உலகத்தைக் கவனித்தல்
இரத்தக் கலப்படம் பிரான்ஸில் ஆழமாகிறது
பிரான்ஸில் நடந்த இரத்த கலப்படம்பேரிலான சோதனைகள், அரசாங்க அதிகாரிகள் பிரென்ச் நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் மேலாக பொருளாதாரக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று தெளிவாக எடுத்துக் காட்டும் ஆவணங்களை சமர்ப்பித்திருக்கின்றன. பாரிஸின் இன்டர்நேஷனல் ஹெரல்டு டிரிப்யூன் சொன்னபடி, ஓர் அமெரிக்க ஆய்வகமானது இரத்தப் பொருட்களிலிருக்கிற எய்ட்ஸ் நோய்க் கிருமியைக் கண்டுபிடிப்பதற்கான இரத்தப் பரிசோதனை முறையை கண்டுபிடித்தபோது, பிரென்ச் அதிகாரிகள், பிரென்ச் சந்தையில் ஐ.மா. பொருள் விற்பனைக்கு வந்து குவியும் என்று பயந்து, “அதற்கிணையான பொருள் ஒன்றை பிரென்ச் உற்பத்தியாளர் தயாரித்து முடிப்பதற்காக அவகாசம் கொடுக்க” விற்பனைக்குத் தடை விதித்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன. இதன் விளைவாக, பிரென்ச் கம்பெனி அதன் பொருளைத் தயாரிக்க கிட்டத்தட்ட ஏழு மாத காலப்பகுதியை எடுத்தபோது, கலப்பான இரத்தமேற்றுதல்களைப் பெற்று, நூற்றுக்கணக்கான ஆட்கள் எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டனர்.
ஒரு “பிசாசு” குறைவு
ஒரு டோக்கியோ தம்பதி, புதிதாக பிறந்த தங்களுடைய குழந்தைக்கு “பிசாசு” என்று அர்த்தங்கொள்ளும் ஆக்குமா என்ற பெயரை வைத்தனர். “நீங்கள் அதை ஒரு முறை கேட்டுவிட்டீர்களென்றால், மறக்கவே மாட்டீர்கள். அது அந்தளவுக்கு ஆழப்பதிவதாக இருக்கிறது. என் பையன் வளர்ந்து வருகையில், அநேக ஆட்களைச் சந்திக்கும்படி வைக்கும் பெயராக அது இருக்கிறது,” என்று தகப்பனார் சொன்னார். உள்ளூர் அதிகாரிகள் முதலில் அந்தப் பெயரை பதிவு செய்ய சம்மதித்தனர். ஆனால் பிறகு பரிகாசத்தையும் வேறுபாட்டையும் வருவிக்கும் என்று சொல்லி, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும் பெற்றோர் உரிமைகளின் தகாப்பிரயோகம் என்றும் அதைக் களைந்தனர். கோர்ட்டுகளில் மாதக்கணக்காக போராடிய பிறகு, அந்தப் பெற்றோர் தங்கள் வாழ்க்கையை ஓட்டவும் அதிகாரப்பூர்வமாக பெயரில்லாமல் தங்கள் பையனை விடாதிருக்கவேண்டி, அடிபணிந்து, பையனுக்கு இன்னொரு பெயர் கொடுத்து பதிவுசெய்வதாக சொன்னார்கள். என்றபோதிலும், அது வீட்டில் நிலைமையை மாற்றவில்லை. “அன்றாட பெயராக நாங்கள் இன்னமும் அவனை ஆக்குமா என்றே கூப்பிடுவோம்,” என்று தகப்பனார் சொன்னார். அந்தப் பெயருக்குத்தானே குழந்தையும் பிரதிபலிக்கிறது.
கோபமும் மாரடைப்புகளும்
“கோபப்படும்போது, இருதய நோயுடையவர்கள் மாரடைப்புகளுக்கான ஆபத்தை இரண்டுக்கும் அதிகமான மடங்கு மிகைப்படுத்துகிறார்கள். அந்த ஆபத்து இரண்டு மணிநேரம் நீடித்திருக்கிறது,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கையிடுகிறது. இரத்தத்துக்கும், மிகுதியான இருதய துடிப்புக்கும் மிகுதியான உயர் இரத்த அழுத்தத்துக்கும் தமனிகள் தடிப்பதற்கும் இடையே சம்பந்தமிருப்பதை முந்தைய ஆய்வுகள் எடுத்துக்காட்டியிருந்தாலும், இந்தப் புதிய ஆய்வானது, கோபம் உடனடியாக மாரடைப்புக்கு வழிநடத்தலாம் என்பதற்கான விஞ்ஞானப்பூர்வ அத்தாட்சியை அளிப்பதில் முதலாவதாக திகழ்கிறது. உணர்ச்சிப்பூர்வ மோதல்கள் எதிர்ப்பட்டால், சாந்தமாக இருக்க முயற்சிப்பதன் மூலம் இந்த ஆபத்தைக் குறைக்கலாம் என்று இந்த ஆய்வின் முக்கிய ஆய்வாளராகிய டாக்டர் முர்ரே மிட்டல்மன் கூறினார். “மாரடைப்புகளின் ஆபத்துகளைக் குறைக்கும் ஆஸ்பிரினை எடுப்பவர்கள் கோபக்கொதிப்புகளின் பாதிப்புகளிலிருந்து பகுதியாக பாதுகாக்கப்பட்டார்கள் என்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்,” என்று அந்தக் கட்டுரை சொன்னது. ஏனென்றால், இரத்த நுண் தட்டுகள் உறைகட்டிகளாவதையும் தமனிகள் உறைகட்டியாவதையும் குறைக்கும் திறனை ஆஸ்பிரின் கொண்டிருப்பதால் அவ்வாறு சொல்லியிருப்பதற்கு சாத்தியமிருக்கிறது. ஆகையால், கோபம் இரத்த நுண் தட்டுகளைப் பாதிக்கக்கூடும் என்று டாக்டர் மிட்டல்மன் சொன்னார்.
தூக்கமும் கான்டாக்ட் லென்சுகளும் சேராது
சமீப ஆய்வின் பிரகாரம் தூங்கும்போது கான்டாக்ட் லென்சுகளைத் தவறாது அணிபவர்கள், அவ்வாறு அணியாதவர்களைவிட எட்டு மடங்குக்கும் அதிகம் கண் தொற்றுண்டாக பெரும்படியான சாத்தியம் இருக்கிறது. பத்திரமாக லென்சு-கவன சுத்தப்படுத்தி வைத்தலுங்கூட ஓர் இரவு லென்சுகளை அணிவதன் அதிகப்படியான ஆபத்திற்கு எதிராக பாதுகாக்காது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்ததாக இன்டர்நேஷனல் ஹெரல்டு டிரிப்யூன் அறிக்கை செய்கிறது. ஓர் இரவு அணிவதானது எந்தவிதமான லென்சாக இருந்தாலும், கண்ணின் வெளிப்புற வெண்படலமாகிய கார்னியாவில் கிருமிகளும் பாக்டீரியாக்களும் தொற்றும்படி செய்யும். தூங்குவதற்கு முன்பாக கான்டாக்ட் லென்சுகளைக் கழற்றி வைப்பதன் மூலம், அணிபவர்கள் கார்னியாவில் 74 சதமானம் வரை வீக்கம் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்கலாம்.
பாஷை சரிவு
100 ஆண்டுகளுக்குள்ளாக, இன்றிருக்கும் 6,000 பாஷைகளில் பாதி பாஷைகள் அழிந்துவிடும் என்று உலகின் பாஷைகள் அட்லஸ் (Atlas of the World’s Languages) முன்கணிக்கிறது. கடந்த 500 ஆண்டுகளில் சுமார் 1,000 பாஷைகள் ஏற்கெனவே மறைந்துவிட்டிருக்கின்றன. இவை அமெரிக்காக்களிலும் ஆஸ்திரேலியாவிலும் பெரும்பாலும் மறைந்துவிட்டிருக்கின்றன. பல பாஷைகள் இனிமேலும் தெளிவாக கற்றுக்கொடுக்கப்படுவது கிடையாது. 20 உள்ளூர் பாஷைகள் இருக்கிற அலாஸ்காவில், பிள்ளைகள் 2-ஐ மாத்திரமே இன்னும் கற்றுக்கொள்கிறார்கள். பாப்புவா நியூ கினீயில் 155 பாஷைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பாஷையையும் 300-க்கும் குறைவான ஆட்களே பேசுகின்றனர். அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவில் புழக்கத்திலிருந்து வரும் 200 தொன்மையான பாஷைகளில் 135-ல் ஒவ்வொரு பாஷையையும் 10-க்கும் குறைவான ஆட்களே பேசுகின்றனர். “பாஷைகள்தாமே மறைவது கிடையாது. பாஷையின் முழுமையான நடைநய மரபுகளும், பேச்சிலும் எழுத்திலும்; விசேஷ சிந்தனையும் வாழ்க்கை பாணியும் உடைய முறைகளைச் சீராக பிரதிபலிக்கும் விசேஷ இலக்கணமும் சொற்தொகுப்பு முறைகளும்; ஆயிரக்கணக்கான மனித கலாச்சாரங்களுக்கு ஆதாரக்கல்லாயிருக்கும் பாஷையும்: எல்லாமே அற்றுப்போய்விடும், கலாச்சார ரீதியில் உலகை வரம்பிடமுடியாத அளவு மோசமான நிலைமையில் விட்டுவிடும்,” என்று லண்டனின் இன்டிபென்டன்ட் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது.
சாவுக்கேதுவான பாடம்
ஏரோஃப்லாட் என்ற விமானத் தொகுதியைச் சேர்ந்த நபர் தன் பிள்ளைகளுக்கு விமானம் ஓட்டக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கையில், அந்த ஜெட் விமானமானது மார்ச்சில் சைபீரிய மலைமீது மோதி, அதிலிருந்த எல்லா 75 ஆட்களையும் காவுகொண்டதை ரஷ்ய விமான அலுவலர்கள் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர். “பைலட் தன் பிள்ளைகளுக்கு எவ்வாறு பிலேனை ஓட்டுவது என்று காட்ட விருப்பப்பட்டதால் இந்த மோதல் நிகழ்ந்தது,” என்று இடார்-டாஸ் என்ற ரஷ்ய செய்தித்துறை சொன்னது. விமானத்தின் பறக்கும் விவரங்களடங்கிய பதிவுகளை ஆராய்ந்தறிந்த மேற்கத்திய விமான அலுவலர்கள் என்ன சொன்னார்களென்றால், “பிள்ளைகளின் சத்தங்களைக் கேட்க முடிந்தது, மேலும் பிலேன் கீழே விழுந்தபோது இயக்குமிடத்தில் எந்தப் பைலட்டுகளும் இல்லை,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. “பைலட் இருக்கைகளிலிருந்த ஒரு பிள்ளையானது அல்லது அதற்கும் மேற்பட்ட பிள்ளைகள் தானியங்கி எந்திர கட்டுப்பாட்டைத் தற்செயலாக நீக்கிவிட்டதால் ஜெட்டானது உயிரைக் கொள்ளைக் கொள்ளும் விதத்தில் தலைகுப்புற இறங்கியதாக பைலட் அறையிலுள்ள பதிவுகள் நிரூபிக்கின்றன,” என்று டைம்ஸ் குறிப்பிட்டது.
சிறுபூச்சிகளைக் கட்டுப்படுத்துவது
ஆஸ்துமாவும் அலர்ஜிகளும் பிரிட்டனில் அதிகரித்து வருகின்றன என்று லண்டனின் தி டைம்ஸ் அறிக்கையிடுகிறது. காரணம்? சிறுபூச்சிகள். “ஒருக்காலும் மனித இருப்பிடங்கள் இவ்வளவு மோசமான காற்றோட்டத்தைக் கொண்டில்லை—அழுக்கான, ஈரமான, அலர்ஜிப்பொருள் படிந்த காற்றால் நிறைந்திருக்கின்றன,” என்று கேம்பிரிட்ஜ் மருத்துவ பூச்சியியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜான் மாண்டர் கூறுகிறார். சிறுபூச்சிகள் தோல் பகுதிகளில் வாழ்பவையாக, விசேஷமாய் நன்றாக காற்றாட வைக்கப்படாத படுக்கைகளின் ஈரமான சூழலில் தாராளமாக தங்கிவிடுகின்றன. தோலின் செதிள்களும் பூஞ்சணத்தோடுங்கூட உயிர்வாழும் சிறுபூச்சிகளும் செத்த சிறுபூச்சிகளும் அவற்றின் மலமும், அழுக்கடைந்து கிடக்கிற தலையணையின் எடையில் பத்திலொரு பகுதியை உள்ளடக்கும். சிறுபூச்சிகளின் மலத்தில் ஒரு புரதம் இருக்கிறது. இந்தப் புரதமானது, ஆஸ்துமா நோய்கள் தாக்குவதைத் தூண்டி, அலர்ஜியினால் உண்டாகும் மூக்கழற்சியாகிய மூக்கடைப்புக்குப் பிரதான காரணமாயிருப்பதாகவும் நம்பப்படுகிறது. அடைந்து கிடக்கும் நவீனகால வீடுகள் இந்தச் சிறுபூச்சிகளை ஒழித்துக்கட்டுவதற்கு போதுமான சுத்தமான காற்றை உள்ளே வரவிடுவது கிடையாது. ஆரோக்கியமான வாழ்வுக்கு டாக்டர் மாண்டர் என்ன பரிந்துரைக்கிறாரென்றால், முடிந்தால் தூங்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைத்து, அன்றாடம் படுக்கைகளைக் காற்றாட வைத்து, ஒழுங்காக தலையணைகளையும் மெத்தைகளையும் போர்வைகளையும் சுத்தம் செய்யுங்கள்.
சாமர்த்தியமா ஆரோக்கியமா?
“பொதுவாக, உயர் ரக போட்டி விளையாட்டுக்கள், அதன் ஆட்டக்காரருடைய சாமர்த்தியத்தை அபிவிருத்தி செய்வதிலேயே நாட்டங்கொண்டிருக்கிறது, அவர்களுடைய ஆரோக்கியத்தை முன்னேற்றுவிப்பது அபூர்வம். தன்னுடைய ஆரோக்கியத்தை முன்னேற்றுவிக்க யாருமே உடற்பயிற்சிக்காரராக வேண்டிய அவசியமில்லை,” என்று எலும்பியல் நிபுணர் விக்டர் மாட்சூடோ சொல்வதாக வேழா என்ற பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. உண்மையில், “மிதமிஞ்சி உடற்பயிற்சி செய்பவன் உடற்பயிற்சி செய்யாதவனைவிட சீக்கிரமாக சாவதுபோல தெரிகிறது,” என்று டாக்டர் மாட்சூடோ சொல்கிறார். பின்னும் அவர்: “அநேகர் இப்பொழுதும் என்ன நினைக்கிறார்களென்றால் நல்ல உடற்பயிற்சியானது வியர்வையையும் கஷ்டத்தையும் உண்டாக்குவதாய் கடினமான ஒன்றாக இருக்க வேண்டும். இது மெய்யல்ல. நல்ல உடற்பயிற்சி மிதமான செறிவோடு செய்யப்படுவதாகும். வலியையோ அசெளகரியத்தையோ பிடிப்புகளையோ உண்டாக்குவது கிடையாது. . . . உடற்பயிற்சி செய்யாமல், நல்ல உடல்நிலை பெற வேண்டி உழைக்கத் தொடங்க விருப்பமுள்ளவனுக்கு முதலில் பரிந்துரை செய்யப்படும் காரியமானது நடப்பதாகும்.” வாரத்தில் இரண்டு மூன்று முறைகள் அரை மணிநேரத்திற்கு நடக்கும் ஆள், உடற்பயிற்சி செய்யாத நபரைக் காட்டிலும் சாவதற்கான வாய்ப்பை 15 சதமானம் குறைவாகவே கொண்டிருக்கிறான். நடந்தால் சமதளத்தில் நடக்கவும், செளகரியமாக சுவாசித்து, இன்னொருவரோடு பேசவும் அனுமதிக்கிற வேகத்தில் நடக்கவும் டாக்டர் மாட்சூடோ ஆலோசனை கூறுகிறார்.
குற்றச்செயல் பலனளிக்கிறதா?
ஐக்கிய மாகாணங்களில் தொடர்-கொலையில் ஈடுபட்ட ஓர் ஆள் 17 பையன்களையும் ஆண்களையும் கொன்று அங்கதுண்டம் செய்ததாக ஒப்புக்கொண்டான். இந்தக் குற்றங்களுக்காக சிறையில் அவன் ஆயுள் தண்டனையை அனுபவிக்கிறான். ஆனால் சிறைப் பதிவுகள் என்ன காட்டுகின்றனவென்றால், இவ்வாண்டு மார்ச்சுடன், லண்டனைச் சேர்ந்த பெண்ணிடமிருந்து பெற்ற 5,920 டாலர் நன்கொடை உட்பட, பிரான்ஸ் மேலும் தென் ஆப்பிரிக்கா தொலைவிலிருந்து, உலகெங்குமுள்ள மடல் வரைபவர்களிடமிருந்து 12,000 டாலருக்கும் மேலாக பெற்றிருக்கிறான். “ஒரு பெண் [அவனுக்கு] இயேசுவைப் பற்றி சொல்லிக் கொடுக்க விரும்பியதாக கூறி, 350 டாலரையும் சில பைபிள் பிரசுரங்களையும் அனுப்பி வைத்தாள். சிறையிலிருக்கையில் ‘சிகரெட்டுகளையும் ஸ்டாம்ப்புகளையும் தபால் உறைகளையும்’ [அவன்] வாங்கிக்கொள்வதற்கு இன்னொரு பெண் 50 டாலரை அனுப்பி வைத்தாள்,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் சொல்கிறது. அவன் ஏறக்குறைய எல்லா பணத்தையும் செலவழித்தான், அவனுக்குப் பலியானவர்களின் உறவினர்கள் அவனுக்கு எதிராக தொடுத்த வழக்குகளுக்காக 80 மில்லியன் டாலருக்கும் மேலாக செலவு செய்தபோதிலும் ஒரு தம்பிடிகூட கிட்டவில்லை. சிறைக்காவலனின்படி, எந்தவொரு தில்லுமுல்லும் செய்யாமல் நிதியுதவியை வலிந்துகேட்பதிலிருந்து சிறைக் கைதிகளை எந்தச் சட்டமும் தடைசெய்வதில்லை.
சமாதான பிரயத்தனங்கள் ஏன் தோல்வியடைகின்றன
“போர்களும் போர் புரளிகளும் இருந்துகொண்டுதான் இருக்கும் என்ற கடுமையான வேதப்பூர்வ முன்கணிப்பை 1994-க்குள் உலகம் எடுத்துச்சென்ற 35 போர்களும் ஊர்ஜிதப்படுத்துகின்றன,” என்று டோரன்டோ ஸ்டார் கட்டுரை சொல்கிறது. (இந்த வாக்கியம் தவறு. உண்மையில் பார்த்தால், பைபிள் போர்கள் ஓய்ந்துபோகும் என்று முன்கணிக்கிறது. ஏசாயா 2:2-4-ஐ பாருங்கள்.) “இன்று உலகில் எழும்பும் மூன்று டஜன் போர்களும் தனி நாடுகளுக்குள்ளாகவே நடக்கும் போராட்டங்களாக இருக்கின்றன, எதுவுமே நாடுகளுக்கிடையே நடக்கும் போராட்டமல்ல.” இந்த உள்நாட்டுப் போர்கள் அதிகரிப்பது சமாதானமாக, மோதல்களைத் தீர்ப்பதற்கான உலக ஏஜென்ஸிகளின் முடியாமையை எடுத்துக்காட்டுகிறது. “ஐநா-வானது நடத்தைக்கான மட்டான தராதரங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் தன் உறுப்பின-நாடுகளை வலுக்கட்டாயப்படுத்த முடியாது என்பதை தீங்கிழைக்கப்பட்ட நாடுகள் அறிந்திருக்கிற வரை, தங்கள் கோரிக்கைகளை வற்புறுத்துவதற்காக அவை விடாது வன்முறையில் ஈடுபடும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வடநாடுகளின் பெரிய படைபலத்தை உபயோகித்து மூன்றாம் உலகிலோ வேறு இடத்திலோ நடக்கிற உள்நாட்டு அல்லது சமூக மோதல்களை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்த உதாரணங்கள் கிடையவே கிடையாது,” என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. நிச்சயமாகவே, உள்நாட்டுப் போர்களுக்கு வழிநடத்திய நிலைமைகளை முன்னேற்றுவிக்க உபயோகமாயிருந்திருக்கும் நிதிகளைப் பயன்படுத்துவதன் மூலம், நாடுகளுக்கிடையே நடக்கக்கூடிய போருக்கு தயாராக இப்பொழுதுங்கூட செலவிடப்படும் பணமானது உண்மையில் உள்நாட்டு மோதல்கள் ஏற்பட துணைகோலுகிறது.