உங்களால் உதவிக்கரம் நீட்ட முடியுமா?
1 யெகோவா தம் உண்மை ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்ட எப்பொழுதும் வழிவகைகளைத் தேடிக்கொண்டே இருக்கிறார். (2 நா. 16:9; ஏசா. 41:10, 13) அவரை ஒரு கரிசனையுள்ள மேய்ப்பருக்கு ஒப்பிட்டு ஏசாயா பின்வருமாறு எழுதினார்: “ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.” (ஏசா. 40:11) யெகோவாவின் அன்பையும் அக்கறையையும் நாம் பின்பற்றுவதற்கு சில வழிகளை சிந்திப்போம்.
2 புதியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்: நம்மோடு உற்சாகமூட்டும் கூட்டுறவை வைத்துக்கொள்ள புதியவர்களை அழைப்பதன் மூலம் நாம் உதவிக்கரம் நீட்டலாம். (நீதி. 13:20) ஒரு சகோதரர், சபைக்கு வர ஆரம்பித்த புதிதில் மற்றவர்கள் தனக்கு உதவியதைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “ஒரு குடும்பத்தார், அவர்களுடைய குடும்பப் படிப்பில் கலந்துகொள்ளும்படி என்னை பல முறை அழைத்திருக்கிறார்கள். நான் கொஞ்சம் முன்னேறியபோது, பயனியராக இருந்த ஓர் இளம் தம்பதியர், நாள் முழுக்க அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்ய என்னை எப்போதும் அழைத்தார்கள். அவர்களோடு கூட்டுறவு கொண்டிருந்த போதெல்லாம் அருமையான ஆன்மீக விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டோம்.” அவர் மேலும் சொன்னதாவது: “நான் கிறிஸ்தவனாக ஆவதற்கு முன்பு மற்றவர்களுடன் சேர்ந்து பொழுதைப் போக்குவதற்கு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இரவில் வெளியே கிளம்பிவிடுவது என் வழக்கம். ஆனால் நம் சகோதரர்களுடன் சேர்ந்து நேரம் செலவிட ஆரம்பித்தபோதோ அதற்கான தேவை இல்லாமல் போய்விட்டது.” இந்தச் சகோதரரிடம் சபையார் அன்பும் அக்கறையும் காட்டியதால், விசுவாசத்தில் வேர்கொண்டவராகவும் உறுதிப்பட்டவராகவும் ஆக முடிந்தது. இந்தச் சகோதரர் தற்போது பெத்தேலில் சேவை செய்கிறார்.—கொலோ. 2:6, 7.
3 பக்திவிருத்தி அடைய ஒருவருக்கொருவர் உதவுங்கள்: நம் சகோதரர்கள் சிரமமான சூழ்நிலைகளை எதிர்ப்படும்போது, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு வாய்ப்பிருப்பது நமக்குத் தெரிய வரலாம். உடலளவில் வலுவிழந்திருக்கும் முதிய பிரஸ்தாபி டெலிபோனில் சாட்சி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை உங்களால் செய்ய முடியுமா, அல்லது நீங்கள் நடத்தும் பைபிள் படிப்புக்கு அவரையும் அழைத்துச் செல்ல முடியுமா என்பதை சற்று யோசியுங்கள். ஒருவேளை அந்த முதிய பிரஸ்தாபியின் வீட்டிற்கு மாணாக்கரையே கூட்டிச் செல்லலாமே! சின்னஞ்சிறு பிள்ளைகளையுடைய பெற்றோர் ஒருவர் ஊழியத்தில் கலந்துகொள்ளும்போது உங்களால் உதவ முடியுமா? தயங்கித் தயங்கி ஊழியத்தில் கலந்துகொள்ளுகிற பிரஸ்தாபிகள் யாருக்காவது உதவிக்கரம் நீட்ட முடியுமா? மறுசந்திப்பு செய்வதற்கோ ஊழியத்தின் வேறு அம்சங்களில் ஈடுபடுவதற்கோ அவர்களுக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். சகோதரர்கள் மீது அன்பும் அக்கறையும் நமக்கிருந்தால் அவர்கள் பக்திவிருத்தியடைவதற்கு உதவும் வழிவகைகளைத் தேடுவோம்.—ரோ. 14:19.
4 தம் ஊழியர்கள் மீது யெகோவா அன்பையும் அக்கறையையும் காட்டுவது போலவே நாமும் காட்டுகையில், ஒருவரையொருவர் பலப்படுத்துவோம், சபையார் அன்பில் ஐக்கியமாவதற்கு உதவுவோம், அதற்கு மேலாக நம் பரம தந்தைக்கு மகிமை சேர்ப்போம்.—எபே. 4:16.