மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது
பகுதி 7 உடோப்பியாவிற்கான ஆட்சிமுறையைத் தேடுதல்
பொதுநலக்கூட்டு ஆட்சிமுறை (Socialism): உற்பத்தி வளங்களின் மீது நாட்டின் உடைமை உரிமையையும் கட்டுப்பாட்டையும் ஆதரிக்கும் ஒரு சமுதாய அமைப்பு. பொதுஉடைமைக் கொள்கையாளர்கள் (கம்யூனிஸ்ட்காரர்கள்) இதை முதலாளித்துவத்திற்கும் பொதுஉடைமைக் கொள்கைக்கும் இடைப்பட்ட ஒரு நிலையாகக் கருதுகிறார்கள்; பொதுஉடைமை ஆட்சிமுறை (Communism): உயர்வு தாழ்வு இல்லாததையும், உற்பத்திவளங்கள் மற்றும் அன்றாடத் தேவையான பொருட்களின் மீதான பொதுஉடைமையையும், மேலும் தொழில்துறைத் தொடர்புள்ள பொருட்களின் சரிசமமான பகிர்ந்தளிப்பையும் ஆதரிக்கிற ஒரு சமுதாய அமைப்பு.
கிரேக்க புராணக்கதை க்ரோனஸ் என்ற பெயருடைய ஒரு கிரேக்க தெய்வத்தைப் பற்றிக் கூறுகிறது. இந்தத் தெய்வம் ஆண்டபொழுது கிரேக்க நாடு ஒரு பொற்காலத்தை அனுபவித்தது. “பொதுசொத்துக்களில் அனைவரும் சரிசமமாக பகிர்ந்துகொண்டனர், யாருக்கும் சொந்த தனிப்பட்ட சொத்து இல்லை. மேலும் சமாதானமும் ஒற்றுமையும் குலையாதபடி எங்கும் பரவியிருந்தது,” என்பதாக யோசனைகள் வரலாற்றின் அகராதி (Dictionary of the History of Ideas) விளக்குகிறது. இதே ஆதாரமூலம் பின்வருமாறு தொடருகிறது: “இழந்துவிட்ட ‘பொற்காலத்திற்’கான புலம்பலில்தான் பொதுநலக்கூட்டு ஆட்சிமுறையின் ஆரம்ப அறிகுறிகள் தோன்றுகின்றன.”
எனினும், 19-ம் நூற்றாண்டின் ஆரம்ப மற்றும் மத்திப பத்தாண்டுகள் வரை பொதுநலக்கூட்டு ஆட்சிமுறை ஒரு நவீன நாளைய அரசியல் அமைப்பாக தோன்றவில்லை. இது, விசேஷமாக ஃபிரான்ஸில், உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, இங்கு ஃபிரஞ்சுப் புரட்சி காலாகாலமாக இருந்துவரும் கோட்பாடுகளை மிக அதிகமாக மாற்றியமைத்தது. மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே, இங்கும் தொழிற்புரட்சி கடினமான சமுதாய பிரச்னைகளை உண்டாக்கியது. தனிப்பட்ட உடைமை உரிமையைவிட பொதுஉடைமை உரிமையே எல்லாரும் சேர்ந்துசெய்யப்பட்டதினால் வந்த பலன்களை சரிசமமாக பகிர்ந்துகொள்ள மக்கள் எல்லாரையும் சிறந்த முறையில் செய்விக்கக்கூடும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயாராக இருந்தனர்.
பொதுநலக்கூட்டு ஆட்சிமுறை தத்துவம் புதிதான ஒன்றல்ல. கிரேக்க தத்துவஞானிகள் அரிஸ்டாட்டிலும் பிளேட்டோவும் இதைப் பற்றி எழுதியிருந்தார்கள். பிற்காலத்தில், 16-ம் நூற்றாண்டில் புராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) நடந்தபொழுது, தாமஸ் முன்ட்ஷர், ஒரு ஜெர்மானிய கத்தோலிக்க தீவிரவாதியாகிய பாதிரி, உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயம் வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் இவருடைய கருத்துக்கள் முரண்பாடுள்ளவையாக இருந்தன, முக்கியமாக இப்படிப்பட்ட இலட்சியத்தை அடைய தேவையிருந்தால் புரட்சி செய்யவும் வேண்டும் என்ற அவருடைய கோரிக்கை அவ்வாறு இருந்தது. 19-ம் நூற்றாண்டில், வேல்ஸ் நாட்டுக்காரர் ராபர்ட் ஒவன், ஃபிரான்ஸ் நாட்டினர் இட்யனி கெபட் மற்றும் பியரி-ஜோசஃப் பிருவ்தன், மேலும் புகழ்பெற்ற மதகுருக்களை உள்ளடக்கிய மற்றநேக சமூக சீர்திருத்தவாதிகள், பொதுநலக்கூட்டு தத்துவம் வெறுமென கிறிஸ்தவ சமயக்கோட்பாட்டின் மறுபெயர் என போதித்தனர்.
மார்க்ஸ் மற்றும் மூர் என்பவர்களின் உடோப்பியாக்கள்
ஆனால், “பொதுநலக்கூட்டு தத்துவத்தைப் பரிந்துபேசிய இவர்கள் யாருமே, கார்ல் மார்க்ஸைப் போல் அந்தளவுக்கு செல்வாக்குசெலுத்த முடியவில்லை. இவருடைய கட்டுரைகள் பொதுநலக் கொள்கை சிந்தனைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாக ஆனது” என்பதாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள பார்வை குறிப்புநூல் கூறுகிறது.a உயர்வு தாழ்வு வகுப்புவாரியப் பிரிவுகளின் போரட்டத்தினால் மனித வாழ்வு படிப்படியாக முன்னேற்றம் அடைகிறது; ஒரு முழுநிறைவான அரசியல் ஆட்சிமுறை கண்டுபிடிக்கப்பட்டப் பின்பு, சரித்திரம் அந்தக் கருத்தில் நிறைவைக் காணும் என்று மார்க்ஸ் போதித்தார். இந்த முழுநிறைவான அரசியல் ஆட்சிமுறை அமைப்பு முந்தியிருந்த சமுதாயங்களின் பிரச்னைகளையெல்லாம் தீர்த்துவிடும். அனைவரும் எந்தவித அரசாங்கங்கள் அல்லது இராணுவங்களின் தேவையில்லாமல் சமாதானத்தோடும் சுதந்தரத்தோடும் மற்றும் செழிப்போடும் வாழ்வர்.
இது பிரிட்டனைச் சேர்ந்த அரசியல் அறிஞர் சர் தாமஸ் மூர் 1516-ல் அவருடைய புத்தகமாகிய உடோப்பியா-வில் (Utopia) விளக்கியிருப்பதோடு மிகவும் இணக்கமாயிருக்கிறது. மூர்-யினால் புதிதாக உருவாக்கப்பட்ட, கிரேக்கப் பெயராகிய இந்த வார்த்தை “இடமில்லாதது” (ou-topos), என அர்த்தங்கொள்கிறது. இது “நல்ல இடம்” என்ற கருத்தையுடைய யூட்டோபஸ் (eu-topos), என்ற அதுபோன்ற வார்த்தைக்கு ஒரு சிலேடையாக ஒருவேளை இருந்திருக்கும். மூர் எழுதிய உடோப்பியா என்பது ஒரு கற்பனை நாடாக (இடமில்லாததாக) இருந்தாலும் அது ஒரு முழுநிறைவுடைய நாடாக (நல்ல இடமாக) இருந்தது. எனவே, “உடோப்பியா” என்பது “விசேஷமாக சட்டங்கள், அரசாங்கம் மற்றும் சமுதாய நிலைகளைக் குறித்ததில் பூரண முழுநிறைவான இட”த்தை அர்த்தப்படுத்துவதாக ஆனது. மூரின் புத்தகமானது, அவர் காலத்தில் ஐரோப்பாவில், விசேஷமாக இங்கிலாந்தில், மிகவும் பரவியிருந்த முழுநிறைவற்ற பொருளாதார மற்றும் சமுதாய நிலைகளைத் தெளிவாக குற்றஞ்சாட்டி எழுதப்பட்டதாக இருந்தது. இது பின்பு பொதுநலக்கூட்டு கொள்கை ஆட்சி உருவாவதில் முடிவடைந்தது.
மார்க்ஸின் கோட்பாடுகள் ஜெர்மானிய தத்துவஞானியான ஜார்ஜ் வில்ஹெல்ம் ஃபிரட்டிரிக் ஹெஜெல் என்பவரின் கருத்துக்களையும் பிரதிபலித்தன. யோசனைகள் வரலாற்றின் அகராதி (Dictionary of the History of Ideas) சொல்கிறபிரகாரம், “மார்க்ஸிச பொதுநலக்கூட்டுத் தத்துவத்தின் கடவுள் பக்தி வெளிப்பாட்டிற்குரிய உண்மையற்ற-மத பண்பு, ஹெஜெல்சின் தீவிரவாத கிறிஸ்தவக் கோட்பாட்டின் மறுவாக்குமூலத்தால் வடிவமைக்கப்பட்டு இருந்தது.” இந்தத் “தீவிரவாத கிறிஸ்தவக் கோட்பாட்டின்” பின்னணியில்தான் மார்க்ஸ் “பெருஞ்செல்வாக்குடைய நேர்மையான அழைப்பை உண்மையற்ற-மத இணக்கத்தின் ஆதரவைக்கொண்டு” உருவாக்கினார் என்பதாக ஆசிரியராகிய ஜார்ஜ் சேபைன் விளக்குகிறார். “அது நாகரிகம் மற்றும் உரிமைக்கான ஊர்வலத்தில் சேர்ந்துகொள்ளும்படியான ஓர் அழைப்பே ஆகும்.” பொதுநலக்கூட்டுத் தத்துவ ஆட்சிமுறை எதிர்காலத்தில் அனைவரையும் கவர்ந்திழுக்கப்போவதாக இருந்தது; ஒருவேளை, அது ஒரு புதிய பெயரில் வெற்றியை நோக்கி முன்னேறுகிற கிறிஸ்தவ சமயக் கோட்பாடாக இருந்ததாக சிலர் நினைத்தார்கள்!
முதலாளித்துவத்திலிருந்து உடோப்பியாவுக்கு செல்லும் வழி
மார்க்ஸ் அவருடைய இலக்கியப் படைப்பின் முதல் புத்தகம், டாஸ் கேப்பிட்டல்-ஐ (Das Kapital) பிரசுரிக்கும் வரை மட்டும்தான் உயிர்வாழ்ந்தார். இறுதி இரண்டு புத்தகங்கள், அவருடைய மிகநெருங்கிய உடனுழைப்பாளரான, ஒரு ஜெர்மானிய சமுதாய சீர்திருத்த தத்துவஞானி, ஃபிரடிரிக் என்ஜல்ஸ், என்பவரால் 1885 மற்றும் 1894-களில் தயாரிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. டாஸ் கேப்பிட்டல் (Das Kapital), முதலாளித்துவத்தின் வரலாற்றுப் பின்னணியையும், மேற்கத்தியபாணியில் அமைந்த சட்டசபை மக்களாட்சியின் அம்சங்களையுடைய பொருளாதார அமைப்பையும் பற்றி விளக்கம் கொடுப்பதை மேற்கொண்டது. ஒழுங்குப்படுத்தப்பட்டிராத வாணிகம் மற்றும் அரசு கட்டுப்பாடு இல்லாத போட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையில், முதலாளித்துவமானது தனிப்பட்ட மற்றும் அரசு அனுமதிப்பெற்ற குழுக்களின் கைகளில் உற்பத்திவளங்களின்மீதும் அவற்றை விநியோகித்தலின்மீதும் உள்ள ஆதிக்கத்தை பொதுஉடைமை கொள்கிறது என்று மார்க்ஸ் விளக்கம் கொடுக்கிறார். மார்க்ஸ் சொல்கிறபிரகாரம், முதலாளித்துவம் ஒரு நடுத்தர வகுப்பாரையும், கூலியாள் வகுப்பாரையும் உருவாக்குகிறது, இது இவர்களுக்கிடையில் பகைமையை உண்டாக்கி, கூலியாள் வகுப்பாரை ஒடுக்குவதில் விளைவடைகிறது. அவருடைய கருத்துக்களை வலியுறுத்துவதற்காக பிரபலமான பொருளாதார நிபுணர்களின் எழுத்துக்களைப் பயன்படுத்தி, முதலாளித்துவ ஆட்சி உண்மையில் மக்களாட்சிக்கு விரோதமானது, பொதுநலக்கூட்டு ஆட்சியே மக்களாட்சிக்கு முடிவான தீர்வாக இருந்து மனித சமஉரிமையையும் சுதந்திரத்தையும் மக்களுக்கு கொடுத்து பயனளிக்கிறது என மார்க்ஸ் விவாதித்தார்.
பாட்டாளிமக்கள் தொகுதியாக புரட்சியில் ஈடுபட்டு, நடுத்தர வகுப்பின் ஒடுக்குதலை நீக்கி, “பாட்டாளிகளின் சர்வாதிகாரம்” என்று மார்க்ஸ் அழைத்த நிலையை உருவாக்கும்பொழுதுதான், உடோப்பியா அடையப்பெற முடியும். (21-ம் பக்கத்தில் உள்ள பெட்டியைப் பார்க்கவும்.) இருந்தபோதிலும், இவருடைய கருத்து, காலத்திற்கு ஏற்றதாக ஆனது. இவர் இரண்டு விதமான புரட்சிக் கருத்துக்களுக்கு அனுமதியளிக்க ஆரம்பித்தார், ஒன்று வன்முறையானது, மற்றொன்று அதிக நிரந்தரமானதும் படிப்படியாக முன்னேறுகிறதுமானதாக இருந்தது. இது பின்வரும் ஓர் ஆவலைத் தூண்டும் கேள்வியை எழுப்பியது.
உடோப்பியா புரட்சியின் மூலமாகவா அல்லது படிப்படியாகவா?
“பொதுவானது, அனைவருக்கும் சொந்தமானது” என்று பொருள்படும் இலத்தீன் வார்த்தையாகிய கம்யூனிஸ் என்பதிலிருந்து “கம்யூனிஸம்” என்ற வார்த்தை வருகிறது. பொதுநலக்கூட்டுத் தத்துவத்தைப் போலவே பொதுஉடைமைக்கொள்கையும், கட்டுப்பாடற்ற அரசியல் அமைப்பானது வேலையில்லா திண்டாட்டம், ஏழ்மை, வியாபார சரிவு, மற்றும் தொழிலாளி-முதலாளி மோதல்கள் போன்றவற்றில் விளைவடையச்செய்கிறது என்பதாக குற்றஞ்சாட்டுகிறது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் முடிவு வேண்டுமென்றால் தேசத்தின் பொருள்வளத்தை மிகவும் சரிசமமாகவும் நியாயமாகவும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
ஆனால் கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே, மார்க்ஸிசவாதிகள் ஒத்துக்கொள்ளப்பட்ட இலட்சியங்களை எவ்வாறு அடைவது என்பதில் ஏற்கெனவே கருத்துவேற்றுமைகளைக் கொண்டிருந்தார்கள். 1900-களின் முற்பகுதியில், இவர்களில் வன்முறைப்புரட்சியை எதிர்த்து பாராளுமன்ற மக்களாட்சியிலேயே வேலைசெய்வதை ஆதரித்த பொதுநலக்கூட்டு ஆட்சி அமைப்பின் தொகுதியைச் சேர்ந்தவர்கள் வல்லமைபெற ஆரம்பித்து, இப்பொழுது சமஉரிமை பொதுநலக்கூட்டு ஆட்சி (democratic socialism) என்றழைக்கப்படுகிற அமைப்பாக வளர்ந்தது. இப்படிப்பட்ட சமஉரிமை ஆட்சியையே இன்று நாம் ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற மக்களாட்சிகொண்ட நாடுகளில் காண்கிறோம். இந்தக் கட்சிகள், எல்லா கருத்துக்களையும், நோக்கங்களையும் கருத்தில்கொண்டு, மெய்யான மார்க்ஸிச சிந்தனையை நிராகரித்துவிட்டு, தன் நாட்டுமக்களுக்கு ஆக்கநல அரசை உருவாக்குவதிலேயே அக்கறையை கொண்டிருக்கின்றன.
எனினும், வன்முறை புரட்சியின் மூலம்தான் கம்யூனிஸ்ட் உடோப்பியாவை உருவாக்க முடியும் என்று மிக உறுதியாக நம்பின ஓர் ஒப்புக்கொடுக்கப்பட்ட மார்க்ஸிசவாதியாக இருந்தவர் லெனின். இவரின் மார்க்ஸிசம் கலந்த போதனைகள், அதே காலத்திற்குரிய தீவிரவாத பொதுஉடைமைக் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்தன. விலாடிமிர் ஐலிஜ் லயானாவ் என்ற புனைப்பெயருடைய லெனின், 1870-ல் சோவியத் யூனியன் என்று முன்பு அழைக்கப்பட்ட நாட்டில் பிறந்தார். 1889-ல் மார்க்ஸிசவாதியாக மாறினார். 1900-க்குப் பின்பு, சைபீரிய சிறையிருப்பில் இருந்த பிறகு, இவர் மேற்கு ஐரோப்பாவிலேயே பெரும்பாலும் வாழ்ந்துவந்தார். ருஷ்யர்களின் ஏகாதிபத்திய ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, ருஷ்யாவிற்கு திரும்பிவந்து, இங்கு ருஷ்ய பொதுஉடைமைக்கொள்கை கட்சியை உண்டாக்கினார். மேலும் 1917-ல் பொதுவுடைமைப் புரட்சியையும் (Bolshevik Revolution) தலைமைதாங்கி நடத்தினார். இதற்குப் பின்பு, சோவியத் யூனியனின் முதல் தலைவராக, 1924-ல் தன் மரணம் வரை சேவித்தார். பொதுஉடைமைக் கொள்கை (கம்யூனிஸ்ட்) கட்சி வெகு ஒழுக்கமான, ஒருமுகப்படுத்தப்பட்ட புரட்சியாளர்களையுடைய ஒரு தொகுதியாக அவர் கண்டார். பாட்டாளிமக்களின் துயர்துடைக்கும் முன்னணிப்படையாக அது செயல்பட்டது. ஆனால், மிதவாதிகள் (Mensheviks) இதை மறுத்தார்கள்.—பக்கம் 21-ல் உள்ள பெட்டியைப் பார்க்கவும்.
புரட்சி முறைக்கும் படிப்படியான முறைக்கும் உள்ள வேறுபாடு இனிமேலும் நன்கு வரையறுக்கப்படுவதற்கில்லை. 1978-ல் அரசியல் அமைப்புகளை ஒப்பீடு செய்தல்: மூன்று உலகங்களின் அதிகாரமும் கோட்பாடும் (Comparing Political Systems: Power and Policy in Three Worlds) என்ற புத்தகம் பின்வருமாறு குறிப்பிட்டது: “பொதுஉடைமைக் கொள்கை தன்னுடைய சமூகநல இலட்சியங்களை அடைவதைப் பற்றி அதிகமான இரட்டை மனப்போக்கை உடையதாக ஆகியிருக்கிறது. . . . பொதுஉடைமைக் கொள்கைக்கும் சமஉரிமை பொதுநலக்கூட்டு ஆட்சி கொள்கைக்கும் (Democratic Socialism) இடையே உள்ள வேறுபாடுகள் மிக அதிகமாகவே குறைந்திருக்கிறது.” இப்பொழுது, 1990-ல், கிழக்கு ஐரோப்பாவில் பொதுஉடைமைக் கொள்கை தீவிரமான மாற்றங்களை அடைகையில், இந்த வார்த்தைகள் கூடுதலான அர்த்தமுடையவைகளாக இருக்கின்றன.
பொதுஉடைமைக் கொள்கை மதத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது
“நமக்கு ஆன்மீக பண்புகள் தேவையாயிருக்கிறது . . . மதம் அநேக நூற்றாண்டுகளாக உண்டாக்கி, உருவேற்படுத்தின ஒழுக்கநெறிப் பண்புகள், நம்முடைய நாட்டிலும் புதுமறுமலர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.” சோவியத் யூனியனின் பொதுஉடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சி பொதுச்செயலாளர் மேற்கூறப்பட்ட வார்த்தைகளைச் சொல்வார் என சிலர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நவம்பர் 30, 1989-ல், மிக்கெய்ல் கார்பச்சேவ் இத்தாலிக்கு விஜயஞ்செய்தபோது, மதத்தைக் குறித்த இந்தப் பெரிய திடீர் மாற்றத்தை அறிவித்தார்.
இது பூர்வகால கிறிஸ்தவர்கள்தாமே, ஒரு வகையான கிறிஸ்தவ பொதுநலக்கூட்டு ஆட்சி கோட்பாட்டைப் (Christian Socialism) பின்பற்றுகிற பொதுஉடைமைக் கொள்கைவாதிகளாக இருந்தார்கள் என்ற கருத்தை ஒருவேளை ஆதரிக்குமா? ஒரு சிலர் அப்போஸ்தலர் 4:32-ஐ குறித்துக்காட்டி, இந்தக் குற்றச்சாட்டைச் செய்கின்றனர். எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களைப் பற்றி இவ்வாறு வாசிக்கிறோம்: “சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.” ஆயினும், ஆழமான ஆராய்ச்சி, இது ஒரு நிரந்தரமான “கிறிஸ்தவ” சமதர்ம அமைப்பாக இல்லை, எதிர்பாராத சூழ்நிலைகளினால் கொண்டுவரப்பட்ட ஒரு தற்காலிகமான ஏற்பாடாகவே இருந்தது என வெளிப்படுத்துகிறது. அவர்கள் பொருட்களை ஓர் அன்பான முறையில் பகிர்ந்துகொண்டதினால், “அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.” ஆம், “அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது.”—அப்போஸ்தலர் 4:34, 35.
“கிளாஸ்நோஸ்த்” மற்றும் “பெரிஸ்த்ரோய்கா”
சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பாவிலுள்ள அதனுடைய உடன் பொதுஉடைமைக் கொள்கை (கம்யூனிஸ்ட்) ஆட்சிகளும் 1989-ன் இருண்ட மாதங்கள் ஆரம்பித்ததிலிருந்து, திடுக்கிடச்செய்யும் அரசியல் அசைவுகளை அனுபவித்துவந்தது. கிளாஸ்நோஸ்த் (glasnost), அல்லது திறந்த நிலை, கொள்கைக்கு நன்றி, இந்த மாற்றங்கள் எல்லாராலும் கண்டுணர்ந்துகொள்ள முடிகிறது. கிழக்கு ஐரோப்பியர்கள் கேட்டுக்கொண்ட மறுசீரமைப்புக் கோரிக்கைகள், ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பொதுஉடைமைக் கொள்கை (கம்யூனிஸ்ட்) தலைவர்கள், ஒரு மேம்பட்ட மனிதாபிமான மற்றும் இரங்கத்தக்க அமைப்பு தேவை என்பதை ஏற்றுக்கொண்டார்கள். மேலும் போலந்து நாட்டின் பொருளியல் வல்லுநர் ஒருவர் சொன்னப்பிரகாரம், “வித்தியாசமான, மிகவும் தெளிவூட்டுகிற, திறம்பட்ட வகையான ஒரு பொதுநலக்கூட்டுக் கோட்பாட்டின் மறுபிறப்”புக்கு அழைப்புக் கொடுத்திருக்கின்றனர்.
இந்தத் தலைவர்களில் முதன்மையானவர் கார்பச்சேவ். இவர், 1985-ல் பதவிக்கு வந்த பின்பு, பெரிஸ்த்ரோய்கா (perestroika) (மறுசீரமைத்தல்) என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். இத்தாலிக்கு சென்றிருந்த போது, 1990-களின் சவால்களை எதிர்ப்படுவதற்கு பெரிஸ்த்ரோய்கா தேவை என்பதாக அவர் ஆதரித்துப்பேசினார். அவர் சொன்னார்: “சமதர்மக் கொள்கையைப் பின்பற்றும் (சோஷியலிஸ்ட்) நாடுகள் அடிப்படை மாற்றத்திற்கான வழியில் வந்துவிட்டதினால், தங்களால் மறுபடியும் திரும்பச் செல்லமுடியாத ஒரு நிலையைக் கடந்துசெல்கிறார்கள். ஆனாலும், மேற்கு தேசங்களில் சிலர் சொல்கிறது போல, இது சமதர்மக்கொள்கையின் வீழ்ச்சி என்று வலியுறுத்திச்சொல்வது தவறு. இதற்கு மாறாக, சமதர்மக் கொள்கை முறை இவ்வுலகத்தில் இன்னும் அநேக வித்தியாசமான வடிவமைப்புகளில் மேலும் முன்னேற்றமடைவதை தொடரும் என்பதைக் குறிக்கிறது.”
“பிளேட்டோவிலிருந்து ஒவ்வொரு அரசியல் தத்துவஞானியினுடைய மனதில் எப்பொழுதும் இருக்கிற கேள்வியானது—மிகச்சிறந்த ஆட்சிமுறை எது?—என்பது விடையளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில ஆயிர ஆண்டுகளாக எல்லாவித அரசியல் அமைப்புகளை முயற்சிசெய்த பிற்பாடு, சுயாதீன, பன்மைவாதிய-முதலாளித்துவ-ஜனநாயகத்திலேயே நாங்கள் தேடிக்கொண்டிருந்ததை கண்டடைந்தோம் என்ற நிச்சயத்துடன் இந்த ஆயிர ஆண்டை முடிக்கிறோம்” என்று பத்திரிகை எழுத்தாளர் சார்ல்ஸ் கிரவ்தமர் வெளியிட்ட கருத்தை பொதுவுடைமைக் கொள்கை (கம்யூனிஸ்ட்) தலைவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.
எனினும், ஜெர்மானிய செய்தித்தாள் டி ஜெட் (Die Zeit) மேல்நாட்டு-பாணி மக்களாட்சியின் வருந்தத்தக்க காட்சியை, அதனுடைய “வேலையில்லா திண்டாட்டம், மதுபான மற்றும் போதமருந்து துர்ப்பிரயோகம், வேசித்தனம், சமூகநல நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடு, வரி குறைப்பு, மேலும் வரவு-செலவு திட்டத்தில் பற்றாக்குறைகள்” போன்றவற்றிற்கு தனது கவனத்தைப் திருப்புவதன் மூலம் இது தெளிவாக ஒத்துக்கொள்கிறது. பின்பு, இது கேட்கிறது: “சமதர்ம கோட்பாடிற்கு (சோஷியலிஸம்) மேலாக என்றென்றும் வெற்றியடைந்த ஒரு பரிபூரண சமுதாய அமைப்பா இது?”
ஒரு பிரபலமான பழமொழி, கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல்லை எறியாதே என்று சொல்கிறது. எந்த அபூரண மனித அரசாங்கம் மற்றொன்றின் குறைகளைக் கண்டு குறைசொல்ல துணிவுகொள்ள முடியும்? ஒரு பரிபூரண மானிட அரசாங்கம்—ஓர் உடோப்பியா—உண்மையில் இல்லை என்பதையே சான்றுகள் நிரூபிக்கின்றன. அரசியல்வாதிகள் இன்னும் அந்த “நல்ல இடத்தைத்” தேடிக்கொண்டிருக்கின்றனர். கண்டுபிடிக்கப்பட வேண்டிய இது இதுவரை “இடமில்லாத”தாகவே இருக்கிறது. (g90 11⁄8)
[அடிக்குறிப்புகள்]
a மார்க்ஸ், புருஷ்யா என்று அப்போது அழைக்கப்பட்ட நாட்டில் 1818-ல் யூத பெற்றோருக்குப் பிறந்த இவர், ஜெர்மனியில் கல்வியறிவுப் பெற்று அங்கு ஒரு பத்திரிகை எழுத்தாளராகப் பணிபுரிந்தார்; 1849-க்குப் பின்பு அவர் இலண்டனிலேயே பெரும்பாலும் இருந்து 1883-ல் அங்கேயே அவர் மரித்தார்.
[பக்கம் 21-ன் பெட்டி]
சோஷியலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் சொற்தொகுதி
போல்செவிக்ஸ்/மென்செவிக்ஸ்: ருஷ்ய சமதர்ம ஜனநாயக பாட்டாளிகளின் கட்சி (The Russian Social Democratic Labor Party) 1898-ல் நிறுவப்பட்டது, 1903-ல் இரண்டாக பிரிக்கப்பட்டது; போல்செவிக்ஸ், சொல்லர்த்தமாக “பெரும்பான்மை உறுப்பினர்கள்,” லெனினின் கீழ், கட்சியை வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் அடங்கிய ஒழுங்குபடுத்தப்பட்ட புரட்சியாளர்களைக் கொண்டு சிறியதாக வைத்துக்கொள்வதை வரவேற்றது; மென்செவிக்ஸ், “சிறுபான்மை உறுப்பினர்கள்” என்று அர்த்தங்கொள்கிறது, ஜனநாயக முறைகளைப் பயன்படுத்தும் அதிக உறுப்பினர் எண்ணிக்கையை வரவேற்றது.
பூர்ஷ்வாஷ்/புரோலெட்டெரியட்: புரோலெட்டெரியட் (பாட்டாளிகள் வகுப்பு), பூர்ஷ்வாஷ்-ஐ (தொழிற்சாலை முதலாளிகளை உள்ளடக்கிய, நடுத்தர வகுப்பு) கவிழ்த்துவிட்டு, “பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தை” நிறுவி, வகுப்பு பிரிவினையில்லாத சமுதாயத்தை உண்டாக்குகிறது என்று மார்க்ஸ் கற்பித்தார்.
கம்மின்டெர்ன் (COMINTERN): கம்யூனிஸ்ட் இன்டெர்நாஷனல் (Communist International), (அல்லது தர்டு இன்டர்நாஷனல், Third International) என்பதின் சுருக்கம், 1919-ல் லெனினால் பொதுஉடைமைக் கொள்கையைப் பரப்புவதற்கு உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு; அநேக ஐரோப்பிய சமதர்ம தொகுதிகளை உண்டுபண்ணின ஃபர்ஸ்ட் இன்டர்நாஷனலாலும் (First International) (1864-76) மேலும் சமதர்ம கட்சிகளின் ஒரு சர்வதேச நாடாளுமன்றமான, செக்கன்டு இன்டேர்நாஷனல் (Second International) (1889-1919) முந்திக்கொள்ளப்பட்டது, 1943-ல் கலைக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் மானிஃபஸ்ட்டோ: மார்க்ஸ் மற்றும் என்ஜெல்ஸ் என்பவர்களின் 1848-ன் கூற்று. இது ஐரோப்பிய சமதர்ம முறை மற்றும் பொதுவுடைமை தத்துவ கட்சிகளின் அடிப்படையாக இருந்த சைன்ட்டிஃபிக் சோஷியலிசத்தின் (Scientific Socialism) மூலஉரிமையாளர்களைப் பற்றியது.
யூரோகம்யூனிஸம்: மேற்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுவுடைமைக் கொள்கை; சோவியத் ஆதிக்கத்திற்கு உட்படாதது, கூட்டிணைவு ஆட்சியின் கீழிருக்க ஒத்துக்கொள்கிறது, “பாட்டாளிகளின் சர்வாதிகாரம்” இனிமேலும் அவசியமற்றது என வலியுறுத்துகிறது.
சைன்ட்டிஃபிக்/உடோப்பியன் சோஷியலிஸம்: மார்க்ஸ், வரலாற்றின் ஓர் அறிவியல் சார்ந்த ஆய்வையும் முதலாளித்துவத்தின் செயல்பாடுகளையும் அடிப்படையாக கொண்டதாக நம்பப்பட்ட தன்னுடைய போதனைகளுக்கும், அவருடைய முன்னோடிகளின் மெய் உடோப்பிய சோஷியலிஸ்ட் போதனைகளுக்கும் இடையே வேறுபடுத்துவதற்கு பயன்படுத்திய சொற்கள்.