தென் அமெரிக்காவிலிருந்து அனுபவங்கள்
ஒரு மதியவேளையில், வெனிசுவேலாவிலுள்ள காரகாஸில், மெட்ரோ சுரங்க ரயிலில் சாட்சி பெண்மணி ஒருவர் தன்னருகே இருந்த பெண்ணிடம் பிரசங்கிப்பதற்கு வழிதேடிக்கொண்டிருந்தார். மனித சமுதாயம் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்றும், அது எவ்வாறு நாமும் மாற்றியமைத்துக்கொள்வதை உட்படுத்துகிறது என்றும் அந்தச் சாட்சி பேச ஆரம்பித்தார்.
அந்தப் பெண் ஒத்துக்கொண்டார்; ஆனால் இவ்வாறு சொன்னார்: “அதைத்தான் நான் என் புருஷனிடம் சொல்கிறேன், ஆனால் அவர் அறிவுகெட்டவர். அவர் எங்கள் பிள்ளைகளை பழம்பாணியில் வளர்க்க ஆசைப்படுகிறார். அவர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர்.”
தன்னை ஒரு சாட்சியாக அடையாளம் காட்டிக்கொள்ளக்கூடாது என்று அந்தப் பிரஸ்தாபி தீர்மானித்தார். அதற்குப் பதிலாக அவர் சொன்னார்: “அவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் சிறந்த மக்கள். நீங்க சொல்லுங்க, அவர் ஒரு குடிகாரரா?” “இல்லவே இல்லை!” என்று அந்தப் பெண் சொன்னதும், நம் சகோதரி பல குறிப்புகளைத் தொடர்ந்து கேட்டார்: “அப்படியென்றால், அவர் போதைமருந்துக்கு அடிமைப்பட்டவரா?” “நிச்சயமாக அவர் பல பெண்களுடன் உறவு வைத்து, வீட்டிற்கு நேரம் கழித்து வருபவராக இருப்பார்.” “பிள்ளைகளுக்குக் கெட்ட வார்த்தைகளை சொல்லிக்கொடுக்கிறாரா?” “நீங்கள் வேலை செய்து அவரைக் காப்பாற்ற வேண்டும், அவர் வீட்டில் உட்கார்ந்திருப்பார். அப்படித்தானே.” ஒவ்வொன்றிற்கும், உறுதியாக “இல்லை!” என்றும், அதோடு பெரும்பாலும் அவருடைய சிறந்த பண்புகளின் பேரிலும் குறிப்புகள் சொன்னார். அப்போது அந்தச் சாட்சி சொன்னார்: “அப்படியானால் எனக்குப் புரியவில்லை. அவரிடம் என்ன பிரச்சினை இருக்கிறதென்று?”
அந்தப் பெண் ஒருசில நிமிடங்களுக்கு யோசித்துவிட்டு, பின்னர் சொன்னார்: “மன்றத்திலுள்ள அந்தக் கூட்டங்களுக்கு, இரண்டு மணி நேரத்திற்குப் பிள்ளைகளைக் கொண்டுபோகிறார். ஆனால் அவர்களை மறுபடியும் அங்குக் கொண்டுபோகக் கூடாது என்று நான் சொல்லியிருக்கிறேன்.”
“இந்தக் கூட்டங்களில் என்ன சொல்கிறார்கள்?” என்று அந்தச் சாட்சி கேட்டார். மேலும்: “உங்கள் பிள்ளைகள் இந்தக் கூட்டங்களுக்குப் போகாமலிருக்கும்போது என்ன செய்கிறார்கள்?” அந்தப் பெண் நியாயமாக யோசிக்கும்படியாக அந்தச் சாட்சி மறுபடியும் உதவ முயன்றார்: “கடவுளைப்பற்றி கற்றுக்கொள்வதைவிட அதன் எல்லா வன்முறை, போர், கொலை, ஒழுக்கங்கெட்ட சோப் ஓப்பராக்கள் ஆகியவற்றைக் காட்டும் தொலைக்காட்சியைப் பார்ப்பது மேலானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” அந்தச் சாட்சி மேலுமாகத் தொடர்ந்தார்: “உண்மையாகச் சொன்னால், அநேக அழகான பெண்கள், தொழில் செய்யும் பெண்கள் ஒரு கணவனைச் சார்ந்து இருக்கின்றனர். எல்லா வகையான குறைகளோடும் அந்த ஆண்களை, அவர்கள் இருக்கும் வண்ணமாகவே ஏற்று அவர்களோடு வாழவேண்டியிருக்கிறது. அவர்கள் குடிகாரர்களாக, போதை மருந்துக்கு அடிமைகளாக, முறைமீறிய உறவு கொள்பவர்களாக ஆகிறார்கள்; அவர்களுக்கு எய்ட்ஸையும் மற்ற நோய்களையும் கொடுக்கிறார்கள், அந்தப் பெண்கள் துயருற்றவர்களாக இருக்கின்றனர். உங்களுக்குக் கிடைத்திருப்பவர் புனிதமானவர்; நீங்கள் அவரைப் போற்றவில்லையா? உண்மை என்னவென்றால், என்னால் உங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களுக்கு வேண்டாமென்றால் நான் அவரை வைத்துக்கொள்கிறேன்! அவ்வகையான ஒரு ஆளுக்காகத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். அவரைப்போல் ஒருவர் என்னிடம், ‘நாம் [ராஜ்ய] மன்றத்திற்கு போவோம்,’ என்று சொன்னால், நான், ‘வாங்க, போகலாம்!’ என்று சொல்வேன்; மேலும், அவர், ‘பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டுபோக வேண்டும்,’ என்று சொன்னால், நான் சந்தோஷப்படுவேன். உங்களுக்கு இருப்பதைப் போற்றுங்கள்.” அந்தப் பெண் தன்னுடைய நிறுத்தத்தில் இறங்கியபோது, புன்முறுவலுடன் அந்தச் சாட்சிக்கு நன்றி தெரிவித்தார். அந்தக் கூட்டங்களில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஆலோசனையையும் அவர்கள் பின்பற்றியிருப்பார்கள் என்று நம்புகிறோம்.
மாநாடுகளுக்குச் செல்ல திட்டமிடும்போது, யெகோவாவிடம் நம்பிக்கையுடன் செயல்படுவது ஞானமானது என்பதை பராகுவேயிலுள்ள ஒரு சகோதரியின் அனுபவம் காண்பிக்கிறது. அந்த மாநாடு, 580 கிலோமீட்டருக்கு அப்பால், தலைநகரில் நிகழவிருந்தது. நம் சகோதரிக்கு ஐந்து இளம் பிள்ளைகள் இருந்தனர்; சில வருடங்களுக்கு முன்பு அவர்களுடைய கணவர் அவர்களைக் கைவிட்டிருந்தார்; அவர்களிடம் மிகக் குறைந்த அளவு பணமே இருந்தது. இருந்தாலும், தன்னுடைய எல்லா பிள்ளைகளோடும் அங்கு செல்ல ஏதுவாயிருக்கும்படி, தன்னால் முடிந்ததைச் சேர்த்து வைக்க ஆரம்பித்தார்கள். எனினும், போவதற்கான நாள் வந்தபோது, போக்குவரத்துக்குப் போதுமான பணம்கூட தன்னிடம் இல்லை என்று கண்டார்கள். அவர்கள் என்ன செய்ய முடியும்? அது ஒரு சிறிய நகரமாக இருந்து, சிநேகப்பான்மையான விதத்தில் காரியங்கள் கையாளப்பட்டு வருவதால், அவர்களும் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளும் பேருந்து நிலையத்திற்குச் சென்றார்கள். பயணச்சீட்டுகளைக் கொடுப்பவரிடம் சென்று, தானும் தன் பிள்ளைகளும் தலைநகரம் வரையாகப் பிரயாணம் செய்ய வேண்டும் என்றும், இரண்டு பயணச்சீட்டுகளுக்குப் போதிய பணமே இருக்கிறது என்றும் கூறினார்கள். அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தரக்கூடிய விதத்தில், அவர்கள் குடும்பமாக பேருந்தில் ஏறும்படி பயணச்சீட்டு கிளார்க் அவர்களிடம் சொன்னார். பயணம் தொடங்கிய பிறகு, அவர் கட்டணத்தை வசூலிக்கையில், அவர்களுடைய ஒரு பயணச்சீட்டிற்கு மட்டுமே கட்டணத்தைப் பெற்றார். அது, முதல் வகுப்பு பேருந்தாகவும், அந்த நகரிலேயே அதிக கட்டணமுடையதாகவும் இருந்தது. அந்த வட்டார மாநாட்டில் ஆவிக்குரிய உணவைத் தவறவிடாததற்காக அந்தக் குடும்பம் எவ்வளவு நன்றியுள்ளதாய் இருந்தது!