சகிப்புத்தன்மையோடு தொடர்ந்து கனிகளை பிறப்பியுங்கள்
1 இயேசு மரித்து, உயிர்த்தெழுந்து 30-க்கும் குறைந்த ஆண்டுகளுக்குள்ளாக கொலோசே பட்டணத்து சபைக்கு எழுதுகையில், அப்போஸ்தலனாகிய பவுல் சத்திய வசனமாகிய சுவிசேஷம் உலகமெங்கும் பரவி பலன்தருகிறது என்று சொல்ல முடிந்தது. (கொலோ. 1:5, 6) இன்று அதைக் காட்டிலும் மகத்தான முறையில் யெகோவாவின் சாட்சிகள் மெய்யாகவே, ராஜ்ய நற்செய்தியை “பூமியின் கடைசி பரியந்தமும்” பரவச்செய்திருக்கிறார்கள். (அப். 1:8; யோவான் 14:12) 1989-ம் ஊழிய ஆண்டின்போது உலக முழுவதிலும் ராஜ்ய பிரஸ்தாபிகளின் சராசரி எண்ணிக்கையில் 5.6 சதவிகித அதிகரிப்பு இருந்தது. மேலும் நாம் 212 நாடுகளில் 37,87,188 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை அடைந்தோம்!
2 கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய பிரசங்கவேலை தடைசெய்யப்பட்டுள்ள மற்றும் முழுமையான அறிக்கைகளைப் பெற முடியாத நாடுகளில், இதைவிட அதிகமான அதிகரிப்பு, 7.6 சதவிகித அதிகரிப்பு அறிக்கைச் செய்யப்பட்டது! இந்த நாடுகளில் அநேக பிரச்னைகள் இருந்தபோதிலும் பிரஸ்தாபிகள் “சகிப்புத் தன்மையுடனே தொடர்ந்து கனிக்கொடுக்கின்றனர்.” (லூக். 8:15, NW) சில இடங்களில் அழுத்தங்கள் சற்று குறைந்திருக்கின்றன, ஆனால் மற்ற சில நாடுகளில் கடினமான சூழ்நிலைமைகளில் எவ்வித மாற்றமுமின்றி தொடருகின்றன.
3 ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் தொடருவதற்கு மிகுதியான சுயாதீனமுள்ள நாடுகளில் நாம் வேறுவிதமான பிரச்னைகளை எதிர்ப்படுகிறோம். அதிகமாக அக்கறையின்மையையும் அசட்டை மனப்பான்மையையும் எதிர்ப்படுகிறோம். முக்கியமாக பொருளாதார செழிப்புள்ள இடங்களில் அப்படியிருக்கிறது. தாங்களும் இப்படிப்பட்ட மனப்பான்மைகளை உள்ளவர்களாகாதபடி யெகோவாவின் ஊழியர்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். பொருளாதார அக்கறைகளும், இன்பங்களும், பொழுதுபோக்குகளும் இன்னும் மற்ற பல கவனச்சிதறல்களும் நமது தேவராஜ்ய நடவடிக்கைகளுக்குள் நுழைவதை நாம் விரும்புகிறதில்லை. இல்லாவிடில் நாமும் அசட்டை மனப்பான்மையுள்ளவர்களாக மாறி சகிப்புத் தன்மையுடன் தொடர்ந்து கனிக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை மதித்துணர தவறக்கூடும்.—லூக். 21:34-36.
சகிப்புத்தன்மையும் மும்முரமான பிரயாசையும்
4 நற்செய்திக்கு நாம் எதிர்ப்பை சந்தித்தாலும் அல்லது நம்முடைய கிறிஸ்தவ உத்தரவாதங்களை நிறைவேற்றுவதில் நமக்கு ஓரளவான சுதந்திரம் இருந்தாலும் சகிப்புத்தன்மை ஓர் அத்தியாவசிய தேவை. சில நாடுகளில் நமது சகோதரர்கள் பல பத்தாண்டுகளாக பிரதிகூலமான சூழ்நிலைமைகளின் கீழ் பணியாற்றி வந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட இன்னல்களின் கீழ் அவர்களுடைய சகிப்புத்தன்மைகள் அங்கீகரிக்கப்பட்ட நிலைமையை உருவாக்கி இருக்கிறது. இப்பொழுது அவர்கள் நிறைவான ஆசீர்வாதங்களை அறுவடை செய்கின்றனர். (ரோ. 5:3-5; கலா. 6:9) நாம் எதிர்ப்படும் தொல்லைகள் எதுவாக இருந்தாலும் நாம் தொடர்ந்து சகித்துக்கொண்டிருக்க வேண்டும். ராஜ்ய சாட்சி கொடுக்கப்பட வேண்டும். நாமனைவரும் நமது உத்தமத்தன்மையை தொடர்ந்து நடப்பித்துக்காட்ட வேண்டும். நமது பங்கில் சகிப்புத்தன்மையை காட்டுவதன் மூலம் நமது ஆத்துமாவை அல்லது உயிரை காத்துக்கொள்ளலாம்.—மாற்கு 13:10; லூக். 21:19.
5 யெகோவாவின் சேவையில் நாம் நம்மை மும்முரமாக ஈடுபடுத்திக்கொண்டு, பிரசங்க வேலையில் சோர்ந்துவிடாமல் இருப்பதன் மூலம் ஆவிக்குரிய காரியங்களை நாம் அற்பமானதாக கருதவில்லை என்பதைக் காட்டுவோமாக. பிரசங்க வேலையில் தளர்ந்து போகாதிருப்போமாக. போக்குவரத்து வாகன வசதிகள் அதிக கடினமாக இருக்கும், பொருள் சம்பந்தமான தேவைகள் குறைவுபடும் மற்றும் பணப் பிரச்னைகள் இருக்கும் சில நாடுகளிலும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையில் தளர்ச்சி எதும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு சில நாடுகளில் சபை பிரஸ்தாபிகள் ஒவ்வொரு மாதமும் ஒழுங்காக வெளி ஊழியத்தில் சராசரியாக 14 முதல் 17 மணிநேரங்களைச் செலவிடுகின்றனர். அவர்களுடைய பயனியர் அணிகளிலும்கூட தொடர்ச்சியான அதிகரிப்பு இருக்கிறது. இது அநேக பொருள் வசதிகள் கொண்ட நம்மை, சற்று நிதானித்து யோசித்துப் பார்க்கும்படி செய்கிறது. மிக முக்கியமான இந்த ராஜ்ய பிரசங்கிப்பு மற்றும் சீஷராக்கும் வேலையில் நமது தொடர்ச்சியான பங்கை நாம் அதிகரிக்கக்கூடுமா?
நாம் அதிகத்தைச் செய்யக்கூடுமா?
6 வெளி ஊழியத்தில் அதிக நேரத்தை செலவிடுவதானது நமது அட்டவணைகளில் சில சரிமாற்றங்கள் செய்வதை தேவைப்படுத்தலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் வெளி ஊழியத்தில் நாம் ஒருவேளை ஒரு மணி நேரத்தை மட்டுமே செலவிடுபவர்களாக இருந்தால், இன்னொரு மணிநேரம் மறுசந்திப்பு செய்வதன் மூலம் அல்லது ஒரு பைபிள் படிப்பை நடத்துவதன் மூலம் அந்த நேரத்தை அதிகரிக்கக்கூடுமா? அல்லது நாம் ஒரு பைபிள் படிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோமென்றால் வீட்டுக்கு வீடு ஊழியத்திலோ அல்லது பைபிள் படிப்புக்கு முன்பு ஒரு சில மறுசந்திப்புகள் செய்வதிலோ ஓரிரண்டு மணிநேரங்களை கூட்டக்கூடுமா? சனிக்கிழமைகளில் பத்திரிகை ஊழியத்தில் இரண்டு மணிநேரங்களை செலவழித்தப் பின்பு, நாம் ஆரம்பித்துள்ள பத்திரிகை மார்க்கத்தில் ஆட்களை சந்தித்து பத்திரிகைகளை அளிக்கலாம் அல்லது ஒரு சில மறுசந்திப்புகளைச் செய்ய முயற்சி செய்யலாம். நகர்புறங்களில் வாழ்பவர்கள் தெரு ஊழியத்தில் சிறிது நேரம் செலவழிப்பதை வசதியானதாக காணக்கூடும். இவற்றின் மூலமாயும் மற்ற வழிகளிலும் நாம் வெளி ஊழியத்தில் நமது பங்கை அதிகரிக்கக்கூடும். அதற்கு இணையாக நற்பயன்களும் கட்டாயம் அதிகரிக்கும்.
7 வெளி ஊழியத்திலும் மறுசந்திப்புகளிலும் செலவிடப்படும் அதிகப்படியான நேரம் சந்தேகமின்றி அதிகப்படியான பைபிள் படிப்புகள் நடத்தப்படுவதில் விளைவடையும். அப்படியானால் இது காலப்போக்கில் இன்னுமதிகமான ஆட்கள் சத்தியத்துக்கு வருவதையும் ராஜ்ய பிரசங்க வேலையை நிறைவேற்ற நமக்கு உதவி செய்வதையும் குறிக்கும்.—மத். 28:19, 20.
ஜெபம் அத்தியாவசியம்
8 சகிப்புத் தன்மையோடு நாம் தொடர்ந்து கனிகொடுக்கிறவர்களாக இருக்கவேண்டுமானால் நாம் யெகோவாவின் ஆசீர்வாதங்களை நாட வேண்டும். அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு வளைந்துகொடுக்க வேண்டும். நமது ஊழியத்தை நாம் யெகோவாவுக்கு செய்யும் ஜெபத்தின் பொருளாக ஆக்கிக்கொள்ள வேண்டும். வெளி ஊழியத்தின் நடவடிக்கைகளைக் குறித்து நாம் யெகோவாவிடம் விண்ணப்பிக்கையில் அவருடைய உடன்வேலையாட்கள் என்று நாம் நினைப்பூட்டப்படுகிறோம். (1 கொரி. 3:9) நாம் நமது ஊழியத்தில் உடனடியான பலன்களை காணமுடியாத போதிலும் யெகோவா தேவனின் உதவியோடு சகித்து நிலைத்திருக்க முடியும். சில பிராந்தியங்களில், ராஜ்ய பிரஸ்தாபிகள் பங்கில் பல ஆண்டுகளாக உண்மையுள்ளவர்களாய் சகித்து நிலைத்திருந்த பின்பே அதிகரிப்பு வந்திருக்கிறது. எதிர்காலத்தை நாம் நோக்குகையில் நமது ஊழியத்தை நாம் விட்டுகொடுத்து விடாமல் முழுமையாக நிறைவேற்றுவதற்கு தெய்வீக வழிநடத்துதலையும் உதவியையும் எப்பொழுதும் நாடவேண்டியது அவசியமாக இருக்கிறது. (2 தீமோ. 4:5) ராஜ்ய பிரசங்கிப்பு மற்றும் சீஷராக்கும் வேலையில் இன்னமும் மிகுதியான கனிகள் கொடுக்கப்படுகின்றன.
9 எல்லாச் சமயங்களிலும் ஜெபிக்க வேண்டிய அவசியத்தை இயேசு நமக்கு வலியுறுத்திக் காண்பித்தார். (லூக். 18:1) பவுல் கொடுத்த புத்திமதி: “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்.” (1 தெச. 5:17) நாம் இப்பொழுது ஜெபத்தில் தரித்திருப்பதற்கு அவசரமான காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்துகொண்டேயிருக்கும் மந்தையைப் பராமரிப்பதில் அநேக உத்தரவாதங்கள் உட்பட்டிருக்கின்றன. மற்றவர்கள் சகிப்புத்தன்மையோடு கனிகொடுப்பதற்கு நாம் அவர்களுக்கு உதவ விரும்புகிறோம். தனிப்பட்ட பிரஸ்தாபிகளுடைய மற்றும் முழு சபையினுடைய பல்வேறு தேவைகளுக்குக் கவனம் கொடுக்கப்பட வேண்டும். வேலையை ஆதரிப்பதற்கும் பைபிளைச் சார்ந்த பிரசுரங்கள் தொடர்ந்து கிடைப்பதை சாத்தியமாக்குவதற்கும் நன்கொடைகளின் அவசியத்தை உணர்ந்தவர்களாய் தேவபயமுள்ள ஆட்கள் இவ்விஷயத்தில் தாராளமாய் வழங்கும்படி யெகோவா தேவன் அவர்களைத் தொடர்ந்து உந்துவிப்பதற்கு நாம் ஜெபம் செய்ய விரும்புகிறோம்.—2 கொரி. 9:8-11.
10 இதுவரை எப்போதுமிருந்திராத வகையில் உலகளாவிய வயல்நிலத்தின் பகுதிகள் தேவராஜ்ய வளர்ச்சிக்காக பெருமளவுக்கு திறந்திருக்கிறது. கொலோசெயர் 4:2-ல் கொடுக்கப்பட்டுள்ள புத்திமதியானது அதிக அர்த்தமுள்ளதாக ஆகிறது. “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.” நம்முடைய ஜெபங்கள் எல்லா இடங்களிலுமுள்ள சகோதரர்களுக்காக அதாவது அவர்கள் தொடர்ந்து கனிக்கொடுக்கவும், கடந்த காலங்கள் சாட்சி கொடுத்தலை அதிக கடினமானதாக்கிய பிராந்தியங்களில் மற்ற செம்மறியாடு போன்ற ஆட்களுக்கு உதவவும் ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும்.
நன்றியுணர்வை வெளிக்காட்டுங்கள்
11 மிகுதியாய் அனுபவித்து மகிழும் அபரிமிதமான ஆவிக்குரிய ஏற்பாடுகளுக்காக நாம் எவ்வளவாய் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! இவற்றிற்காக நாம் யெகோவாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். மேலும் உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர் மற்றும் அதன் ஆளும் குழுவினருடைய வேலைகளை அவர் தொடர்ந்து ஆசீர்வதிப்பதற்காகவும் நாம் ஜெபிக்கிறோம். நம் சார்பாகவும் உலக முழுவதிலுமுள்ள செம்மறியாட்டைப் போன்ற ஆட்களின் சார்பாகவும் அவர்களுடைய தாழ்மையான, மற்றும் சோர்ந்துவிடாமல் செய்யும் வேலை வெகுவாக போற்றப்படுகிறது.
12 ராஜ்ய விதைகளை விதைக்கையில் பெருந்திரளான பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. (மத். 13:3-8, 18-23) என்றாலும், வெளி ஊழியத்தில் பைபிள்களுக்கும் பைபிள் பிரசுரங்களுக்கும் மிகுதியான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. மறுசந்திப்பு மற்றும் வீட்டு பைபிள் படிப்பு உருவிலே பெருமளவான பண்படுத்தும் வேலையும் தண்ணீர் பாய்ச்சும் வேலையும் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக உலக அறிக்கைகள் காட்டுகின்றன. ஊழியத்தின் இந்த மிக முக்கியமான அம்சங்களில் நாம் நமது பங்கை தொடர்ந்து நிறைவேற்றுகையில் காரியங்களை வளரச் செய்யக்கூடிய யெகோவாவின் தொடர்ந்த ஆசீர்வாதத்துக்காக நாம் நன்றி செலுத்துகிறோம். நிச்சயமாகவே, அந்த ஆசீர்வாதத்திற்காக நாம் ஜெபிக்கிறோம்.—1 கொரி. 3:6, 7.
மற்ற தேவைகள்
13 நாம் இந்த உலகத்தில் இருந்துகொண்டு அதே சமயத்தில் இந்த உலகத்தின் பாகமல்லாதவராயிருப்பதன் காரணமாக, கிறிஸ்தவர்கள் பிரச்னைகளையும் சோதனைகளையும் தொடர்ந்து எதிர்ப்படுவார்கள். இந்தக் கடைசி நாட்களில் அது இன்னும் தீவிரமடையும். ஒருசிலர் இப்பொழுது துன்புறுத்தலை அல்லது மற்ற தொல்லைகளை சகித்துக் கொண்டிருக்கின்றனர். மற்ற சிலர் போர்களால் சின்னாபின்னமாக்கப்படும் தேசங்களில் தங்கள் கிறிஸ்தவ நடவடிக்கைகளைத் தொடர வேண்டியதாயிருக்கிறது. பெருஞ் சேதங்கள் பூமியதிர்ச்சிகள், கடும்புயல், சூறாவளிக் காற்று போன்றவற்றையும் நமது சகோதரர்கள் அனுபவித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட காரியங்கள் நிகழுகையில் அவ்விடங்களிலுள்ள சகோரர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். (அப்போஸ்தலர் 12:5; 2 கொரிந்தியர் 1:11-ஐயும் ஒப்பிட்டு பாருங்கள்.) நமது வேலையின்பேரில் போடப்படும் தடையுத்தரவுகள், துன்புறுத்தல்கள் அல்லது ராஜ்ய அக்கறைகளை பாதிக்கக்கூடிய மற்ற காரியங்களைக் குறித்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவது அல்லது அவர்களைச் சந்தித்துப் பேசுவது சில சமயங்களில் அவசியமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளின் கீழ் நம்மால் தனிப்பட்ட முறையில் என்ன செய்யக்கூடுமோ அதை நாம் செய்கிறோம். மேலும் நம்முடைய உடன் ஊழியர்களிடமாக அவர்கள் தயவாக நடந்துகொள்ளும்படிக்கு அந்தத் தனி நபர்களுக்காகவும் நாம் ஜெபம் செய்கிறோம்.—1 தீமோ. 2:1, 2.
14 சாத்தானுடைய துன்மார்க்க உலகில் வாழக்கூடிய குடும்பங்கள் மீது அநேக அழுத்தங்கள் வருகின்றன. (2 கொரி. 4:4) விவாகமான தம்பதிகள் வினைமையான பிரச்னைகளை எதிர்ப்படக்கூடும். தெய்வீக வழிநடத்துதலுக்காக ஜெபிக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்கள் சார்பாக நாமும்கூட ஜெபம் செய்யலாம். (1 கொரி. 7:5; 1 பேதுரு 3:7) தங்களுடைய குடும்பத்தை நன்றாய் நடத்த வழிநடத்துதலுக்காக தாங்கள் செய்யும் ஊக்கமான வேண்டுதல்களுக்கு யெகோவா செவிகொடுப்பார் என்பதை குடும்பத் தலைவர்கள் மதித்துரண வேண்டும். (நியா. 13:8; பிலி. 4:6, 7) இளைஞரும் முதியோரும் கடினமான சூழ்நிலைமைகளை எதிர்ப்படுகின்றனர். இது ஒருவேளை பள்ளியில் வேலை செய்யுமிடங்களில், பிரயாணஞ் செய்கையில் அல்லது மற்ற சில சூழ்நிலைமைகளில் இருக்கலாம். இந்தப் பொல்லாத உலகத்தின் அந்த ஆவியை எதிர்த்து போராடவும் கடவுளுடைய பார்வையில் எது பிரியமானதோ அதைச் செய்வதில் தளராமல் ஈடுபடுகிறவர்களாக தொடர்ந்து கனிகொடுக்கவும் ஜெபம் நமக்கு உதவி செய்கிறது.—மத். 6:13; எபே. 6:13-18; 1 யோவான் 3:22.
15 யெகோவா தேவன் ஜெபத்துக்குச் செவிகொடுப்பவர். (சங். 65:2) சில வேளைகளில் நாம் நமது கவலைகளையெல்லாம் அவர் மீது சுமத்திவிட வேண்டியதாக இருக்கும். (சங். 55:22) ராஜ்ய அக்கறைகள் அனைத்திற்காகவும் மற்றும் எல்லா இடங்களிலுமுள்ள நமது சகோதரர்களுடைய நலனிற்காகவும் ஜெபிப்பதன் மூலம் நாம் நமது அக்கறையை காண்பிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. சபையில் தலைமை ஏற்று நடத்தக்கூடியவர்கள், உலகளாவிய விஸ்தரிப்பு திட்டங்களை வழிநடத்தக்கூடியவர்கள் ஆகியோரின் வேலைகளைக் குறித்து யோசித்து பார்க்கையிலும், ஆவிக்குரிய பிரகாரமாய் வியாதிப்பட்டிருப்பவர்களை கையாளுகையிலும் அல்லது மற்ற பிரச்னைகளை அது சிறியதோ பெரியதோ கவனிக்கையிலும் நாம் அனைவரும் இப்படிப்பட்ட காரியங்களை யெகோவாவுக்கு முன்பாக ஜெபத்தில் வைக்கவேண்டும். (1 தெச. 5:25; யாக். 5:14-16) ஆம், நமது கவலையெல்லாம் யெகோவாவின் மீது சுமத்திவிட வேண்டும். அவருடைய சித்தத்தின்படி எதைக் கேட்டாலும் அதை தருவார் என்ற முழு நம்பிக்கையுடனிருக்க வேண்டும். (1 பேது. 5:7; 1 யோ. 5:14) நாம் ராஜ்ய சேவையில் பற்றார்வத்துடனிருந்து சகிப்புத்தன்மையோடு தொடர்ந்து கனிகொடுப்பதற்கு உதவும்படி யெகோவாவை எப்பொழுதும் நோக்கியிருப்போமாக.