தற்காப்பு ஒரு கிறிஸ்தவர் எந்த அளவுக்கு செல்லக்கூடும்?
“பயத்தில் ஏன் வாழ வேண்டும்? உங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தாக்குபவனிடமிருந்து தப்பியோடவும் நடைமுறையான வழிகளை கற்றுக்கொள்ளுங்கள். சுலபமான, திறம்பட்ட பாதுகாப்பு முறைகள் விவரமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இந்த அறிவுரை வழங்கும் வீடியோ தப்பிப்பிழைப்பதற்கும் அல்லது அதற்கு பலியாவதற்கும் உள்ள வித்தியாசமாக இருக்கக்கூடும்.”—தற்காப்பு வீடியோவுக்கான விளம்பரம்.
இன்று இப்படிப்பட்ட வீடியோவின் விற்பனை செய்யும் ஆற்றலை எவருமே விளக்க வேண்டிய தேவையில்லை. பென்சில்வேனியா, அ.ஐ.மா-ல் உள்ள பிலதெல்ஃபியா பட்டணத்தில் இளைஞர் கும்பல் திருடுவதற்காக அதற்கு பலியாகிறவர்களுக்காக வீதிகளில் தேடித் திரிந்து செல்கையில், “அடி, அடி, அடி” என்று பாடல் முறையால் குரல் எழுப்புகின்றனர். ரியோ டி ஜனைரோவில் “குற்றச்செயல் பயம் முழு நகரத்தின் சூழலை பாதிக்கிறது” என்று டைம் (Time) பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஹாங்காங்கில் இன்று வரை வன்முறையான குற்றச்செயல் இன்னதென்று தெரிந்திராத இடங்களில் வழிப்பறி கொள்ளைகளும், துப்பாக்கி சூடும் நடந்து கொண்டிருக்கின்றன.
இதே போன்ற அறிக்கைகள் உலகமுழுவதும் கேட்கப்படுகின்றன. என்ன விளைவோடு? “திரும்பவும் சுடுவதில் உட்பட்டிருக்கும் அபாயங்களை குடிமக்கள் சிந்தித்துப் பார்க்கின்றனர்” என்று நியூஸ்வீக் (Newsweek) சொல்கிறது. இப்படிப்பட்ட “கொடிய காலங்களிலிருந்து” கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்படுவதில்லை. ஆனால் திரும்பவும் சுடுவது, “அதற்கு பலியாவதற்கும் அல்லது தப்பிப்பிழைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை” உண்மையிலேயே ஏற்படுத்தக்கூடுமா?—2 தீமோத்தேயு 3:1.
வன்முறையை வன்முறையோடு எதிர்ப்பதா?
‘நான் ஒரு துப்பாக்கியை எடுத்துச் சென்றால் பாதுகாப்பாக இருப்பேன்’ என்று சிலர் நம்புகின்றனர். ‘அவன் என்னை சுடுவதற்கு முன்பு நான் அவனை சுட்டுவிடுவேன். அவன் பீதி அடையும்படியாகவாவது, செய்து விடுவேன்!’ என்றாலும், இது அவ்வளவு எளிதானது அல்ல.
அட்லான்டா, ஜார்ஜியா, அ.ஐ.மா., பொது மக்கள்-பாதுகாப்பு ஆணையர், ஜார்ஜ் நாப்பர் இவ்வாறு சொல்கிறார்: “கைத் துப்பாக்கியை சொந்தமாக வைத்திருப்பது, மற்றொரு மனிதனை கொலை செய்யும் தீங்கான பின்விளைவோடு வாழ்வதற்கு தயாராயிருப்பது என்பது இதன் அர்த்தம்.” இரத்தப் பழியை உட்படுத்தும் இப்படிப்பட்ட விளைவோடு வாழ்வதற்கு ஒரு கிறிஸ்தவன் தயாராயிருக்கிறானா?—எண்ணாகமம் 35:11, 12-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
‘உங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாக அடியுங்கள்’ என்றும் “சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொட”ருங்கள் என்றும் கடவுளுடைய வார்த்தை கட்டளையிடுகிறது. (மீகா 4:3; 1 பேதுரு 3:11) பைபிளின் தேவைகளுக்கு இசைவாக வாழ்ந்து கொண்டு அதே சமயத்தில் துப்பாக்கிகளில் கிறிஸ்தவர்கள் எவ்வாறு பாதுகாப்பை நாடலாம்? என்னவாயிருந்தாலும், தாக்குபவன் துப்பாக்கியை திடீரென உருவி எடுப்பதில் தாக்கப்படுபவனைக் காட்டிலும் அதிவேகமாக இருப்பான்.
ஆயுதங்களைக் கொண்டு எதிர்ப்பதை இயேசு வேண்டாம் என்று விலக்கி வைத்துவிட்டார். அவர் கைது செய்யப்படப் போகும் இடமாகிய கெத்செமனே தோட்டத்துக்கு இரண்டு பட்டயங்களை எடுத்து வரும்படி அவர் தம் அப்போஸ்தலர்களிடம் சொன்னது உண்மைதான். ஆனால் அவர் ஏன் இதை செய்தார்? ஆயுதங்களை வைத்துக் கொண்டு அவற்றை உபயோகப்படுத்தாமல் இருப்பது, இயேசுவை பின்பற்றுபவர்கள் ஆயுதங்களை உதவிக்காக நாடக்கூடாது என்பதை அதிக வலிமையாக எடுத்துக்காட்டியது. பேதுரு பட்டயத்தை வைத்திருந்ததால், சிந்திக்காமல் வேகமாக அதை உபயோகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது மட்டுக்கு மீறி துணிச்சலாக இந்தச் செயலை செய்ததற்காக இயேசு அவரை பின்வரும் வார்த்தைகளால் கடுமையாக கண்டித்தார்: “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.”—மத்தேயு 26:36, 47-56; லூக்கா 22:36-38, 49-51.
‘துப்பாக்கிகளை சொந்தமாக வைத்திருப்பதற்கு அது பொருந்துகிறது’ என்று யாராவது ஒருவர் சொல்லலாம். ‘ஆனால் தற்காப்புக்காக ஜூடோ, கராத்தே, கென்டோ போன்ற போர்க் கலைகளை கற்றுக்கொள்வதைப் பற்றியென்ன?’ இப்போதனையின் நோக்கம் சண்டை செய்வதற்கோ அல்லது மற்றவர்களை காயப்படுத்துவதற்கோ அல்லவா என்று நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். உண்மையில் இப்படிப்பட்ட பயிற்சி கொல்லுவதற்காக ஒருவர் தன்னை தயாராக வைத்துக்கொள்வதற்கு சமமாக இல்லையா? (1 தீமோத்தேயு 3:3) பயிற்சி நேர பகுதிகளும் கூட காயங்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவதில் விளைவடைந்திருக்கின்றன.
இவ்விஷயத்தில் ரோமர் 12:17-19 ஞானமான புத்திமதியை கொடுக்கிறது: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; . . . கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” “தீமை” என்ற வார்த்தைக்கு பவுல் உபயோகிக்கும் கிரேக்க வார்த்தை (ka·kosʹ) “அழிவுண்டாக்கக்கூடிய, சேதம் உண்டாக்குகிற” என பொருள்படக்கூடும். எனவே, கிறிஸ்தவர்கள் பழிக்குப் பழி வாங்கும் மனப்பான்மையுடன் மற்றொரு நபருக்கு சேதமோ அல்லது தீங்கோ விளைவிக்கும் எல்லா சிந்தனைகளிலிருந்தும் விலகியிருக்க வேண்டும்.
தன் சொந்த கோபத்தை சிந்திக்காமல் வெளிப்படுத்துவதற்கு மாறாக, ஒரு கிறிஸ்தவன் கடவுள் பேரில் முழுமையாக நம்பிக்கை வைக்கிறான். ‘உங்களைத் தொடுகிறவன் என்னுடைய கண்மணியைத் தொடுகிறான்’ என்று கடவுள் தன் ஜனங்களைக் குறித்து சொல்கிறார். இதற்கிசைவாக, தக்க சமயத்தில் ‘துன்மார்க்கர் யாவரையும் அழிக்கப்போவதாக’ கடவுள் வாக்கு கொடுக்கிறார்.—சகரியா 2:8; சங்கீதம் 145:20.
சண்டைபோடுவதற்கான காலமா?
‘சண்டைபோடாமல் என் பணத்தை நான் விட்டு விட மாட்டேன்!’ என்று சிலர் துணிச்சலாக உணர்ச்சிவசத்தோடு சொல்கின்றனர். தேசிய குற்றச்செயல் தடுப்பு நிறுவனத்தின் கல்வி மேலாளர் டிக் மெல்லார்ட் என்பவர் பின்வருமாறு எச்சரிக்கிறார்: “எதிர்த்து நிற்பது மனித இயல்பாக இருக்கிறது. ஆனால் தவறான சூழ்நிலைமையில் மனித இயல்பு உங்களை கொன்றுவிடக்கூடும்.” திருடுவதற்காக தாக்குபவர்கள் பயங்கரமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு விறைப்பாகவும், எளிதில் சினங்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கின்றனர். இழந்துபோன பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இழந்துபோன உயிரைப் பற்றியென்ன? உயிரை இழந்துவிடுவது தகுதியாயிருக்குமா?
ஜார்ஜ் நாப்பர் இந்தப் புத்திமதியை கொடுக்கிறார்: “உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி, உங்களுடைய உயிருக்கு பதிலாக உங்களுடைய சொத்தை இழந்துவிடுவது ஆகும். பெரும்பாலான திருடர்களும், கொள்ளைக்காரர்களும் திருடுவதற்காக வருகின்றனர், கொலை செய்வதற்காக அல்ல.” வலியத் தாக்குவதற்காக ஒரு நபரை அணுகினாலோ அல்லது அவருடைய பணம் வேண்டுமென்று கேட்டாலோ, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் “கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராம”லிருக்க வேண்டும் என்பதுதான் சரியான நியமம்.—2 தீமோத்தேயு 2:24.a
இது போராயுத ஒழிப்பு கோட்பாடு அல்ல. எந்தச் சூழ்நிலைமையின் கீழும் எதிர்க்கக்கூடாதென்ற கொள்கை அல்ல. பகல் நேரத்தின் போது, ஒருவருடைய வீட்டுக்குள் நுழைகையில் ஒரு திருடன் அடிக்கப்பட்டு செத்துப்போகும் நிலைமை யாத்திராகமம் 22:2, 3-ல் விவரிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட தற்காப்பு நடவடிக்கை கொலைக்கு சமமாக கருதப்பட்டது. ஏனென்றால் திருடனை அடையாளம் கண்டுபிடித்து வழக்கு விசாரணைக்கு தீர்ப்பு மன்றத்துக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இரவு நேரத்தின் போது, அழையாது நுழைபவனை பார்த்து அவனுடைய உள்நோக்கத்தை உறுதி செய்து கொள்வதற்கு வீட்டுக்காரருக்கு கடினமாயிருக்கும். ஆகையால், இருட்டில் அழையாது நுழைபவனை கொலை செய்யும் நபர் குற்றமற்றவராக கருதப்பட்டார்.
எனவே, தற்காப்புக்காக சிந்திக்காமல் செயலாற்றும் முயற்சிகளை பைபிள் ஆதரிப்பதில்லை. போராயுத ஒழிப்புக் கோட்பாட்டை ஆதரிக்காமல், ஒருவர் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய சமயம் இருக்கிறது என்பதை பைபிள் குறிப்பிடுகிறது. கிறிஸ்தவர்கள் தங்களுக்கோ, தங்கள் குடும்பங்களுக்கோ அல்லது தற்காப்பு உண்மையாக தேவைப்படும் மற்றவர்களுக்கு எதிராகவோ உடம்பின் மீது வலிந்து செய்யப்படும் தாக்குதல்களை எதிர்த்துத் தாக்கி தடுக்கலாம்.b ஆனால் அவர்கள் தாங்களாகவே தாக்குதல் செய்வதற்கு ஆரம்பிப்பதில்லை. தங்கள் உடைமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு சரீரப்பிரகாரமாக பழிக்குப் பழி வாங்குவதில்லை. அப்படிப்பட்ட தாக்குதலை எதிர்பார்த்து அவர்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்ல மாட்டார்கள். மாறாக, “சமாதானமாய் வாழ” அவர்கள் முயற்சி செய்கின்றனர்.—2 கொரிந்தியர் 13:11.
[அடிக்குறிப்புகள்]
a கற்பழிப்பு செய்யப்போவதாக பயமுறுத்தப்படும்போது ஒரு பெண் கூச்சல் போட வேண்டும். பாலுறவை எதிர்ப்பதற்கு எந்த வழிமுறையையாவது உபயோகிக்க வேண்டும்.—உபாகமம் 22:23-27. (g91 7⁄8)
b பவுல் இங்கு வாய்மொழியான சண்டைகளைக் குறித்து குறிப்பிடுவதாக சூழமைவு காண்பித்தாலும், மூல மொழியில் “சண்டை” (maʹkhe·sthai) என்ற வார்த்தை ஆயுதங்களோடு அல்லது கைக்கு-கை சண்டைபோடுவதோடு பொதுவாக சம்பந்தப்பட்டிருக்கிறது.