அதிக சோர்வு அது விரைவில் உங்களைப் பாதிக்கக்கூடுமா?
ஜப்பானில் உள்ள விழித்தெழு! நிருபர்
“ஸ்வீடனில் உள்ள மேசைப் பணிப்பெண்கள், ஜப்பானில் உள்ள ஆசிரியர்கள், அமெரிக்காவில் உள்ள அஞ்சல்துறை பணியாளர்கள், ஐரோப்பாவில் உள்ள பஸ் ஓட்டுநர்கள், எல்லா இடங்களிலும் பொருட்களை உற்பத்தி செய்வதில் உட்பட்டிருக்கும் வேலைகளைச் செய்பவர்கள்—வேலையின் காரணமாக ஏற்படும் அழுத்தத்தின் அறிகுறிகளை அதிகமாக காண்பிக்கின்றனர்.”—மெய்நிச்சி டெய்லி நியூஸ்.
நொபுயாக்கி முழுவதுமாக களைப்படைந்திருந்தார். இரவும் பகலும் வேலை செய்து நான்கு மாதங்களுக்குள் அவர் 130 பணியாட்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார். ஜப்பானில் உள்ள ஒரு பெரிய சூப்பர்மார்க்கெட்டின் புதிய கிளைக்கு அவர் விற்பனை மேலாளராக இருந்தார். அழுத்தத்தின்கீழ் அவர் எடுத்த முயற்சிகளில், அவர் எதிர்பார்த்த தராதரங்களைப் பூர்த்தி செய்யத் தவறிய ஆட்களை அவர் வேலைக்கு அமர்த்தியிருந்தார். அவர்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொண்டனர்; அவர்களுடைய வேலை நிலைமையைக் குறித்து குறைகூறினர். அதற்கும் மேலாக ஒரு ஆண் பணியாள் ஒரு பெண் பணியாளோடு ஓடிப்போய் விட்டான். நொபுயாக்கிக்கு தினந்தோறும் தலைவலி இருந்து கொண்டிருந்தது. சீக்கிரத்தில் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை, தன்னையே வற்புறுத்தி வேலைக்குச் சென்ற நாட்களில் அவர் உடனடியாக வீட்டுக்கு வந்து விடுவார். இறுதியில் அவர் அணைந்து போன ஒரு தீக்குச்சியைப் போல் இருந்தார்.
முழு நேரமாக வீட்டில் வேலை செய்யும் குடும்பத் தலைவிகளும்கூட அதிக சோர்வை அனுபவிக்கின்றனர். இரண்டு வருடங்கள் தன் மூன்று பிள்ளைகளோடுகூட வீட்டில் இருந்த பிறகு, சாரா அவர்களோடு அதிக பொறுமையற்றவளாகி விட்டாள். “நான் எப்போதும் பிள்ளைகளுக்காக வேலைகளை செய்து கொண்டே இருப்பதாக உணர்ந்தேன், அந்த வேலைக்கு முடிவே இல்லை,” என்று அவள் கூறினாள். ஒரு தாய் வருமானத்துக்காக வேலையும் செய்துகொண்டு மற்றும் பிள்ளைகளை வளர்க்கும் போது அதிக சோர்வு ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது. நாற்பதுகளில் இருக்கும் பெட்டி என்ற பெண்மணி, தாய் செய்ய வேண்டிய வேலையையும், வருமானத்துக்காக வேலையையும் செய்து கொண்டிருக்கும் நிலையில் இருந்தாள், இரண்டு வேலைகளையும் சரிசமமாகவும் பரிபூரணமாகவும் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவள் எல்லாரையும் பிரியப்படுத்த முயற்சி செய்தாள்—தன் கணவன், தன் பிள்ளைகள், தன்னை வேலைக்கு அமர்த்தியவர், தன்னோடு வேலை செய்பவர்கள். அவளுடைய இரத்த அழுத்தம் அதிகரித்தது, சிறு விஷயங்களும்கூட அவளை எரிச்சலடையச் செய்தன. அவள் அதிக சோர்வினால் பாதிக்கப்பட்டாள்.
அதிக சோர்வினால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படாதவர்களும்கூட இதனால் பாதிக்கப்படக்கூடும். ஒரு தகுதிவாய்ந்த கிறிஸ்தவ ஊழியராக இருந்த ஷின்ட்சோ என்பவர் படுசுறுசுறுப்பானவராகவும் குறிக்கோள்கள் உடையவராகவும் இருந்தார். கிறிஸ்தவப் போதகர்களுக்குப் பெரும் தேவை இருந்த பிராந்தியத்தில் உதவி செய்ய அவர் சென்றார். என்றாலும் சில மாதங்களுக்குள் அவர் களைப்புற்றவராக உணர்ந்தார், அவர் நாள்முழுவதும் தன்னை தன் படுக்கையறைக்குள் வைத்து பூட்டிக்கொள்வார். வெளியே செல்வதற்கு வழி இல்லாத சுரங்கப் பாதைக்குள் இருப்பதைப் போல் அவர் உணர்ந்தார். தீர்மானங்கள் செய்வதற்கு கஷ்டப்பட்டார், மதிய உணவுக்கு என்ன உண்பது என்பது உட்பட. எதையும் செய்வதற்கு அவருக்கு விருப்பமில்லாமல் இருந்தது. அவர் அதிக சோர்வு அடைந்திருந்தார்.
அதிக சோர்வு என்றால் என்ன?
அதிக சோர்வு என்றால் என்ன? ஹெர்பர்ட் பிராய்டன்பெர்கர் என்பவரும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் மத்திப 1970-களில் இந்தப் பதத்தை உபயோகிக்க ஆரம்பித்தனர். “உணர்ச்சிகளின் பேரில் கடுஞ்சுமையை ஏற்படுத்தும் சூழ்நிலைமைகளில், ஆட்களோடு உட்பட்டிருப்பதில் விளைவடையும் ஒரு சோர்வான நிலை” என்பதை விவரிக்கும் ஒரு வார்த்தையாக அது ஆனது. மேலும், “விசேஷமாக நெடு நாட்களாக இருக்கும் அழுத்தம் அல்லது சக்தியைப் படிப்படியாக இழத்தல் ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் சரீரப்பிரகாரமான அல்லது உணர்ச்சிப்பூர்வமான சோர்வு.” (அமெரிக்கன் ஹெரிடேஜ் டிக்ஷ்னரி) என்றபோதிலும், ஆராய்ச்சியாளர்களைப் பொருத்து இந்தப் பதத்துக்குச் சிறு வித்தியாசங்கள் கொண்ட விளக்கங்கள் உள்ளன.
அதிக சோர்வு என்ற சொல்லுக்குத் தெளிவான மருத்துவ விளக்கம் இல்லாதபோதிலும், அதனால் ஏற்படும் களைப்பு, உற்சாகமின்மை, உதவியற்ற நிலை, நம்பிக்கையற்றத் தன்மை, உடல்நலம் குன்றிய நிலை போன்ற நோய்க்குறிகள் அதனால் துன்புறுவோரை அடையாளம் காட்டுகின்றன. அதனால் துன்புறும் ஒரு நபர் மிகவும் களைப்புற்றவராக உணருகிறார், சிறு சம்பவங்களைக் குறித்து எரிச்சலடைந்து விடுகிறார். எதுவும் அவரை செயல்பட தூண்டுவதில்லை. எல்லாமே சமாளிக்க முடியாத அளவுக்குப் பெரியதாய் இருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது, நம்பிக்கையிழந்த நிலையில் தன்னை சந்திக்க வரும் எவரையும் பார்த்து உதவிக்காக கேட்பார். வேலை செய்யுமிடத்திலும் வீட்டிலும் அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வீணானது போல் அவருக்குத் தோன்றும். நம்பிக்கையற்ற ஓர் உணர்வு மேலோங்கி நிற்கும். இந்த அறிகுறிகளும், இதோடு சேர்ந்து எந்த நோயும் இல்லாமலேயே உடல்நலம் குன்றிய நிலை, எந்தக் காரியத்திலும் மகிழ்ச்சியற்ற நிலை போன்றவற்றை கொண்டிருந்தால், நீங்கள் அதிக சோர்வை அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடும்.
அதிக சோர்வு வேலையையும் குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும். அதை நீங்கள் தவிர்க்க விரும்புகிறீர்கள். ஆனால் அதை நீங்கள் எப்படித் தவிர்க்கலாம்? அதைக் கண்டுபிடிக்க, அதிக சோர்வினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு யாருக்கு இருக்கிறது, ஏன் என்பதை நாம் முதலில் காணலாம்.
அதிக சோர்வின் அறிகுறிகள்
“வேலையில் அதிக சோர்வு என்பது விடுவிக்கப்படாத வேலை அழுத்தத்தினால் வருகிற பலவீனப்படுத்தும் மனம் சம்பந்தமான நிலையைக் குறிக்கிறது. இது கீழ்க்கண்டவற்றில் விளைவடைகிறது:
1. குறைவான பலம்
2. நோய் எதிர்ப்பு சக்தி குறைவுபடுதல்
3. அதிகரித்த அதிருப்தி, எதிர்மறையான மனநிலை
4. வேலைக்கு அடிக்கடி வராதிருப்பது மற்றும் வேலையில் திறமையின்மை ஆகியவற்றின் அதிகரிப்பு.
“இந்த நிலை பலவீனமாக்கக்கூடியதாக இருக்கிறது. ஏனென்றால் மற்றபடி எல்லா வகையிலும் ஆரோக்கியமாக, துடிப்பாக, தகுதிவாய்ந்து இருக்கும் தனிப்பட்ட நபர்களைப் பலவீனப்படுத்துவதற்கான, ஏன் நாசப்படுத்துவதற்கான வல்லமையையும் இது கொண்டிருக்கிறது. இதன் முக்கிய காரணம் விடுவிக்கப்படாத அழுத்தமாக இருக்கிறது. இவ்வழுத்தம் நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தொடர்ந்திருக்கக்கூடிய வகையைச் சேர்ந்ததாக இருக்கிறது.”—வேலை/அழுத்தம் இவற்றிற்கான தொடர்பு: வேலையில் அதிக சோர்வைச் சமாளிப்பது எப்படி, என்ற ராபர்ட் எல். வனிங்க மற்றும் ஜேம்ஸ் பி. ஸ்ப்ரெட்லீ என்பவர்களால் எழுதப்பட்ட ஆங்கிலப் புத்தகம்.