அதிக சோர்வு நீங்கள் எவ்வாறு சமாளிக்கமுடியும்?
அன்றாடக பிரச்சினைகள், கவலைகள் ஆகியவற்றிலிருந்து வரும் அழுத்தத்தினால் பாரமடைந்து அநேகர் தங்கள் ஏமாற்றங்களை ஒரு குறிப்பிட்ட நிலைக்குக் கொண்டுவர மதுபானங்களை அருந்துகின்றனர். இன்று தவறாக, அதிக பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் போதைப் பொருள் மதுபானம் ஆகும். வாழ்க்கையின் கடினமான மெய்ம்மைகளை எதிர்ப்படாமல் தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யும் அநேகர் மதுபானங்களைப் பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் கவலைகளைக் கையாளுவதற்கு, குறித்துக்கொடுக்கப்படும் பிரபல மருந்துகளின் பேரில் சார்ந்திருக்கின்றனர். இன்னும் சிலர் மரிஹுவானா, மெத்தம்ஃபெட்டமைன்ஸ், கோகேய்ன் போன்ற மனதை-மாற்றும் போதைப் பொருட்களை எடுத்துக் கொள்கின்றனர். வாழ்க்கையின் மெய்ம்மைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள இளம் பிள்ளைகள்கூட போதைப் பொருட்களை உபயோகிப்பதாக அறியப்பட்டுள்ளனர். அமெரிக்க இளைஞரில் 95 சதவீதத்தினர் உயர்நிலைப் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெறுவதற்கு முன்பு ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சட்டவிரோதமான பொருட்களைப் பயன்படுத்தியிருப்பர் என்று சொல்லப்படுகிறது.
தங்கள் நண்பர்களோடு கேளிக்கையில் ஈடுபடுவதன் மூலமோ உள்ளே மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டு வெளித்தோற்றத்துக்கு சந்தோஷமாக இருப்பது போல் பாசாங்கு செய்வதன் மூலமோ, அன்றாடக அழுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சி செய்பவர்களும் இருக்கின்றனர். அல்லது தவறான காரணங்களுக்காக, அவர்கள் எதிர்பாலாரின் பாசத்தையும் மென்மையையும் நாடுகின்றனர். ஆனால் அழுத்தத்தைக் கையாளுவதற்கு தப்பித்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏமாற்றத்தைத்தான் அதிகரிக்கிறது. மக்கள் தங்களுடைய சக்தி, உற்சாகம், தூண்டுவிப்பு ஆகியவற்றை புதுப்பித்துக்கொள்வதற்குப் பதிலாக, மதுபானம் அல்லது மற்ற மனதை-மாற்றும் பொருட்களால் தங்களுடைய அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யும் போது, அதிக சோர்வுக்கு வழிநடத்தும் முறையின் வேகத்தை அதிகரிக்கிறார்கள். அப்படியென்றால், உங்களுக்குள்ளே இருக்கும் சக்தி, உற்சாகம், தூண்டுவிப்பு ஆகியவை மெதுவாக அணைந்துகொண்டே போவதை நீங்கள் உணர்ந்தால் என்ன செய்யலாம்?
குணமடைவதற்கான வழி
குறிப்பிட்ட நோய்நீக்கல் முறைகளையோ மருந்துகளையோ விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை. இருப்பினும், உங்களுக்குள் அணைந்துகொண்டிருக்கும் தழல்களை மறுபடியும் தூண்டிவிட, பைபிள் நியமங்களை அடிப்படையாகக் கொண்ட சில உதவியளிக்கும் ஆலோசனைகளை அது கொடுக்கிறது. கவோ பல்கலைக்கழக மருத்துவப்பள்ளியின் இயக்குநரான டாக்டர் யுட்டாக்கா ஓனோ என்பவர் அதிக சோர்வை சமாளிப்பதற்கு “மூன்று விஷயங்களை” சிபாரிசு செய்கிறார். “அந்த ‘மூன்று விஷயங்கள்’ கட்டுப்பாடு, பேச்சுத்தொடர்பு, அறியும் ஆற்றல்,” என அவர் விவரிக்கிறார்.
உதவியற்ற நிலையில் இருப்பதைப் போன்ற உணர்ச்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால், உங்கள் உணர்ச்சிகளும் நடத்தையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக நீங்கள் உணர வேண்டும். ஏமாற்றங்கள் உங்கள் உணர்ச்சிகளில் மேலோங்கியிருந்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உங்களுக்கிருக்கும் திறனை நொறுக்கிவிடும் போது, ஒன்றுமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது போல உணருவது சுலபம். என்றாலும், வெறுமனே உட்கார்ந்து தொந்தரவூட்டும் எண்ணங்களில் மூழ்கி விடாதீர்கள். உங்கள் பிரச்சினைகளை படிப்படியாகத் தீர்க்க முயலுங்கள். (பக்கம் 8-ல் உள்ள பெட்டியைப் பார்க்கவும்.) இதைத் தள்ளிப்போட்டுக் கொண்டிராதேயுங்கள். உடன்பாடான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பிப்பதன் மூலமாகக்கூட நீங்கள் நலமாய் இருப்பதாகவும் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் உணர ஆரம்பிப்பீர்கள்.
தோல்வி உணர்ச்சிகளில் விளைவடையும் எரிச்சல்களைக் குறைக்க முயலுங்கள். உதாரணமாக, வாழ்க்கையில் ஏற்படும் அற்ப காரியங்களுக்கெல்லாம் சிலர் எரிச்சலடைந்து விடுகின்றனர். காரியங்களை ஒரு குறிப்பிட்ட வழியில் செய்ய வேண்டும் என வற்புறுத்தி, மற்றவர்கள் அவ்விதம் செய்யாதபோது எரிச்சலடைந்து விடுகின்றனர். அல்லது அவர்கள் தங்கள் சொந்த தோல்விகளினாலேயே ஏமாற்றமடைந்து விடக்கூடும். “மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்?” என்று பண்டையக்கால ஞானவான் ஒருவர் சொன்னார். (பிரசங்கி 7:16) அதிவுயர்வான தராதரங்களைக் கடைப்பிடிக்க முயன்று அதை உங்களால் அடைய முடிவதில்லை என்று தொடர்ந்து உணர்ந்து கொண்டிருப்பது அதிக சோர்வு அடைவதற்கு நிச்சயமான வழி.
பைபிளிலிருந்து கிடைக்கும் கூடுதலான உதவியளிக்கும் ஆலோசனை: “உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நட.” (மீகா 6:8) மனத்தாழ்மையாய் நடப்பது என்பது, ஒருவர் தன்னுடைய வரம்புகளை அறிந்திருப்பது அல்லது “தன்னுடைய திறமைகளைக் குறித்து மிதமான மதிப்பீட்டைக் கொண்டிருப்பது” ஆகும். வேலை செய்யுமிடத்தில் அளவுக்கு மீறிய கோரிக்கைகள் செய்யப்படுகையில், அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதை இது அர்த்தப்படுத்தக்கூடும்.
தங்கள் வரம்புகளை அறிந்திருப்பவர்கள் உதவியை வரவேற்கின்றனர். உதவியை நாடுவதே அதிக சோர்வைத் தவிர்ப்பதற்குத் திறவுகோல் என்று அதிக சோர்வை அனுபவித்த ஒரு பெண் மேலாளர் சொன்னார். இருப்பினும் “அநேகர் தங்கள் வேலையை சரியாக நிறைவேற்ற முடியாதவர்கள் என கருதப்படுவர் என்பதாக அஞ்சி உதவியைக் கேட்க தயங்குகின்றனர்” என்று மேலும் அவர் சொன்னார். வீட்டு வேலை, பள்ளி வேலை அல்லது உலகப்பிரகாரமான வேலை—அதிக சோர்வு அளிப்பதாக அச்சுறுத்தும் எந்த வேலையாயிருந்தாலும்—உங்களால் முடிந்த போதெல்லாம் வேலையை பகிர்ந்தளியுங்கள். நீங்கள் நேரடியாக எல்லாவற்றையும் மேற்பார்வையிடாமலும் எப்படி வேலைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதைக் காண நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.—யாத்திராகமம் 18:13-27-ஐ ஒப்பிடவும்.
உங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்படலாம். அதிக சோர்வு அடையும் சாத்தியத்தில் உள்ள ஒரு நபருக்கு வேலையிலிருந்து கொஞ்சம் விடுப்பு எடுத்துக்கொள்வது வியப்பூட்டும் பயன்களைத் தரக்கூடும். உங்களுடைய சூழ்நிலைமைகள் இதை அனுமதிக்காவிட்டால், “மகிழ்ச்சியாயிருப்பது எப்படி என்பதை அறிந்திருப்பது, ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும்” என்று ஆய்வாளர் ஆன் மெக்கி-கூப்பர் சொல்கிறார். எப்போதும் செய்யும் வேலையின் வேகத்துக்கு ஒரு இடைவெளி கொடுப்பது வேலைத் திறத்தை அதிகரித்து, பலன்தரத்தக்க சிந்தனையில் ஈடுபடும்படி மனதைத் தூண்டுவிக்கவும்கூடும். இராஜாவாகிய சாலொமோன் பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த ஆலோசனை இன்றும் உண்மையாய் உள்ளது: “வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக் கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.”—பிரசங்கி 4:6.
பேச்சுத்தொடர்பு கொள்ள ஆதரவளிக்கும் நண்பர்கள்
டாக்டர் ஓனோ குறிப்பிட்ட இரண்டாவது விஷயம் பேச்சுத் தொடர்பை உட்படுத்துகிறது. தீயணைப்புப் படையினர் அதிக சோர்வு அடைவது அபூர்வம் என்பதை அறிந்து கொள்வது ஆர்வத்துக்குரியதாக இருக்கிறது. இது ஏனென்றால் அவர்கள் வீரர்களாக கருதப்படுவது மட்டுமன்றி, பலமான கூட்டுறவு தோழமையால் பிணைக்கப்பட்டிருப்பதே ஆகும். சார்ந்திருப்பதற்கு ஆதரவளிக்கும் ஒரு தொகுதியைக் கொண்டிருந்தால், ஒருவர் அவர்களிடமிருந்து உதவியைப் பெறக்கூடும். இன்று எங்கேயிருந்து நீங்கள் ஆறுதலளிக்கும் ஆதரவைப் பெறக்கூடும்? அதிக சோர்வை சமாளிப்பதற்கு மருத்துவர்களுக்கான வழிகளை விவரித்து, மோட்சுக்கிஷோக்கோகன் (அதிக சோர்வு நோய்க்குறி ஒத்திசைவு) என்ற புத்தகம் சொல்கிறது: “மருத்துவர்களுக்கு அவர்களுடைய குடும்பம், விசேஷமாக அவர்களுடைய விவாகத்துணைகள் திறம்பட்ட மெய்யான உணர்ச்சிப்பூர்வ ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.” அனைவருக்குமே தனிப்பட்ட உணர்ச்சிகளை நம்பி சொல்வதற்கு ஒருவர் தேவை. இப்பேச்சுத்தொடர்பு விஷயத்தில், பைபிள் நடைமுறையான புத்திமதியை அளிக்கிறது. மணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் காதல் உணர்ச்சிமிக்க பிணைப்புகளைக் காத்துக்கொள்ளும்படி அது உற்சாகப்படுத்துகிறது. அனைவருமே திடமான, நடைமுறையான ஆலோசனைகளைத் தரக்கூடிய நண்பர்களைக் கொண்டிருக்கும்படி சொல்கிறது.—நீதிமொழிகள் 5:18, 19; 11:14.
“நெருங்கிய நண்பர்களையும் குடும்பத்தையும் கொண்ட நம்முடைய சொந்த ஆதரவளிக்கும் அமைப்பை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்,” என்று யுஎஸ்ஏ டுடே சொல்கிறது. மேலும் அது சொல்கிறது: “நம் மதசம்பந்தமான மையங்களையும் மனநல இயக்கங்களின் வள ஆதாரங்களையும் நாம் தாராளமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” மதசம்பந்தமான வள ஆதாரங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதைக் குறித்து இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள்.” (யாக்கோபு 5:14) யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில் இருக்கும் மூப்பர்களோடு பேசுவதன் மூலம், பிரச்சினைகளை உடைய கிறிஸ்தவர்கள் புத்துணர்ச்சி காணலாம். அதிக சோர்வைக் கையாளுவதில் மூப்பர்கள் நிபுணர்களாக இல்லாவிட்டாலும்கூட, அவர்கள் அளிக்கும் ஆவிக்குரிய ஆதரவு மதிப்புமிக்கதாய் இருக்கும்.
மனித ஆதரவு அமைப்பு நமக்குப் புதுபலம் அளித்தபோதிலும், அது எப்போதுமே போதுமானதாக ஒருவேளை இருக்காது. உதவியற்ற நிலை (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தின் முன்னுரையில் மார்ட்டின் இ. பி. செலிக்மென் என்பவர் மேற்கத்திய உலகில் காணப்படும் தன்னிச்சையான ஆவியும் சுய-சார்பு எண்ணமும் இன்று மனச்சோர்வு அதிகரிப்பதற்குக் காரணம் என்று குறிப்பிட்டார். வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார். “ஒருவர் தன் வாழ்க்கையில் நோக்கத்தைக் கண்டடைய அத்தியாவசியமான ஒன்று, நம்மைவிட பெரியதொன்றின் பேரில் பிணைப்பு” என்று அவர் அதற்குப் பின்பு கூறுகிறார். இன்று அநேகர் கடவுளோடு உள்ள தங்கள் உறவை முக்கியமானதாக எடுத்துக்கொள்ளவில்லையென்றாலும், “நம்மைவிட நிச்சயமாகவே பெரியவரான” படைப்பாளரோடு பேச்சுத்தொடர்பு, உதவியற்ற நிலைமையின் உணர்ச்சிகளை சமாளிக்க உங்களுக்கு உதவக்கூடும்.
பல நெருக்கடிகளை எதிர்ப்பட்ட தாவீது அரசன், தன் குடிமக்களை இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “ஜனங்களே, எக்காலத்திலும் அவரை [தேவனை] நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.” (சங்கீதம் 62:8) நம்முடைய “வாக்குக்கடங்காத பெருமூச்சுகளுக்கும்” செவிகொடுக்க தேவன் தயாராயிருக்கிறார். (ரோமர் 8:26) அவரிடம் ஊக்கமாக வேண்டுதல் செய்வது “உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும்” அதிக சோர்விற்கு எதிராக காத்துக்கொள்ளும்.—பிலிப்பியர் 4:6, 7.
உங்கள் நோக்குநிலையை மாற்றுதல்
இறுதியாக, உங்கள் நிலைமையை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள் என்பதில் மாற்றம் தேவைப்படலாம். அதிக சோர்வை சமாளிப்பதற்கு ஒரு வழியாக டாக்டர் ஓனோ கடைசியாக குறிப்பிடுவது, அறியும் ஆற்றல் அல்லது புலனுணர்வு ஆகும். அளவுக்கு மீறிய அழுத்தத்தின்கீழ் நாம் வருகையில், எல்லாவற்றையும் எதிர்மறையாக மதிப்பிட ஆரம்பித்து, நம்பிக்கையற்ற நோக்குநிலைகளில் நம்மை சிக்கவைத்துக் கொள்கிறோம். ஆயினும் நாம் மெய்ம்மையை ஒத்துக்கொள்வது அவசியம். அப்படிப்பட்ட நம்பிக்கையற்ற சிந்தனைக்கு ஆதாரம் உள்ளதா இல்லையா என்பதை ஆராயுங்கள். நீங்கள் பயப்படுவது போல் முடிவு அவ்வளவு மோசமானதாக இருக்குமா? மற்றொரு நோக்குநிலையிலிருந்து விஷயங்களை சிந்தித்துப் பாருங்கள்.
“நீங்கள் அதிக சோர்வு அடைந்திருந்தீர்கள் என்றால், ‘கெட்ட’வர்களாய் இருப்பதனால் அல்ல, ‘நல்ல’வர்களாய் இருப்பதே அதற்கு அநேகமாய் காரணமாக இருக்கக்கூடும் என்று யோசிப்பதன் மூலம் ஆரம்பிக்கலாம்,” என்று பேரன்ட்ஸ் பத்திரிகை சொல்கிறது. ஞாபகத்தில் வையுங்கள்: அதிக சோர்வு அடையும் சாத்தியம் உள்ளவர்கள் உயர்ந்த தராதரங்களைக் கொண்டிருந்து, மற்றவர்களைப் பற்றி அக்கறை உடையவர்களே. அதிக சோர்வுக்கு இலக்கான ஒரு ஆளுக்கு அதிக உதவியாயிருப்பது போற்றுதலான வார்த்தையே. ஒரு குடும்பத்தை நடத்துவதில் உட்பட்டிருக்கும் எல்லா வேலைகளையும் செய்வதற்கு கணவனும் பிள்ளைகளும் போற்றுதலை வெளிப்படுத்தி, செயலில் காண்பித்தால், தாயில் அது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு உதவி மேலாளர் வேலையில் அதிக சோர்வு அடைந்தால், போற்றுதலைத் தெரிவிக்கும் வார்த்தைகளும் அவரைத் தட்டிக்கொடுப்பதும் அவருடைய மனப்பாங்கை நல்லவிதத்தில் மாற்றக்கூடும்.
தகுதிவாய்ந்த மனைவி போற்றுதலுக்கு எப்படித் தகுதியாகிறாள் என்று பைபிள் காண்பிக்கிறது: “அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து: அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.” (நீதிமொழிகள் 31:10, 28, 29) உண்மையிலேயே “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.”—நீதிமொழிகள் 16:24.
முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த கிறிஸ்தவ மூப்பர் ஷின்ட்சோ தன் அதிக சோர்விலிருந்து கணிசமான அளவு குணமானார். அவர் மருத்துவர்களின் உதவியைப் பெற்றுக்கொண்டபோதிலும், ஷின்ட்சோவுக்கு அதிக உதவியாயிருந்தது யெகோவாவிடம் அவர் செய்த ஜெபங்கள் ஆகும். உதவிக்காக அவர் செய்த ஊக்கமான ஜெபங்களைப் பின்தொடர்ந்து, அவரோடு முதலில் கடவுளுடைய வார்த்தையைப் படித்த மூப்பரை சந்திக்க நேரிட்டது. அந்த மூப்பரும் அவரோடு சேர்ந்து மற்ற மூப்பர்களும் அவருடைய கவலைகளுக்குச் செவிகொடுப்பதன் மூலம் ஆதரவளித்தனர். நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் பத்திரிகையின் முந்தைய இதழ் ஒன்றிலிருந்து அவருடைய மனைவி எதிர்மறையான உணர்ச்சிகளை மேற்கொள்வதன் பேரில் உள்ள கட்டுரைகளை அவருக்கு வாசித்துக் காண்பித்தார்கள். (அக்டோபர் 8, 1992, ஆங்கிலம்) எல்லாவற்றையும் தானே செய்து முடிக்க முயற்சி செய்து கொண்டிருந்ததை அவர் படிப்படியாக உணர்ந்தார். அவரைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த காரியங்களின் பேரில் அவருடைய நோக்குநிலை மாற ஆரம்பித்தது. ஒரு முடிவே இல்லாத கடினமான வெறுப்பு விளைவிக்கிற நிலைமையில் தான் இருந்ததாக முதலில் உணர்ந்தபோதிலும், நம்பிக்கையும் அனைத்திலும் நன்மையே காணும் மனப்பாங்கையும் கொண்டிருப்பதற்கான காரணத்தை அதிகமதிகமாக உணர ஆரம்பித்தார்.
ஷின்ட்சோவைப் போன்று நீங்களும் அதிக சோர்வை சமாளித்து மறுபடியும் வாழ்க்கையை எதிர்ப்படக்கூடும்.
[பக்கம் 8-ன் பெட்டி]
அதிக சோர்வை தவிர்க்க பன்னிரண்டு வழிகள்
பின்வருபவை ஒரு மனநல மருத்துவ நிபுணரால் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் சிலவற்றின் பேரில் சார்ந்தவை.
1. உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், நடத்தை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்—ஜெபம் ஒரு பெரும் உதவி.
2. நீங்கள் கவலைப்பட ஆரம்பிக்கையில், பயனுள்ள, தீர்மானமுள்ள சிந்தனைக்கு வேண்டுமென்றே மாறுங்கள்.
3. கலக்கமடையும்போது, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள், உணர்ச்சிகளைத் தளர்த்துங்கள்.
4. அழுத்தம் எவ்வாறு உருவானது என்பதை புரிந்துகொள்ள அடுத்த நபரின் நோக்குநிலையிலிருந்து சூழ்நிலைமைகளைக் காண முயற்சி செய்யுங்கள்.
5. மற்றவர்களின் விரும்பத்தக்க தன்மைகளின் பேரில் உங்கள் கவனத்தை ஊன்ற வைத்து, அவர்களைப் புகழ்ந்துரையுங்கள். போலிப் புகழ்ச்சி செய்யாமல், தகுதியான போற்றுதலை தெரிவியுங்கள்.
6. எதிர்மறையான, அழிவுண்டாக்கும் சிந்தனையைக் கண்டுபிடித்து அதை அகற்றி விடுங்கள்.
7. உங்களுடைய சக்தியும் அட்டவணையும் தேவைப்படுத்தும் போது, முடியாது என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.
8. ஒவ்வொரு நாளும் ஏதாவது கொஞ்சம் உடற்பயிற்சி செய்யுங்கள்—சுறுசுறுப்பாக நடப்பது நல்லது.
9. மற்றவர்களை மரியாதையோடு நடத்துங்கள், அவர்கள் தங்களிலுள்ள விரும்பத்தக்க குணங்களை வெளிப்படுத்தும்படி நடத்துங்கள்.
10. மகிழ்ச்சியான, நல்நம்பிக்கையுள்ள மனநிலையைக் கொண்டிருங்கள்.
11. உங்கள் வேலைப் பிரச்சினைகளை வேலை செய்யுமிடத்தில் விட்டு வாருங்கள். அவற்றை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள்.
12. இன்றைக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள்—தள்ளிப் போடாதீர்கள்.
(அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் நர்ஸ்ஸிங், ஜனவரி 1992-ல் ரூத் டேலி கிரேன்ஜர் எழுதிய “உணர்ச்சிகளைக் கையாளுதல், அதிக சோர்வைச் சமாளித்தல்” என்பதிலிருந்து தெரிவுசெய்யப்பட்டது.)
[பக்கம் 8, 9-ன் படம்]
அதிக சோர்வு பெரும்பாலும் ஓய்வின்றி கடுமையாக வேலை செய்யும் நபரை பாதிக்கிறது