதால் காலம்பூராவும் கஷ்டப்படும் அளவுக்கு உடலில் ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. அவருடைய மகள் கற்பழிக்கப்படுகிறாள், மகன்கள் படுகொலை சம்பவத்திற்கு காரணமாகிவிடுகிறார்கள், தன் நேசத்திற்குரிய மகனையும் மனைவியையும் பறிகொடுக்கையில் துக்கம் தாளாமல் கதறி அழுகிறார். பஞ்சத்திலிருந்து தப்ப தள்ளாத வயதில் வேறொரு நாட்டிற்குச் சென்று குடியேறும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார். தனது ஆயுசு நாட்கள் “கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது” என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். (ஆதியாகமம் 47:9) இவை எல்லாவற்றின் மத்தியிலும், கடவுள் மீது நம்பிக்கையுள்ள ஓர் ஆன்மீக மனிதராகவும் திகழ்கிறார். யாக்கோபுடைய விசுவாசம் வீண் போனதா? யாக்கோபின் அனுபவங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அலசிப் பார்க்கையில் என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?
தன் சகோதரனைவிட மிகவும் வித்தியாசமானவர்
யாக்கோபு ஆன்மீக விஷயங்களை உயர்வாக மதித்தார், ஆனால் ஏசா அவற்றை அவமதித்தான். அதுதான் அவர்களுக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட காரணமானது. ஆபிரகாமோடு கடவுள் செய்த உடன்படிக்கையின் வாக்குறுதியின் பேரில் யாக்கோபு அக்கறை காட்டினார்; அதோடு, சுதந்தரவாளிகளாக கடவுள் நியமித்த அந்த வம்சாவளியை காப்பதில் அவர் தன்னையே அர்ப்பணித்தார். ஆகவே, யெகோவா அவரை ‘சிநேகித்தார்.’ யாக்கோபு ‘குற்றமற்றவராய்’ (NW) விளங்கினார்; அதன் அர்த்தம் அவர் ஒழுக்க சீலராக இருந்தார் என்பதே. அதற்கு நேர்மாறாக, ஏசா ஆன்மீக ஆஸ்தியை துச்சமாக கருதினான்; அதனால் அற்பமான ஒன்றை பெறுவதற்காக அதை விற்றுப்போட்டான். கடவுளுடைய ஒப்புதலோடு யாக்கோபு தன் சகோதரன் ஏசாவிடமிருந்து தலைமகனுரிமையை கேட்டு பெற்றுக்கொண்டார். அதோடு ஏசாவுக்கு சேர வேண்டிய ஆசீர்வாதத்தையும் யாக்கோபு தகப்பனிடமிருந்து பெற்றுக்கொண்டபோது அவனுக்கு பழிதீர்க்க வேண்டுமென்ற வெறியே வந்துவிட்டது. அப்போது யாக்கோபு தனக்கு பிரியமான அனைத்தையும் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ஆனால், அவருடைய வாழ்க்கையில் பிற்பாடு நிகழ்ந்த சம்பவங்கள் மனச்சோர்வை போக்கி அவருக்கு புத்துணர்வை அளித்தன.—மல்கியா 1:2, 3; ஆதியாகமம் 25:27-34; 27:1-45.
தேவதூதர்கள் ஓர் ஏணியில், அதாவது “கற்களாலான படிக்கட்டில்” வானத்துக்கும் பூமிக்கும் ஏறியிறங்குவது போல ஒரு சொப்பனத்தை யாக்கோபுக்கு கடவுள் காட்டிய பின், அவரையும் அவருடைய வித்துவையும் காப்பதாக சொன்னார். “உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை” என்றார்.—ஆதியாகமம் 28:10-15, NW அடிக்குறிப்பு.
எவ்வளவு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்! ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், யாக்கோபின் குடும்பத்தை ஆன்மீக ரீதியில் செழிப்பாக்கும் என்பதைத்தான் யெகோவா ஊர்ஜிதப்படுத்தினார். கடவுளுடைய தயவு இருப்போருக்கு தேவதூதர்கள் உதவ முடியும் என்ற விஷயம் யாக்கோபுக்கு உணர்த்தப்பட்டது, கடவுளுடைய பாதுகாப்பு உண்டு என்பதற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதற்கு யாக்கோபு நன்றி தெரிவித்து, காலமெல்லாம் யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருக்கப் போவதாக பொருத்தனை பண்ணினார்.—ஆதியாகமம் 28:16-22.
ஏசாவின் சுதந்தரத்தை யாக்கோபு எந்த விதத்திலும் அபகரிக்கவில்லை. அவர்கள் இருவரும் பிறப்பதற்கு முன்பே, “மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்” என யெகோவா சொல்லியிருந்தார். (ஆதியாகமம் 25:23) ‘யாக்கோபை முதலில் பிறக்கும்படி யெகோவா செய்திருப்பாரானால் இப்படி குழப்படியான நிலைமை ஏற்பட்டிருக்காதல்லவா?’ என சிலர் கேட்கலாம். அதற்கு பிற்பாடு நிகழ்ந்த சம்பவங்கள் முக்கியமான உண்மைகளை கற்பித்தன. அதாவது, தங்களுக்கு உரிமை இருப்பதாக நினைப்போரை கடவுள் ஆசீர்வதிப்பதில்லை; மாறாக, தாம் தெரிந்துகொள்கிற ஜனங்களுக்கே தகுதியற்ற தயவைக் காண்பிக்கிறார். இதன்படி, தலைமகனுரிமை மூத்தவனாகிய ஏசாவுக்கு அல்ல, ஆனால் யாக்கோபுக்கு கொடுக்கப்பட்டது; ஏனெனில் ஏசா அதை மதிக்கவில்லை. அதுபோலவே, ஒரு தேசமாக மாம்சப்பிரகாரமான யூதர்கள், ஏசாவின் அதே மனப்பான்மையை காட்டியதால், அவர்களுடைய ஸ்தானம் ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது. (ரோமர் 9:6-16, 24) இன்றும்கூட தேவ பயமுள்ள ஒரு குடும்பத்தில் அல்லது சூழலில் ஒருவர் பிறந்திருந்தாலும், எவ்வித முயற்சியுமின்றி யெகோவாவுடன் நல்ல உறவை சம்பாதித்துக்கொள்ள முடியாது. கடவுளிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் அனைவரும் தேவ பயத்துடன் நடப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும், ஆன்மீக காரியங்களுக்கு உண்மையிலேயே போற்றுதல் காட்ட வேண்டும்.
லாபானின் வரவேற்பு
யாக்கோபு தன் உறவினர்களுக்குள்ளே பெண் பார்ப்பதற்காக பதான் அராமுக்கு வந்தபோது, தன் மாமன் லாபானுடைய மகள் ராகேலை ஒரு கிணற்றருகே சந்தித்தார்; அந்த கிணற்றை மூடியிருந்த கனத்த கல்லை புரட்டிப்போட்டு, அவள் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினார்.a யாக்கோபு வந்திருப்பதை ராகேல் ஓடிப்போய் வீட்டில் தெரிவிக்கவே, அவரை பார்ப்பதற்கு லாபான் விரைந்து வந்தார். ஆபிரகாமின் ஊழியக்காரனிடமிருந்து ஒருகாலத்தில் தன் குடும்பத்திற்கு நிறைய செல்வம் கிடைத்த சந்தர்ப்பத்தை மனதில் வைத்து லாபான் எதிர்பார்ப்புடன் வந்திருந்தால் ஏமாந்துதான் போயிருப்பார். ஏனெனில் வெறுங்கையோடு யாக்கோபு அங்கு சென்றிருந்தார். ஆனாலும் அவரை சுரண்டிப் பிழைப்பதற்கான ஒரு வழியை லாபான் கண்டுபிடித்தார்; அதாவது அவரது கடின உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற திட்டம் அவர் மனதில் உதித்தது.—ஆதியாகமம் 28:1-5; 29:1-14.
யாக்கோபு தன் கதையையெல்லாம் அவரிடம் சொன்னார். தலைமகனுரிமையை பெறுவதற்கு தான் பயன்படுத்திய உபாயத்தை லாபானிடம் அவர் சொன்னாரா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், அவன் “தன் காரியங்களையெல்லாம்” சொல்ல கேட்ட பிறகு லாபான்: “நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன்” என்றார். இவ்வார்த்தைகள் இவ்வாறு அர்த்தப்படுத்தியிருக்கலாம் என ஓர் அறிஞர் கூறினார்: யாக்கோபை தன்னுடன் தங்க வைக்க அன்புடன் வரவேற்பதற்கு சொல்லப்பட்டதாக இருக்கலாம் அல்லது அவர் சொந்தக்காரராக இருந்ததால் அவருக்கு அடைக்கலம் கொடுப்பது தன் கடமை என்ற கருத்தில் சொல்லப்பட்டதாக இருக்கலாம். எதுவாயினும், தன் மருமகனை இனி எப்படி சுரண்டிப் பிழைக்கலாம் என லாபான் விரைவில் யோசிக்க தொடங்கினார்.
பிறகு லாபான் பேசிய விஷயம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு பூசல் ஏற்பட வழிவகுத்தது. “நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல்” என லாபான் கேட்டார். தாராள குணம் படைத்த மாமனாக லாபான் நடித்தாலும், சொந்தக்காரன் என்ற உறவுமுறையை ஒதுக்கிவிட்டு எஜமான்-வேலைக்காரன் என்ற உறவுமுறையை ஏற்படுத்தினார். ராகேலை யாக்கோபு விரும்பியதால், “உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன்” என்றார்.—ஆதியாகமம் 29:15-20.
பெண் வீட்டாருக்கு மணமகள் விலை கொடுத்து நிச்சயமும் முடிக்கப்பட்டது. மோசேயின் நியாயப்பிரமாணம் பிற்பாடு வரையறுத்தபடி ஒரு கன்னி கற்பழிக்கப்பட்டால் 50 வெள்ளிக்காசு தண்டம் கட்ட வேண்டும். இது “அதிகபட்ச மணமகள் விலையாக” இருந்தது, ஆனால் பொதுவாக கொடுக்கப்பட்ட மணமகள் விலையோ “மிக மிகக் குறைவாக” இருந்தது என அறிஞரான கார்டன் வீனம் கூறுகிறார். (உபாகமம் 22:28, 29) மணமகள் விலை கொடுக்க யாக்கோபிடம் பணம் இல்லை. அதனால் லாபானிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்ய முன்வந்தார். “பண்டைய பாபிலோனியர் காலத்தில் சாதாரண வேலையாட்கள் ஒரு மாதத்திற்கு அரை வெள்ளிக்காசு முதல் ஒரு வெள்ளிக்காசு வரை சம்பளமாக பெற்றார்கள். (ஏழு ஆண்டுகளுக்கு 42 முதல் 84 வெள்ளிக்காசுகள்)” அப்படியென்றால், “ராகேலை மணமுடிக்க யாக்கோபு மணமகள் விலையாக ஒரு பெருந்தொகையை லாபானுக்கு கொடுக்க முன்வந்தார்” என வீனம் சொல்கிறார், லாபான் அதற்கு உடனடியாக சம்மதித்தார்.—ஆதியாகமம் 29:19.
ராகேல் மீது யாக்கோபுக்கு அந்தளவு பிரியம் இருந்ததால் ஏழு வருஷங்கள் ‘கொஞ்சநாள்’ போலவே அவருக்கு தோன்றியது! லாபான் தன்னை வஞ்சிப்பாரென சிறிதுகூட சந்தேகிக்காமல் முகத்தை மறைத்து முக்காடிட்டிருந்த மணமகளை அனுப்பி வைக்குமாறு உரிமையுடன் கேட்டார். மறுநாள் காலையில் அவர் அடைந்த அதிர்ச்சியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ராகேலுடன் அல்ல, ஆனால் அவளுடைய அக்கா லேயாளுடனே தான் படுத்திருந்தது புரிந்தது! “ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலை செய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம் பண்ணினீர்” என்று யாக்கோபு கேட்டார். அதற்கு லாபான்: “மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல. இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலை செய்” என்றார். (ஆதியாகமம் 29:20-27) நிர்க்கதியாய் மாட்டிக்கொண்ட யாக்கோபு, ராகேலை மனைவியாக கொள்ள வேண்டும் என்றால் அந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
அடுத்த ஏழு வருஷங்களை தள்ளுவது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஈவிரக்கமின்றி லாபான் வஞ்சித்ததை யாக்கோபால் எப்படி மறக்க முடியும்? லேயாளும்தான் என்ன, அப்பாவின் ஏமாற்று வேலைக்கு அவளும் துணை நின்றிருக்கிறாளே? தனது இரண்டு மகள்களின் வாழ்க்கையையே கெடுத்துவிட்டதைக் குறித்து லாபான் துளியும் கவலைப்படவில்லை. தன் வாழ்க்கையே அவருக்கு பெரிதாக இருந்தது. லேயாளுக்கு அடுத்தடுத்து நான்கு மகன்கள் பிறந்தனர், ஆனால் ராகேலோ மலடியாக இருந்தாள். இதனால் ராகேலுக்கு ஏற்கெனவே இருந்த மனக்கசப்புடன் பொறாமையும் சேர்ந்துகொண்டது. தனக்கு எப்படியாவது பிள்ளை வேண்டும் என நினைத்த ராகேல், வேறு வழியின்றி தன் வேலைக்காரியை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். போட்டிக்கு லேயாளும் அப்படியே செய்தாள். கடைசியாக யாக்கோபுக்கு நான்கு மனைவிமாரும் பன்னிரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள், குடும்பத்திலோ சந்தோஷம் இல்லை. இருந்தாலும், யாக்கோபை யெகோவா ஒரு பெரிய ஜாதியாக்கிக் கொண்டிருந்தார்.—ஆதியாகமம் 29:28–30:24.
யெகோவா மிகுதியாக ஆசீர்வதிக்கிறார்
பல கஷ்டநஷ்டங்களின் மத்தியிலும், வாக்குறுதி அளித்திருந்தபடியே கடவுள் தன்னுடன் இருப்பதை யாக்கோபு உணர்ந்தார். லாபானும் அதை உணர்ந்தார். எப்படியெனில் யாக்கோபு முதன்முதலாக வந்திருந்த சமயத்தில் லாபானிடம் கொஞ்சம் மிருகங்களே இருந்தன, தன் மருமகனுடைய கவனிப்பால் அவை ஏராளமாய் பெருகின என்பதை உணர்ந்தார். யாக்கோபை விடுவதற்கு மனதில்லாமல் தொடர்ந்து வேலை செய்ய வைப்பதற்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமென சொல்லும்படி லாபான் கேட்டார். உடனே, லாபானின் மந்தையில் ஈன்ற முற்றிலும் வித்தியாசமான நிறமுடைய ஆடுகளை சம்பளமாக தரும்படி யாக்கோபு கேட்டார். பொதுவாக அந்த வட்டாரத்திலுள்ள செம்மறியாடுகள் வெள்ளை நிறத்திலும் வெள்ளாடுகள் கறுப்பு அல்லது அடர்த்தியான பழுப்பு நிறத்திலும்தான் இருக்குமாம்; ஏதோ கொஞ்சம் மட்டுமே கலப்பு நிறமுள்ளதாக இருக்குமாம். இந்த விஷயத்திலும் தனக்கு லாபம்தான் என நினைத்த லாபான், அதை ஒப்புக்கொண்டு, உடனடியாக தன்னுடைய ஆடுகள் வித்தியாசமான நிறமுடைய ஆடுகளோடு கலவாதபடி சற்று தொலைவான இடத்தில் வைத்தார். தன்னுடைய ஒப்பந்தத்தின்படி யாக்கோபுக்கு கொஞ்ச பலனே கிடைக்கும், அதாவது அந்தக் காலத்து மேய்ப்பர்களுக்கு பொதுவாக புதிதாய் ஈன்ற ஆட்டுக்குட்டிகளில் 20 சதவீதம் சம்பளமாக கொடுக்கப்பட்ட அளவுக்குக்கூட யாக்கோபுக்கு கிடைக்காது என லாபான் நினைத்திருப்பார். ஆனால், லாபானின் தப்புக்கணக்கு பலிக்கவில்லை, ஏனெனில் யாக்கோபுக்கு யெகோவா துணைநின்றார்.—ஆதியாகமம் 30:25-36.
கடவுளுடைய வழிநடத்துதலால், யாக்கோபு தான் விரும்பிய நிறமுடைய, பலமுள்ள ஆடுகளை இணைசேர வைத்தார். (ஆதியாகமம் 30:37-42) ஆடுகளை இணைசேர்க்க இவர் கையாண்ட முறை உண்மையில் சரியல்ல. இருந்தாலும் “விஞ்ஞானப்பூர்வமாக, ஒடுங்கிய மரபணுக்களையுடைய (recessive genes) ஒரே நிறமுடைய ஆடுகளை திரும்பத் திரும்ப இணைசேர்த்தால் புள்ளிகளையுடைய ஆடுகளை பெறும் சாத்தியமுள்ளது” என விளக்குகிறார் அறிஞர் நாஹும் சார்னா. “அப்படிப்பட்ட ஆடுகளை [அவற்றின்] கலப்பின வீரியத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்” என்றும் கூறுகிறார்.
எந்த ஆடுகள்—வரிகளுடையவையா, புள்ளியுடையவையா, கலப்பு நிறமுடையவையா எவை—அதிகமாக இருந்தனவோ அதைப் பொறுத்து தன் மருமகனுக்குரிய ஆடுகள் எவை என்ற தன்னுடைய ஒப்பந்தத்தை லாபான் மாற்றிக்கொண்டேயிருந்தார். அவர் தனக்கு லாபம் கிடைக்கவே வழிதேடினார்; ஆனால் தான் செய்திருந்த ஒப்பந்தத்தை எப்படியெல்லாம் மாற்றினாலும், யாக்கோபு எப்போதும் செழித்தோங்கும்படியே யெகோவா பார்த்துக்கொண்டார். லாபானால் பல்லைக் கடித்துக்கொண்டு சும்மா இருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. யாக்கோபின் செல்வமும், மந்தைகளும், வேலைக்காரர்களும், ஒட்டகங்களும், கழுதைகளும் விரைவில் விருத்தியடைய ஆரம்பித்தன; இவையெல்லாம் அவருடைய சாமர்த்தியத்தினால் அல்ல, ஆனால் யெகோவாவுடைய ஆதரவு இருந்ததாலேயே விருத்தியடைந்தன. சிலநாள் சென்ற பின்பு, ராகேலிடமும் லேயாளிடமும் அவர் இவ்வாறு சொன்னார்: “உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்கு செய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை. . . . தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார்.” லாபான் செய்த எல்லாவற்றையும் தாம் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும், ஆனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் யாக்கோபுக்கு யெகோவா உறுதியளித்தார். “உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன்” என்று சொன்னார்.—ஆதியாகமம் 31:1-13; 32:9.
கடைசியாக, நயவஞ்சக லாபானை விட்டு விலகி யாக்கோபு தன் தேசத்திற்கு போனார். அப்போது 20 ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தாலும், அவர் இன்னும் ஏசாவை நினைத்து பயந்தார்; முக்கியமாக நானூறு ஆட்களுடன் ஏசா வந்துகொண்டிருந்ததை அறிந்ததும் அவர் கதிகலங்கிப் போனார். ஆகவே யாக்கோபு என்ன செய்தார்? எப்போதுமே கடவுள் மீது நம்பிக்கை வைக்கும் ஆன்மீக நபராக தன் விசுவாசத்திற்கு ஏற்ப நடந்தார். யெகோவாவின் தாராள குணத்திற்கு தான் தகுதியுள்ளவரல்ல என்பதை ஒப்புக்கொண்டு, அவர் கொடுத்த வாக்குறுதிகளை மனதில் வைத்து, தன்னையும் தன் குடும்பத்தையும் ஏசாவின் கையிலிருந்து தப்புவிக்கும்படி மன்றாடினார்.—ஆதியாகமம் 32:2-12.
அதற்குப் பிறகு எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது. முன்பின் தெரியாத ஒரு நபர்—அவர் ஒரு தேவதூதராக இருந்தார்—இராத்திரியில் யாக்கோபுடனே போராடினார்; கடைசியில் யாக்கோபின் தொடை சந்தை தொட்டதும் அது பிசகிற்று. அந்த தேவதூதர் தன்னை ஆசீர்வதிக்கும் வரையில் யாக்கோபு அவரை போக அனுமதிக்கவில்லை. பிற்பாடு ஓசியா தீர்க்கதரிசி சொன்ன விதமாக, யாக்கோபு ‘கண்ணீர் சிந்தி, அவர் அருளை வேண்டிக்கொண்டார்.’ (ஓசியா 12:2-4, பொது மொழிபெயர்ப்பு; ஆதியாகமம் 32:24-29) ஆபிரகாமிய உடன்படிக்கை தன் வித்து மூலமாக நிறைவேறும் என்பதை அறிவிக்க இதற்கு முன்பும்கூட தேவதூதர்கள் தரிசனமானதை யாக்கோபு அறிந்திருந்தார். ஆகவே அவர் முழு பலத்துடன் போராடி, ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார். அந்த சமயத்தில்தான், அவருடைய பெயரை இஸ்ரவேல் என கடவுள் மாற்றினார்; அதன் அர்த்தம், “கடவுளோடு போராடுபவர் (விடாமுயற்சி செய்கிறவர்)” அல்லது “தேவன் போராடுகிறார்.”
நீங்களும் போராட தயாரா?
ஒரு தூதரோடு போராடியது, ஏசாவுடன் மீண்டும் சேர்ந்துகொண்டது போன்ற பல நெருக்கடியான சூழ்நிலைகளை யாக்கோபு சமாளிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், இதுவரை கவனித்த சம்பவங்கள் அவர் எத்தகைய மனிதராக இருந்தார் என்பதை சித்தரிக்கின்றன. தலைமகனுரிமைக்காக ஒரு சின்ன பசியைக்கூட ஏசாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை; ஆனால், யாக்கோபோ ஆசீர்வாதங்களை பெறுவதற்காக காலம் பூராவும் போராடினார், தேவதூதனோடும்கூட போராடினார். கடவுள் வாக்குறுதி அளித்தபடியே, தெய்வீக வழிநடத்துதலையும் பாதுகாப்பையும் யாக்கோபு பெற்றார்; ஒரு பெரிய தேசத்தின் மூதாதையாகவும் மேசியாவின் முற்பிதாவாகவும் ஆனார்.—மத்தேயு 1:2, 16.
யெகோவாவின் தயவைப் பெற நீங்களும் கடின முயற்சி எடுப்பதற்கு, அடையாள அர்த்தத்தில் போராடுவதற்கு மனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? இன்று கடவுளுடைய சித்தத்தைச் செய்ய விரும்புவோரின் வாழ்க்கை சோதனைகளும் அழுத்தங்களும் நிறைந்ததாகவே இருக்கிறது. அதோடு, சில சமயங்களில் சரியான தீர்மானங்கள் எடுப்பதும் போராட்டமாகவே இருக்கிறது. இருந்தாலும், யாக்கோபின் சிறந்த உதாரணம், நமக்கு முன் யெகோவா வைத்திருக்கும் பரிசின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடாமல் இருப்பதற்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது.
[அடிக்குறிப்பு]
a இவர்களுடைய சந்திப்பு, யாக்கோபின் தாயாகிய ரெபெக்காள், எலியேசரின் ஒட்டகங்களுக்கு தண்ணீர் காட்டிய சந்தர்ப்பத்திற்கு ஒத்திருந்தது. அதற்குப்பின் ரெபெக்காள், வீட்டிற்கு ஓடிப்போய் முன்பின் தெரியாத அந்த நபர் வந்திருப்பதை அறிவித்தாள். தன் சகோதரிக்கு பரிசாக எலியேசர் கொடுத்திருந்த பொன் ஆபரணங்களை லாபான் கண்டபின் எலியேசரிடம் ஓடிவந்து அவரை வீட்டிற்குள் வரவேற்றார்.—ஆதியாகமம் 24:28-31, 53.
[பக்கம் 31-ன் படங்கள்]
ஆசீர்வாதங்களைப் பெற யாக்கோபு காலம் பூராவும் போராடினார்