அதிக சோர்வு ஆபத்திலிருப்பது யார், ஏன்?
ஒரு குடும்பத்தையுடைய அலுவலக பணியாளாக நீங்கள் உங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்—அல்லது நீங்கள் ஒருவேளை இந்தச் சூழ்நிலையில் இருக்கலாம். வேலை சம்பந்தப்பட்ட தாள்கள் உங்கள் மேசையில் குவிந்து கொண்டிருக்கின்றன. தொலைபேசி தொடர்ந்து இடைவிடாமல் அலறிக்கொண்டேயிருக்கிறது, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஏறக்குறைய முடியாத காரியமாயிருக்கிறது. வேலையில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் அனைத்தையும் நீங்கள் நிறைவேற்றுகிறதில்லை என்று உங்கள் மேற்பார்வையாளர் குறைபட்டுக் கொள்கிறார். உங்கள் மகன் பள்ளியில் தகுதியற்ற விதத்தில் நடந்து கொள்கிறான். ஆசிரியர் உங்களை உடனடியாக பார்க்க வேண்டுமென்று விரும்புகிறார். உதவிக்காக உங்கள் துணைவரிடம் செய்யும் வேண்டுதல்கள் அசட்டை செய்யப்படுகின்றன. சூழ்நிலைமைகள் கட்டுப்படுத்த முடியாதது போல் தோன்றுகையில் அழுத்தம் கடுந்துன்பமாக ஆகிறது, அது அதிக சோர்வுக்கு வழிநடத்துகிறது.
அளவுக்கு மீறி வேலை செய்வதால் அதிக சோர்வு ஏற்படுகிறதா? ஆன் மெகி கூப்பர் என்ற மூளை ஆராய்ச்சியாளரின்படி, அதிக சோர்வு, “சமநிலையின்றி வாழ்வது, எடுத்துக்காட்டாக பொழுதுபோக்குக்கே இடமின்றி ஒரே வேலையாயிருக்கும் வாழ்க்கைப் பாணியின் விளைவே,” ஆகும். இருப்பினும், அளவுக்கு மீறி வேலை செய்வது மட்டும் அதற்குக் காரணமல்ல; அதே அழுத்தங்கள் மற்றும் சூழ்நிலைமைகளின்கீழ் சிலர் அதிக சோர்வு அடைகின்றனர், ஆனால் மற்றவர்கள் அவ்வாறு ஆவது கிடையாது.
அதிக சோர்வினால் தாக்கப்பட சாத்தியமுள்ளவர்கள்
ஒரு குறிப்பிட்ட நோய் சிலவகையான ஆட்களை அதிகமாக தொற்றிக்கொள்வது போல, அதிக சோர்வினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய வகையான ஆட்களும் இருக்கின்றனர். “அதிக சோர்வினால் நீங்கள் துன்புற வேண்டுமென்றால், ஏதோவொன்றைக் குறித்து நீங்கள் ஆர்வமிக்கவர்களாய் இருக்க வேண்டும்” என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூக உளநூல் பேராசிரியர் எலியட் ஏரன்சன் கூறுகிறார். ஆகையால் அதிக சோர்வு அடைவதற்கு சாத்தியமுள்ளவர்கள், உயர்ந்த குறிக்கோள்களையும் இலட்சியங்களையும் அடைவதற்கு ஆர்வமிக்கவர்களாய் இருக்கின்றனர். கம்பெனியின் சிறந்த பணியாளர்கள் தான் அதிக சோர்வினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதிக சோர்வினால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியமுள்ளவர்களின் ஆளுமைப் பண்புகளைக் குறித்து ஜப்பானிய செஞ்சிலுவைச் சங்க செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஃபுமியாக்கி இனாவ்க்கா என்பவர் மோட்சுக்கிஷோக்கோகன் (அதிக சோர்வு நோய்க்குறி ஒத்திசைவு) என்ற ஜப்பானியப் புத்தகத்தில் பின்வருமாறு எழுதினார்: “அதிக சோர்வினால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியமுள்ளவர்கள் இரக்கமுள்ளவர்களாயும், மனிதப் பண்புகளையுடையவர்களாயும், மென்மையானவர்களாயும், தங்களையே அர்ப்பணஞ்செய்கிறவர்களாயும், உயர்ந்த லட்சியவாதிகளாயும் இருப்பதற்கு பலமான மனச்சாய்வுகளை உடையவர்களாய் இருக்கின்றனர்.”
அதிக சோர்வு அடையக்கூடிய சாத்தியம் உள்ளவர்களை அறிந்து அவர்களை முன்பாகவே தவிர்ப்பதற்கு ஒரு சோதனையை உருவாக்கும்படி கேட்கப்பட்ட போது, அச்சோதனை வேலைக்கு அமர்த்தப்படும்போதே ஒரு தகுதியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு நிபுணர் சொன்னார். “கம்பெனிகள் செய்யவேண்டியது என்னவென்றால், அதிக சோர்வு அடைவதற்கு கவலைப்படாதவர்களைக் கண்டுபிடித்து, . . . பின்பு அதிக சோர்வைக் குறைப்பதற்கு அவர்கள் திட்டங்கள் போட வேண்டும்” என்று அவர் சொன்னார்.
சமூக பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் போன்ற மனிதர்கள்-உட்பட்டிருக்கும் சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் விசேஷமாக இதற்கு ஆளாகிறார்கள். அவர்கள் ஜனங்களுக்கு உதவி செய்ய ஆவலுள்ளவர்களாய் இருக்கின்றனர், மற்றவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த தங்களையே அளிக்கின்றனர். அவர்கள் தங்களுக்கென்று வைத்திருக்கும் இலக்குகளை அடையாமலிருக்கின்றனர் என்பதை உணரும்போது அவர்கள் அதிக சோர்வு அடைகின்றனர். அக்கறையுள்ள தாய்மார்களும்கூட அதே காரணத்துக்காக அதிக சோர்வு அடைகின்றனர்.
ஆட்கள் ஏன் அதிக சோர்வு அடைகின்றனர்
அதிக சோர்வுக்கு வழிநடத்தும் மூன்று காரணங்களை செவிலியர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று வெளிக்காட்டியது. அன்றாடக சச்சரவுகள் உண்டாக்கும் சோர்வு தான் முதலாவதாக குறிப்பிடப்பட்ட காரணம். உதாரணமாக, செவிலியர்களில் பெரும்பாலானோர் கனத்த உத்தரவாதங்களைத் தாங்க வேண்டியவர்களாய் இருந்தனர், நோயாளிகளைக் கவனித்துக் கொள்கையில் பிரச்சினைகளைக் கையாள வேண்டியதாய் இருந்தது, புதிய சாதனங்களைக் கையாள பழகிக்கொள்ளுதல், அதிகரித்துக்கொண்டே போகும் செலவுகளை எதிர்ப்படுதல், ஒழுங்கற்ற வாழ்க்கைப் பாணியை சகித்துக் கொள்ளுதல் போன்றவை. “இப்படிப்பட்ட அன்றாடக கவலைகள் அவர்கள் அதிக சோர்வு அடைவதற்கு மிகப் பெரிய செல்வாக்காக அமைந்தன,” என்று மோட்சுக்கிஷோக்கோகன் என்ற புத்தகம் சொல்கிறது. பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்திருந்தால் மனச்சோர்வு வெறுமனே படிப்படியாக அதிகரித்து அதிக சோர்வுக்கு வழிநடத்துகிறது.
இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட காரணம், மன சம்பந்தமான மற்றும் உணர்ச்சி சம்பந்தமான ஆதரவு இல்லாமல் இருத்தல், முழுவதுமாக நம்பி பேசுவதற்கு எவரும் இல்லாமல் இருத்தல். இவ்வாறு, மற்ற தாய்மார்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்தி வைத்துக்கொள்ளும் தாய் அதிக சோர்வு அடைவதற்கு கூடுதலான சாத்தியம் உள்ளது. மணமாகியிருக்கும் செவிலியர்களைக் காட்டிலும் மணமாகாமல் இருக்கும் செவிலியர்களுக்கு அதிக சோர்வு ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது என்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வு கண்டுபிடித்தது. இருப்பினும், கணவன் மனைவிக்கிடையே வெளிப்படையான பேச்சுத்தொடர்பு இல்லையென்றால், மணமாகியிருக்கும் நிலை அன்றாடகக் கவலைகளை அதிகரிக்கக்கூடும். எல்லாரும் வீட்டில் இருந்தாலும், ஒரு நபர் தனிமையாக உணரலாம், ஏனென்றால் அவருடைய குடும்பம் டிவி பார்ப்பதில் முழுவதுமாக மூழ்கியிருக்கிறது.
உதவியற்ற நிலைமையைக் குறித்த உணர்ச்சிகள் மூன்றாவது காரணமாய் இருந்தது. உதாரணமாக, மருத்துவர்களைக் காட்டிலும் செவிலியர்கள் உதவியற்ற நிலைமையைக் குறித்த உணர்ச்சிகளை அனுபவிப்பதற்கு அதிக சாத்தியம் உள்ளது, ஏனென்றால் காரியங்களை மாற்றுவதற்குத் தேவையான அதிகாரம் செவிலியர்களிடம் இல்லாமல் இருக்கலாம். நடுத்தர நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், தாங்கள் எடுக்கும் பெரும் முயற்சிகள் விரும்பப்படும் விளைவுகளைக் கொடுக்காவிட்டால் அதிக சோர்வு அடையக்கூடும். “ஒரு குறிப்பிடத்தக்க செயல்விளைவை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சித்து, ஆனால் அதைக் கேட்பார் எவருமில்லாமல் போய்விடும் போது ஏற்படும் ஏமாற்றத்தின் விளைவாக” அதிக சோர்வு வருகிறது என்று மனித-வளத்துறை மேலாளர் ஒருவர் சொன்னார்.
மனிதர்களில் ஏற்படும் உதவியற்ற உணர்ச்சிகள் போற்றுதலற்ற மனப்பான்மைகளில் உருவாகி, அதிக சோர்வு என்ற பலனைத் தருகிறது. வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வதில் உட்பட்டிருக்கும் வேலையின் அளவை கணவர்கள் அங்கீகரிக்கத் தவறும்போது மனைவிகள் அதிக சோர்வு அடைகின்றனர். நடுத்தர நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் நன்றாக செய்த வேலையை ஒரு அதிகாரி அசட்டை செய்து சிறு தவறுகளுக்காகக் கண்டித்தால் அவர்கள் அதிக சோர்வு அடைகின்றனர். “முக்கியமான குறிப்பு என்னவென்றால், நம்முடைய முயற்சிகள் போற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். நம்முடைய முயற்சிகள் பலனளிக்கப்படாத இடத்தில் நாம் வேலை செய்தோம் என்றால்—அது வீடாக இருந்தாலும் சரி அல்லது அலுவலகமாக இருந்தாலும் சரி—அப்போது நாம் அதிக சோர்வினால் துன்புறுவதற்கு சாத்தியம் அதிகம் உள்ளது” என்று பேரன்ட்ஸ் பத்திரிகை சொல்கிறது.
அக்கறைக்குரியவிதமாக, செவிலியர்களாக வேலை செய்பவர்களில் அதிக உயர்ந்த எண்ணிக்கையானோர் அதிக சோர்வினால் துன்புறுகின்றனர், ஆனால் தாய்மை மருத்துவர்கள் மிகவும் குறைவாகவே பாதிக்கப்படுகின்றனர். பொதுவாகச் சொல்லப் போனால், புதிய உயிர்களை உலகுக்குள் கொண்டு வருவதில் உட்பட்டிருக்கும் வேலையை ஒரு தாய்மை மருத்துவர் செய்கிறார். தாய்மார்களும் தகப்பன்மார்களும் அவர்கள் செய்யும் வேலைக்காக அவர்களுக்கு நன்றி சொல்கின்றனர். போற்றுதல் தெரிவிக்கப்படும் போது, ஆட்கள் தாங்கள் உபயோகமுள்ளவர்களாக உணருகின்றனர், செயல்பட தூண்டப்படுகின்றனர்.
அதிக சோர்வு அடைவதற்கு சாத்தியமுள்ளவர்கள் யார், ஏன் என்பதை ஒருவர் அறிந்தவுடன் அப்பிரச்சினையைக் கையாளுவது சுலபமாகி விடுகிறது. அதிக சோர்வுக்குப் பலியானவர்கள் வாழ்க்கையிடம் ஒரு சமநிலையான அணுகுமுறையைக் கொண்டிருக்க பின்வரும் கட்டுரை உதவி செய்யும்.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
பொழுதுபோக்குக்கே இடமின்றி ஒரே வேலையாயிருக்கும் வாழ்க்கைப் பாணியின் விளைவே அதிக சோர்வு