துன்புறுத்தலுக்காக இப்பொழுது உங்களை ஆயத்தமாக வைத்துக்கொள்ளக்கூடுமா?
“அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால் உங்களையும் துன்பப்படுத்து வார்கள்.”—யோவான் 15:20.
1, 2. யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக என்ன எதிர்பாராத நடவடிக்கையை சில அரசாங்கங்கள் எடுத்திருக்கின்றன?
ஒரு நாள் அதிகாலையில் நீங்கள் படுக்கையில் ஓய்வாக படுத்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உடனடியாக எழுந்திருப்பதா அல்லது இன்னும் கொஞ்சம் நேரம் படுத்துக் கொண்டிருப்பதா என்பதாக நீங்கள் அரைதூக்க நிலையில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் முதல் காரியமாக, நீங்கள் காலை செய்திகளுக்காக வானொலி பெட்டியை திருப்புகிறீர்கள். திடீரென்று செய்தி வாசிப்பவர் எதிர்பாராத அதிர்ச்சியைக் தந்து உங்களை முழுமையாக விழித்துக் கொள்ளச் செய்கிறார். “அரசாங்க ஆணையின்படி யெகோவாவின் சாட்சிகள் என்றழைக்கப்படும் மதபிரிவுக்கு தேசம் முழுவதிலும் தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது.” இனிமேலும் உங்களால் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க முடியாது!
2 இதுவோ அல்லது இது போன்ற ஒன்றோ, நவீன காலங்களில் சில தேசங்களில் கிறிஸ்தவர்களின் அனுபவமாக இருந்து வருகிறது. அநேக சமயங்களில் என்ன நடக்கக்கூடும் என்பதைப் பற்றி முன்னறிவிப்புகள் இருந்திருக்கின்றன. ஆனால் சில சமயங்களில் தடையுத்தரவு முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக இருந்திருக்கிறது. இது நமக்கு ஆச்சரியமாக இருக்க வேண்டுமா?
3. பொ.ச. 33-ல் இயேசு கிறிஸ்துவுக்கு என்ன நேர் எதிர்மாறான அனுபவங்கள் கிடைத்தன?
3 உண்மையில் அவ்விதமாக இருக்கக்கூடாது. பொ.ச. 33-ல் வசந்த காலத்தின் முற்பகுதியில் இயேசு எவ்விதமாக எருசலேமுக்குள் கழுதையின் மீது பவனி வந்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். ஜனங்கள் சந்தோஷத்தோடு ஆர்ப்பரித்து, அவருக்கு முன்னால் வழியிலே தங்கள் வஸ்திரங்களை விரித்தார்கள். ஆனால் சில நாட்களுக்குப் பின்பு என்ன நடந்தது? விசாரணைக்காக பொந்தியு பிலாத்துவுக்கு முன்பு அவர் கொண்டு வரப்பட்டார். அதே நகரத்திலிருந்து வந்த ஜனக்கூட்டத்தார் கொலை வெறியுடன், “அவனைச் சிலுவையில் அறைய வேண்டும்! . . . அவனைச் சிலுவையில் அறைய வேண்டும்“ என்று கூக்கூரலிட்டார்கள். (மத்தேயு 21: 6-9; 27:22, 23) நிலைமை திடீரென்று மாறிவிட்டிருந்தது.
4. இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக என்ன விதமாக நடத்தப்படுவதை நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்?
4 இன்று சில தேசங்களில் நிலைமை மாறி, எதிர்பாராத வகையில் துன்புறுத்தல் வருமானால் நாம் ஆச்சரியப்படக்கூடாது. நாம் உண்மையில் இயேசுவை பின்பற்றுகிறவர்களாக இருந்தால், கட்டாயமாக துன்புறுத்தலை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. (யோவான் 15:20) இது “விழித்திருங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உயர்த்திக் காண்பிக்கிறது.—மத்தேயு 24:42.
5. என்ன கேள்விகளை நாம் சிந்தித்துப் பார்ப்பது தகுதியுள்ளதாக இருக்கும்?
5 நாம் இதை எவ்விதமாகச் செய்யலாம்? மிகவும் மோசமான காரியம் சம்பவிக்குமானால், அதற்காக நாம் தயாராவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?
உங்களுடைய மனதையும் இருதயத்தையும் ஆயத்தப்படுத்துங்கள்
6, 7. (எ) சரீர பிரகாரமான துன்புறுத்தலுக்காக தயார் செய்வது ஏன் கடினமாக இருக்கிறது? (பி) துன்புறுத்தலுக்காக என்ன அதிக முக்கியமான தயாரிப்பு செய்யப்படலாம்?
6 துன்புறுத்தலுக்காக உங்களை சரீரப் பிரகாரமாக ஆயத்தப்படுத்திக் கொள்வது கடினமாக இருக்கும். ஏனென்றால் நிலைமை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. உண்மையில் அது நடந்தேறும் வரையாக தடையுத்தரவு மிகவும் கண்டிப்பாகவா அல்லது அவ்வளவு கண்டிப்பில்லாமலா செயலாக்கப்படும் என்பதோ அல்லது எது தடை செய்யப்படும் என்பதோ அல்லது எது தடை செய்யப்படாது என்பதோ உங்களுக்குத் தெரியாது. ஒருவேளை வீட்டுக்கு வீடு பிரசங்க வேலை மாத்திரமோ அல்லது மதசம்பந்தமான கூட்டங்களோ தடை செய்யப்படலாம். சில சமயங்களில் சட்டரீதியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பு கலைக்கப்படலாம் அல்லது சில தனிப்பட்ட நபர்கள் உடனடியாக சிறையில் அடைக்கப்படலாம். தேவை ஏற்படுமானால், நம்முடைய பிரசுரங்களை ஒளித்து வைப்பதற்கு பல்வேறு இடங்களை நம் மனதில் நாம் எண்ணிப் பார்த்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அப்பால் சரீர பிரகாரமாக தயார் செய்வதற்கு நமக்கு அதிகம் இல்லை.
7 ஆனால் உங்களுடைய மனதையும் இருதயத்தையும் ஆயத்தப்படுத்தலாம். இதுவே அதிமுக்கியமானதாக இருக்கிறது. துன்புறுத்தல் ஏன் அனுமதிக்கப்படுகிறது என்பதையும், ஏன் நீங்கள் அதிபதிகளுக்கு முன்பாக கொண்டு போகப்படலாம் என்பதையும் மனதில் வையுங்கள். “சாட்சியாக” என்பதாக இயேசு சொன்னார். (மத்தேயு 10:16-19) என்ன ஆனாலும், உண்மையுள்ளவராக இருக்க உங்களுடைய இருதயம் முழுமையாக தயாராக இருக்குமானால், தேவை ஏற்படும்போது ஞானமாக செயல்படும் விதத்தை யெகோவா உங்களுக்கு வெளிப்படுத்தக்கூடும். ஆகவே, துன்புறுத்தலுக்காக நம்மைநாமே எவ்விதமாக ஆவிக்குரிய விதத்தில் ஆயத்தம் செய்து கொள்ளலாம்?
நீங்கள் ஆட்களோடு எவ்விதமாக நடந்து கொள்கிறீர்கள்?
8 அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான்: “கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும் நிந்தைகளிலும், நெருக்கங்களையும், துன்பங்களிலும் இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.” (2 கொரிந்தியர் 12:10) நிந்திக்கப்படுவது பவுலுக்கு மகிழ்ச்சியாக இருந்ததா? நிச்சயமாகவே இல்லை. ஆனால் துன்புறுத்தல் அநேகமாக நிந்திக்கப்படுவதை உட்படுத்துகிறது. கடவுளுடைய நாமத்துக்கு துதியை கொண்டுவர இது அவசியமாக இருக்குமானால், அப்பொழுது பவுல் அதை சகித்துக் கொள்வதில் மகிழ்ச்சியைக் கண்டான்.
9. “கிறிஸ்துவினிமித்தம் . . . நிந்தைகளை” சகித்துக்கொள்ள இப்பொழுது நாம் எவ்விதமாக தயார் செய்யலாம்?
9 நாமும்கூட, எப்போதாவது, கிறிஸ்துவினிமித்தம் நிந்தைகளை சகித்துக் கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம். நாம் ஒருவேளை வாயினாலோ அல்லது சரீர பிரகாரமாகவோகூட துர்பிரயோகம் செய்யப்படலாம். நாம் சகித்துக்கொள்வோமா? ஆம், இப்பொழுது நம்மை நாமே நாம் எவ்விதமாக கருதுகிறோம்? நம்மை மேன்மையாக, ஒரு பொருட்டாக கருதி மெய்யான அல்லது கற்பனையான நிந்தைகளுக்கு உடனடியாக பிரதிபலிக்கிறோமா? அப்படியானால், “நீடிய பொறுமை . . . சாந்தம் இச்சையடக்கம்” ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள ஏன் உழைக்கக்கூடாது? (கலாத்தியர் 5:22, 23) இப்பொழுது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இது மிகச் சிறந்த பயிற்றுவிப்பாக இருக்கும். துன்புறுத்தலின் சமயத்தில் அது உங்களுடைய ஜீவனை காக்கக்கூடும்.
வெளி ஊழியத்தை நீங்கள் எவ்விதமாக கருதுகிறீர்கள்?
10. நம்முடைய பிரசங்க வேலை தடை செய்யப்படும்போது நாம் செய்ய வேண்டிய வேத ஆதாரமுள்ள காரியம் என்ன?
10 அநேகமாக நற்செய்தியை பகிரங்கமாக பிரசங்கிப்பதே தடையுத்தரவின் கீழ் தடை செய்யப்படும் முதல் காரியமாக இருக்கிறது. ஆனாலும்கூட பிரசங்கிப்பதும் சீஷராக்குவதும் இந்த கடைசி நாட்களில் இன்றியமையாததாக இருக்கின்றன. வேறு எவ்விதமாக ஜனங்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி கற்றறிய முடியும்? ஆகவே, யூத மதத்தலைவர்கள், அப்போஸ்தலர்களின் பிரசங்க வேலையை தடை செய்ய முயன்றபோது, அவர்கள் செய்த விதமாகச் செய்வதே இத்தகைய தடையுத்தரவின் கீழ் செய்ய வேண்டிய சரியான காரியமாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 15:28, 29) தடையுத்தரவின் கீழ், பிரசங்க வேலையின் சில அணுகுமுறைகள் மூடப்படலாம். ஆனால் எப்படியாவது வேலை செய்யப்பட்டே ஆக வேண்டும். துன்புறுத்தலின் அழுத்தத்தின் கீழ் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருக்க உங்களுக்கு மனஉறுதி இருக்குமா?
11, 12. துன்புறுத்தப்படும்போது தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருக்க தேவையான பலம் உங்களுக்கு இருக்ககும் என்பதை நீங்கள் எவ்விதமாக தீர்மானிக்கக்கூடும்?
11 சரி, பிரசங்க வேலையை இப்பொழுது நீங்கள் எவ்விதமாக கருதுகிறீர்கள்? சிறிய இடையூறுகளை குறுக்கிட அனுமதித்து, வெளி ஊழியத்தில் ஒழுங்கற்றவர்களாக நீங்கள் இருக்கிறீர்களா? அப்படியென்றால், தடையுத்தரவின் கீழ் நீங்கள் என்ன செய்வீர்கள்? மனிதர்களைப் பார்த்து இப்பொழுது நீங்கள் பயப்படுகிறீர்களா? உங்களுடைய சொந்த தெருவில் விட்டுக்கு வீடு பிரசங்க வேலையைச் செய்ய நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? தனியாகச் சென்று பிரசங்கிக்க நீங்கள் பயப்படுகிறீர்களா? சில தேசங்களில், இரண்டு பேராக சேர்ந்து ஊழியத்துக்குப் போகும்போது, அது அதிகமான கவனத்தை இழுப்பதாக இருக்கிறது. ஆகவே பாதுகாப்பாக இருக்கும் இடங்களில், இப்பொழுதே அவ்வப்போது தனியாக ஏன் வேலை செய்து பார்க்கக்கூடாது? இது நல்ல ஒரு பயிற்றுவிப்பாக இருக்கும்.
12 பத்திரிக்கை தெரு ஊழியத்தில் நீங்கள் பங்கு கொள்கிறீர்களா? முறைப்படியல்லாமல் சாட்சி கொடுப்பதற்காக சந்தர்ப்பங்களை உருவாக்க உங்களுக்குத் துணிவும் அதை ஆரம்பிக்க தைரியமும் இருக்கிறதா? வியாபார ஸ்தலங்களில் நீங்கள் ஊழியஞ் செய்கிறீர்களா? செல்வந்தரை அல்லது செல்வாக்குள்ள ஆட்களை அனுக நிங்கள் பயப்படுகிறீர்களா? பிரசங்கிப்பதற்கு குறிப்பிட்ட சில வழி முறைகளில் மட்டுமே நீங்கள் பங்கு கொள்வீர்களெயானால், தடையுத்தரவின் கீழ், அந்த விதமாக பிரசங்கிப்பது கூடாத காரியமாகிவிடும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
13 ஏதோ ஒரு அம்சத்தில் உங்களுக்கு பலவீனம் இருப்பதை நீங்கள் உணருகிறீர்களா? அதன் பேரில் கிரியை செய்வதற்கு இதுவே சமயமாக இருக்கிறது. யெகோவாவின் மீது சார்ந்திருக்க கற்றுக் கொண்டு ஒரு ஊழியனாக அதிக திறமையுள்ளவனாகுங்கள். அப்பொழுது, நீங்கள் இப்பொழுது பிரசங்கிக்கவும், துன்புறுத்தலின் சமயங்களில் விடாமுயற்சியுடன் செலாற்றவும் மேம்பட்ட விதத்தில் தயாராக நீங்கள் இருப்பீர்கள்.
நீங்கள் நம்பத்தகுந்தவரா?
14, 15. (எ) துன்புறுத்தல் ஏற்பட்டபோது, என்ன விதமான முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் குறிப்பிடத்தக்க நிலைப்படுத்தும் செல்வாக்கை செலுத்தியிருக்க வேண்டும்? (பி) நவீன நாளைய யெகோவாவின் ஒரு ஊழியன் எவ்விதமாக அந்த உறுதியான பூர்வ கிறிஸ்தவர்களைப் போல ஆக முடியும்?
14 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முழுவதிலுமாக, சபையில் பலமான அரண்களாக இருந்த ஆட்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. உதாரணமாக ரோமில் பவுல் சிறையில் இருந்த சமயத்தில் ஒநேசிப்போரு தைரியமாக அவனுக்கு உதவி செய்தான். (2 தீமோத்தேயு 1:16) கெங்கிரேயா ஊர் சபையில் அவளுடைய கடின உழைப்பின் காரணமாக, பெபேயாள் சிபாரிசு செய்யப்பட்டாள். (ரோமர் 12:1, 2) இந்த ஆண்களும் பெண்களும், துன்புறுத்தல் ஏற்பட்டபோது, குறிப்பிடத்தக்க நிலைப்படுத்தும் செல்வாக்கைச் செலுத்தினார்கள். அவர்கள் ‘விழித்திருந்தார்கள், விசுவாசத்திலே நிலைத்திருந்தார்கள், புருஷராயிருந்தார்கள். திடன் கொண்டார்கள்.’—1 கொரிந்தியர் 16:13.
15 எல்லா கிறிஸ்தவர்களும், குறிப்பாக மூப்பர்கள், முன்னேறி, உறுதியாக இருந்த பூர்வ கிறிஸ்தவர்களைப் போல ஆக முயற்சி செய்ய வேண்டும். (1 தீமோத்தேயு 4:15) இரகசியமாக வைக்கப்பட வேண்டிய விஷயங்களை இரகசியமாக வைக்கவும் வேதாகம நியமங்களின் அடிப்படையில் தீர்மானங்களைச் செய்யவும் கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களில் கிறிஸ்தவ குணாதிசயங்களை பகுத்துணர உங்களை பயிற்றுவித்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அழுத்தத்தின் கீழ், யார் நம்பகமானவராக இருப்பார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். உங்களுடைய சபையில் ஒரு தூணாக ஆவதற்கு அதாவது, எப்பொழுதும் உதவி தேவைப்படும் ஒரு நபராக இருப்பதற்கு பதிலாக மற்றவர்களுக்கு உதவி செய்யும் ஒருவராக ஆவதற்கு, யெகோவாவின் பலத்தோடு உழையுங்கள்.—கலாத்தியர் 6:5.
ஆட்களுடன் நீங்கள் எவ்வாறு அனுசரித்துச் செல்லுகிறீர்கள்?
16, 17. கொலோசெயர் 3:12, 13-ஐ இப்பொழுது பொருத்துவது துன்புறுத்தலுக்கு தயாராக உங்களுக்கு எவ்விதமாக உதவி செய்யும்?
16 அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை இவ்விதமாக உற்சாகப்படுத்தினான்: “நீங்கள் உருக்கமான இரக்கத்தையும் தயவையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (கொலோசெயர் 3:12, 13) இது உங்களுக்கு சுலபமாக இருக்கிறதா? அல்லது மற்றவர்களுடைய அபூரணத் தன்மைகள் உங்களுக்கு அனாவசியமாக எரிச்சலை உண்டுபண்ணிக் கொண்டிருக்கிறதா? நீங்கள் எளிதில் புண்பட்டு விடுகிறீர்களா அல்லது உற்சாகமிழந்துவிடுகிறீர்களா? அப்படியானால் தயாராவதற்கு இங்கு மற்றொரு அம்சம் இருக்கிறது.
17 கூட்டங்கள் தடை செய்யப்படும் இடங்களில் கிறிஸ்தவர்கள் சிறிய தொகுதிகளாக ஒழுங்காக ஒன்று கூடிவருகிறார்கள். இந்த சூழ்நிலைமைகளில் அவர்களுடைய குறைபாடுகள் அதிக வெளிப்படையாக தெரிய வருகிறது. ஆகவே சந்தேகமின்றி உங்களுடைய குறைபாடுகளை மற்றவர்கள் பொறுத்துக் கொள்வது போல மற்றவர்களுடையதையும் பொறுத்துக்கொள்ள ஏன் நீங்கள் பழகிக் கொள்ளக்கூடாது? மற்றவர்களில் குறைகளை கண்டுபிடித்துக் கொண்டு இதனால் அவர்களை வெகுவாக உற்சாகமிழக்கச் செய்து விடாதீர்கள். மேலுமாக சபை புத்தகப்படிப்புகளுக்கு ஆஜராகும்போது மற்றவர்களுடைய உடைமைகளை மதிக்க உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் பயிற்றுவிப்பைக் கொடுங்கள். துன்புறுத்தலின் கீழ் இந்த மரியாதை சமாதானமான உறவுகளை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
உங்களுக்கடுத்ததாக இல்லாத காரியங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறீர்களா?
18. உங்களுக்கு தேவையாக இருக்கும் அளவு மட்டுமே தெரிந்து வைத்திருப்பது சில சமயங்களில் ஏன் பாதுகாப்பாக இருக்கிறது?
18 இயற்கையிலேயே நம்மில் சிலர் காரியங்களை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறோம். விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் இருப்பதை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. நீங்கள் அவ்விதமாக இருக்கிறீர்களா? அப்படியானால் இதை சற்று சிந்தித்துப் பாருங்கள்: சில சமயங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கும்போது, அதிகாரிகள் அவர்களுடைய அமைப்பு சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளையும் பொறுப்புள்ள கண்காணிகளின் பெயர்களையும் கண்டு பிடிக்க முயற்சிக்கிறார்கள். இந்த காரியங்களை தெரிந்து வைத்துக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், அவற்றை தெரிவிக்கும்படியாகச் செய்ய உங்களுக்கு சரீர உபாதைகளை அவர்கள் கொடுக்கலாம். நீங்கள் அவற்றை தெரிவித்தால் உங்களுடைய சகோதரர்களின் வேலை கவலைக்குரிய விதத்தில் பாதிக்கப்படக்கூடும். ஆகவே சில சமயங்களில் அதிகம் அல்ல, உங்களுக்கு தேவையாக இருக்கும் அளவு மட்டுமே தெரிந்து வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்கிறது.
19. துன்புறுத்தப்படுகையில் இரகசியமான விஷயங்களை வெளிப்படுத்துவதை தவிர்ப்பதற்கு இப்பொழுது எது உங்களுக்கு உதவி செய்யக்கூடும்?
19 அதற்காக இப்பொழுதே உங்களை பயிற்றுவித்துக்கொள்ள முடியுமா? உதாரணமாக சபையில் நியாய விசாரணை குழு ஒன்று ஒரு வழக்கை விசாரித்திருக்குமேயானால், தெரிவிக்கப்பட பொருத்தமானதாக மூப்பர்கள் உணரும் காரியங்களை மட்டுமே தெரிந்து கொண்டு திருப்தியாக இருக்க வேண்டும். முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள முயற்சிக்கக்கூடாது. இரகசியமான விஷயங்களை வெளிப்படுத்தும்படியாக மூப்பர்களை அவர்களுடைய மனைவகளும் பிள்ளைகளும் வற்புறுத்தக்கூடாது. எல்லா விதத்திலும் ‘வீண் அலுவற்காரராய்’ இல்லாதிருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.—2 தெசலோனிக்கேயர் 3:11.
நீங்கள் ஒரு பைபிள் மாணாக்கரா?
20, 21. இப்பொழுது பைபிளை ஊக்கமாக வாசிப்பது, வேலை தடை செய்யப்படும்போது உங்களுக்கு எவ்வாறு உதவி செய்யும்?
20 ஒரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய பெலத்துக்கு ஆதாரமாக இருப்பது பைபிளாகும். மிக முக்கியமான கேள்விகளுக்கு அது அவனுக்கு பதிலளிக்கிறது. கடவுளுடைய ஞானத்தையே அறிந்துகொள்ளும் வாய்ப்பை அது அவனுக்கு அளிக்கிறது. (2 தீமோத்தேயு 3:14-16) கிறிஸ்தவர்கள் அனைவரும் கொள்கை அளவில் இதை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் உங்களுடைய வாழ்க்கையில் பைபிள் உண்மையில் என்ன பாகத்தை வகிக்கிறது? நீங்கள் அதை ஒழுங்காக வாசித்து, நீங்கள் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் அது உங்களை வழிநடத்த நீங்கள் அனுமதிக்கிறீர்களா?—சங்கீதம் 119:105.
21 அநேகமாக வேலை தடை செய்யப்படுகையில், நம்முடைய பைபிள் பிரசுரங்களை பெற்றுக்கொள்வதே கண்டிப்பாக தடை செய்யப்படுகிறது. சில சமயங்களில் பைபிள்களையும்கூட காண்பது கடினமாக இருக்கிறது. இது போன்ற சூழ்நிலைமைகளின் கீழ் கடந்த காலங்களில் நீங்கள் படித்த காரியங்களை, பரிசுத்த ஆவி உங்களுடைய நினைவுக்கு கொண்டு வருகிறது. ஆனால் நீங்கள் கற்றுக்கொள்ளாத காரியங்களை அது உங்களுடைய நினைவுக்கு கொண்டுவராது. ஆகவே இப்பொழுது நீங்கள் அதிகமாக படித்தீர்களேயானால் உங்களுடைய மனதிலும் இருதயத்திலும் அதிகமான காரியங்கள் பாதுகாத்து வைக்கப்படும். தேவை ஏற்படும் காலத்தில் பரிசுத்த ஆவி அவற்றை வெளிகொண்டுவரும்.—மாற்கு 13:11.
நீங்கள் ஜெபிக்கிறீர்களா?
22. ஜெபத்திலே உறுதியாய் தரித்திருப்பது துன்புறுத்தலுக்காக தயார் செய்வதில் எவ்விதமாக பிரயோஜனமாக இருக்கக்கூடும்?
22 துன்புறுத்தலைப் பற்றி சிந்திக்கையில் இது முக்கியமான ஒரு கேள்வியாக இருக்கிறது. பைபிள் “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்” என்பதாக புத்தி சொல்லுகிறது. (ரோமர் 12:12) ஜெபம், யெகோவா தேவனோடு கொள்ளும் நேரடியான பேச்சு தொடர்பாக இருக்கிறது. அதன் மூலமாக, துன்பங்களை சகித்துக் கொள்ளவும், சரியான தீர்மானங்களைச் செய்யவும், யெகோவா தேவனோடு தனிப்பட்ட ஒரு உறவை வளர்த்துக் கொள்ளவும் பலத்தை நாம் கேட்கலாம். எதிர்க்கிறவர்கள் நம்முடைய பிரசுரங்களையும், நம்முடைய பைபிள்களையும் மற்ற கிறிஸ்தவர்களோடு நம்முடைய கூட்டுறவையும் எடுத்து போட்டாலும்கூட, ஜெபத்தின் சிலாக்கியத்தை அவர்களால் நம்மிடமிருந்து ஒருபோதும் எடுத்துவிட முடியாது. மிக பலமான ஒரு சிறைச்சாலையிலும் ஒரு கிறிஸ்தவன் கடவுளோடு தொடர்பு கொள்ள முடியும். அப்படியென்றால் ஜெபத்தின் சிலாக்கியத்தை முழுமையாக அனுகூலப்படுத்திக் கொள்வது, எதிர்காலத்தில் என்ன வந்தாலும் அதற்காக தயார் செய்வதற்கு மிகச் சிறந்த ஒரு வழியாக இருக்கிறது.
அதிகாரத்தில் நம்பிக்கையுடையவர்களாய் இருக்கிறீர்களா?
23. நியமிக்கப்பட்ட மூப்பர்களிலும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யிலும் நம்பிக்கையை ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்?
23 இந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதும்கூட முக்கியமாக இருக்கிறது. சபையிலுள்ள மூப்பர்கள் நம்மை பாதுகாப்பதற்காக, கடவுள் செய்திருக்கும் ஏற்பாட்டின் பாகமாக இருக்கிறார்கள். மூப்பர்கள் நம்பிக்கைக்கு தகுதியுள்ளவர்களாக இருக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். சபையிலுள்ள மற்றவர்கள் அவர்களுக்கு தங்களுடைய நம்பிக்கையை கொடுக்க கற்றுக்கொள்வது அவசியமாகும். (ஏசாயா 32:1, 2; எபிரெயர் 13:7, 17) இதைவிட அதிக முக்கியமாக இருப்பது “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யை நம்ப கற்றுக்கொள்வதாகும்.—மத்தேயு 24:45-47.
24. யெகோவாவின் ஜனங்களுடைய சத்துருக்களின் பொய் தாக்குதல்களை எதிர்ப்பதற்கு தயாராக இருக்க என்ன செய்யப்படலாம்?
24 கடவுளுடைய அமைப்பைக் குறித்து சத்துருக்கள் பொய்களை பரப்பலாம். (1 தீமோத்தேயு 4:1, 2) ஒரு தேசத்தில் சில கிறிஸ்தவர்கள் தவறான காரியங்களை நம்பும்படியாகச் செய்யப்பட்டார்கள். இவர்கள் இன்னும் கிறிஸ்தவத்துக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்கும்போது, யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவே கிறிஸ்தவத்தை புறக்கணித்து விட்டதாக சொல்லப்பட்டார்கள். இது போன்ற தாக்குதல்களை எதிர்ப்பதற்கு தயார் செய்ய சிறந்த வழி, உங்களுடைய சகோதரர்களிடமாக பலமான அன்பை வளர்த்துக் கொண்டு, யெகோவாவின் ஏற்பாடுகளில் நம்பிக்கை வைக்க கற்றுக்கொள்வதாகும்.—1 யோவான் 3:11.
நீங்கள் வெற்றி பெறலாம்
25. துன்புறுத்தப்படுகையில் வெற்றி பெற நமக்கு எது உதவி செய்யும்?
25 வயதான அப்போஸ்தலனாகிய யோவான், துன்புறுத்தலை சகித்துக் கொண்டிருந்த பின்பு இவ்விதமாகச் சொன்னான்: “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.” (1 யோவான் 5:4) உங்களுடைய சொந்த பெலத்தினால் நீங்கள் ஜெயிக்க முடியாது. சாத்தானும் அவனுடைய உலகமும் உங்களை விட பலமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யெகோவா தேவனைவிட பலமுள்ளவர்கள் அல்ல. ஆகவே நாம் கடவுளுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நமக்கு ஆதரவளிக்க அவருடைய ஆவிக்காக ஜெபித்து, சகித்துக்கொள்ள அவருடைய பெலத்தை முழுமையாக சார்ந்திருப்போமானால், அப்பொழுது நாம் வெற்றி பெறலாம்.—ஆபகூக் 3:13, 18; வெளிப்படுத்தின விசேஷம் 15:2; 1 கொரிந்தியர் 15:57.
26. இப்பொழுது நீங்கள் துன்புறுத்தலை அனுபவித்துக் கொண்டில்லாவிட்டாலும்கூட நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
26 எல்லா தேசங்களிலுமே, எதிர்க்கும் விவாக துணைவராலோ அல்லது ஏதோ ஒரு வகையிலோ சில கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். சில தேசங்களில் உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான செயல்களின் காரணமாக எல்லா கடவுளுடைய ஊழியர்களும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் தனிப்பட்ட விதமாக துன்புறுத்தலையோ, அசாதாரணமான கஷ்டத்தையோ அனுபவித்துக் கொண்டில்லை என்றாலும் அது எந்த சமயத்திலும் வரலாம் என்பதை நினைவில் வையுங்கள். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவது, முடிவு காலத்துக்குரிய அடையாளத்தின் பாகமாக இருக்கும் என்பதாக இயேசு சொன்னார். ஆகவே அதை எப்பொழுதும் நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். (மத்தேயு 24:9) ஆகவே ஏன் இப்பொழுதே அதற்காக தயாராகக்கூடாது? முன்னால் இருப்பது எதுவாக இருந்தாலும், உங்களுடைய நடத்தை எப்பொழுதும் உங்களுடைய பரலோக தகப்பனாகிய யெகோவாவுக்கு துதியை கொண்டு வருவதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.—நீதிமொழிகள் 27:11. (w85 11/15)
உங்களுடைய பதில் என்ன?
◻ துன்புறுத்தலுக்காக என்ன விதமான ஆயத்தங்களை நீங்கள் இப்பொழுது செய்யலாம்?
◻ துன்புறுத்தப்படுகையில் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருக்க தேவையான பலத்தை வளர்த்துக்கொள்ள இப்பொழுது நீங்கள் என்ன செய்யலாம்?
◻ கொலோசெயர் 3:12, 13-ஐ இப்பொழுது பொருத்தி பிரயோகிப்பது, துன்புறுத்தல் வரும்போது எவ்விதமாக பிரயோஜனமாக இருக்கும்?
◻ நியமிக்கப்பட்ட மூப்பர்களிலும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யிலும் உங்களுடைய நம்பிக்கையை ஏன் வளர்க்க வேண்டும்?
◻ துன்புறுத்தப்படுகையில் நீங்கள் எவ்விதமாக வெற்றி பெறலாம்?
8. ‘நிந்தைகளில் பிரியப்படுகிறேன்’ என்று ஏன் பவுலால் சொல்ல முடிந்தது?
13. துன்புறுத்தலின் சமயங்களில் பிரகங்கிப்பதற்கு மேம்பட்ட விதத்தில் ஆயத்தமாக இருப்பதற்கு உங்களுடைய ஊழியத்தைக் குறித்து இப்பொழுது நீங்கள் என்ன செய்யலாம்?