உலகத்தைக் கவனித்தல்
“சர்ச்சின் பெருந்துயரத்தின் ஓர் ஊற்றுமூலம்”
கிழக்கத்திய கனடாவின் பிஷப்புகளுக்குக் கொடுத்த பேட்டியில் ஜான் பால் II, பாதிரிகளால் நடத்தப்பட்ட பாலுறவு துர்ப்பிரயோகத்திற்குத் தன்னுடைய கவனத்தைத் திருப்பினார். லாஸ்ஸேர்வாடோரே ரோமானோவில் அறிக்கை செய்யப்பட்டபடி, “குருவர்க்கத்தின் அங்கத்தினர்களால் கிளப்பப்பட்ட வதந்தியும் இந்த விஷயத்தில் தவறுசெய்த மதகுருமார்களும் கனடாவிலுள்ள சர்ச்சின் பெருந்துயரத்தின் ஓர் ஊற்றுமூலமாக இருக்கின்றனர்,” என்பதாக கனடாவின் திருச்சபை தலைவர்களிடம் போப் சொன்னார். “பாலுறவுசம்பந்தமாக மோசமான நடத்தையினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காகவும் அதைப்பற்றிய குற்றவுணர்ச்சி உடையவர்களுக்காகவும்” ஜெபித்ததாக அவர் மேலும் கூறினார். பாதிரிகளின் கட்டாயமான மணத்துறவை (obligatory celibacy) ரத்துசெய்வது, பாதிரிகளால் செய்யப்படும் பாலுறவு துர்ப்பிரயோகத்தைப் பற்றிய அவதூறுகளைக் குறைக்க உதவும் என்றும் போப் குறிப்பிட்டுச்சொன்ன “பாதிரிகளின் பற்றாக்குறை அல்லது அவர்கள் இங்குமங்குமாக பிரித்து அனுப்பப்பட்டிருப்பது” போன்றவற்றை தீர்த்துவைக்கும் என்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால் ஜான் பால் II சொல்லுகிறபடி, “மணத்துறவை கடைப்பிடிப்பதில் இன்று உட்பட்டிருக்கும் கஷ்டங்கள்தானே, அதைப்பற்றிய சர்ச்சின் மதிப்பீட்டையும் தகுதியானத்தன்மையையும் புரட்டுவதற்குப் போதுமான காரணங்கள் அல்ல.”
போதைப்பொருளுக்கு அடிமையாவதேன்?
“நமக்கிருக்கும் எந்தப் பிரச்னைகளையும் தீர்க்கவல்ல ஒரு சிறிய மாத்திரையை நவீன மருந்தியல் கொண்டிருக்கிறது என்று அநேக மக்கள் கருதுகின்றனர். ஒரு நபருக்குத் தூங்க முடியவில்லையானால், ஒரு சிறிய மாத்திரையை உட்கொள்ளுகிறார். வேலையில் தன்னுடைய செயல்திறனை மேம்படுத்த விரும்பினால், வேறொரு மாத்திரையை உட்கொள்ளுகிறார்,” என்று சாவோ பாலோவின் காவல்துறை தலைமை அலுவலர் ஆல்பெர்டூ காராஸா விவரிக்கிறார். இது பிரேஸிலின் வேழா பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. “அத்தகைய பழக்கம் இளைஞர் மீது செல்வாக்குச் செலுத்துகிறது நியாயமே.” அவர் மேலும் கூறுகிறார்: “போதைப்பொருள் அடிமைகளில் எண்பது சதவீதத்தினருக்கு வினைமையான குடும்பப் பிரச்னைகள் இருக்கின்றன. அவர்கள் தீவிரக் கட்டுப்பாடுள்ள ஒரு குடும்பத்திலோ எந்தவித கட்டுப்பாடுமேயற்ற ஒரு குடும்பத்திலோ அல்லது தகப்பனில்லாத ஒரு குடும்பத்திலோ இருந்து வருகின்றனர்.” ஆனால் பெற்றோர் இளைஞரை போதைப்பொருட்களிலிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்? காராஸா சொல்லுகிறார்: “அது கற்பனையாகத் தோன்றலாம், ஆனால் பிள்ளைகளுக்கான அன்பும் அவர்களுடன் கொள்ளும் பேச்சுத்தொடர்பும் உள்ள ஒரு சமநிலையான குடும்பத்தில் போதைப்பொருட்களுக்கு ஒருபோதும் இடமில்லை.”
“மிக வன்முறையான தேசம்”
“உலகிலேயே மிக வன்முறையான தேசம் அமெரிக்காதான்,” என்று எழுதுகிறார் பத்திரிகையாளர் ஆன் லேன்டர்ஸ். “1990-ல் கைத்துப்பாக்கிகள் ஆஸ்திரேலியாவில் 10 பேரையும், கிரேட் பிரிட்டனில் 22 பேரையும், கனடாவில் 68 பேரையும், ஐக்கிய மாகாணங்களில் 10,567 பேரையும் சுட்டுக் கொன்றன.” அது மிக பலமாக ஆயுதம் தரித்த தேசமாகவும்கூட இருக்கிறது. அதன் மக்கள் 20 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர். இது அதில் குடியிருக்கும் 25.5 கோடி மக்களில் ஒவ்வொருவருக்கும் ஒன்று என்ற வீதமாக இருக்கிறது. பள்ளிகள் வன்முறையிலிருந்து விடுபட்டவையாய் இல்லை. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரிலும் கிட்டத்தட்ட 20 சதவீதத்தினர் ஏதாவதொரு வகையான ஆயுதத்தை வைத்திருக்கின்றனர். பள்ளி வளாகங்களுக்குள்ளோ அருகிலோ ஒரு வருடத்திற்கு அநேகமாக 30 லட்ச குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் 40 ஆசிரிய ஆசிரியைகள் சரீரப்பிரகாரமாக தாக்கப்படுகின்றனர், மேலும் சுமார் 900 பேர் சரீரப்பிரகாரமான கெடுதல்களால் பயப்படுத்தப்படுகின்றனர். தேசிய கல்வி சங்கம் சொல்கிறபடி, ஒவ்வொருநாளும் 1,00,000 மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது துப்பாக்கிகளைக் கொண்டுவருகின்றனர். சாதாரண ஒரு நாளில் 40 பிள்ளைகள் துப்பாக்கிகளால் கொல்லப்படுகின்றனர் அல்லது காயப்படுத்தப்படுகின்றனர். “நாம் அசாதாரணமாக வன்முறையைப் பொறுத்துப்போகிறோம், பள்ளிகளில் சம்பவிப்பது வெறுமனே அதன் பிரதிபலிப்பேயாகும்,” என்று சொல்லுகிறார் தேசிய மனநல ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஜான் E. ரிக்டர்ஸ். ஓர் ஆங்கில ஆசிரியர் தன்னுடைய 12-ம் வகுப்பு மாணவர்களை முன்பு கட்டுரை ஒன்று எழுத சொன்னபோது கிடைத்த வெற்றி வீதம் 10 சதவீதம் மட்டுமே. ஆனால் அவர் “நான் விரும்பும் ஆயுதம்” என்ற தலைப்பில் அவர்களைக் கட்டுரை எழுத சொன்னபோது கிடைத்த வெற்றி வீதமோ 100 சதவீதமாக இருந்தது.
சர்ச்சின் இரண்டக நிலை
சர்ச்சின் மணத்துறவு சட்டத்தைத் தளர்த்தும்படியும் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள உள்ளூர்வாசிகளை சேவிப்பதற்கு திருமணமான பாதிரிகளுக்கு அனுமதியளிக்கும்படியும் மேற்கத்திய கனடாவைச் சேர்ந்த பிஷப்புகள் வத்திக்கனைக் கேட்டுக்கொண்டனர். பண்பாடுகளைக் கருத்தில் கொள்வதும், அதனுடன் வடபகுதிகளில் பாதிரிகளின் பற்றாக்குறையும் அவர்களின் வேண்டுகோளை நியாயமானதாக்குகின்றன என்பதாக அந்த பிஷப்புகள் கருதுகின்றனர். “இன்யுவட் மற்றும் டேனே மக்கள் தங்களுடைய பண்பாட்டில் ஒரு குடும்ப மதிப்பீட்டைக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு மனிதன் திருமணமாகி, குடும்பஸ்தனாகி, மூத்தவனாகாவிடில் ‘ஒரு தலைவனாக இருக்கமுடியாது, மக்களும் அவனுக்கு செவிகொடுக்க மாட்டார்கள்’ என்று பிஷப் டெனிஸ் க்ரோடோ சொல்கிறார்.” இவ்வாறு தி டொரன்டோ ஸ்டார் அறிக்கை செய்கிறது. போப் ஜான் பால் II-ம் மற்ற வத்திக்கன் தலைவர்களும் இந்த வேண்டுகோளுக்கு கவனம் செலுத்தியபோதிலும் மாற்றம் ஒன்றும் வரப்போவதில்லை. “கனடாவுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டால் அது தகவல் தொடர்பு துறையுடைய கவனத்தின் மையமாகி, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பிற தேசங்களிலிருந்தும் வேண்டுகோள்கள் மடைதிறந்தோடும்” என்ற பயத்தை, மக்களுக்குப் பிரசங்கிப்பதற்கான வத்திக்கன் சபையின் தலைவர் கார்டினல் ஜோஸஃப் டோம்கோ வெளிப்படுத்தினார் என ஸ்டார் சொல்கிறது.
மனச்சோர்வு அதிகரிக்கிறது
“ஒன்பது நாடுகளில் மொத்தம் 43,000 பேரோடு நடத்தப்பட்ட பேட்டியை உட்படுத்தி தனித்தனியாக நடத்தப்பட்ட பன்னிரண்டு ஆராய்ச்சிகள் முன்பு நடத்தப்பட்ட அமெரிக்க ஆராய்ச்சியை உறுதிப்படுத்திற்று. உலகின் பெரும்பகுதியில் இருபதாம் நூற்றாண்டின்போது ஆழ்ந்த மனச்சோர்வின் வீதம் பேரளவில் சீராக அதிகரித்துவந்திருக்கிறது என்று இந்த ஆராய்ச்சிகள் குறித்துக்காட்டுகின்றன,” என்று கூறுகிறது தி ஹார்வர்ட் மென்டல் ஹெல்த் லெட்டர். ஆராய்ச்சியில் உட்படுத்தப்பட்டவர்கள் “1905-க்கு முன்பிலிருந்து தொடங்கி 1955-க்குப் பிறகு முடிவடையும் காலப்பகுதியில் எந்தப் பத்தாண்டுகளில் பிறந்தார்கள் என்ற அடிப்படையில் தொகுதிகளாக” பிரிக்கப்பட்டனர். அவ்வாறு செய்ததில் “அக்காலப்பகுதியின் பிற்பகுதியில் பிறந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் மனச்சோர்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது” என்று பெரும்பாலும் ஒவ்வொரு ஆராய்ச்சியும் காண்பித்தது. பெரும்பாலான ஆராய்ச்சிகளும் நூற்றாண்டு முழுவதும் ஆழ்ந்த மனச்சோர்வில் சீரான அதிகரிப்பைக் காண்பித்தன.
பிள்ளைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல்
“வளரும் உலகில் உள்ள 230 மில்லியனுக்கும் அதிகமான அல்லது 43 சதவீத பள்ளிவயதை அடையாத பிள்ளைகள் உணவின்மைக் காரணமாக ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோயின் காரணமாகவும் வளர்ச்சி குன்றிபோய் இருக்கின்றனர்,” என்று ஐநா செய்தி வெளியீடு ஒன்று கூறுகிறது. 1993-ல் ஊட்டச்சத்துக் குறைவினால் நேரடியாகவோ அல்லது அது தொற்றுநோய்களின் பாதிப்பை மோசமாக்கிவிட்டதனாலோ கணக்கிடப்பட்ட 40 லட்ச பிள்ளைகள் இறந்துபோனார்கள். இதற்குத் தீர்வு என்ன? “குழந்தைகள் அனைவருக்கும் பிறப்பிலிருந்து 4-6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படவேண்டும். அதன்பிறகு, இரண்டு வருடங்கள் வரை அல்லது அதற்குப் பிறகும்கூட பிள்ளைகளுக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும். அதேசமயம் தகுந்த முழுமையாக்குகிற உணவை போதுமானளவு கொடுக்கவேண்டும்,” என்று உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்கிறது. தாய்மார்களும் உடல்நல பராமரிப்பாளர்களும் தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி முறைகள் குறைவான வளர்ச்சியைக் கொண்டவை என்று தவறாக புரிந்துகொண்டு உரிய காலத்திற்கு முன்னமே மற்ற உணவுகளைக் கொடுக்கத் தொடங்கவேண்டாம் என்று அறிவுரை கூறப்படுகின்றனர். இது குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிப்பதாக இருக்கலாம். ஊட்டச்சத்துக் குறைவிற்கும் நோய்க்கும் இது பங்களிக்கிறது. இது முக்கியமாக அறிமுகப்படுத்தப்பட்ட உணவுகள் மாசுப்படுத்தப்பட்டிருந்தாலும் ஊட்டச்சத்தில் குறைவுபட்டிருந்தாலும் இப்படியிருக்கலாம்.
இன்றைய அடிமைத்தனம்
“எவரும் அடிமைத்தனத்திற்கோ கட்டாய உழைப்பிற்கோ உட்படுத்தப்படக்கூடாது” என்று மனித உரிமைகளின் பேரிலான பொது அறிக்கை சொல்கிறது. இருந்தாலும் கோடிக்கணக்கான ஆட்கள் அடிமைகளாக இருந்து துன்புறுகின்றனர். இன்று அடிமைத்தனத்தைப் போன்ற வேலைகளுக்கு உட்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை, “அடிமை-வியாபார காலத்தின் உச்சநிலை” என்று திகழும் 16 முதல் 18-ம் நூற்றாண்டுகளின்போது இருந்த அடிமைகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதாக யுஎன் க்ரானிக்கள் பத்திரிகை குறிப்பிட்டுக்காட்டுகிறது. இன்றைய அடிமைத்தனத்தின் அதிர்ச்சியூட்டும் ஓர் அம்சமானது, பலியாகிறவர்களில் அநேகர் பிள்ளைகளாகும். ஏழு முதல் பத்து வயதுள்ள பிள்ளைகள் தொழிற்சாலைகளில் நாள் ஒன்றுக்கு 12 முதல் 14 மணிநேரங்கள் கடுமையாக உழைக்கின்றனர். மற்றவர்கள் வீட்டு வேலைக்காரர்களாகவும் விபசாரர்களாகவும் அல்லது போர்வீரர்களாகவும் வேலைசெய்கின்றனர். “குழந்தைத் தொழிலாளிக்கு அதிக கிராக்கி இருக்கிறது. ஏனென்றால் அது செலவு குறைந்தது,” மேலும் பிள்ளைகள் “புகார் செய்வதற்கு அதிகம் பயப்படுகின்றனர்,” என்பதாக ஐநா மனித உரிமைகளின் மையம் அறிக்கை செய்கிறது. அடிமைத்தனம் ஒரு மங்கலான “நவீன உண்மை”யாக இருக்கிறது என்று ஐநா குறிப்பிடுகிறது.
தடியாய் இருப்பதற்கான சூத்திரம்
பள்ளிவயதை அடையாத பிள்ளைகள் நாளொன்றுக்கு தொலைக்காட்சி பார்க்கும் மணிநேரங்கள் பிள்ளைப்பருவத்தின் பிற்பகுதியில் இருக்கக்கூடிய உடல் கொழுப்பின் அதிகரிப்போடு நேரடியாக தொடர்புபடுத்தப்படுகிறது. இவ்வாறு பாஸ்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் மன்ரோ ப்ரக்டர் வாதாடுகிறார். டாக்டர் ப்ரக்டர் பள்ளிவயதை அடையாத 97 பிள்ளைகளை உட்படுத்திய ஒரு நான்குவருட ஆராய்ச்சியை நடத்தினார். தொடக்கத்தில் அவர்களுடைய வயது மூன்றிலிருந்து ஐந்தாக இருந்தது. பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் தினமும் தொலைக்காட்சி காணும் மணிநேரங்களைக் கண்காணித்தனர். அதேசமயம் ஆண்டுதோறும் உடல் முழுவதுமுள்ள தோல் மடிப்பின் அகலம் அளக்கப்பட்டது. கனடாவின் தி மெடிக்கல் போஸ்ட் அறிக்கை செய்தபடி “ஒவ்வொரு பிள்ளையும் தினமும் சராசரி இரண்டு மணிநேரம் தொலைக்காட்சியின் முன் செலவழித்தது. ஒரு நாளைக்கு அதற்கு அதிகம் டிவி பார்த்த ஒவ்வொரு மணிநேரத்திற்கும் முப்புரித்தசை தோலின் அகலத்தில் 0.8 மில்லிமீட்டர் [0.03 அங்குலம்] அதிகரிப்பும் மொத்த தோலின் அகலத்தில் 4.1 மில்லிமீட்டர் [0.2 அங்குலம்] அதிகரிப்பும் ஏற்பட்டது.” தொலைக்காட்சி பார்ப்பது குறைந்த சரீர செயலுக்கும் குறைந்த வளர்சிதைமாற்ற வீதங்களுக்கும் வழிநடத்துகிறது என்றும் செயல்படாதிருக்கும்போது உட்கொள்ளப்படும் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளைப் பற்றிய விளம்பரங்களைப் பிள்ளைகள் பார்க்கும்படி செய்கிறது என்றும் டாக்டர் ப்ரக்டர் முடிவுக்கு வருகிறார்.
விடுமுறைத் தீவு
“[உலக] வங்கியும் [பன்னாட்டு நிதி நிறுவனமும்] இலங்கையின் விடுமுறை நாட்களைக் குறைக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன. தற்போது 365 நாட்களில் 174 நாட்கள் விடுமுறை நாட்களாக இருக்கின்றன. இது ஒருவேளை உலக உச்சநிலையாகக்கூட இருக்கலாம்,” என்று தி இகானமிஸ்ட் சொல்லுகிறது. “ஒரு நாட்டின் மக்கள் ஏறக்குறைய வருடத்தில் பாதி நாட்கள் விடுமுறையில் இருந்தால் அந்த நாடு முன்னேறுவது எப்படி?” விடுமுறை நாட்களின் உயர்ந்த எண்ணிக்கை இலங்கையின் இனங்கள் மற்றும் மதங்களின் கலவையைப் பிரதிபலிக்கிறது. மதம்சாராத 5 விடுமுறைநாட்களுக்குக் கூடுதலாக, புத்த மதம், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் போன்ற விசுவாசத்தினருக்கு 20 மத விடுமுறை நாட்கள் இருக்கின்றன. குடிமுறை அரசுப் பணியாளர்களுக்கு வருடத்திற்கு கூடுதலாக 45 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இது பல தனியார் நிறுவனத்தால் கொடுக்கப்படும் விடுமுறை நாட்களுக்கு சமமாக இருக்கிறது. இருப்பினும் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. “விவசாயம் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருக்கிறது. இந்த விவசாயம் பயிரிடு பருவங்களில் தீவுமுழுவதிலும் பெய்யும் இரண்டு பருவமழைகளைச் சார்ந்திருக்கிறது. பருவமழை விடுமுறை எடுப்பதில்லை,” என்று தி இகானமிஸ்ட் சொல்லுகிறது.
போதையில் நடத்தல்
“குடிப்பதும் ஓட்டுவதும் ஒன்றோடொன்று ஒத்துப் போவதில்லை,” என்று விளம்பரங்கள் கூறுகின்றன. போதையில் இருக்கையில் ஓட்டுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. குடித்துவிட்டு ஓட்டுபவர்களுக்கு பேரளவு கவனம் செலுத்தப்பட்டிருக்கிறபோதிலும், குடித்தலுக்கும் நடத்தலுக்கும் கவனம் செலுத்தப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் சொல்லுகிறபடி, ஐக்கிய மாகாணங்களில் 1992-ல் 5,546 பாதசாரிகள் கார்களால் கொல்லப்பட்டனர். அந்தப் பாதசாரிகளில் மூன்றிலொரு பகுதியினருக்கும் அதிகமானோர் குடிபோதையில் இருந்தனர். வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துக்களில் அவை 14 சதவீதமாக இருந்தன. 14 வயதுக்கு மேற்பட்டவர்களில், சுமார் 36 சதவீதத்தினர், அவர்கள் ஓட்டிக்கொண்டு இருந்திருந்தார்களேயானால் குடிபோதையில் ஓட்டுவதாக சுட்டிக்காட்டப்படுவதற்கு போதுமான அளவு உயர்ந்த இரத்த-ஆல்கஹால் அளவைக் கொண்டிருந்தனர். தற்போது அத்தகைய மரணங்களைத் தவிர்ப்பது எவ்வாறு, மேலும் மிக அதிக ஆபத்திலிருப்பவர்கள் யாவர் என்று தெரியவில்லை.