நற்செய்தியை தைரியமாக அறிவியுங்கள்
1 வரலாற்றில் உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்கள் தைரியத்துக்கு பேர்பெற்றவர்களாக இருக்கின்றனர். அப்போஸ்தலனாகிய பேதுருவும் யோவானும் இதற்கு சிறந்த முன்மாதிரிகளாவர். சிறையிலடைக்கப்பட்டு பயமுறுத்தப்பட்ட போதிலும், இந்த அப்போஸ்தலர்கள் பயமின்றி தைரியமாக சத்தியத்தைத் தொடர்ந்து பேசி வந்தார்கள். (அப். 4:18-20, 23, 31பி) பவுலும்கூட கடினமான பிராந்தியங்களில் அவன் அதிகமான துன்புறுத்தலை எதிர்ப்பட்ட போதிலும் தைரியமாக தன் ஊழியத்தைத் தொடர்ந்தான்.—அப். 20:20; 2 கொரி. 11:23, 28.
2 கடும் இன்னல் இருந்தபோதிலும் வரலாற்றினூடே அப்போஸ்தலரும் அதோடு மற்ற கிறிஸ்தவர்களும் எப்படி நற்செய்தியை தைரியமாக தொடர்ந்து அறிவித்து வந்தனர்? 1 தெசலோனிக்கேயர் 2:2-ல் அப்போஸ்தலனாகிய பவுல் அந்தக் கேள்விக்கு விடையளிக்கிறான். அங்கே அவன் சொல்லுவதாவது: “தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங் கொண்டிருந்தேன்.” அதே போன்று பேதுருவும் யோவானும் அதோடு மற்ற சீஷர்களும் நற்செய்தியை தைரியமாக அறிவிக்க முடிந்தது. விடுதலை செய்யப்பட்ட பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் உடன் சீஷரிடம் போய் அதைத் தெரிவித்தார்கள். பின்பு “வசனத்தை முழு தைரியத்தோடும்” தொடர்ந்து பேசிக்கொண்டிருந்து தங்களுக்குத் தைரியத்தையும் பெலனையும் அருளும்படி யெகோவாவிடம் ஜெபித்தார்கள். இந்த ஜெபத்துக்கு கடவுள் உடனடியாக பதிலளித்தார். அப்பொழுது “அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.”—அப். 4:29, 31.
யெகோவாவில் திட நம்பிக்கையை வெளிக்காட்டுதல்
3 யெகோவா அவர்களை ஆதரிக்கிறார் என்பதைக் குறித்து அவர்கள் திடநம்பிக்கையுடனிருந்தார்கள். அவருடைய வார்த்தையின் மூலம் அவர் கூறியிருந்த எல்லா வாக்குறுதிகளும் உண்மையானவைகளாக நிரூபித்தன. மேலும் நிறைவேற வேண்டியவைகள் இயேசு கிறிஸ்துவின் மூலம் உறுதி செய்யப்பட்டன. நற்செய்தியை தைரியமாக பிரசங்கிப்பதில் அதே திட நம்பிக்கையை நாம் கொண்டிருக்கிறோமா? நாம் அந்நிய பாஷைகளைப் பேசுவதில்லை அல்லது வியாதியஸ்தரை குணமாக்குவதுமில்லை. ஆகிலும் யெகோவாவின் ஆதரவு இருக்கிறதென்பதற்கு நமக்கு அபரிமிதமான அத்தாட்சி இருக்கிறது. பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்களை நாம் பார்க்கையில், கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை தைரியமாக பேசுவதற்கு நாம் தூண்டப்படுகிறோமா?
4 இப்படிப்பட்ட தைரியமான பிரசங்க வேலை எதிர்ப்புகளை சந்திக்கும் என்பதை எதிர்ப்பார்க்க வேண்டும். (யோ. 15:20) இயேசு மற்றும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் காரியத்திலும் நடந்தது இதுவே. ஆனால் இது அவர்களை தடைச் செய்யவுமில்லை, அவர்களுடைய பிரசங்க வேலையின் தீவிரத்தைக் குறைக்கவுமில்லை. மெய்யாகவே, இப்படிப்பட்ட எதிர்ப்புகள் ராஜ்ய நற்செய்தியை பரப்புவதற்கு அவர்களுக்கு மிகுதியான வாய்ப்பைக் கொடுத்தது. (அப். 4:3, 8-13எ) முக்கியமான பிரச்னைகளின் பேரில் கடவுளுடைய வார்த்தைக்கு நாம் கொண்டிருக்கும் கிறிஸ்தவ பற்றுதலின் காரணமாக, நமது நிலைநிற்கைக்கு விளக்கம் கொடுக்கும்படியாக நாம் அடிக்கடி அழைக்கப்படுகிறோம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை நற்செய்தியை தைரியமாக பிரசங்கிப்பதற்குரிய வாய்ப்புகளாக நாம் நோக்குகிறோம். இப்படிச் செய்வதன் மூலம் நாம் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய அப்போஸ்தலரையும் பின்பற்றுகிறோம்.
5 துணைப்பயனியர் சேவையானது நற்செய்தியை பிரசங்கிப்பதற்குரிய மிகுதியான வாய்ப்புகளை அருளுகிறது. மே மாதத்தின்போது அநேகர் துணைப்பயனியர் சேவை செய்வார்கள். மற்ற சிலரோ வரக்கூடிய மாதங்களில் செய்ய ஏற்பாடு செய்துகொண்டிருக்கக்கூடும். அதற்காக விண்ணப்பிக்க உங்கள் சூழ்நிலைமை உங்களை அனுமதிக்கக்கூடுமா? துணைப்பயனியர் சேவையில் பங்குகொள்ள முயற்சிகளை எடுப்பதன் மூலம் நாம் பவுலைப் போன்றும் பர்னபாவைப் போன்றும் நிரூபிப்போமாக. அப்போஸ்தலர் 14:3 (NW) சொல்வதாவது: “அவர்கள் அங்கே அநேக நாள் சஞ்சரித்து யெகோவாவை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய் போதகம் பண்ணினார்கள்.” ஒரு மாதத்தின்போது குறைந்த பட்சம் 60 மணிநேரம் செய்வதற்கு மற்ற நடவடிக்கைகளிலிருந்து நாம் நேரத்தை சம்பாதிக்கக்கூடுமானால் நமது ஆசீர்வாதம் சந்தேகமின்றி அதிகரிக்கும்.
6 வெளி ஊழியத்தில் தைரியமாக இருப்பது முக்கியமாக சந்தாக்களை அளிக்கும்போது உதவியாக இருக்கக்கூடும். இந்தப் பத்திரிகைகள் கடவுளுடைய வார்த்தையின் பேரில் சார்ந்த உயிரைக் காக்கும் தகவலைக் கொண்டிருக்கின்றன. எனவே, நாம் தயங்க வேண்டாம் நமது முன்மாதிரியான இயேசுவையும் மற்றும் அவருடைய அப்போஸ்தலரையும் பின்பற்றுவதில் தைரியமாக பிரசங்கிப்போமாக.