நகைச்சுவைமிக்க—உவார்ட்ஹாகு
ஆப்பிரிக்க புதர்களில் மிகச் சிறந்த கேளிக்கையான காட்சிகளில் ஒன்று உவார்ட்ஹாகு குடும்பம் ஒரு மென்னோட்டத்தில் போவதாகும். அவை சுறுசுறுப்பான வேகத்தில் தவ்வி தவ்வி உவார்ட்ஹாகுக்கே உரிய மதிப்பு வாய்ந்த பாணியில் நடந்து போகக் காணப்படுகின்றன. அவ்வாறு நடக்கையில் ஒவ்வொன்றும் தனது ஒல்லியான, குஞ்சத்தையுடைய வாலை ஒரு சிறிய ரேடியோ ஆன்டென்னாவைப் போல விறைப்பாக நேரே நிறுத்தி வைத்திருக்கின்றன. சந்தேகமின்றி உவார்ட்ஹாகின் நோக்கம் பார்வையாளர்களுக்கு வேடிக்கைக் காட்டுவதற்காக அல்ல. மேபெர்லியின் தென்னக ஆப்பிரிக்க பாலூட்டிகள் (Maberly’s Mammals of Southern Africa) என்ற புத்தகத்தின்படி, “இந்த விலங்குகள் உயரமான புற்களினிடையே ஓடும்போது, குறிப்பாக மிகக் குறைந்த பார்வைத்திறனை உடைய குட்டிகளின் விஷயத்தில், இந்தப் பழக்கம் ஒன்றையொன்று பார்த்துக்கொள்ள ஒருவேளை உதவியாக இருக்கலாம்.”
அதைவிட இன்னும் அதிக வேடிக்கையாக இருப்பது அவை தம்முடைய ‘வீடுகளுக்கு’ உள்ளே நுழையும் முறையாகும். இது விசேஷமாக அவை மிக வேகமாக நுழையும்போது அவ்வாறு இருக்கிறது. உவார்ட்ஹாகுகளின் “வீடு” எறும்புத் திண்ணும் கரடி அல்லது முள்ளம்பன்றியால் நிலத்தில் தோண்டப்பட்ட, பெரிதுபடுத்தப்பட்ட வளையாக இருக்கலாம். உவார்ட்ஹாகுகள் விசித்திரமான முறையில் நுழைகின்றன. உவார்ட்ஹாகுவின் சரியான பாணிகளை இன்னும் பழகியிராத குட்டிகள் மற்றெந்த சுயமரியாதையுள்ள விலங்குகளையும் போல முதலில் குகைக்குள் தலையைத் துருத்தி சட்டென்று நுழைகின்றன. ஆனால் பெற்றோர் அவ்வாறு செய்வது கிடையாது! அவை தங்களுடைய குகையின் நுழைவாயிலில் முழுவேகத்தில், இராணுவ துல்லியத்தோடு, எதிர்த்திசை நோக்கித் திரும்பி—பின்னர் விரைவில் பின்னோக்கி நகர்ந்து தங்களுடைய வீட்டில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றன! இந்தச் சிறிய தந்திரம் வெறுமனே பார்வையாளர்களுக்கு வேடிக்கைக் காட்டுவதற்காக செய்யப்படுவதல்ல. பாருங்களேன், உவார்ட்ஹாகு இப்பொழுது தன்னைக் கொன்று திண்ணவரும் விலங்கை எதிர்த்து, கூடுதலான எந்தத் தாக்குதலையும் தனது கொடிய தந்தங்களைக் கொண்டு தடுக்கும் அனுகூலத்தைக் கொண்டிருக்கிறது.
சந்தேகமின்றி, இவ்வாறு விரைந்து பின்னோக்கி செல்லுதல் சிலசமயங்களில் எதிர்பாராத சிக்கல்களைக் கொண்டிருக்கலாம். பிரச்னை என்னவென்றால் நிலத்திற்கடியில் இருக்கும் புழுதி நிறைந்த இந்தக் குகைகளை உவார்ட்ஹாகுகள் மட்டுமே உறைவிடமாக கொண்டில்லாமல் இருக்கலாம். கழுதைப்புலிகள் (hyenas), வளைக்கரடிகள் (honey badgers), நரிகள், முள்ளம்பன்றிகள் ஆகியவையும் இந்த வளைகளை உறைவிடமாகக்கொள்ள நாடலாம். “இந்த வளைகள் ஏற்கெனவே குடியேறப்பெற்றிருந்தால், [உவார்ட்ஹாகுகள்] அவ்வப்போது சில கசப்பான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படலாம்,” என்று கூஸ்டோஸ் பத்திரிகை அறிவிக்கிறது. “சில சந்தர்ப்பங்களில் அவற்றின் உடலின் பின்பாகங்களில் இருந்து [முள்ளம்பன்றியின்] முட்கள் நீட்டிக்கொண்டிருக்கும்படி உவார்ட்ஹாகுகள் காணப்பட்டிருக்கின்றன.” ஒப்புக்கொள்ளக்கூடிய விதமாகவே, ஒன்றும் செய்யமுடியாத அந்த அப்பாவி உவார்ட்ஹாகுக்கு இது மிக மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கமுடியாது.
அச்சுறுத்துகிற அதன் தந்தங்களோடு, அந்த உவார்ட்ஹாகு மற்ற விலங்குகளைக் கொன்று திண்ணுவதற்காக காத்திருக்கும் ஒரு கொடிய விலங்கைப் போன்று காணப்படுகிறது. ஆனால் அது அப்படியல்ல. உவார்ட்ஹாகு “பொதுவாகவே தீங்கிழைக்காத விலங்கு” என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. உவார்ட்ஹாகு ஒரு புல்லுண்ணியாக இருப்பது தெரியவருகிறது. அது உண்பதில் நன்கு பார்த்துத் தெரிந்தெடுத்து உண்ணும் பழக்கம் உடையதாய் இருக்கிறது! அவன் பெரும்பாலும் குட்டையான புற்களையே தனித்தெடுத்து உண்கிறான்; புல்தண்டுகளின் மென்மையான நுனிகளை மட்டும் புசிக்கிறான். களைகள், நீண்ட புற்கள், அல்லது மற்ற தாவரங்களைத் தவிர்க்கிறான். உண்மையிலேயே “ஹாகு” (பன்றி) தான்! மேலுமாக, தன்னுடைய உணவைக் கண்டுபிடிக்க விரும்பத்தகாத மிக மோசமான இடங்களில் நுழைந்து பார்க்கவும் உவார்ட்ஹாகு மனமுள்ளதாய் இருக்கிறது. அடியில் வளர்ந்திருக்கும் சுவைமிக்க புதிய புற்களைத் தேடி அவனுடைய முகத்தை முட்புதர் பகுதிகளினூடே நுழைக்கும்போது, அவனது தந்தங்கள் முகத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.
நாளின் மிகச் சூடான வேளையில், கைவிடப்பட்ட ஓர் ஆர்துவார்க்கு வளையில் உள்ள அதன் ‘வீட்டில்’ உவார்ட்ஹாகுகளை அடிக்கடி காணலாம். இவ்வளை அவற்றின் தந்தங்களால் பெரிதாக்கப்பட்டிருக்கிறது. அவை அவ்வாறு ஓய்வு எடுக்காமல் இருந்தால், அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கத்தில் அவை கிடந்து புரண்டுகொண்டும் தண்ணீர் குடித்துக்கொண்டும் இருக்க நீங்கள் காணலாம். சாப்பாட்டிற்கான நேரம் ஆகிவிட்டிருக்கும்போது, புற்கள் நிறைந்த சமவெளிகளில் அவை தவ்வி தவ்வி செல்வதைக் காணலாம். (அவை கட்டாயப்படுத்தப்பட்டால் ஒழிய வேகமாக பாய்ந்தோட மறுக்கின்றன.) அவை மதிப்பு வாய்ந்த முறையில் நடக்கின்றன, அவை எல்லாம்—வளர்ந்த ஒன்றிலிருந்து மிகவும் இளம் குட்டிவரை—தங்களுடைய கம்பி போன்ற வால்களை விறைப்பாக உயர்த்தி வைத்து நடக்கின்றன.
உவார்ட்ஹாகுகள் பன்றிக் குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களில் மிகவும் அழகு வாய்ந்தவை அல்ல. எனினும், அவை மிகப் பொருத்தமான ஒரு பெயரையே கொண்டிருக்கின்றன. இந்தப் பெயர் அவற்றின் நீள்வட்ட முகங்களில் தெளிவாகத் தெரியும் ‘உவார்ட்களில்’ (பாலுண்ணிகளில்) இருந்து பெறப்பட்டது. அவை உண்மையான பாலுண்ணிகள் கிடையாது; திண்தோலின் புறவளர்ச்சிகள் ஆகும். இவை நடைமுறையான உபயோகங்களைக் கொண்டிருக்கின்றன. தோண்டும்போதும் உண்ணும்போதும் உவார்ட்ஹாகின் கண்களைப் பாதுகாக்க அவை உதவலாம். ஆண்கள் சண்டையிடும்போது, குத்தித் தாக்கும் எதிரியின் தந்தங்களிலிருந்து பாதுகாக்கும் கவசங்களாக செயல்படுவதன் மூலமும், அவை பயனுள்ளவையாக இருக்கலாம்.
வேடிக்கையான இந்த முகத்திற்குப் பின் மறைந்திருப்பது ஒரு கடுமையான போராளியாகும். தாய் உவார்ட்ஹாகுகள் தங்களுடைய குட்டிகளை கண்ணும்கருத்துமாய் கவனிக்கும் மற்றும் பாதுகாக்கும் தன்மையுடையனவாய் இருக்கின்றன. அதைப்போன்று கூட்டத்தைச் சேர்ந்த மற்ற வளர்ந்த அங்கத்தினர்களும், தங்களுடைய உயிரை ஆபத்திற்குள்ளாக்குவதை அது அர்த்தப்படுத்தினாலும்கூட, குட்டிகளைப் பாதுகாக்கின்றன. உதாரணமாக, வேட்டைச் சிறுத்தை (cheetah) ஒன்று ஓர் உவார்ட்ஹாகு குட்டியை எடுத்துக்கொண்டு செல்ல முயற்சி செய்தால், வளர்ந்த ஒன்று தாக்கும் அந்த விலங்கை எதிர்த்துத் தாக்கும். வழக்கமாக எதிர்த்துத்தாக்கும் இந்த மூர்க்கமான விலங்கையும் அதன் கூரான தந்தங்களையும் வெறுமனே காண்பதுதானே வேட்டைச் சிறுத்தையை ஓடவைத்துவிடும். இதற்கிடையில், குட்டிகள் பாய்ந்தோடி, தங்களுடைய தாயின் வயிற்றினடியில் பாதுகாப்பாக தங்கியிருக்க முயற்சி செய்கின்றன. அச்சுறுத்துதல், ஒரு சிங்கம் அல்லது சிறுத்தைப் புலி (leopard), போன்று அதிக அபாயமாக இருக்குமென்றால், நிச்சயமாக அந்த உவார்ட்ஹாகுகள் விவேகமாக பின்வாங்கிச் சென்றுவிடுகின்றன. ஆனால் அவற்றின் வால்கள் இன்னும் நேராகவே உயர்த்தி வைக்கப்பட்டிருக்கும். எனினும், வளர்ந்தவை, குட்டிகள் முதலில் பாதுகாப்பாக சென்றடையும்படி, குட்டிகளை முன்னே போகவிட்டு பின்தொடரும்.
இருந்தபோதிலும், டாக்டர் டேரல் மேசன் கூஸ்டோஸ் பத்திரிகையில் குறிப்பிடுகிறார், “வளர்ந்த உவார்ட்ஹாகுகள், வேட்டைச் சிறுத்தைகள், சிறுத்தைப் புலிகள், கழுதைப்புலிகள் ஆகியவற்றிற்கு எதிர்த்து நிற்கமுடியாத எதிரிகளாக இருக்கலாம்.” ஒரு பெண் உவார்ட்ஹாகு தன் குட்டிகளில் ஒன்றை ஒரு பெரிய ஆண் சிறுத்தைப் புலியிடமிருந்து பாதுகாத்தது கவனிக்கப்பட்டிருக்கிறது. அவள் தைரியமான அந்தச் சிறுத்தைப் புலியைத் தாக்கினாள். அவன் விரைவில் ஒரு மரத்திற்குள் பின்னடைந்து ஒளியுமுன் அவனை 30 மீட்டர் தூரம் விரட்டியடித்தாள். மற்றொரு சந்தர்ப்பத்தில் இரண்டு உவார்ட்ஹாகுகள் 16 காட்டு நாய்கள் அடங்கிய ஒரு கூட்டத்தை எதிர்த்து நின்று போராடுவதாகக் காணப்பட்டன.
ஆப்பிரிக்கப் புதர்களின் காணத் தவறவிடமுடியாத இந்த நகைச்சுவையின் கேளிக்கையாட்டங்களைக் காண்பது எவ்வளவு கவனத்தைக் கவருவதாக இருக்கிறது! (g93 11/22)