வாழ்க்கை சரிதை
எங்கிருந்தாலும் யெகோவாவைச் சேவிப்போம்
இதுவரை நான் தனியாக ஊழியம் செய்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் ஊழியத்திற்குப் போகும்போது பயத்தில் கால்கள் நடுங்கும். இது போதாதென்று மக்களும் கொஞ்சம்கூட காதுகொடுத்து கேட்க மாட்டார்கள். சிலர் ஆத்திரப்பட்டு அடிக்கவும் வந்தார்கள். பயனியர் சேவையை ஆரம்பித்த முதல் மாதத்தில் ஒரேவொரு சிறு புத்தகம்தான் கொடுத்தேன்.—மார்குஸ்.
1949-ல் நடந்த கதை இது. இப்போது 60 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது; ஆனால், அதற்கும் பல வருடங்களுக்கு முன்பே என் கதை ஆரம்பித்துவிட்டது. என் அப்பா ஹென்ட்ரிக், டோன்டரனில் தோட்டக்காராகவும் காலணி செய்பவராகவும் வேலை செய்தார். டோன்டரன், நெதர்லாந்தில் வட ட்ரென்டாவிலுள்ள ஒரு குக்கிராமம். நாங்கள் ஏழு பிள்ளைகள்; நான் நான்காவது, 1927-ல் பிறந்தேன். எங்கள் வீடு ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்தது. வீட்டுக்கு முன் மண் ரோடுதான். எங்களைச் சுற்றி நிறைய விவசாயிகள் இருந்தார்கள். அந்தக் கிராம வாழ்க்கை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. 1947-ல், பக்கத்து வீட்டுக்காரர் த்யுனஸ் பேன் மூலம் சத்தியத்தைத் தெரிந்துகொண்டேன். அப்போது எனக்கு 19 வயது. முதலில் தியுனஸை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயத்தில் அவர் ஒரு யெகோவாவின் சாட்சியானார். முன்பைவிட மிகவும் நன்றாகப் பழகினார். எது அவரை மாற்றியதென தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தேன்; அந்த சமயம் பார்த்து, பரதீஸ் பூமியைப் பற்றி கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதியை அவர் சொன்னபோது காதுகொடுத்து கேட்டேன். உடனே சத்தியத்தை ஏற்றுக்கொண்டேன், நானும் தியுனஸும் இணைபிரியா நண்பர்களானோம்.a
மே 1948-ல் நான் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். அடுத்த மாதமே, ஜூன் 20-ஆம் தேதி, யூட்ரெக்ட்டில் நடந்த மாவட்ட மாநாட்டில் ஞானஸ்நானம் எடுத்தேன். ஜனவரி 1, 1949-ல் கிழக்கு நெதர்லாந்திலுள்ள பார்கூலோவுக்கு பயனியராக அனுப்பப்பட்டேன். அங்கு ஒரு சிறிய சபைதான் இருந்தது. அது சுமார் 130 கி.மீ. தொலைவில் இருந்தது; சைக்கிளில் போக முடிவு செய்தேன். ஆறு மணிநேரத்திற்குள் பார்கூலோவுக்கு போய்விடலாம் என நினைத்தேன். ஆனால், கன மழை, பலமான எதிர் காற்று காரணமாக 12 மணிநேரம் எடுத்தது; அதிலும் கடைசி 90 கி.மீ. ரயிலில் பயணித்தேன். ஒருவழியாக சாயங்காலம் ஒரு சாட்சியின் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு தங்கியே பயனியர் ஊழியம் செய்தேன்.
போருக்குப் பின்னான வருடங்களில் மக்களிடம் அதிக பொருள் வசதி இல்லை. என்னிடம் ஒரு ‘கோட்டும்’ இரண்டு ‘பேண்ட்டும்’தான் இருந்தன. ‘கோட்’ ரொம்பப் பெரிதாகவும், ‘பேண்ட்’ ரொம்பச் சின்னதாகவும் இருந்தது. ஆரம்பத்தில் சொன்னதுபோல் பார்கூலோவில் முதல் மாதம் கஷ்டமாக இருந்தது. ஆனால், நிறைய பைபிள் படிப்புகளைத் தந்து யெகோவா என்னை ஆசீர்வதித்தார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ஆம்ஸ்டர்டாமுக்கு அனுப்பப்பட்டேன்.
கிராமத்திலிருந்து நகரத்திற்கு
கிராமத்தில், விவசாய சமுதாயத்தில் வாழ்ந்த எனக்கு இப்போது நெதர்லாந்திலுள்ள மிகப்பெரிய நகரமான ஆம்ஸ்டர்டாமில் வாழ்க்கை ரொம்ப வித்தியாசமாக இருந்தது. ஊழியத்தில் நல்ல பலன்கள் கிடைத்தன. பார்கூலோவில் ஒன்பது மாதங்களில் கொடுத்ததைவிட அதிக பிரசுரங்களை ஒரே மாதத்தில் இங்கு கொடுத்தேன். சீக்கிரத்தில் எட்டு பைபிள் படிப்புகள் நடத்த ஆரம்பித்தேன். சபை ஊழியன் (மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர்) ஆனேன். முதல் பொதுப் பேச்சுக்கான நியமிப்பு கிடைத்தது. அதை நினைக்கும்போதே மலைப்பாக இருந்தது. அந்த நாள் வருவதற்கு கொஞ்சம் முன்பு, வேறொரு சபைக்கு மாற்றப்பட்டேன், நிம்மதியாக இருந்தது. அதற்குப் பிறகு 5,000 பேச்சுகளுக்கும்மேல் கொடுப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.
மேலே: 1950-ல், மார்குஸ் (வலது ஓரம்) ஆம்ஸ்டர்டாம் அருகே தெரு ஊழியம் செய்கையில்
மே 1950-ல் நான் ஹார்லமுக்கு நியமிக்கப்பட்டேன். பிறகு வட்டாரச் சேவைக்கு அழைப்பு கிடைத்தது. அதை நினைத்து மூன்று நாட்களுக்குத் தூக்கமே வரவில்லை. ‘இவ்வளவு பெரிய பொறுப்புக்கு நான் தகுதியில்லாதவன்’ என்று கிளை அலுவலகத்தில் சேவை செய்த ராபர்ட் விங்லரிடம் சொன்னேன். “சும்மா அப்ளை பண்ணுங்க, எல்லாம் கத்துக்குவீங்க” என்று அவர் சொன்னார். ஒரு மாதப் பயிற்சிக்குப் பிறகு, வட்டார ஊழியனாக (கண்காணி) சேவையை ஆரம்பித்தேன். அப்படி ஒரு சபையைச் சந்தித்தபோது யெகோவாமீது ஆழ்ந்த அன்பும் தியாக மனப்பான்மையும் உள்ள சந்தோஷமாக ஊழியம் செய்த ஒரு இளம் பயனியரைச் சந்தித்தேன். அவர்தான் யானி டாட்கன். 1955-ல் நாங்கள் மணம் முடித்தோம். யானி எப்படி பயனியரானாள், இருவரும் சேர்ந்து எப்படிச் சேவை செய்தோம் என்று யானி இப்போது சொல்வாள்.
தம்பதியாகச் சேவை
யானி: 1945-ல், அம்மா சாட்சியானார். அப்போது எனக்கு 11 வயது. நாங்கள் மூன்று பிள்ளைகள். எங்களுக்கு பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுப்பது ரொம்ப முக்கியம் என்று அம்மா புரிந்துகொண்டார். அப்பாவிற்கு நாங்கள் படிப்பது கொஞ்சம்கூட பிடிக்கவில்லை, எங்களை எதிர்த்தார். அதனால் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்மா எங்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்.
நான் கலந்துகொண்ட முதல் கூட்டமே, 1950-ல் ஹாக்கில் நடந்த மாவட்ட மாநாடுதான். ஒரு வாரத்திற்குப் பிறகு ஆஸன் (ட்ரென்டா) என்ற இடத்தில் நடந்த சபைக் கூட்டத்தில் முதல் முறையாகக் கலந்துகொண்டேன். அப்பா கோபப்பட்டு என்னை வீட்டை விட்டே விரட்டிவிட்டார். அப்போது என் அம்மா: “யார் வீட்டுக்குப் போகலாம்னு உனக்கு தெரியும்” என்று சொன்னார். சகோதர சகோதரிகளை மனதில் வைத்தே அப்படிச் சொன்னார். அருகிலிருந்த ஒரு குடும்பத்தாரோடு தங்கினேன், ஆனாலும் என் அப்பா தொடர்ந்து தொல்லை கொடுத்தார். அதனால், சுமார் 95 கி.மீ. தூரத்தில் இருக்கும் டாவன்டர் (ஓவரைசல்) சபைக்குப் போனேன். மைனராக இருந்த என்னை வீட்டைவிட்டு விரட்டியதால் சட்டப்படி அப்பாவுக்கு சில பிரச்சினைகள் வந்தன. எனவே, என்னை வீட்டிற்கு வரச் சொன்னார். சத்தியத்தை அப்பா கடைசிவரை ஏற்றுக்கொள்ளவே இல்லை, ஆனாலும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு கூட்டத்திற்கும் ஊழியத்திற்கும் போக என்னை அனுமதித்தார்.
கீழே: 1952-ல், யானி (வலது ஓரம்) விடுமுறை பயனியர் ஊழியம் செய்கையில்
வீட்டிற்குத் திரும்பி வந்த கொஞ்ச நாளில் அம்மாவிற்கு உடம்பு ரொம்ப முடியாமல் போனது. அதனால் வீட்டு வேலைகளை எல்லாம் நானே செய்ய வேண்டியிருந்தது. இருந்தாலும் சத்தியத்தில் தொடர்ந்து முன்னேறி 1951-ல் ஞானஸ்நானம் எடுத்தேன். அப்போது எனக்கு 17 வயது. 1952-ல் அம்மாவிற்கு உடம்பு சரியானது. பிறகு மூன்று பயனியர் சகோதரிகளோடு சேர்ந்து இரண்டு மாதம் விடுமுறை (துணை) பயனியர் சேவை செய்தேன். ஒரு படகு வீட்டில் தங்கி ட்ரென்ட்டாவிலுள்ள இரண்டு நகரங்களில் ஊழியம் செய்தோம். 1953-ல் ஒழுங்கான பயனியர் ஆனேன். ஒரு வருடத்திற்குப் பின் இளம் வட்டாரக் கண்காணி ஒருவர் எங்கள் சபையைச் சந்தித்தார். அவர்தான் மார்குஸ். தம்பதியாக இன்னும் சிறந்த விதத்தில் யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியுமென நினைத்து, மே 1955-ல் திருமணம் செய்து கொண்டோம்.—பிர. 4:9-12.
வலது: 1955-ல், திருமண நாளன்று
மார்குஸ்: திருமணத்திற்குப் பின் முதலில் வேன்டம் (க்ரோனிங்கன்) என்ற நகரில் பயனியர்களாக நியமிக்கப்பட்டோம். நாங்கள் ஒரு சின்னஞ்சிறு அறையில் (சுமார் 7X10 அடி) குடியிருந்தோம். சின்னதாக இருந்தாலும் யானி அதை அழகாக, நேர்த்தியாக வைத்துக்கொண்டாள். மேஜையையும் இரண்டு சின்ன நாற்காலிகளையும் ஓரமாக நகர்த்தி வைத்தால்தான் இரவு தூங்குவதற்கு மெத்தையை (wall bed) போட முடியும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, பெல்ஜியத்தில் பயண ஊழியம் செய்ய அழைக்கப்பட்டோம். 1955-ல், சுமார் 4,000 பிரஸ்தாபிகளே அங்கு இருந்தார்கள். இப்போதோ ஆறு மடங்கு அதிகம்! வடக்கு பெல்ஜியத்திலுள்ள ஃப்லான்டர்ஸ் நகர் மக்கள் நெதர்லாந்தில் பேசும் அதே மொழியைத்தான் பேசினார்கள். ஆனாலும், அவர்களுடைய உச்சரிப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டோம்.
யானி: பயண ஊழியத்தில் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தன. சைக்கிள்களில் போய் சபைகளைச் சந்தித்தோம். சகோதர சகோதரிகளின் வீடுகளில் தங்கினோம். எங்களுக்கென ஒரு வீடு இல்லாததால் நாங்கள் சந்தித்த சபையோடு திங்கள்வரை இருந்துவிட்டு செவ்வாய் காலையில் அடுத்த சபைக்குக் கிளம்புவோம். ஆனாலும், அந்தச் சேவையை யெகோவா கொடுத்த ஆசீர்வாதமாகவே நினைத்தோம்.
மார்குஸ்: ஆரம்பத்தில் சபைகளிலிருந்த யாரையுமே எங்களுக்குத் தெரியாது. ஆனால், அங்கிருந்த சகோதர சகோதரிகள் ரொம்ப அன்பு காட்டினார்கள், உபசரித்தார்கள். (எபி. 13:2) அடுத்த சில வருடங்களில் பெல்ஜியத்திலிருந்த எல்லா டச் மொழி சபைகளையும் பல முறை சந்தித்தோம். இதனால் எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள் பல. சொல்லப்போனால், டச் வட்டாரத்தில் கிட்டத்தட்ட எல்லாச் சகோதர சகோதரிகளையும் தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். நூற்றுக்கணக்கான பிள்ளைகள் வளர்ந்து ஆளானதை... ஆன்மீக முன்னேற்றம் செய்து யெகோவாவுக்கு அர்ப்பணித்ததை... வாழ்க்கையில் ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுத்ததை... கண்ணாரக் கண்டோம். அவர்களில் நிறையப் பேர் இப்போது முழுநேர ஊழியம் செய்வதைப் பார்க்கும்போது, அந்தச் சந்தோஷமே தனிதான்! (3 யோ. 4) இப்படி ‘ஒருவருக்கொருவர் ஊக்கம்பெற்றது’ எங்களுடைய சேவையை முழுமனதோடு தொடர உதவியது.—ரோ. 1:12.
பெரும் சவாலும் பெரும் சந்தோஷமும்
மார்குஸ்: திருமணமான நாளிலிருந்தே கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டோம். அதற்காக தினமும் ஒரு மணிநேரமாவது ஆங்கிலம் படித்தோம். புத்தகத்திலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொள்வது சுலபமாக இருக்கவில்லை. அதனால், விடுமுறையில் இங்கிலாந்துக்குச் சென்று ஊழியம் செய்துகொண்டே ஆங்கிலம் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தோம். கடைசியாக, 1963-ல் புருக்லின் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு ‘கவர்’ வந்தது. அதில் இரண்டு கடிதங்கள் இருந்தன, ஒன்று எனக்கு மற்றொன்று யானிக்கு. எனக்கு வந்த கடிதம், கிலியட் பள்ளியில் பத்து மாத விசேஷ பயிற்சிக்கான அழைப்பு. சகோதரர்களுக்கு பயிற்சி கொடுப்பதும் அமைப்பு சம்பந்தமான போதனைகளை அளிப்பதுமே அந்தப் பள்ளியின் முக்கிய நோக்கம். அதில் கலந்துகொண்ட 100 மாணவர்களில் 82 பேர் சகோதரர்கள்.
யானி: எனக்கு வந்த கடிதத்தில், மார்குஸ் கிலியட்டில் கலந்துகொள்ளும்போது என்னால் பெல்ஜியத்தில் தனியாக இருக்க முடியுமா என ஜெபம் செய்து சிந்தித்துப் பார்க்கும்படி சொல்லப்பட்டிருந்தது. படித்தவுடன் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. நான் எடுத்த முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்காமல் போய்விட்டதுபோல் தோன்றியது. இருந்தாலும், இந்த கிலியட் பள்ளியின் நோக்கத்தை யோசித்துப் பார்த்தேன்; அதாவது உலகம் முழுவதும் நற்செய்தியை அறிவிக்க மாணவர்களுக்கு உதவுவதே. அதனால் நான் பெல்ஜியத்தில் இருக்க ஒப்புக்கொண்டேன். ஆனா, மரியா கோல்பர்ட் என்ற இரண்டு அனுபவமுள்ள விசேஷ பயனியர்களோடு பெல்ஜியத்திலுள்ள கென்ட் நகரில் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டேன்.
மார்குஸ்: ஆங்கிலத்தை இன்னும் நன்கு கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததால் கிலியட் பள்ளி ஆரம்பிப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே புருக்லினுக்கு அழைக்கப்பட்டேன். ஷிப்பிங் மற்றும் ஊழிய இலாகாவில் வேலை செய்தேன். தலைமை அலுவலகத்தில் சேவை செய்து ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு பிரசுரங்களை அனுப்பும் இலாகாவில் வேலை செய்தபோது உலகமெங்கும் உள்ள சகோதரர்களைப் பற்றி நிறையப் புரிந்துகொண்டேன். முக்கியமாக, சகோதரர் ரஸல் காலத்தில் பில்க்ரிமாக (பயணக் கண்காணி) சேவை செய்த சகோதரர் ஏ. ஹெச். மேக்மில்லனை என்னால் மறக்க முடியாது. நான் அங்கிருந்த சமயத்தில் அவருக்கு ரொம்ப வயதாகியிருந்தது, காதும் சரியாகக் கேட்கவில்லை. இருந்தாலும் ஒரு கூட்டத்தையும் தவறவிட மாட்டார். அது என்னை மிகவும் கவர்ந்தது. கூட்டங்களை ஏனோ தானோ என்று எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.—எபி. 10:24, 25.
யானி: ஒருவரையொருவர் பார்க்காமல் ஏங்கிப் போனோம். நானும் மார்குஸும் வாரந்தோறும் பல கடிதங்கள் எழுதிக்கொண்டோம். இருந்தாலும், மார்குஸ் கிலியட் பள்ளியில் சந்தோஷமாகப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார். நானும் ஊழியத்தைச் சந்தோஷமாகச் செய்துவந்தேன். மார்குஸ் அமெரிக்காவிலிருந்து வரும் சமயத்தில் 17 பைபிள் படிப்புகளை நடத்திக்கொண்டிருந்தேன். 15 மாத பிரிவு பெரும் சவால்தான். ஆனாலும், எங்கள் தியாகங்களை யெகோவா பெருமளவில் ஆசீர்வதித்தார். ஒருவழியாக, மார்குஸ் வரும் நாள் வந்துவிட்டது, ஆனால் விமானம் பல மணிநேரம் தாமதம். கடைசியில் அவரைப் பார்த்தபோது இருவரும் கட்டியணைத்துக்கொண்டு அழுதோம். அதற்கு பிறகு நாங்கள் பிரிந்ததே இல்லை.
வித்தியாசமான நியமிப்புகளை ருசித்தோம்
மார்குஸ்: டிசம்பர் 1964-ல் கிலியட் முடித்து திரும்பியதும் பெத்தேல் சேவைக்கு நியமிக்கப்பட்டோம். பெத்தேலில் கொஞ்ச நாள்தான் இருப்போம் என்று எங்களுக்கு அப்போது தெரியாது. மூன்றே மாதங்களுக்குப் பிறகு, ஃப்லான்டர்ஸில் மாவட்ட கண்காணியாக நியமிக்கப்பட்டேன். ஆல்ஸன்-எல்ஸ் வீக்கர்ஸ்மா தம்பதி, மிஷனரிகளாக பெல்ஜியத்திற்கு வந்தார்கள். மாவட்ட சேவைக்கு அவர்கள் நியமிக்கப்பட்டபோது நாங்கள் பெத்தேலுக்குத் திரும்பினோம். அங்கே நான் ஊழிய இலாகாவில் சேவை செய்தேன். 1968-லிருந்து 1980 வரை பெத்தேல் சேவை, பயண வேலை என எங்கள் நியமிப்புகள் மாறிக்கொண்டே இருந்தன. கடைசியாக, 1980 முதல் 2005 வரை மாவட்ட கண்காணியாகச் சேவை செய்தேன்.
எங்களுடைய நியமிப்புகள் அடிக்கடி மாறினாலும், முழுமனதோடு யெகோவாவுக்குச் சேவை செய்யவே எங்களை அர்ப்பணித்திருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடவில்லை. எங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு நியமிப்பையும் உண்மையிலேயே ருசித்தோம். ஏனென்றால், எல்லா மாற்றங்களும் கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிப்பதற்காகவே.
யானி: கிளை அலுவலகக் குழு உறுப்பினருக்கான கூடுதல் பயிற்சிக்கு 1977-ல் புருக்லினுக்கும் 1997-ல் பேட்டர்ஸனுக்கும் மார்குஸ் அனுப்பப்பட்டபோது நானும் அவரோடு சென்றது மறக்கமுடியாத அனுபவம்.
எங்கள் தேவைகளை யெகோவா அறிவார்
மார்குஸ்: 1982-ல் யானிக்கு ஓர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, சீக்கிரத்தில் குணமடைந்தாள். மூன்று வருடங்களுக்குப் பிறகு, லூவான் சபையினர் அவர்களுடைய ராஜ்ய மன்றத்திற்கு மேலிருந்த வீட்டைத் தங்குவதற்குக் கொடுத்தார்கள். 30 வருடங்களில் முதன்முறையாக எங்களுக்கென்று இருக்க ஓர் இடம் கிடைத்தது. சபையைச் சந்திக்க செவ்வாய்கிழமை அன்று கிளம்பும்போது, 54 படிகளை நிறைய தடவை ஏறி இறங்கி பொருள்களை எடுத்துக்கொண்டு வரவேண்டியிருந்தது. 2002-ல் கீழேயே ஒரு வீட்டை ஏற்பாடு செய்து தந்ததால் ரொம்பச் சந்தோஷப்பட்டோம். எனக்கு 78 வயதானபோது லோக்கராவில் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டோம். இப்படித் தினமும் ஊழியத்திற்கு போவது எங்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.
“எங்கிருந்தாலும் சரி எந்த நியமிப்பாக இருந்தாலும் சரி, யெகோவாவை உண்மையோடு சேவிப்பதே முக்கியம் என்பதை உறுதியாக நம்புகிறோம்”
யானி: நாங்கள் இருவரும் சேர்ந்து 120-க்கும் அதிகமான வருடங்களை முழுநேர சேவையில் செலவிட்டிருக்கிறோம். “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன்” என்று யெகோவா கொடுத்த வாக்குறுதியை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். நாம் அவருக்கு உண்மையாய் சேவை செய்தால் நமக்கு ‘ஒன்றும் குறைவுபடாது’ என்பது எங்கள் வாழ்க்கை புகட்டிய பாடம்.—எபி. 13:5; உபா. 2:7.
மார்குஸ்: இள வயதிலேயே யெகோவாவுக்கு எங்களை அர்ப்பணித்தோம். பணம், புகழ், பதவி என பெரிய காரியங்களை ஒருபோதும் தேடியதே இல்லை. எங்களுக்குக் கிடைத்த எந்தவொரு நியமிப்பையும் மனதார ஏற்றுக்கொண்டோம். ஏனென்றால் எங்கிருந்தாலும் சரி எந்த நியமிப்பாக இருந்தாலும் சரி, யெகோவாவை உண்மையோடு சேவிப்பதே முக்கியம் என்பதை உறுதியாக நம்புகிறோம்.
a சில வருடங்களுக்கு பிறகு என் அப்பா, அம்மா, ஒரு அக்கா, இரண்டு தம்பிகள்கூட சாட்சிகளானார்கள்.