உலகத்தைக் கவனித்தல்
டிவி-யின் உலகளாவிய பாதிப்பு
உலகமுழுவதிலும் தொலைக்காட்சி எவ்வளவு பிரபலமானது? இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் சொல்லுகிறபடி, உலகமுழுவதும் 100 கோடி டிவி பெட்டிகள் இருக்கின்றன. இது ஐந்து வருடங்களுக்குமுன் இருந்த எண்ணிக்கையைவிட 50 சதவீதம் அதிகமாகும். ஜப்பானிய வீடுகளில் பாய்நீர்க் கழிப்பிடங்களைவிட (flush toilets) டிவி பெட்டிகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மெக்ஸிகோ வீடுகளில் சுமார் பாதிக்கு மட்டுமே தொலைபேசிகள் உள்ளன. ஆனால் சுமார் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டிவி இருக்கிறது. அமெரிக்கர்களில் அநேகர் தெரிந்தெடுப்பதற்கு 25 அல்லது 30 அலைவரிசைகளைக் கொண்டிருக்கின்றனர். ட்ரிப்யூன் சொல்லுகிறது: “உலகளாவிய இந்தத் தொலைக்காட்சி புரட்சியின் பண்பாட்டு, அரசியல், மற்றும் பொருளாதார பாதிப்புகள் ஏராளம். . . . இவ்வளவதிகம் தொலைக்காட்சி காணுதல் எஞ்சியிருக்கும் உலகம் அதன் வாசிக்கும் பழக்கத்தை இழக்கும்படி செய்யுமோ என்று சிலர் பயப்படுகின்றனர். அமெரிக்கர்களின் இரு தலைமுறைகளுக்கு ஏற்கெனவே இதேதான் சம்பவித்திருக்கிறது.” (g93 5/8)
குழந்தைகள் யாருக்கு வேண்டும்?
“நீங்கள் குழந்தையை எடுத்துக்கொள்ளுங்கள், நான் பணத்தை வைத்துக்கொள்கிறேன்.” எப்போதாவது மணவிலக்குச் செய்துகொண்டார்களானால், தாங்கள் எதை வைத்துக்கொள்ள விரும்புகின்றனர் என்பதற்கான ஜப்பானிய பெண்களில் அநேகருடைய பதிலைச் சுருக்கி கூறிற்று மைனிச்சி டெய்லி நியூஸ் செய்தித்தாளின் இந்தத் தலைப்புச் செய்தி. ஹாக்குஹோடோ என்ற ஒரு விளம்பர நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு சுற்றாய்வின்படி முதலிடம் கொடுக்கக்கூடிய முதல் மூன்று காரியங்கள், வங்கி சேமிப்புகள், பணம், விடுமுறை இல்லங்கள் போன்றவையாகும். நான்காவது வந்தது மகன்கள் அதைத் தொடர்ந்து மகள்கள். அதன்பிறகு வீடுகள், தொலைக்காட்சி பெட்டிகள், கலைவேலைப்பாடுகள், கைப்பைகள் போன்றவை வருகின்றன. தகப்பன்மார்களும் தங்களுடைய பிள்ளைகளுக்குக் குறைந்த சமயத்தையே கொண்டிருக்கின்றனர். ஜப்பானிய தகப்பன்மார்களில் 69 சதவீதத்தினர் தங்களுடைய பிள்ளைகளோடு பேச நேரம் செலவுசெய்வதற்கு அதிக வேலையாக இருப்பதாக டோகை வங்கியால் தனியாக நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டியது. உண்மையிலேயே, தங்களுடைய பிள்ளைகளோடு பேசுவதற்கு எப்படியும் பொதுவான அக்கறைக்குரிய காரியங்கள் ஒன்றுமேயில்லை என்று 22 சதவீதத்தினர் சொல்கின்றனர். (g93 4/22)
கோளைச் செங்குத்தான ஓரத்திற்குத் தள்ளுதல்
உலகின் தற்போதைய வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி ஏறக்குறைய 10 கோடியாகும்; 2050-ம் ஆண்டில் பூமியின் மக்கள்தொகை 1,000 கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது என்பதாக பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் பத்திரிகையின் அறிக்கை ஒன்று சொல்லுகிறது. லண்டனின் இயற்கையறிவு கழகமும், ஐ.மா. தேசிய அறிவியல் கழகமும் சேர்ந்து முன்னொருபோதும் வெளியிடப்படாத கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அது இத்தகைய மக்கள்தொகை வளர்ச்சி சரிசெய்யமுடியாத கெடுதிகளைக் கொண்டுவந்து, சுற்றுச்சூழலை அச்சுறுத்துகிறது என்று கூறிற்று. இவ்வளர்ச்சியில் பெரும்பகுதி காணப்படும் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளைப்போல அதே அளவில் வளங்களைப் பயன்படுத்துமானால், இது குறிப்பாகவே உண்மையாயிருக்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஒரு முக்கியப்பங்கு கொடுக்கவேண்டும் என இக்கழகங்கள் ஆலோசனை கொடுத்தன. ஆனால் “வேகமான மக்கள்தொகை வளர்ச்சி, வளங்களை வீண்வழிகளில் பயன்படுத்துவது, கெடுதி விளைவிக்கும் மனித பழக்கங்கள் போன்றவற்றால் ஏற்படுத்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு,” அவற்றை மட்டும் சார்ந்திருப்பது விவேகமாக இராது என்றும் கூறிற்று. மேலும் அந்த அறிக்கை கூறியதாவது, மாற்றங்கள் ஒன்றுமில்லையென்றால், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றமுடியாத அழிவுகளையோ, உலகத்தின் பெரும்பகுதியில் தொடர்ந்திருக்கும் ஏழ்மையையோ தடுக்கமுடியாது.” “மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த நாம் தீவிர முயற்சிகள் எடுக்காவிட்டால், மற்றெந்தக் காரியமுமே இரண்டாவதாக ஆகிவிடுகிறது,” என்று லண்டனின் இயற்கையறிவு கழகத்தின் தலைவர், சர் மைக்கேல் ஆட்டியா சொன்னார். (g93 5/8)
வந்தே சேராத உதவி
ஆப்பிரிக்காவில் ஏழ்மையையும், பட்டினியையும் குறைப்பதற்காக அளிக்கப்படும் சர்வதேசிய உதவியில் 7 சதவீதம் மட்டுமே உத்தேசித்த பயனடைவோரைச் சென்றடைகிறதென்று ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவர் ஃபரேட் யூனஸ் ஒப்புக்கொள்கிறார். இந்தத் துயரம், லட்சக்கணக்கான ஆப்பிரிக்க குழந்தைகளின் நம்பிக்கையற்ற நிலைமையால் இன்னும் சிக்கலாக்கப்படுகிறது. அந்தக் கண்டம் முழுவதிலும், ஊட்டச்சத்துக் குறைவுபட்ட மூன்று கோடி குழந்தைகளும், சத்துணவின்மையால் வளர்ச்சிக் குன்றிய மேலும் நான்கு கோடி குழந்தைகளும் உள்ளனர், என்று எல் பாயிஸ் என்ற ஸ்பானிய செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. உதவி விநியோகத்தைப் பன்முகப்படுத்துதல் (decentralization), இராணுவச் செலவு குறைப்பு ஆகிய இவ்விரண்டையும், இக்குழந்தைகளின் வாழ்க்கைநிலையை முன்னேற்றுவிப்பதற்கான இரண்டு முக்கிய நடவடிக்கைகளாக, செனிகலின் டகரில் நடத்தப்பட்ட கூட்டத்தில், 44 ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் பரிந்துரை செய்தனர். (g93 5/8)
ஆப்பிரிக்க தூசி
சவான்னா மற்றும் புதர்நிலப்பகுதிகளிலிருந்து, வெப்ப, உலர்ந்த காற்றுகளால் வாரிக்கொண்டுபோகப்பட்ட தூசி, கோளின் மற்ற பாகங்களுக்குப் பயன்விளைவிக்கிறது என்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தென்னாப்பிரிக்காவில் நீடித்த ஒரு வறட்சியின் காரணமாக, 1992-ல் மட்டும் லட்சலட்சம் டன் கணக்கான ஆப்பிரிக்க மேல்மண், (topsoil) தடித்த தூசிப்படலமாக மாற்றப்பட்டதாக இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் அறிக்கை செய்கிறது. அத்தூசுகளில் அதிகம் அட்லான்டிக் பெருங்கடலில் வீழ்ந்து, கனிமங்களை—குறிப்பாக அதிகம் தேவைப்படும் இரும்புச் சத்தை—உணவுச் சங்கிலியின் (food chain) தொடக்கத்திலிருக்கும், மிதவைஉயிரிகளுக்கும் (plankton), க்ரில் என்னும் கணுக்காலிகளுக்கும் கொடுக்கிறது. எஞ்சிய தூசிகள் அமெரிக்க நாடுகளுக்குப் பெயர்ந்து செல்கிறது. அமேஸான் மழைக்காடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள், அப்பகுதியின் சத்துக்குறைந்த மண்ணை மீண்டும் சத்துள்ளதாக்க, இந்த ஆப்பிரிக்க தூசி உதவிசெய்கிறது என்று காட்டுகின்றன. “அட்லான்டிக்குக்கும், அமெரிக்க நாடுகளுக்கும் இந்த ஆப்பிரிக்க தூசி ஊட்டமளிப்பது, மிகப் பெரிய மற்றும் தொலைவிலுள்ள வாழிடங்கள் (ecosystems) எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன என்பதைக் காட்டுகிறது,” என்பதாக வர்ஜீனியா பல்கலைக்கழக, டாக்டர் மைக்கேல் கார்ஸ்டாங் கூறுகிறார். “செய்தி என்னவென்றால், நம்முடைய கோளம், ஒன்றையொன்று சார்ந்துள்ள, ஒன்றோடொன்று தொடர்புள்ள அநேக அமைப்புகளைக் கொண்டுள்ளது. இதை நாம் புரிந்துகொள்வதுகிடையாது. நாம் இப்போதுதான் இதை மேல்மட்டத்தில் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம் என்பதே.” (g93 5/8)
மத பத்திரிகைகள் மூடப்படுகின்றன
“அமெரிக்கன் பேப்டிஸ்ட், க்ரிஸ்டியன் ஹெரல்ட் என்ற நாட்டின் மிகப் பழைய மத பத்திரிகைகளில் இரண்டு வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டது,” என்று அஸோஷியேட்டட் ப்ரஸ் வெளியீடு அறிக்கை செய்கிறது. “நியூ யார்க்கின், சப்பக்வாவை தலைமையிடமாகக் கொண்டு, 1878-ல் தொடங்கப்பட்ட 115 வயதுள்ள க்ரிஸ்டியன் ஹெரல்ட், மற்றும் 1803-ல் அதன் முதல் பத்திரிகை தொடங்கிய, 189 வயதுள்ள அமெரிக்கன் பேப்டிஸ்ட் ஆகிய இரண்டு பத்திரிகைகளும் விநியோகத்தில் குறைந்து வந்தது காணப்பட்டன.” பென்ஸில்வேனியாவின் வேல்லி ஃபோர்ஜை தலைமையிடமாகக்கொண்ட மாதாந்தர பத்திரிகையாகிய அமெரிக்கன் பேப்டிஸ்ட், ஒரு செய்தி மடலால் (newsletter) மாற்றீடு செய்யப்படும். எனினும், அதே காலத்திய மற்றொரு மத பத்திரிகையாகிய தி உவாட்ச்டவர், தொடர்ந்து வளர்ந்துகொண்டேவருகிறது. பென்ஸில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் 1879-ல் முதன்முதலில் மாதாந்தர பத்திரிகையாக 6,000 பிரதிகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தி உவாட்ச்டவர், இப்போது மாதம் இருமுறை இதழாக 112 மொழிகளில் ஒவ்வொரு இதழும் 1,64,00,000 எண்ணிக்கையில் வெளியிடப்படுகிறது. (g93 5/8)
தொழுநோய்க்கு ஒரு மருத்துவம்
தொழுநோயாளிகள் விலக்கிவைக்கப்படவேண்டுமா அவர்களுக்கு வேலை கொடுக்க மறுக்கவேண்டுமா? ஃபார்மர்ஸ் உவீக்லி என்ற தென்னாப்பிரிக்க பத்திரிகையின் கட்டுரையின் பிரகாரம், வேண்டாம். தொழுநோய் இயக்கத்தின் ஓகி க்ருகர் கூறினார்: “சிகிச்சை தொடங்கி ஒருசில மணி நேரங்களுக்குள், அவர்கள் இனியும் தொற்று நோயாளிகளல்ல. அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் சாதாரண வாழ்க்கை நடத்தலாம்.” பலியானோர் போதுமானளவு தொடக்கத்திலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால், நிரந்தரமாக முடமாக்கப்படுவதுமில்லை. காரணம், பல்வகை மருந்து சிகிச்சையைப் பயன்படுத்தி, “கடந்த பத்தாண்டுகளில் இந்நோயைக் குணமாக்குவதில் கணிசமான முன்னேற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.” உலகச் சுகாதார நிறுவனத்தின்படி, உலகில் ஒரு கோடிக்கும் ஒன்றரை கோடிக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையுள்ள மக்கள் தொழுநோய் வியாதியுடையவர்களாய் இருக்கின்றனர் என்று ஃபார்மர்ஸ் உவீக்லி அறிக்கை செய்தது. (g93 4/22)
கொழுத்த குழந்தைகள்—ஏன்?
“இன்றைய குழந்தைகள் முன்பு எப்போதும் இருந்ததைப்பார்க்கிலும் கொழுத்தும், அதிகம் ஓடியாடாதவர்களாயும் இருக்கிறார்கள்,” என்று டொரொன்டோ ஸ்டார் அறிக்கை செய்கிறது. “கொழுப்பது குழந்தைகள் மத்தியில் கடந்த 20 வருடங்களாக திடீரென அதிகரித்துவிட்டிருக்கிறது,” என்று கனடாவின் ஹேமில்டனில் உள்ள ஷேடோக்-மக்மாஸ்டர் மருத்துவமனைகளின் குழந்தைகள் சத்துணவு இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் ஓடேட் பாரோர் கூறுகிறார். உடற்பயிற்சியின்மை, சரிவிகித உணவின்மை ஆகியவையே இதற்குக் காரணம் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இதே போக்குமுறை நீடிக்குமானால், குழந்தைகள் தகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கும் நிலையில் ஒரு திடீர் வீழ்ச்சி ஏற்படும் என மருத்துவர்கள் கவலைகொள்கின்றனர். ஸ்டார் செய்தித்தாளின்படி, “இதயத்தமனி நோய், அதிக ரத்த அழுத்தம், நீரிழிவுநோய், எலும்பு மெலிதல் போன்ற நோய்களுக்கான . . . ஆபத்தை விளைவிக்கும் காரணி உடற்பயிற்சியின்மையே” என்பதாக மருத்துவர்கள் ஏற்கெனவே அடையாளங்காட்டியிருக்கின்றனர். “சுறுசுறுப்பில்லாத ஒரு குழந்தை, வளர்ந்தபின் ஒரு கொழுத்த ஆளாவதற்கு வாய்ப்பு இருக்கிறது,” என்று டாக்டர் பாரோர் முடிக்கிறார். ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கைப் பாணியை அவர் பரிந்துரைக்கிறார். (g93 4/22)
மறைந்திருக்கும் அபாயம்
“புகைப்பவர்கள் இருதயநோயினால் துன்பப்படுவதற்கான அதிகரித்த ஆபத்தை எதிர்ப்படும்போது, அவர்கள் ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறார்கள் என்று தவறாக சொல்லமுடியும்,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரை சொல்லுகிறது. ஏன்? ஏனென்றால் புகைத்தலால் இதயத்தின் இரத்தக்குழாய்களுக்கு (நுண் தமனிகளுக்கு) விளைவிக்கப்படும் கெடுதி, வழக்கமான இதய சோதனைகளின்போது வெளிதோன்றுவதில்லை. எனவே புகைப்பவர்கள் சரீரப்பிரகாரமான அல்லது உணர்ச்சிசம்பந்தமான அழுத்தத்தின்கீழ் இருக்கும்போது அவர்களுடைய இதயங்கள் இரத்தத்திற்காக வேட்கையுற்று, அவர்களின் இதய நிறுத்தத்திற்கான அபாயத்தை இன்னும் அதிகரிக்கிறது. புகைப்பவர் புகைக்காமலிருக்கும்போதுகூட இது உண்மையாகவே இருக்கிறது என்றும், புகைக்கும்போது இந்தப் பிரச்னை அதிகரிக்கப்படுகிறது என்றும், டெஸ் மொய்னஸிலுள்ள லோவா இதய ஆராய்ச்சி நிலையத்தில் நடத்திய ஓர் ஆராய்ச்சி காண்பித்தது. அழுத்தத்தின்கீழ் இருக்கும்போது, இதயத்தின் நுண்தமனிகள் திறந்து வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிக இரத்தத்தை இதயத்திற்குச் சுமந்து செல்லமுடிகிறது. ஆனால் புகைப்பவர்களின் இதயங்களில் இந்த இரத்த ஓட்டமானது 30 சதவீதம் குறைக்கப்படுகிறது. (g93 5/8)
கருச்சிதைவுகள் தாய்மார்களையும் கொல்லுகிறது
“கர்ப்பந்தரித்தல், குழந்தை பிறத்தல் போன்றவற்றின் விளைவாக ஒவ்வொரு நிமிடமும் ஒரு பெண் இறக்கிறாள்,” என்று மதிப்பிடப்படுகிறது என ச்சாய்சஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது. அந்தப் பத்திரிகை மேலும் கூறுகிறது: “கர்ப்பந்தரித்தல் சம்பந்தமான காரணங்களால் ஒவ்வொரு வருடமும் ஐந்து லட்சத்திற்கும் மேலான தாய்மார்கள் மரிக்கின்றனர். மரிக்கும் ஒவ்வொரு தாய்க்கும், மற்ற 100 பேர் நோயாளிகளாகவோ, முடவர்களாகவோ ஆக்கப்படுகிறார்கள்.” லத்தீன் அமெரிக்காவில், ஒவ்வொரு 73 பெண்களிலும் ஒருவர் கர்ப்பந்தரித்தலின் சிக்கல்களால் மரிக்கிறார். ஆசியாவில், ஒவ்வொரு 54 பெண்களிலும் ஒருவர் மரிக்கிறார்; அது ஆப்பிரிக்காவில் 21-ல் ஒன்று ஆகும். மேற்கு ஐரோப்பாவில் நிலவியிருக்கும் ஒவ்வொரு 10,000-லும் ஒன்று என்ற விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த எண்ணிக்கைகள் மிக அதிகமாகும். கர்ப்பந்தரித்தல் சம்பந்தமான மரணங்களுக்கான காரணங்கள், “ஒவ்வொரு வருடமும் உலகமுழுவதும் ஏற்படும் 5,00,000 மகப்பேறு மரணங்களில் 2,00,000-க்கும் மேலான மரணங்களுக்குத் தனி காரணமாக உள்ள கருச்சிதைவையும் உட்படுத்துகின்றன,” என்று ச்சாய்சஸ் குறிப்பிட்டது. (g93 4/22)