உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w14 10/15 பக். 23-27
  • யெகோவாவைச் சந்தோஷமாகச் சேவியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவைச் சந்தோஷமாகச் சேவியுங்கள்
  • கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை
  • சந்தோஷமாக வேலை செய்யுங்கள்
  • யெகோவாவுடைய வேலையில் உங்கள் பங்கு
  • கடவுளோடு வேலை செய்வது சந்தோஷத்தைத் தருகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • நாம் பெற்ற பாக்கியங்களை நெஞ்சார நேசிக்கிறோம்!
    நம் ராஜ்ய ஊழியம்—2007
  • யெகோவாவுடன்கூட உண்மைத்தன்மையோடு வேலைசெய்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • சபையில் உங்கள் பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
w14 10/15 பக். 23-27
நியு யார்க்கிலுள்ள தலைமை அலுவலகம் கட்டிய பிறகு இப்படித்தான் இருக்கும்

யெகோவாவை சந்தோஷமாகச் சேவியுங்கள்

“நாங்கள் கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கிறோம்.” —1 கொ. 3:9.

எப்படிப் பதிலளிப்பீர்கள்?

  • யெகோவாவுடைய ஊழியர்களுக்கு என்ன பாக்கியம் கிடைத்திருக்கிறது?

  • இப்போது நாம் எந்த வேலையைச் சந்தோஷமாகச் செய்ய வேண்டும்?

  • எதிர்காலத்தில் என்ன வேலையைச் செய்யப்போகிறோம்?

1. யெகோவா எப்படி வேலை செய்கிறார், தம் ஊழியர்களுக்கு எப்படிப்பட்ட வேலையைக் கொடுக்கிறார்?

யெகோவா எந்த வேலை செய்தாலும் சந்தோஷமாகச் செய்கிறார். (சங். 135:6; யோவா. 5:17) தம் ஊழியர்களுக்கும் சந்தோஷமான, திருப்தியான வேலைகளைக் கொடுக்கிறார். உதாரணமாக, எல்லாவற்றையும் படைப்பதற்கு அவருடைய ஒரே மகனைப் பயன்படுத்தினார். (கொலோசெயர் 1:15, 16-ஐ வாசியுங்கள்.) இயேசு பூமிக்கு வருவதற்குமுன் கடவுளோடு இருந்தார். அப்போது, அவர் “திறமையுள்ள வேலைக்காரனாக” இருந்தார் என்று பைபிள் சொல்கிறது.—நீதி. 8:30, ஈஸி டு ரீட் வர்ஷன்.

2. தேவதூதர்களுக்கு யெகோவா என்ன வேலைகளைக் கொடுத்திருக்கிறார்?

2 தேவதூதர்களுக்கும் யெகோவா முக்கியமான நிறைய வேலைகளைக் கொடுத்திருக்கிறார். ஆதாம்-ஏவாள் பாவம் செய்த பிறகு அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். அப்போது, ‘ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்’ என்று பைபிளின் முதல் புத்தகம் சொல்கிறது. (ஆதி. 3:24) “சீக்கிரத்தில் நடக்க வேண்டியவற்றைத் தம்முடைய அடிமைகளுக்குக் காண்பிப்பதற்காகத் தமது தூதரை அனுப்பினார்” என்று கடைசி புத்தகம் சொல்கிறது. இப்படி, ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை தேவதூதர்களுக்கு யெகோவா வேலை கொடுத்ததற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.—வெளி. 22:6.

மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை

3. யெகோவாவைப் போலவே இயேசுவும் என்ன செய்தார்?

3 யெகோவா இயேசுவுக்கு ஒரு முக்கியமான வேலையைக் கொடுத்தார். அதை இயேசு சந்தோஷமாகச் செய்தார். அதேபோல், இயேசுவும் தம் சீடர்களுக்கு ஒரு முக்கியமான வேலையைக் கொடுத்தார். “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்மீது விசுவாசம் வைக்கிறவன் நான் செய்கிற செயல்களைச் செய்வான், அவற்றைவிடப் பெரிய செயல்களையும் செய்வான்; ஏனென்றால், நான் என் தகப்பனிடம் போகிறேன்” என்று சொல்லி அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டினார். (யோவா. 14:12) இந்த வேலையை அவர்கள் எவ்வளவு சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும் என்பதையும் சொல்லியிருந்தார்: “என்னை அனுப்பியவருடைய செயல்களைப் பகல் வேளையிலேயே நாம் செய்ய வேண்டும்; இரவு வேளை வரப்போகிறது, அப்போது எந்த மனிதனாலும் வேலை செய்ய முடியாது.”—யோவா. 9:4.

4-6. (அ) நோவாவும் மோசேயும் யெகோவா சொன்னபடியே செய்ததால் நமக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது? (ஆ) யெகோவா கொடுக்கும் எல்லா வேலைகளும் என்ன செய்ய உதவுகின்றன?

4 இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பும் மனிதர்களுக்கு யெகோவா நிறைய வேலைகளைக் கொடுத்தார். யெகோவா கொடுத்த வேலையை ஆதாமும் ஏவாளும் செய்யவில்லை. ஆனால், யெகோவாவை உண்மையோடு சேவித்த நிறைய பேர் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடித்தார்கள். (ஆதி. 1:28) பெருவெள்ளத்திலிருந்து தப்பிப்பிழைப்பதற்காக பேழையைக் கட்டும் வேலையை நோவாவுக்குக் கொடுத்தார். யெகோவா சொன்னதையெல்லாம் நோவா அப்படியே செய்தார். அதனால்தான், இன்று நாம் அனைவரும் உயிரோடிருக்கிறோம்.—ஆதி. 6:14-16, 22; 2 பே. 2:5.

5 ஆசாரிப்புக் கூடாரத்தைக் கட்டி, குருமார்களை நியமிக்கும் வேலையை மோசேக்குக் கொடுத்தார். மோசேயும் யெகோவா சொன்னபடியே செய்தார். (யாத். 39:32; 40:12-16) மோசே செய்த வேலை இன்று நமக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. எப்படி? அவர் செய்த வேலை, இன்று நாம் செய்யும் வேலைக்கு அடையாளமாக இருக்கிறதென அப்போஸ்தலன் பவுல் சொன்னார்.—எபி. 9:1-5, 9; 10:1.

6 யெகோவா தேவன் நினைத்ததை படிப்படியாக நிறைவேற்றுகிறார். அதனால், அவருடைய ஊழியர்களுக்கும் காலத்திற்கு ஏற்ப, வித்தியாசமான வேலைகளைக் கொடுக்கிறார். அவர் கொடுக்கும் வேலை எப்போதுமே அவருடைய பெயரை மகிமைப்படுத்த உதவுகிறது; அவருடைய ஊழியர்களுக்கு நன்மையளிக்கிறது. இயேசு பரலோகத்தில் இருந்தபோதும் பூமியில் வாழ்ந்தபோதும் செய்த வேலை யெகோவாவுடைய பெயருக்கு மகிமை சேர்த்தது. (யோவா. 4:34; 17:4) இன்று யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் வேலையும் அவருடைய பெயரை மகிமைப்படுத்த உதவுகிறது. எப்படி?—மத். 5:16; 1 கொரிந்தியர் 15:58-ஐ வாசியுங்கள்.

சந்தோஷமாக வேலை செய்யுங்கள்

7, 8. (அ) இன்று நாம் செய்யும் வேலையைப் பற்றி விளக்குங்கள். (ஆ) யெகோவா வழிநடத்தும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

7 யெகோவாவுடைய “சக வேலையாட்களாக” இருப்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பாக்கியம். (1 கொ. 3:9) நோவாவையும் மோசேயையும் போலவே இன்றும் சிலர் கட்டுமான வேலையைச் செய்கிறார்கள். மாநாட்டு மன்றங்கள், ராஜ்ய மன்றங்கள், கிளை அலுவலகங்கள் போன்றவற்றைக் கட்டுகிறார்கள். நீங்கள் ராஜ்ய மன்றத்தைப் புதுப்பிக்கும் வேலை செய்தாலும் சரி, நியு யார்க்கிலுள்ள தலைமை அலுவலகத்தைக் கட்டும் வேலை செய்தாலும் சரி, சந்தோஷமாகச் செய்யுங்கள். (ஆரம்பப் படம்: தலைமை அலுவலகம் கட்டிய பிறகு இப்படித்தான் இருக்கும்.) எல்லாமே யெகோவா கொடுத்த வேலைதான். சிலருக்கு வேறுவிதமான வேலையைக் கொடுத்திருக்கிறார். அதுதான் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் வேலை. இந்த வேலையும் யெகோவாவுடைய பெயரை மகிமைப்படுத்துகிறது; மனிதர்களுக்கு நன்மையளிக்கிறது. (அப். 13:47-49) இந்த வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு அமைப்பின் மூலமாக யெகோவா நிறைய வழிநடத்துதலைக் கொடுத்திருக்கிறார். சில நேரங்களில் நமக்குப் புதிய நியமிப்புகளையும் கொடுக்கிறார்.

சகோதரர்கள் கட்டுமான வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்

8 யெகோவா கொடுக்கும் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய அவருடைய ஊழியர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். (எபிரெயர் 13:7, 17-ஐ வாசியுங்கள்.) சில வழிநடத்துதல்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். இருந்தாலும், அதைக் கடைப்பிடிப்பதால் வரும் நன்மைகளை நாம் பிறகு புரிந்துகொள்வோம்.

லிட்ரேச்சர் கார்ட்டை வைத்து ஒரு சகோதரர் பொது ஊழியம் செய்கிறார்

9. மூப்பர்கள் என்ன முன்மாதிரி வைக்கிறார்கள்?

9 யெகோவா கொடுக்கும் வேலையைச் சந்தோஷமாகச் செய்வதில் மூப்பர்கள் நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். (2 கொ. 1:24; 1 தெ. 5:12, 13) சபையில் கடினமாக உழைக்கிறார்கள்; மாற்றங்கள் வரும்போது உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்கள். முக்கியமாக, நற்செய்தியை அறிவிக்க புதிய முறைகளை அமைப்பு அறிமுகப்படுத்தும்போது அதன்படியே செய்கிறார்கள். உதாரணமாக, தொலைபேசி மூலம் சாட்சி கொடுப்பது, துறைமுகத்தில் சாட்சி கொடுப்பது, பொது ஊழியம் செய்வது போன்றவற்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இவற்றைச் செய்ய மூப்பர்களுக்குத் தயக்கமாக இருந்தாலும், அவர்கள் அமைப்புக்குக் கீழ்ப்படிந்ததால் நிறைய பலன்கள் கிடைத்திருக்கின்றன. ஜெர்மனியில் நான்கு பயனியர்கள் வியாபார இடங்களில் ஊழியம் செய்வதற்கு மூப்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். அந்த நான்கு பயனியர்களில் ஒருவரான மைக்கேல் என்ற மூப்பர் சொல்கிறார்: ‘பல வருஷமா இந்த மாதிரி ஊழியம் செய்யாம இருந்தோம். அதனால, ஆரம்பத்துல எங்களுக்கு பயமா இருந்துச்சு. ஆனா, அப்படிச் செஞ்சதுனால நல்ல பலன்கள் கிடச்சது. யெகோவாதான் எங்களுக்கு உதவுனாரு, எங்க ஊழியத்தை ஆசீர்வதிச்சாரு. அன்னைக்கு நாங்க செஞ்ச ஊழியத்தை மறக்கவே மாட்டோம். யெகோவாமேல நம்பிக்கை வச்சு, நம் ராஜ்ய ஊழியத்துல வந்த அறிவுரைய கடைப்பிடிச்சோம். அதை நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுறோம்.’ நீங்களும் இப்படிப் புதிய விதங்களில் ஊழியம் செய்ய ஆசைப்படுகிறீர்களா?

யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியை அறிவிக்கிறார்கள்

10. என்ன புதிய மாற்றம் செய்யப்பட்டது?

10 சில நேரங்களில் அமைப்பு சில மாற்றங்களைச் செய்கிறது. சமீபத்தில், சின்ன கிளை அலுவலகங்கள் பெரிய கிளை அலுவலகங்களோடு இணைக்கப்பட்டன. இதனால் அந்தக் கிளை அலுவலகங்களில் வேலை செய்தவர்கள் நிறைய சவால்களைச் சந்தித்தார்கள். இருந்தாலும், இந்த மாற்றங்களுக்கு அவர்கள் ஒத்துழைத்ததால் நிறைய நல்ல பலன்களைக் கண்டார்கள். (பிர. 7:8) யெகோவாவுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் இவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இப்படிச் சந்தோஷமாக வேலை செய்யும் ஊழியர்கள் நமக்கு எப்பேர்ப்பட்ட முன்மாதிரிகள்!

11-13. பெத்தேல் ஊழியர்கள் சிலர் என்ன சவால்களைச் சந்தித்தார்கள்?

11 கிளை அலுவலகங்கள் இணைக்கப்பட்டபோது சவால்களை எதிர்ப்பட்ட சில சகோதரர்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர்களுடைய நாட்டிலேயே இருக்கும் கிளை அலுவலகத்தில் பல பத்தாண்டுகளாக சேவை செய்த சிலர் வேறொரு கிளை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்கள். மத்திய அமெரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய பெத்தேலில் சேவை செய்த ரோக்காலியோவும் அவருடைய மனைவியும் மெக்சிகோ பெத்தேலுக்கு மாற்றப்பட்டார்கள். அது அவர்கள் முன்பிருந்த பெத்தேலைவிட 30 மடங்கு பெரியது. ரோக்காலியோ சொல்கிறார்: “குடும்பத்தாரையும் நண்பர்களையும் விட்டுட்டு போறது ரொம்ப கஷ்டமா இருந்தது.” க்வான் என்ற சகோதரர் சொல்கிறார்: “அங்க எல்லாமே புதுசா இருந்துச்சு. நண்பர்கள், கலாச்சாரம், யோசிக்கிற விதம்கூட வித்தியாசமா இருந்துச்சு.”

12 ஐரோப்பாவில் இருந்த சில கிளை அலுவலகங்கள் ஜெர்மனி கிளை அலுவலகத்தோடு இணைக்கப்பட்டன. இப்படி வேறு இடத்திலிருந்து ஜெர்மனிக்குப் போன பெத்தேல் ஊழியர்கள் பல தியாகங்களைச் செய்தார்கள். சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையின் அழகை ரசித்து சந்தோஷப்பட்டவர்கள் அதை விட்டுப் போக வேண்டியிருந்தது. ஆஸ்திரியாவில் சிறிய பெத்தேல் குடும்பத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

13 பழக்கப்பட்ட வீட்டைவிட்டு புதிய வீட்டிற்குப் போனார்கள்; புதிய சகோதர சகோதரிகளோடு வேலை செய்தார்கள். சிலர் புதிய நியமிப்புகளைப் பெற்றார்கள்; வேறொரு சபைக்கு நியமிக்கப்பட்டார்கள்; புதிய இடங்களில் ஊழியம் செய்தார்கள்; புதிய மொழியைக்கூட கற்றுக்கொண்டார்கள். இந்த மாற்றங்களைச் செய்வது அவர்களுக்குச் சவாலாக இருந்தது. ஆனாலும், அவர்கள் சந்தோஷமாக இவற்றைச் செய்தார்கள். ஏன்?

14, 15. (அ) நியமிப்பு மாறியபோது சகோதரர்கள் எப்படி உணர்ந்தார்கள்? (ஆ) அவர்கள் நமக்கு எப்படி முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்?

14 க்ரெட்டெல் என்ற சகோதரி சொல்கிறார்: “என் நாட்டைவிட, வீட்டைவிட, எந்த நியமிப்பையும்விட யெகோவாமேல நான் வச்சிருக்கிற அன்புதான் முக்கியம்னு காட்டுறதுக்கு இது ஒரு வாய்ப்பா இருந்தது.” டாய்ஸ்கா என்ற சகோதரி சொல்கிறார்: “இந்த வேலையைக் கொடுத்தது யெகோவாதான். அதனால நான் சந்தோஷமா ஏத்துக்கிட்டேன்.” ஆன்த்ரே-காப்ரியேலா தம்பதி சொல்கிறார்கள்: ‘எங்களுக்கு பிடிச்சத செய்யாம யெகோவாவுக்கு பிடிச்சத செய்றதுக்கு இது இன்னொரு வாய்ப்புனு நினைச்சோம். அமைப்பு செய்ற மாற்றங்களுக்குக் கீழ்ப்படியிறது ரொம்ப முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டோம்.’

சகோதரர்கள் கட்டுமான வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்

யெகோவா கொடுத்த வேலையைச் செய்வது மிகப்பெரிய பாக்கியம்

15 கிளை அலுவலகங்களை இணைத்தபோது சில பெத்தேல் ஊழியர்கள் பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். டென்மார்க், நார்வே, சுவீடன் கிளை அலுவலகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டபோது நிறைய சகோதரர்களை பயனியர்களாக நியமித்தார்கள். ஃப்ளாரியன்-கேத்ரின் தம்பதி சொல்கிறார்கள்: “இந்தப் புதிய நியமிப்பை நாங்க சந்தோஷமா ஏத்துக்கிட்டோம். எங்க சேவை செஞ்சாலும் யெகோவாவுக்குச் சேவை செய்றதுதான் முக்கியம். இந்த நியமிப்பையும் யெகோவா கொடுத்த ஆசீர்வாதமாதான் நினைக்கிறோம்.” நாம் இதுபோன்ற மாற்றங்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலை வராமல் இருக்கலாம். ஆனால், யெகோவா கொடுக்கும் எந்த வேலையையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்தச் சகோதரர்களை நாம் பின்பற்றலாம். (ஏசா. 6:8) எங்கிருந்தாலும் யெகோவாவுக்கு சக வேலையாட்களாக சேவை செய்பவர்களை அவர் எப்போதும் ஆசீர்வதிப்பார்.

யெகோவாவுடைய வேலையில் உங்கள் பங்கு

16. (அ) கலாத்தியர் 6:4-ன்படி நாம் என்ன செய்யக் கூடாது? (ஆ) நம் எல்லோருக்கும் என்ன பாக்கியம் இருக்கிறது?

16 மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது மனித இயல்பு. ஆனால், அப்படிச் செய்யக்கூடாது என்று பைபிள் சொல்கிறது. (கலாத்தியர் 6:4-ஐ வாசியுங்கள்.) நாம் எல்லோருமே மூப்பராகவோ பயனியராகவோ மிஷனரியாகவோ பெத்தேல் ஊழியராகவோ ஆக முடியாது. இதெல்லாம் ஒரு சிறந்த பாக்கியம்தான். ஆனால், நம் அனைவருக்குமே யெகோவா மிகப்பெரிய பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். அதுதான், நற்செய்தியை அறிவிக்கும் வேலை. இதைச் செய்யும்போது நாம் கடவுளின் சக வேலையாட்களாக இருக்கிறோம்.

1. ஒரு சகோதரர் பெத்தேலிலுள்ள அச்சகத்தில் வேலை செய்கிறார்; 2. யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறார்கள்

17. சாத்தானுடைய உலகத்தில் என்ன சவால்கள் வரலாம், நாம் ஏன் சோர்ந்துபோகக் கூடாது?

17 சாத்தானுடைய உலகத்தில் வாழும்வரை, யெகோவா கொடுத்த வேலையைச் செய்ய நிறைய தடங்கல்கள் வரும். குடும்ப பொறுப்புகள், வியாதி, மற்ற பிரச்சினைகள் நமக்குச் சவாலாக இருக்கலாம். ஆனால், நாம் சோர்ந்துவிடக்கூடாது. எந்தப் பிரச்சினை வந்தாலும் யெகோவாவைப் பற்றியும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றியும் தொடர்ந்து அறிவிப்பதை எதுவுமே தடுக்க முடியாது. எப்படியிருந்தாலும், உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யுங்கள். மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்; உங்களைவிட அதிகம் செய்பவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். யெகோவாவுடைய பெயரை மகிமைப்படுத்துகிற ஒவ்வொருவரும் அவருடைய பார்வையில் அருமையானவர்கள்.

18. நாம் எதற்குத் தயாராக இருக்க வேண்டும், ஏன்?

18 தவறு செய்யும் மனிதர்களாகிய நம்மை யெகோவா சக வேலையாட்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த மிகப்பெரிய பாக்கியம் கிடைத்ததற்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! யெகோவாவுடைய சேவைக்காக நம்முடைய ஆசைகளைத் தியாகம் செய்ய எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால், பூஞ்சோலையில் “உண்மையான வாழ்வை,” அதாவது முடிவில்லா வாழ்வை யெகோவா நமக்குத் தருவார்.—1 தீ. 6:18, 19.

யெகோவாவின் சாட்சிகள் காது கேட்காத ஒருவருக்கு நற்செய்தியை அறிவிக்கிறார்கள்

எந்த வேலை செய்தாலும் சந்தோஷமாகச் செய்யுங்கள் (பாராக்கள் 16-18)

19. எதிர்காலத்தில் நமக்கு என்ன வேலை காத்திருக்கிறது?

19 கானான் தேசத்துக்குள் நுழைவதற்கு சற்று முன்பு மோசே இஸ்ரவேலரிடம் இப்படிச் சொன்னார்: “நீ செய்கிற அனைத்திலும் [யெகோவா] வெற்றி அடையும்படிச் செய்வார்.” (உபா. 30:9, ஈஸி டு ரீட் வர்ஷன்) நாமும் பூஞ்சோலை பூமியில் அடியெடுத்து வைக்கப்போகிறோம். இன்று யெகோவா கொடுக்கும் வேலையைச் சரியாகச் செய்யும் அனைவருக்கும் ஒரு புதிய வேலை காத்திருக்கிறது. அர்மகெதோனுக்குப் பிறகு, இந்தப் பூமி முழுவதையும் பூஞ்சோலையாக மாற்றும் அருமையான வேலை காத்திருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்