எல்லா வகையான வழிபாட்டையும் கடவுள் ஏற்கிறாரா?
கடவுள் மனிதனை ஆவிக்குரிய தேவையுடன்—வழிபடுவதற்கான தேவையுடன்—படைத்தார். அது பரிணமித்த ஏதோ ஒன்று அல்ல. அது ஆரம்பத்திலிருந்தே மனிதனின் ஒரு பாகமாக இருந்தது.
ஆயினும், கவலைக்குரிய விதத்தில் மனிதவர்க்கமானது வழிபாட்டின் பல வெவ்வேறு வழிகளைத் தோற்றுவித்துள்ளது; பொதுவாக இவை ஒரு மகிழ்ச்சியான, ஒன்றுபட்ட மனித குடும்பத்தை உருவாக்கவில்லை. அதற்கு மாறாக இன்னும்கூட மதத்தின் பேரில் இரத்தம் சிந்தும் போர்கள் நடந்துகொண்டிருக்கின்றன. முக்கியமான இந்தக் கேள்வியை இது எழுப்புகிறது: ஒரு நபர் கடவுளை எவ்வாறு வழிபடுகிறார் என்பது முக்கியத்துவம் உடையதா?
பண்டைய காலங்களில் கேள்விக்கிடமான வழிபாடு
இந்தக் கேள்விக்கு விடையளிக்க, மத்திய கிழக்கில் குடியிருந்த பண்டைய தேசத்தாரின் வரலாற்றுப்பூர்வமான உதாரணம் நமக்கு உதவுகிறது. பாகால் என்று அழைக்கப்பட்ட ஒரு கடவுளைப் பலர் வழிபட்டனர். அஷ்ஷரா போன்ற பாகாலின் பெண் கூட்டாளிகளையும் அவர்கள் வழிபட்டனர். பாலியல் சின்னமாக நம்பப்பட்ட ஒரு மரச்சிலையை உபயோகிப்பதையும் அஷ்ஷராவின் வழிபாடு உட்படுத்தியது. அந்தப் பிரதேசத்தில் பணிபுரியும் தொல்பொருளியல் துறையினர், நிர்வாண பெண் உருவச்சிலைகள் பலவற்றைத் தோண்டியெடுத்திருக்கின்றனர். இந்தச் சிலைகள் “தன்னுடைய மார்பகங்களைப் பிடித்துக்கொண்டு, இனப்பெருக்க உறுப்புகளை மேம்படுத்தி காட்டிய ஒரு தேவதையை முதன்மைப்படுத்திக் காட்டுகின்றன, அஷ்ஷராவைத்தான் . . . அநேகமாகப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்” என்பதாக மதத்தின் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. ஒன்றை மாத்திரம் அறுதியிட்டு கூறமுடியும், பாகால் வழிபாடு பெரும்பாலும் மிகவும் ஒழுக்கக்கேடு நிறைந்ததாக இருந்தது.
ஆகவே, பாகாலின் வழிபாடு பாலியல் களியாட்டத்தை உட்படுத்தியதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. (எண்ணாகமம் 25:1-3) சீகேம் என்னும் ஒரு கானானியன், தீனாள் என்னும் ஓர் இளம் கன்னியைக் கற்பழித்தான். இவ்வாறு இருந்தபோதிலும், அவன் குடும்பத்தார் மத்தியில் மேன்மையுள்ளவனாகக் கருதப்பட்டான். (ஆதியாகமம் 34:1, 2, 19) நெருங்கிய பந்தத்திற்குள் புணருவதும், ஒத்த பாலினத்தவரோடு புணருவதும், மிருகத்தோடு புணருவதும் மிகப் பரவலாக இருந்தன. (லேவியராகமம் 18:6, 22-24, 27) ஒத்தப் பாலினத்தவர் பழக்கத்தை குறிப்பிடும் “ஸோடமி” (sodomy) என்ற வார்த்தையே, ஒருகாலத்தில் உலகின் அந்தப் பகுதியின் பாகமாக இருந்த ஒரு நகரின் பெயரிலிருந்து வந்தது. (ஆதியாகமம் 19:4, 5, 28) பாகால் வழிபாடு இரத்தம் சிந்துதலையும் உட்படுத்தியது. அதுமட்டுமா, பாகாலை வழிபட்டோர், அவர்கள் கடவுட்களுக்குப் பலியாக தங்களுடைய பிள்ளைகளைச் சுவாலையுடன் எரியும் நெருப்பிலே உயிரோடு எறிந்தார்களே! (எரேமியா 19:5) இந்த அனைத்துப் பழக்கங்களும் மதத்தின் போதனைகளுடன் தொடர்புடையவை. அது எப்படி?
“கானானிய புராணங்களிலுள்ள மிருகத்தனம், காமம், வெட்கங்கெட்ட செயல்கள், அக்காலத்தில் கீழை நாடுகளுக்கு அருகில் எங்கும் இருந்தவற்றைக் காட்டிலும் மிகவும் மோசமான அளவில் இருந்தன. எந்தவொரு ஒழுக்கப் பண்பும் இல்லாதிருந்த கானானிய தெய்வங்களின் திகைக்க வைக்கும் இயல்பு, அவற்றின் பக்தர்களின் இடையே படுமோசமான பண்புகளை வளர்த்தது, புனித வேசித்தனம், [மற்றும்] குழந்தை பலி போன்ற மிகவும் ஒழுக்கச்சீர்குலைவான அக்கால பழக்கங்கள் பலவற்றை நீங்கா உடைமையாக்கியது,” என்பதாக டாக்டர் மெரல் யங்னர் தொல்பொருளியலும் பழைய ஏற்பாடும் (ஆங்கிலம்) என்னும் தன்னுடைய புத்தகத்தில் விளக்குகிறார்.
கானானியர்களின் வழிபாட்டை கடவுள் ஏற்றாரா? நிச்சயமாக இல்லை. தம்மை தூய்மையான வழியில் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை அவர் இஸ்ரவேலருக்குக் கற்பித்தார். மேற்குறிப்பிட்ட பழக்கங்களைக் குறித்து அவர் எச்சரித்ததாவது: “இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.”—லேவியராகமம் 18:24, 25.
தூய வழிபாடு கறைபடிந்த ஒன்றாகிறது
தூய வழிபாட்டை குறித்த கடவுளின் கருத்தைப் பல இஸ்ரவேலர்கள் ஏற்கவில்லை. அதற்கு மாறாக, பாகால் வழிபாட்டை தங்கள் தேசத்திலே தொடர்ந்திருக்க அனுமதித்தார்கள். விரைவிலேயே யெகோவாவின் வழிபாட்டுடன் பாகாலுடையதையும் ஒன்றுகலக்கும் முயற்சிக்கு இஸ்ரவேலர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். இந்த ஒன்றுகலந்த வழிபாட்டின் வகையைக் கடவுள் ஏற்றாரா? ராஜாவாகிய மனாசேயின் ஆட்சியின்போது என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். அவர் பாகாலுக்கு பலிபீடங்களைக் கட்டினார், தன்னுடைய சொந்த மகனைப் பலியாகக் கொடுத்தார், மாயவித்தையைக் கைக்கொண்டார். “யெகோவா . . . இந்த ஆலயத்திலே, . . . என் நாமத்தை என்றென்றும் விளங்கப்பண்ணுவேன் என்று சொல்லியிருந்தார்; இவனோ தான் செய்த மரச்சிலை விக்கிரகத்தை [எபிரெயுவில் அஷ்ஷரா] அதிலே வைத்தான்.”—2 இராஜாக்கள் 21:3-7, திருத்திய மொழிபெயர்ப்பு.
மனாசேயின் குடிமக்கள், தங்கள் ராஜாவினுடைய முன்மாதிரியைப் பின்பற்றினார்கள். சொல்லப்போனால், மனாசே “இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னிராதபடி யெகோவா அழித்துவிட்ட ஜாதிகள் செய்த தீமையிலும் அதிகமாய்ச் செய்ய அவர்களைத் தூண்டி வழிவிலகச் செய்தான்.” (2 இராஜாக்கள் 21:9, தி.மொ.) கடவுளின் தீர்க்கதரிசிகள் மீண்டும் மீண்டும் கொடுத்த எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதற்கு மாறாக, அப்பாவிகளின் இரத்தத்தால் எருசலேமை நிரப்பும் அளவுக்குக் கொலைசெய்வதில் ஈடுபட்டார் மனாசே. இறுதியில் மனாசே முற்றிலுமாக மாறியபோதிலும், அவருடைய மகனும், வாரிசுமான ராஜாவாகிய ஆமோன் பாகால் வழிபாட்டை மறுபடியும் புதுப்பித்தார்.—2 இராஜாக்கள் 21:16, 19, 20.
காலப்போக்கில் கோயிலில் ஆண்களும் தேவரடியார்களாக (விபசாரர்களாக) இருக்கும் நிலை பின்பற்றப்பட்டது. பாகால் வழிபாட்டின் இந்த வெளிப்பாட்டை கடவுள் எவ்வாறு கருதினார்? மோசேயின் மூலம் அவர் எச்சரித்திருந்தார்: “தாசியின் பணயத்தையும் நாயின் [ஒருவேளை ஒரு பையன் வேட்கையர் (pederast), NW அடிக்குறிப்பு] சம்பத்தையும் எந்தப் பொருத்தனைக்கும் உன் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்திலே கொண்டுவராதே; அவைகள் இரண்டும் உன் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.”—உபாகமம் 23:17, 18, தி.மொ.
மனாசேயின் பேரன், ராஜாவாகிய யோசியா ஒழுக்கக்கேடான பாகால் வழிபாட்டிலிருந்து ஆலயத்தைச் சுத்திகரித்தார். (2 இராஜாக்கள் 23:6, 7) ஆனால் காரியங்கள் கைநழுவி வெகுதூரம் சென்றுவிட்டன. யோசியாவின் மரணத்திற்குப்பின் சிறிது காலத்திற்குள்ளாகவே, யெகோவாவின் ஆலயத்தில் மறுபடியும் விக்கிரக வழிபாடு நடைபெற்றது. (எசேக்கியேல் 8:3, 5-17) எனவே, யெகோவா எருசலேமையும் அதன் ஆலயத்தையும் பாபிலோனின் அரசனைக் கொண்டு அழித்திட செய்தார். வரலாற்றின் விசனகரமான இந்த உண்மை சில வழிபாட்டு முறைகளை கடவுள் ஏற்பதில்லை என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. நம் நாளைப் பற்றியது என்ன?