அக்கறையுள்ளோருக்குக் கரிசனைக் காட்டுங்கள்
1 எல்லாருக்கும் மேலாக, யெகோவாவே ஆட்களுக்குக் கரிசனைக் காட்டுவதில் தயாளமுள்ளவராய் இருந்திருக்கிறார். பொருளாதாரங்களை அவர் ஏராளமாய் அளித்திருப்பதுமட்டுமல்லாமல், நமக்குத் தேவைப்படும் மற்றும் நாம் அனுபவித்துக் களிக்கும் ஆவிக்குரிய காரியங்களையும் அவர் நமக்கு அளித்திருக்கிறார். அவர் நம்மைப்பற்றி அவ்வளவு கரிசனையுடையவராய் இருப்பதால் நம்முடைய இருதயத்திலுள்ளதையும் ஆராய்ந்து பார்க்கிறார்.—சங். 139:23.
2 இயேசு பூமியில் இருந்தபோது, மற்றவர்களுக்குக் கரிசனைக் காட்டுவதில் அவர் தம்முடைய பிதாவின் மாதிரியைப் பரிபூரணமாய்ப் பின்பற்றினார். “ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்று இயேசுவினிடம், சொன்ன மனிதன் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இயேசு, “எனக்குச் சித்தமுண்டு” எனப் பதிலளித்தார். (மத். 8:1-3) ஒரு விதவைத் துக்கத்தில் இருந்ததை இயேசு கண்டபோது, என்ன செய்தார்? அவளுக்கு உதவிசெய்ய அவர் நின்றார். (லூக். 7:11-15) அக்கறையுள்ளோருக்குக் கரிசனைக் காட்ட நீங்கள் மேலுமதிக விழிப்பாய் இருக்கக்கூடுமா?
3 நம்முடைய பரமதகப்பன், யெகோவாவின் மாதிரியையும், அவருடைய குமாரன், கிறிஸ்து இயேசுவின் மாதிரியையும் பின்பற்றி, நாமுங்கூட மற்றவர்களில் தனிப்பட்ட அக்கறை காட்ட வேண்டும். திருத்தமான வீட்டுக்குவீடு பதிவை வைத்துவருவதன்மூலம் நாம் இவ்வாறு செய்கிறோம். இது, அக்கறை காட்டும் ஆளின் பெயரையும் சரியான விலாசத்தையும் அவற்றோடுகூட முதல் சந்திப்பில் கலந்துபேசின பொருளையும் எழுதிவைப்பதை உட்படுத்துகிறது. பின்பு, மறுசந்திப்பு செய்வதற்கு முன்னால், நன்றாய் ஆயத்தம் செய்யுங்கள். முந்தின சந்திப்பில் நாம் பத்திரிகைகள் விட்டுவந்திருந்தால், நம்முடைய மறுசந்திப்பின் உரையாடல் அவற்றின் கட்டுரைகள் ஒன்றில் விளக்கியிருக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டதாய் இருக்கலாம். இதை எவ்வாறு செய்யலாமென்பதைக் கவனியுங்கள்.
4 நீங்கள் நவம்பர் 1, 1992-ன் காவற்கோபுர பிரதியைக் கொடுத்து, “நித்திய ஜீவனைக் கடவுள் அளிக்க முன்வருகிறார்” என்ற 6-ம் பக்கத்திலுள்ள உபதலைப்பின்பேரில் கவனத்தை ஊன்றவைக்கச் செய்திருந்தால், உங்கள் மறுசந்திப்பில் வெளிப்படுத்துதல் 21:4-ஐயும் யோவான் 17:3-ஐயும் முக்கியமாக எடுத்துக் காட்டிப் பேசும்படி நீங்கள் ஆயத்தம் செய்யலாம்.
உதாரணமாக, வெளிப்படுத்துதல் 21:4-ஐ வாசித்தப் பின்பு, நீங்கள் பின்வருமாறு கேட்கலாம்:
◼ “நாம் எவ்வாறு நித்திய ஜீவனை அடைய முடியும்? [பதில் சொல்ல நேரம் அனுமதியுங்கள்.] ஏழாம் பக்கத்தில் வருணிக்கப்பட்டுள்ள ஓர் உலகத்தில் ஜீவனை அடைவதற்கு என்ன தேவை என இயேசு சொன்னதைக் கவனியுங்கள்.” பின்பு யோவான் 17:3-ஐ வாசித்து, கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றிய அறிவைப் பெற்றுவருவதால் சமாதானமான புதிய உலகத்தில் நித்திய ஜீவனை அடைய முடியுமென்பதை விளக்கமாக எடுத்துக் காட்டுங்கள். ஏதாவது அக்கறை காட்டினால், சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியில் ஒரு படிப்பைத் தொடங்க முயற்சி செய்யுங்கள்.
5 நவம்பர் 8, 1992, விழித்தெழு! பத்திரிகையில் “உலக ஜனத்தொகை—எதிர்காலத்தைப் பற்றியதென்ன?” என்ற கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு குறிப்பைக் கலந்துபேசுவதன் மூலம் நல்ல பிரதிபலிப்பை நீங்கள் அடையலாம். மறுசந்திப்பு செய்கையில், சங்கீதம் 72:12, 16-ன் பேரில் உங்கள் உரையாடல் ஆதாரங்கொள்ளும்படி செய்யலாம்.
நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
◼ “இன்று உலகத்தில் காணப்படும் உணவு குறைபாட்டுக்குத் தீர்வு என்னவென நீங்கள் நம்புகிறீர்கள்?” பதிலை ஒப்புக்கொண்டு பின்பு இவ்வாறு சொல்லுங்கள்: “அக்கறையூட்டுவதாக, யெகோவா சமீப எதிர்காலத்தில் இந்தப் பிரச்னையை உலகத்திலிருந்து ஒழித்துப் போடுவாரென வாக்குக்கொடுத்திருக்கிறார். [சங்கீதம் 72:12, 16-ஐ வாசியுங்கள்.] உணவு அளிப்புகளும் மனிதனின் எல்லா விவகாரங்களும் பரிபூரணமாய் ஆண்டு நடத்தப்பட்டு, இன்று எதிர்ப்படும் உணவு குறைபாடுகளின் மற்றும் விலையேற்றங்களின் காரணமாக ஒருவரும் துன்பப்படப்போகாத அந்தக் காலத்தை பைபிள் குறிப்பிட்டுக் காட்டுகிறது.” பின்பு சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை துண்டுப்பிரதியிலுள்ளதைச் சிந்தித்து, எதிர்காலத்தில் இருக்கப்போகும் மற்ற ஆசீர்வாதங்களை எடுத்துக் காட்டி, ஒரு படிப்புக்குள் வழிநடத்துங்கள்.
6 வீட்டுக்காரரிடம் நம்முடைய பிரசுரங்களில் ஒன்று ஏற்கெனவே இருந்தால் என்ன செய்வது? ஒரு படிப்பைத் தொடங்க அதைப் பயன்படுத்தலாமல்லவா? அது என்றென்றும் வாழலாம் புத்தகமாயிருந்தால், பொருளடக்கப் பக்கத்துக்குத் திருப்பி, வீட்டுக்காரர் கலந்துபேச விரும்பும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கும்படி அவரைக் கேளுங்கள். பின்பு ஒன்று அல்லது இரண்டு பாராக்களை ஆலோசிப்பதன் மூலம் ஒரு படிப்பை நீங்கள் தொடங்கலாம்.
7 நன்றாய் ஆயத்தம் செய்து பலன்தரும் மறுசந்திப்புகளைச் செய்வதனால் அக்கறையுள்ளோருக்குக் கரிசனைக் காட்டுவது, நாம், கடவுளும் கிறிஸ்துவும் வைத்த மாதிரியைப் பின்பற்றுவோரெனவும், கூடிய மிகப் பலர் ரட்சிக்கப்பட விரும்புகிறோமெனவும் மெய்ப்பித்துக் காட்டுகிறது.—2 பேதுரு 3:9.