உலகத்தைக் கவனித்தல்
உயிரைக் கொல்லாத ஆயுதங்கள்
தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறுகிறபடி, ஐ. மா. அரசாங்கம் போரில் உபயோகிப்பதற்காக உயிரைக் கொல்லாத ஆயுதங்களை அறிமுகப்படுத்துவதன் சாத்தியத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறது. எதிர்கால போர்வீரர்கள் மக்களைக் கொல்லாமலேயே எதிரிகளின் ரடார்கள், தொலைபேசிகள், கம்ப்யூட்டர்கள், மற்றும் இதர முக்கிய சாதனங்களைச் செயலற்றுப் போகச்செய்ய மின்காந்த அலை உருவாக்கிகளை (electromagnetic pulse generators) உபயோகிப்பதை நவீன தொழில் நுட்பம் சாத்தியமாக்கலாம். “ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் இயந்திரங்களை நிறுத்தும் ‘எரிதலைத் தடைசெய்யும் பொருட்கள்’ மீதும், ஒரு சில வகை டயர்களைக் கெட்டியாக்கி அழிக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் மீதும்” பரிசோதனை நிலையங்கள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றன என்று அந்த ஜர்னல் கூறுகிறது. இருப்பினும், இந்த ஆயுதங்களில் சில மனிதனின் உயிருக்கு வினைமையான ஓர் ஆபத்தை விளைவிக்கும். “ஓர் எதிரியின் பீரங்கியில் உள்ள கண்ணாடிகளைத் தகர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த லேசர்கள் ஒரு போர்வீரரின் கண்களைச் சிதறடிக்கவும்கூடும். ஐ. மா. சிறப்புப் படைகளால் களத்தில் சோதனைசெய்யப்பட்டுவரும் எடுத்துச் செல்லத்தக்க நுண்ணலை ஆயுதங்கள் (microwave weapons), அமைதியாய் எதிரிகளின் பேச்சுத் தொடர்புகளைத் தடைச்செய்யும், ஆனால் உடலின் உள்ளுறுப்புகளையும் வேக வைக்க முடியும்,” என்று அந்த ஜர்னல் மேலும் கூறுகிறது. (g93 6/8)
விருத்தசேதனமும் எய்ட்ஸும்
ஆண்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளும் பழக்கமானது எய்ட்ஸ் போன்ற பாலுறவு நோய்களைத் தடுப்பதில் நன்மை பயக்கும் ஒன்றாய் இருப்பதாகத் தோன்றுகிறது என்று பிரெஞ்சு பத்திரிகை லா ரவ்யூ ஃப்ரான்சேஸ் ட்யூ லாபாராட்வார் கூறுகிறது. ஆண்கள் விருத்தசேதனம் (நுனித்தோலை நீக்குதல்) எய்ட்ஸ் பரவுவதைத் தடைசெய்யும் ஒரு காரணி என காண்பித்த மூன்று தனி மருத்துவ ஆராய்ச்சிகளை அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது. மற்ற திசுக்களைவிட ஆண்களின் நுனித்தோல் திசுக்கள் எய்ட்ஸ் வைரஸ் தொற்றுவதற்கு எளிதில் ஆளாகக்கூடிய செல்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ளன என ஆய்வுக்கூட குரங்குகளின் மேல் நடத்திய ஆராய்ச்சி காண்பித்திருக்கிறது. கூடுதலாக, விருத்தசேதனம் செய்துகொள்ளும் தொகுதிகளின் மத்தியில் காணப்படுவதைவிட விருத்தசேதனம் செய்துகொள்ளாத தொகுதிகளின் மத்தியில் அதிகப்படியான எய்ட்ஸ் நோய் காணப்படுகிறது என்று ஆப்பிரிக்காவின் 140 வித்தியாசமான பகுதிகளில் நடத்தப்பட்ட ஒரு கனடா ஆராய்ச்சி வெளிப்படுத்திற்று. விருத்தசேதனம் செய்யப்பட்ட, எதிர்பாலரிடம் பாலுறவு கொள்ளும் அமெரிக்கர் மத்தியில் குறைந்தளவிலே பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதாக மற்றொரு ஆராய்ச்சி கண்டுபிடித்தது. (g93 6/8)
கற்பிக்கப்படாத பிள்ளைகள்
பொலிவியாவின் பிள்ளைகளில் ஆயிரக்கணக்கானோர் தகுந்த கல்வியைப் பெறுவதில்லை. பொலிவிய செய்தித்தாள் ப்ரெஸென்சியா கூறுகிறபடி, பொலிவியாவில் 22,68,605 பள்ளிவயது பிள்ளைகள் இருந்ததாக 1992 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வெளிப்படுத்திற்று. எனினும், அதே காலப்பகுதியில் 16,68,791 பிள்ளைகள் மட்டுமே அந்நாட்டின் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருந்தனர் என கல்வி அமைச்சரகத்தின் பதிவுகள் காட்டுகின்றன. இது 6,00,000 பிள்ளைகள் தகுந்த கல்வியைப் பெறவில்லை என்பதை அர்த்தப்படுத்துகிறது. அவ்வாண்டு பள்ளிகளில் சேர்க்கப்பட முடிந்த மாணாக்கர்களில், 1,02,652 பேர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர் என்று ப்ரெஸென்சியா மேலும் கூறுகிறது. (g93 6/8)
குழந்தைகளும் புட்டிப் பால் கொடுத்தலும்
ஜப்பானின் குழந்தைகளில் சுமார் 25 சதவீதத்தினர் சாப்பிடுவதில் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். அதன் காரணம் புட்டிப் பால் கொடுத்தலாக இருக்கலாம். மெல்லுவதற்குக் கடினமாக உள்ள உணவை உண்பது சில குழந்தைகளுக்குக் கடினமானதாக இருப்பதை, 20 வருட காலங்களுக்குமேல், நர்ஸரி-பள்ளி ஆசிரியர்கள் கவனித்திருக்கின்றனர் என்று ஆஸாஹி ஈவ்னிங் நியூஸ் அறிக்கை செய்கிறது. சில குழந்தைகள் அதை விழுங்குவதைப் பிரச்னையாகக் காண்கின்றனர், மற்றவர்கள் அதைத் துப்பிவிடுகின்றனர், இன்னும் மற்றவர்கள் தங்களுடைய பிற்பகல் ஓய்வுக்குப் பிறகும் அதை வாயில் வைத்திருக்கின்றனர். இக்குழந்தைகளின் தாடைகள் பலமற்றவையாகவும் முகவாய்க்கட்டைகள் சிறிதாகவும் இருப்பதை மருத்துவர்கள் கவனித்திருக்கின்றனர். பல் மருத்துவர் நாஓஹிகோ இனோயீ, மற்றும் பொதுச் சுகாதார நிபுணர் ரேகோ சாகாஷ்ட ஆகிய இருவரும் இதற்கான காரணம் குழந்தைப் பருவத்தோடு சம்பந்தப்பட்டதென்று கண்டுபிடித்ததாக உரிமைபாராட்டி, புட்டிப் பால் கொடுப்பதைக் குற்றஞ்சாட்டினர். குழந்தைகள் புட்டிகளில் பால் அருந்தும்போது, தங்கள் தாடைகளை அசைக்கவேண்டிய தேவையில்லாமல் உறிஞ்சவேண்டிய அவசியம் மட்டுமே இருந்ததாகத் தோன்றுகிறது. எனினும், குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது, தங்களுடைய தாடைகளை மும்முரமாக உபயோகிக்கின்றனர். இதனால் பிற்காலத்தில் உணவை மெல்லுவதற்குத் தேவைப்படும் அதே தசைகளைப் பலப்படுத்துகின்றனர். (g93 5/22)
மஹாகனி மர வகைக்கு அச்சுறுத்தல்
அமேசான் காட்டில் வாழும் இரண்டரை லட்சம் பிரேஸில் நாட்டு இந்தியர் தங்கள் பரம்பரை வீட்டை இழந்துவிடும் ஆபத்திலிருக்கின்றனர். அரசாங்கத்தின் இந்தியர் சேவையின் தலைவர் சொல்லுகிறபடி, மஹாகனி மர வர்த்தகத்திலிருந்தே “மிகப் பெரிய அச்சுறுத்தல்” வருகிறது. மஹாகனி மரங்களைச் சட்டவிரோதமாக வெட்டுதல், பாரா மாநிலத்தின் தென்பகுதியில் சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவிற்குச் சட்டவிரோதமான போக்குவரத்துச் சாலை அமைப்பதில் விளைவடைந்துள்ளதாக லண்டனின் தி கார்டியன் அறிக்கை செய்கிறது. ஒவ்வொரு மஹாகனி மரத்தையும் வெட்டும்போதும், 20-க்கும் அதிகமான மற்ற இனங்களைச் சேர்ந்த மரங்கள் நாசமாக்கப்படுகின்றன. அவர்கள் காட்டை வெட்டி அழிக்கும்போது, பேராசை நிறைந்த வர்த்தகர்கள் குடியேற்றக்காரர்களுக்கும், தங்கச் சுரங்கத்தினருக்கும், மற்றும் ஆயிரக்கணக்கான மரம் அறுக்கும் ஆலைகளுக்கும் வழிவகுத்தனர். இப்போது உபயோகித்துவரும் வீதத்தில், 32 வருட தேவைகளுக்கு மட்டுமே இருக்கும் மஹாகனி, அந்த இந்தியர்களைப் போலவே ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்ப்படுகிறது. (g93 6/8)
நச்சுக் கழிவுகள் ஏற்றுமதி
கழிவுகளிலிருந்து நச்சு நீக்குவதற்குச் செலவு அதிகமாகும் என்ற காரணத்துக்காக “பணக்கார நாடுகள் தங்களின் நச்சுக் கழிவுகளை ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன,” என்று பிரேஸிலிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைவள புதுப்பிப்பு நிலையத்தைச் சேர்ந்த செபாஸ்டியூன் பின்யெரோ கூறுகிறார். வேஜா பத்திரிகையில் அறிக்கை செய்யப்பட்டதுபோல, “சுமார் ஒரு மில்லியன் டன் ஆபத்தான நச்சுக் கழிவுகள் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன,” என்பதாக ஓர் ஆராய்ச்சி காண்பித்தது. இறக்குமதி செய்யப்பட்ட இந்த நச்சுக் கழிவுகள் என்ன செய்யப்படுகின்றன? அவை புதிய மின்சார உற்பத்தி நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படலாம். “எப்படியாவது இங்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது என்ற கொள்கையை வளரும் நாடுகள் ஆதரித்து வருகின்றன,” என்பதாக பிரேஸிலின் சுற்றுச்சூழல் கழகத்தின் ஆலோசகர் ஒருவர் கூறுகிறார். இருப்பினும், உலகமுழுவதிலுமிருந்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. லண்டனின் ஃபினான்ஷியல் டைம்ஸ் கேட்கிறது: “தொழிற்சாலைகளை எங்கு அமைப்பது என்பதைப்பற்றிய முடிவுகள் மனித வாழ்க்கை செலவு எங்குக் குறைவாக இருக்கிறது என்ற மதிப்பீட்டின் பேரிலா தீர்மானிப்பது?” வேஜா எதிர்பார்ப்பதற்கு நேர்மாறாக மேலும் கூறுகிறது: “பதில் ஆம் என்பதாகத் தோன்றுகிறது.” (g93 6/8)
தேன்—ஒரு நிவாரணி
பூர்வீக காலங்களிலிருந்தே, தேனீக்களின் தேன் அதன் சுகப்படுத்தும் தன்மைகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. நவீன மருத்துவ அறிவியல் இப்போது தேனின் சுகமளிக்கும் வல்லமைகளை மீண்டும் கண்டுபிடிக்க தொடங்கியிருக்கிறது என்று ஒரு பிரெஞ்சு பத்திரிகை, லா ப்ரெஸ் மேடிகா அறிக்கை செய்கிறது. சமீப ஆராய்ச்சி ஒன்றில், தீக்காயங்களையும் மற்றநேக வகை தசைப்புண்களையும் சுத்தமான இயற்கை தேன் உபயோகித்துக் குணமாக்க மருத்துவர்கள் சோதனை நடத்தினர். காயங்கள் நேரடியாக தேன் தடவப்பட்டு உலர்ந்த தூய்மையாக்கப்பட்ட கட்டுத்துணியைக் கொண்டு கட்டிவைக்கப்பட்டன. இந்தக் கட்டு ஒவ்வொரு 24 மணி நேரமும் மாற்றப்பட்டது. இதன் முடிவுகள் தேன் தன்நிகரற்றுப் பலனளிக்கக்கூடிய தூய்மையாக்கும் மற்றும் சுகமளிக்கும் ஒரு நிவாரணி என்பதாகக் காட்டுகின்றன. இது தொடர்புகொள்ளும்போதே பெரும்பாலான கிருமிகளைக் கொன்று புதிய திசு வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. லா ப்ரெஸ் மேடிகா இவ்வாறு முடிக்கிறது: “இது எளியதும் செலவு குறைந்ததுமாகையால், தேன் நன்றாக அறியப்படவேண்டும். மேலும் பொதுவாக உபயோகப்படுத்தப்படும் நச்சுத்தடை நிவாரணிகளின் பட்டியலில் சேர்க்கப்படவேண்டும்.” (g93 5/22)
செயலற்ற மூளை மந்தமாகிறது
நீண்ட காலங்களாக செயலற்று இருப்பது மூளைக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்குமா? நிச்சயமாகவே இல்லை என்றார் ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ஃபில் உள்ள மருத்துவ வர்த்தக கண்காட்சியைச் சேர்ந்த பேராசிரியர் பெர்ன்ட் ஃபிஷர். டேர் ஷ்டைகர்வால்ட்-போட்ட அறிக்கை செய்தபடி “ஒரு சில மணிநேரங்களுக்கு மட்டும் தூண்டுதல் முழுவதும் இல்லாமல் இருக்குமானால், அதைத் தொடர்ந்து ஒரு நபருடைய சிந்திக்கும் திறமை பேரளவில் குறைவுபடுகிறது என்பதாக சோதனைகள் காட்டியிருக்கின்றன” என்று அவருடைய கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. சோம்பலான செயலின்மையைத் தங்களது விருப்பமான விடுமுறையாகக் கொண்டவர்கள் மீண்டும் யோசிக்கவேண்டும் என்று அந்தப் பேராசிரியர் அறிவுரை கூறினார். “பயிற்சியற்ற தசைகளைப் போல,” அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது, “நீண்ட ஒரு செயலற்ற விடுமுறைக்குப் பின், சில சந்தர்ப்பங்களில் தன்னுடைய பழைய செயல்திறமை அளவை அடைய மூளைக்கு மூன்று வாரங்கள் வரை தேவைப்பட்டது.” போட்டி விளையாட்டுகள், விளையாடுதல், ஆர்வத்தைத் தூண்டும் வாசிப்புப் பொருட்கள் போன்றவை விடுமுறை காலத்தில் மூளை மந்தமாவதைத் தடைசெய்வதாகச் சொல்லப்படுகிறது. (g93 6/8)
கடல் ஆமையின் பிரச்னை
கடல் ஆமைகளின் வசிப்பிடம் தண்ணீராக இருந்தாலும், உலர்ந்த தரையில்தான் அவை முட்டையிடுகின்றன. உலகின் பெருங்கடல்களில் வெகுதூரங்கள் சுற்றியடித்துவிட்டு, கடல் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக குறிப்பிட்ட கடற்கரைகளுக்குத் திரும்பி வருகின்றன. ஆழ்கடலில் தன் இனச்சேர்க்கைக்குப் பிறகு, பெண் ஆமை ஆடி அசைந்து கடற்கரையில் ஓரிடத்திற்கு—ஒருவேளை தான் பிறந்த அதே இடமாக இருக்கலாம்—வந்து சேர்ந்து, தெரிந்தெடுத்த ஓர் இடத்தில் அமரிக்கையாக அவளுடைய முட்டைகளை இடுகிறாள். எல்லா முட்டைகளும்—வழக்கமாக சுமார் ஓர் ஆயிரம்—இடப்பட்டு அதிக சிரமமெடுத்து அவை மூடப்படும்வரை இது ஒருசில நாட்களுக்குத் திரும்பத் திரும்ப செய்யப்படுகிறது. ஆனால் பிரச்னையே இனிதான் வருகிறது. மனிதன் தனது “ஈடற்ற பேராசையினாலும் சுற்றுச்சூழலுக்குக் காட்டும் படுமோசமான அலட்சியத்தினாலும்,” தென்னாப்பிரிக்க பத்திரிகை ப்ரிஸ்மா அழைப்பதைப்போல “கூடுகளைக் காலிசெய்கிறான்” இது “ஆமைகளின் இனப்பெருக்க முறைகளைப் பேரளவில் பாதித்திருக்கிறது.” சில இனங்கள் இப்போது அற்றுப்போதலை எதிர்ப்படுகின்றன. (g93 5/22)
தொலைக்காட்சியை முன்கூட்டியே கட்டுப்படுத்தி வைக்கவேண்டுமா?
“குழந்தைகள் குறைந்த நேரம் டிவி, குறிப்பாக வன்முறை டிவி, பார்ப்பது நல்லது,” என்று அமெரிக்க மருத்துவக் கழக பத்திரிகை (The Journal of the American Medical Association) ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் அமெரிக்க குழந்தைநல மருத்துவர் கழகம் சொல்கிறது. “இதை மெய்ப்பிக்கக்கூடிய வகையில் பதினான்கு மாத குழந்தைகள்கூட கவனித்து, தொலைக்காட்சியில் கண்ட நடத்தைகளைத் தன்னுடைய நடத்தையில் சேர்த்துக்கொள்கின்றனர்,” என அந்தக் கட்டுரை அறிக்கை செய்கிறது. அவர்கள் பார்ப்பதில் பெரும்பாலானவை வம்புச் சண்டையும் வன்முறையும் நிறைந்தவையாக இருக்கின்றன. பெற்றோரின் அதிகாரத்தைத் திரும்ப நிலைநாட்டும் ஒரு முயற்சியில், தொலைக்காட்சியில் மின்னணு குறித்தநேர-அலைவரிசை நிறுத்தியின் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும்படி அந்த அறிக்கை ஆலோசனை கொடுக்கிறது. இதனால் நிகழ்ச்சிநிரல்கள், அலைவரிசைகள், நேரங்கள் போன்றவற்றை முன்கூட்டியே கட்டுப்படுத்துவது முடிந்த ஒரு காரியமாகிறது. இவ்வாறு, பெற்றோர் வீட்டில் இல்லாதபோதுங்கூட, தங்களுடைய குழந்தைகள் தொலைக்காட்சியில் எதைக் காண்கின்றனர் மற்றும் அதை எப்போது காண்கின்றனர் என்பதைத் தாங்கள் கட்டுப்படுத்த முடியும். (g93 5/22)
கைகளைக் கழுவுங்கள்!
நோயை எதிர்த்துப் போராட நவீன மருத்துவ அறிவியலின் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் அதிகத்தைச் செய்திருந்தாலும், சாதாரண சோப்பினாலும் தண்ணீரினாலும் உங்கள் கைகளைக் கழுவுதல், அநேக தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கும் வழிகளில் மிகச் சிறந்த ஒன்றாக இன்னும் விளங்கிவருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்விட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள சுகாதார பழக்கவழக்கங்களின்மீதான ஒரு சமீபகால ஆராய்ச்சியில், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றின் பொது கழிப்பறைகளில், ஆராய்ச்சியாளர்கள் பழுதுபார்க்கும் ஆட்களைப்போலவோ சுத்தம் செய்யும் பணியாளர்களைப்போலவோ வேஷம் தரித்தனர் என்று ல ஃபிகாரோ என்ற பிரெஞ்சு செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. கழிப்பறையை உபயோகித்த பின் 4 பேரில் ஒருவர் தன் கைகளைக் கழுவுவதில்லை என்றும் அவ்விதம் கழுவுகிறவர்களில் நான்கில் ஒரு பாகத்தினர் சோப் உபயோகிப்பதில்லை என்றும் அவர்கள் கண்டுபிடித்தனர். உலகமுழுவதும் நோயைப் பரப்பும் மிகப் பொதுவான கருவிகளில் மனித கை ஒன்றாக இருந்துவருவதாகத் தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர். (g93 6/8)
வானவியல் வல்லுநர்களின் நம்பிக்கை
ஐ.மா. நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அன்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனால் நிர்வகிக்கப்பட்டுவரும் ஒரு பத்தாண்டு திட்டத்தில், மற்ற கோள்களில் வாழும் அறிவுத்திறமுள்ள உயிரிகளிடமிருந்து வரும் ரேடியோ ஒலிபரப்புகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் $10 கோடி செலவு செய்யப்போவதாக வானவியல் வல்லுநர்கள் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர். இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் சொல்கிறபடி, அர்ஜன்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, ரஷ்யா, பியூர்டோ ரிகா, ஐக்கிய மாகாணங்கள் போன்ற தேசங்களில் உள்ள ரேடியோ தொலைநோக்கிகளின் லட்சக்கணக்கான நுண்ணலை அலைவரிசைகளை ஒரே சமயத்தில் கேட்டுக்கொண்டிருப்பதே அவர்களுடைய திட்டமாகும். சில விஞ்ஞானிகள் விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் முன்னுரைத்திருக்கின்றனர். ஆனால் மற்றவர்களோ 1960-லிருந்து நடத்தப்பட்ட 50 ஆய்வுகள் பலனற்றவையாக இருந்திருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். (g93 5/22)