உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 2/8 பக். 16-17
  • சந்திரனின் மலைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சந்திரனின் மலைகள்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கண்கொள்ளாக் காட்சி
  • “மலைகளைப் பார்க்கிலும் நீர் கம்பீரமானவர்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • மலைகள்—நமக்கு ஏன் தேவை
    விழித்தெழு!—2005
  • மலைகள்—படைப்பின் அருவேலைப்பாடுகள்
    விழித்தெழு!—1994
  • மலைகள்—ஆபத்தில்!
    விழித்தெழு!—2005
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 2/8 பக். 16-17

சந்திரனின் மலைகள்

கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

அது ஒரு புரளி; நூற்றாண்டுக் கணக்கில் அது அவ்வாறே நம்பப்பட்டு வந்தது. அதாவது, மத்திப ஆப்பிரிக்காவில் எங்கோ பனிபடர்ந்த மலைகள் இருந்தன; அவையே நைல் நதியின் உண்மையான பிறப்பிடம் என்பது. ஆனால் ஆப்பிரிக்காவில், அதுவும் பூமத்தியரேகைக்கு அருகில் பனி இருக்கிறதென்ற பரவலான கருத்து, நம்பமுடியாததாய்த் தோன்றினது. ஆனாலும், பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கிரேக்க புவியியலாளர் தாலமி இந்த மலைகள் இருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டினார்; அவர் இவற்றை லூனை மான்ட்டெஸ், அதாவது சந்திரனின் மலைகள் என்று அழைத்தார். a

நூற்றாண்டுகளாய், இந்த மலைகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் பிறகோ, 1800-களின் பிற்பகுதியில் ஒருநாள், ஆய்வுப்பயணி ஹென்றி ஸ்டான்லி—டாக்டர் டேவிட் லிவிங்ஸ்டோனைக் கண்டுபிடித்து புகழ் ஈட்டியவர்—தற்செயலாய் நிகழ்ந்த ஒன்றை நேரில் கண்டார். முன்பு சென்றிருந்த ஆய்வுப்பயணிகளுக்கு மலைகளை மறைத்துவிட்ட மேகப் போர்வை, சற்று விலகியிருந்தது; ஆகவே இங்குமங்குமாய் பனிபடர்ந்த மலையுச்சிகளின் ஸ்தம்பிக்கச்செய்யும் ஒரு காட்சியை ஸ்டான்லிக்கு வழங்கியது. அவர் சந்திரனின் மலைகளைக் கண்டுபிடித்திருந்தார். ஆனால் உள்ளூர்வாசிகள் பிறகு சூட்டிய ரூவன்ஸோரி என்ற பெயரால் அவற்றை அழைத்தார். அதன் அர்த்தம் “மழையுருவாக்கி.”

இன்று, ரூவன்ஸோரி மலைகளிலிருந்தும் நைல் நதிக்கு ஓரளவு தண்ணீர் செல்கிறது என்று பொதுவாக ஒத்துக்கொள்ளப்படுகிறது. அப்படியிருந்தாலும், அவை சந்திரனின் மலைகள் என்று அழைக்கப்படுவதே பிரசித்திபெற்றுள்ளது. எண்ணற்ற ஆய்வுப்பயணங்களை மேற்கொண்டபோதிலும், பிரமிக்கவைக்கும் இந்த மலைத்தொடரைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் இன்றும் மர்மமாகவே உள்ளன. பூமத்தியரேகைக்கு சற்றே வடக்கில் அமைந்திருக்கும் இந்த ரூவன்ஸோரி மலைகள், உகாந்தாவுக்கும் காங்கோ மக்களாட்சி குடியரசுக்கும் இயற்கை எல்லையாய் அமைந்திருக்கின்றன. சுமாராக இவற்றின் நீளம் 130 கிலோமீட்டர், அகலம் 50 கிலோமீட்டர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில், எரிமலை வெடிப்பின் காரணமாகத் தோன்றிய பெரும்பாலான மலைகளைப் போலன்றி, ரூவன்ஸோரி மலைத்தொடர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, ஏராளமான நிலவியல் அழுத்தங்களின் காரணமாக புவியோட்டின் ஒரு பெரிய பாளம் மேல்நோக்கி எழும்பியதால் தோன்றியவை. ரூவன்ஸோரி மலைகளின் உச்சிப்பகுதி 5,109 மீட்டர் உயரம் இருந்தாலும், பார்வையாளர்களால் அரிதாகவே காணக்கூடியது. பெரும்பாலும் இந்த மலைத்தொடர் மூடுபனிகளாலும் மேகங்களாலும் சூழப்பட்டிருக்கிறது.

இந்தப் பெயர் சுட்டிக்காட்டுவதற்கிசைய, ரூவன்ஸோரி மலைகளில் மழையும் பனியும் ஏராளமாய் பொழிகின்றன. இங்கு “வறண்ட” காலம் “மழை” காலத்தைக் காட்டிலும் சற்றே வறண்டிருக்கும். ஆகவே நடந்து செல்வது ஆபத்தாய் இருக்கலாம்; சில பகுதிகளில், இடுப்பளவு ஆழத்துக்கு சேறு இருக்கும்! கனத்த மழை ஏராளமான, அழகிய சிறுசிறு ஏரிகளை உருவாக்கியுள்ளன. இவை மலைச்சரிவுகளை மூடியிருக்கும் மிகவும் அடர்த்தியான தாவரங்களுக்கு ஈரத்தை அளிக்கின்றன. உண்மையில், ரூவன்ஸோரி மலைகளில் மட்டுமே வளரும் ஏராளமான அரிய தாவரங்கள் உள்ளன; அவற்றில் சில பிரமாண்டமானவை.

உதாரணமாக, லோபெலியா என்று அழைக்கப்படும் மயிரடர்ந்த விரல்களையொத்த மிகப்பெரிய தாவரம் மற்ற இடங்களில் வளருகையில் பொதுவாக 30 சென்டிமீட்டருக்கும் குறைந்த நீளமுடையது; ரூவன்ஸோரி மலையிலோ, அது ஆறு மீட்டர் நீளத்துக்கும்கூட வளரலாம். செனிஸியோக்கள் அல்லது சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த இராட்சத செடிகள் (giant groundsels), கிளைவிட்ட அடிமரத்தின் நுனியில், பெரிய முட்டைக்கோஸ்கள் அமர்ந்திருப்பதைப் போல் காட்சியளிக்கின்றன. 12 மீட்டர் உயர பாசி படர்ந்த ஹீத் மரங்களும் உள்ளன. எல்லா நிறங்களிலும் மணங்களிலும் உள்ள பூக்கள், இந்தக் காட்சிக்கு அழகைக் கூட்டுகின்றன. விதவிதமான அழகிய பறவைக் கூட்டமும் இருக்கிறது; அவற்றில் சில ரூவன்ஸோரியில் மட்டுமே அபூர்வமாய் காணப்படுபவை. மலை அடிவாரத்தில் யானைகளும், சிம்பான்ஸீகளும், மலைப்புதர் மான்களும் (bushbuck), சிறுத்தைகளும், கோலோபாஸ் குரங்குகளும் வாழ்கின்றன.

கண்கொள்ளாக் காட்சி

மலைப்பாதையில் ஏறுபவர்கள், ஒரு வெப்பமண்டல மழைக் காட்டின் வழியாகச் சென்று, பூஜூக்கூ ஆற்றைப் பலமுறை கடக்கின்றனர். அவர்கள் 3,000 மீட்டர் உயரத்தை அடைந்தவுடன், கொஞ்சம் பின்னால் திரும்பி கீழே பார்த்தால், மகா பிளவு பள்ளத்தாக்கைக் காணலாம்.—கிறுகிறுக்க வைக்கும் ஒரு காட்சி!

அதற்கும் மேலே, பிகோ சதுப்பு நிலத்தின் கீழ்ப் பகுதி; இந்நிலப்பகுதியில் சுக்குநாறிப்புல் வகைகளும் ஹீத் மரங்களும் வளருகின்றன. இங்கு சேறு பொதுவாக முழங்கால் ஆழத்துக்கு இருக்கிறது. பிகோ சதுப்புநிலத்தின் மேற்பகுதியையும் பூஜூக்கூ ஏரியையும் நோக்கி செங்குத்தாக ஏறும்போது, பூஜூக்கூ பள்ளத்தாக்கின் சுமார் 4,000 மீட்டர் உயர உச்சிப்பகுதியில், அந்த மலைத்தொடரின் பிரசித்தி பெற்ற சிகரங்களான மவுண்ட் பேக்கர், மவுண்ட் லூயிஜி டி ஸாவோயா, மவுண்ட் ஸ்டான்லி, மற்றும் மவுண்ட் ஸ்பீக் ஆகிய இவையனைத்தும் கண்கொள்ளாக் காட்சியை அளிக்கின்றன.

அதற்கும் மேலே ஏறினால், நிரந்தரமான எலேனா பனிக்கட்டி ஆறு. இந்தப் பனிக்கட்டி ஆற்றில் ஒருவர் ஏறவேண்டுமென்றால், கிராம்ப்பன்களையும், பெரிய ஆணிகளுள்ள இருப்புப் பலகைகளையும் அணிவதோடு, ஒரு கயிற்றையும் பனிக்கட்டியை வெட்டுவதற்கான கோடாலியையும் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு வருவது ஸ்டான்லி பீடபூமி. இது மார்கேரிட்டா சிகரம் வரை செல்லும் பாதையாக இருக்கிறது. மார்கேரிட்டா சிகரம், மவுண்ட் ஸ்டான்லியின் உச்சியில் இருக்கிறது; இதுவே ரூவன்ஸோரி மலைத்தொடரின் மிகவும் உயரமான சிகரம் ஆகும். இந்த உயரத்திலிருந்து கீழ்நோக்கிப் பார்க்கையில், சிகரங்களும் பள்ளத்தாக்குகளும் காடுகளும் ஓடைகளும் ஏரிகளும் அளிக்கும் கண்கொள்ளாக் காட்சி, உண்மையிலேயே பிரமிப்பூட்டுகிறது.

என்றாலும், இந்த மலைத்தொடரைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்துவிட்டதாக சொல்லவே முடியாது. ரூவன்ஸோரி மலைகளின் இரகசியங்களை அறிவதன் வெறும் ஓர் ஆரம்பம்தான் இது. இந்த மலைத்தொடரின் நிலவியல் அமைப்புகள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைப் பற்றிய அநேக விஷயங்கள் இன்னும் அறியப்படவில்லை. ரூவன்ஸோரி மலைகள் இவ்வாறு மறைந்திருக்கும் மர்மமாகவே இருக்கின்றன—இவற்றின் இரகசியங்கள் அனைத்தும் ஞானமும் சர்வவல்லமையும் படைத்த இவற்றின் சிருஷ்டிகருக்கு மட்டுமே தெரியும். ஆம், உண்மையில், “பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.”—சங்கீதம் 95:4.

[அடிக்குறிப்புகள்]

a ஏமில் லூட்விக் எழுதிய த நைல் என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளபடி, பூர்வீகக் குடிகளால் இந்த மலைகளின்மீது பனி இருப்பதற்கான காரணத்தை விளக்கிக்கூற முடியவில்லை. இவ்வாறு அவர்கள், “இந்த மலைகள் நிலவொளியை தங்களுக்கென கீழே இழுத்துத் தந்திருந்தவை” என்று நம்பினர்.

[பக்கம் 17-ன் படக்குறிப்பு]

1. ரூவன்ஸோரியை அடர்ந்த மேகப் போர்வை எப்போதுமே மறைக்கிறது

2. “மழையுருவாக்கியின்” கனத்த மழை அதன் பாசி படர்ந்த சரிவுகளை நனைக்கிறது

3. வழிநெடுகிலும், பூக்களும் நறுமணங்களும் ஏராளம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்