உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 1/8 பக். 22-25
  • ரேவன்—அதை வேறுபடுத்துவது எது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ரேவன்—அதை வேறுபடுத்துவது எது?
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வேறுபடுத்தும் அம்சங்கள்
  • “கறுப்பு இடிமின்னல்” வாழுமிடமும் பறப்பதும்
  • சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் திருட்டுப் பறவைகள்
  • குரலெழுப்புவதும் கற்கும் திறமையும்
  • அதன் அழகே தனி
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
  • நம் மழைக்காடுகள் பிழைக்குமா?
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 1/8 பக். 22-25

ரேவன்—அதை வேறுபடுத்துவது எது?

கனடாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

அடர் நிறமும் கரகரப்பான சோகக் குரலும் கொண்ட இந்தப் பறவையிடமிருந்து எதை ஒருவர் எதிர்பார்க்கமுடியும்? ஏன், பறவைகளைப் பற்றியே தெரியாதவருக்கும், திடீரென்று பார்க்கும்போது, ஒரு பெரிய காகத்தைப் போன்று மட்டுமே அது தெரிகிறது. பிரகாசமான நீல நிற இறகுகளையுடைய, காக்கை இனத்தைச் சேர்ந்த பறவையான நீல நிற ஜேயைப் போல் அவ்வளவு சீக்கிரத்தில் ரேவன் கவனத்தைக் கவருவதில்லை. கிளையினைப் பற்றிக்கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய பறவையினங்களுடனோ (passerines), அல்லது பாட்டுப் பாடும் பறவையினங்களுடனோ வகைப்படுத்தப்பட்டாலும், ரேவனின் கரகரப்பான ஒலியைப் பாடலைப் போல் எண்ணுபவர் இருக்கமாட்டார். என்றபோதிலும், இந்தப் பறவையை மட்டமாய் எண்ணிவிடாதீர்கள். காதுக்கினிய பாடலைப் பாடாவிட்டாலும், பல வண்ண தோற்றத்தை அளிக்காவிட்டாலும், அவற்றையெல்லாம் பிற வழிகளில் ஈடு செய்துவிடுகிறது. ரேவன் தனித்தன்மை வாய்ந்த அழகையும் பண்புகளையும் தனக்கென்று கொண்டுள்ளது. உண்மையில், பறவையியலர்களில் பலர் ரேவனை ஒரு தனித்தொகுதியாகவே வகைப்படுத்தியுள்ளனர்.

வேறுபடுத்தும் அம்சங்கள்

சாதாரண வகை ரேவன் (கார்வஸ் கோரக்ஸ்) காகத்தின் முழுக் குடும்பத்திலேயே (கார்விடே) மிகவும் பெரியதும் உயர் ரகமும் ஆகும். சாதாரண காகத்தின் எடையைப்போல் இரண்டு மடங்குக்கும் அதிகமான எடையுள்ளதாய் இருக்கலாம். இதன் நீளம் சுமார் 60 சென்டிமீட்டர். இறக்கையை விரித்தால் இதன் நீளம் சுமார் ஒரு மீட்டர். இதன் பெரிய அலகினாலும் நீண்ட ஆப்பு வடிவ வாலினாலும் இது காகத்திலிருந்து வேறுபடுகிறது. கூர்ந்து பார்க்கும்போது, இதன் தொண்டைப் பகுதியிலிருக்கும் பரட்டை முடியை வைத்து இது ரேவன் தான் என்று தெரிந்துகொள்ளலாம். சிறகடிக்காமல் உயரே பறப்பதற்கு இது பெயர்பெற்றது. காகமோ சிறகடித்து வானில் மிதக்கிறது.

அமரும் பழக்கத்தையுடைய பறவைகள் அனைத்திலும் ரேவன் மிகப் பெரிய பறவையாக வகைப்படுத்தப்படுகிறது. ஒரு மரக்கிளையில் இந்தப் பெரிய பறவை அமர்ந்திருப்பதைக் கவனிக்கையில், அது விழுந்துவிடாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு பெரிய மரக்கிளையிலும் ஒரு சிறிய மரக்கிளையிலும் அமர்ந்திருக்கும்போது இறுகப்பிடித்துக்கொள்வதற்காக ஒவ்வொரு பாதத்தின் பிற்பகுதியிலும் ஒரு வலுவான கூரிய வளைந்த நகம் இதற்கு இருக்கிறது. என்றபோதிலும், அது இறுகப்பிடித்துக்கொள்வதில் இருக்கும் இரகசியம், இயல்பாய் அமைந்துள்ள பின்னிக்கொள்ளும் அமைப்பு. இந்தப் பறவை அமரும்போது, தசைகளும் தசைநாண்களும் தானாகவே கால்விரல்களைப் பின்னிப்பிணைத்துக் கொள்கின்றன. ரேவனுடைய வலிமையான, எல்லாவற்றுக்கும் உதவும் பாதங்களும்கூட நடப்பதற்கும் சொறிவதற்கும் பொருத்தமானவையாய் இருக்கின்றன. இவ்வாறு, உணவைத் தேடிச்செல்லும்போது, பல்வேறு வகையான நிலப்பரப்புகளிலிருந்து உணவைச் சேகரிக்கத் தகுந்தவையாய் இருக்கின்றன.

“கறுப்பு இடிமின்னல்” வாழுமிடமும் பறப்பதும்

ரேவனைப் போல வேறுபட்ட நிலப்பகுதிகளில் பரவலாய் வாழும் பறவைகள் வெகுசிலவேயாகும். அது உண்மையில் நோக்கமின்றிப் பறந்துதிரியும் இயல்புடையது. வட கோளார்த்தத்தின் பல பகுதிகளில் அதைக் காணலாம். அது வெவ்வேறு நிலப்பகுதிகளில் வாழ்கிறது; பாலைவனப் பகுதிகளில் வாழ்கிறது; கனடா மற்றும் சைபீரியாவின் ஊசியிலைக் காடுகளில் வாழ்கிறது. அங்கு உயரமான மரங்களில் குச்சிகளையும் பிற பொருட்களையும் வைத்து ஒரு சிக்கலான கூட்டைக் கட்டுகிறது; வட அமெரிக்காவிலும் ஸ்காண்டிநேவியாவிலும் கடல் பாறைகளில் வசிக்கிறது; மேலும் ஆர்க்டிக் கடல் பகுதிகளிலுள்ள தூந்திரப்பிரதேசங்களிலும் (the tundra) தீவுகளிலும் வாழ்கிறது. அது வாழுமிடம் காட்டுப் பகுதிகளாய் இருப்பது பொதுவான அம்சமாகத் தெரிகிறது. ஏனெனில் பொதுவாக ரேவன், காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.

வெவ்வேறான வாழிடங்களுக்கு உதாரணங்கள் பைபிளில் கூறப்பட்டுள்ள பிரதேசங்களில் காணப்படுகின்றன. அங்கு, இரு வகையான பெரிய கறுப்பு ரேவன்கள் வாழ்கின்றன. ஒரு வகை தெற்குப் பகுதியிலுள்ள பாலைவனத்தின் பரந்த வெளியில் அதன் கூட்டைக் கட்டுகிறது. மற்றொரு வகை வட பகுதியில் வாழ்கிறது. கறுப்பு ரேவன்கள் இடுக்கமான பள்ளத்தாக்குகளிலுள்ள பாறைகளிலிருக்கும் மூலைமுடுக்குகளுக்கிடையில் கூடுகட்டுகின்றன. கேரீத் ஆற்றுப் பள்ளத்தாக்கில் எலியா ஒளிந்திருக்கையில் அவருக்கு உணவளிக்க யெகோவாவால் ரேவன்கள் பயன்படுத்தப்பட்டன. (1 இராஜாக்கள் 17:3-6, NW) ஏதோமின் ‘வெட்டவெளியிலும் வெறுமையின் தூக்கிலும்’ ரேவன்கள் குடியிருப்பதைப் பற்றிய ஏசாயாவின் பதிவும்கூட அவற்றின் வாழிடத்தை விளக்கிக் காட்டுவதாய் இருக்கிறது.—ஏசாயா 34:11, NW.

ரேவன்கள் பிரமாதமாய்ப் பறப்பவை. எந்தவித முயற்சியுமின்றி அகலமாக வட்டவடிவில் உயர பறந்து, கீழே இருக்கும் நிலப்பகுதியில் உணவுக்காக குறிப்பாய் நோக்குவதைக் காண்பதே கொள்ளை அழகு. அவை வானவெளியில் மிக எளிதாய் வித்தைகள் காட்டுகின்றன—கர்ணம் அடிப்பதும் கொஞ்ச நேரத்திற்கு தலைகீழாய்ப் பறப்பதும்—குறிப்பாக அவை ஆணும்பெண்ணுமாய்க் கூடிக்குலவும்போது, சில சமயங்களில் வெறுமனே இன்பம் பெற அவ்வாறு செய்வதாய்த் தோன்றும். ரேவன் பறப்பது பெர்ண்ட் ஹைன்ரிக்கால் ரேவன்ஸ் இன் வின்ட்டர் என்ற புத்தகத்தில் பொருத்தமாகவே இவ்வாறு விளக்கப்படுகிறது: “வானத்தில் கறுப்பு இடிமின்னல் மின்னுவதைப் போன்று தலைகீழாய்ப் பாய்ந்து உருளுகிறது, அல்லது மெல்லிழைவாக, மிதவலாக முன்னும் பின்னுமாய் பறக்கிறது.” “அது பறப்பதில் நிகரற்றதாயும் இன்னும் பல திறமைகளைக் கொண்டதாயும் இருக்கிறது” என்று அவர் மேலும் கூறுகிறார். ரேவன் வலிமையுடன் பறப்பதனாலேயே, ஜலப்பிரளயத்தின்போது நோவா பேழைக்கு வெளியே ரேவனை முதலாவதாக அனுப்பும்படி தெரிந்துகொண்டதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.—ஆதியாகமம் 8:6, 7.

சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் திருட்டுப் பறவைகள்

ரேவன் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் பறவைகளில் ஒன்று என்பதாக இயற்கையியலர் கருதுகின்றனர். “அதன் தந்திரம் பிரசித்தி பெற்றது” என்று ஒரு தகவலர் கூறுகிறார். விசேஷமாய், உணவைப் பொறுத்தமட்டில், ரேவன் எதிர்ப்படும் சூழ்நிலைகள் என்னவாயிருந்தாலும், அதற்கேற்றவாறு மாற்றியமைத்துக்கொண்டு சவாலை சமாளிக்கிறது. ஆகவே, குறிப்பிட்ட உணவுக்கு முக்கியத்துவம் செலுத்தாமல் இருக்கும் குணம் பலனுள்ளதாய் இருக்கிறது! ரேவன் கிட்டத்தட்ட தனக்குக் கிடைக்கும் பழங்கள், விதைகள், கொட்டைகள், மீன், அழுகிய பிணம், சிறு விலங்குகள், மிச்சமீதி போன்ற எல்லாவற்றையும் தின்னும். “கடும்” பசி? இருக்கலாம். மேலும், எங்கிருந்து அதற்கு உணவு கிடைத்தாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை. வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் கீழாகிவிடும்போது, வடபகுதிகளில் தன் வாழிடத்தையுடைய ரேவன், குப்பை மூட்டைகளைக் கிண்டிக்கிளறுவதற்காக பனிக்கு அடியிலும் தோண்டுவதற்கு சளைப்பதில்லை. ரேவன்கள் நாட்கணக்கில் வேடர்களுக்கும் மீனவர்களுக்கும் பின்செல்லும். தக்க சமயத்தில் எப்படியாவது தங்களுக்கு உணவு கிடைக்கும் என்று உணர்ந்து அவ்வாறு பின்செல்லும்.

கார்விடே இனம், அல்லது காக்கை குடும்பத்தினர்கள், பேர்போன திருடர்கள். அதற்கு ரேவன்கள் விதிவிலக்கல்ல. பிற பறவைகள் அல்லது விலங்குகளிடமிருந்து உணவைத் திருடுவதையும் அவை அசிங்கமாய் எண்ணுவதில்லை. நாய்களை ஏமாற்றியிருந்திருப்பதும் கவனிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஜோடி ரேவன்கள் மாற்றிமாற்றி ஏமாற்றும்—ஒன்று, நாயின் கவனத்தைச் சிதறடிக்கும், மற்றொன்று அதன் உணவை எடுப்பதற்காகத் திடீரென தாக்கும். ஒரு தந்திரமான ரேவன் ஐஸில் மீன்பிடிக்கும் மீனவரிடமிருந்து மீனைத் திருடுவதை எஸ்கிமோ கற்பனைக் கலைப்பொருள் சித்தரித்துக்காட்டுகிறது.

ரேவன்களுக்கு ஓநாய்களுடன் ஒரு விசேஷ தொடர்பு இருக்கிறது. கொன்றுண்ணி விலங்குகளின் வகையையே அவை வழக்கமாய்ப் பின்பற்றுகின்றன. ஓநாய்கள் கொன்ற விலங்குகளை அவை உண்ணுகின்றன. ஆனால் அவ்வாறு செய்யும்போது மீண்டும் அவை கொஞ்சம் வேடிக்கையாக கோமாளித்தனம் பண்ணுவதை அனுபவிப்பதாய்த் தோன்றுகிறது. ரேவன்கள் ஓநாய்களுக்கு எதிராக சதிசெய்வதைத் தான் பார்த்திருப்பதாக ஓநாய் உயிரியலர் எல். டேவிட் மெக் குறிப்பிடுகிறார். அவர் ஒரு ரேவனைப் பற்றிய கதையைச் சொல்லுகிறார். அதாவது, ஓர் ஓநாய் ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததாம். அப்போது, ஒரு ரேவன் ஆடி ஆடி நடந்து சென்று, அதன் வாலைக் கொத்தினதாம். அந்த ஓநாய் ரேவனைப் பிடிக்க முனைந்தபோது, அந்த ரேவன் பக்கத்தில் தாவிவிட்டதாம். அந்த ஓநாய் தந்திரமாக ரேவனைப் பிடிக்க முயன்றபோது, ஓநாய் ஒரு அடி தூரம் வரும்வரை அந்தப் பறவை கிட்ட வர அனுமதிக்குமாம். கிட்ட வந்ததும், பறந்துபோய்விடுமாம். பிறகு ஓநாய்க்கு ஒருசில அடி தள்ளி மறுபடியும் தரையில் இறங்குமாம். அதே போல திரும்பவும் ஏமாற்றுமாம். ரேவன் ஓநாய்க் குட்டிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடுவது பற்றிய மற்றொரு கதையும் உண்டு. ஓநாய்க் குட்டிகள் விளையாடிக் களைத்துப்போகையில், அவை மறுபடியும் விளையாட வரும்வரையில் ரேவன் குரலெழுப்பிக்கொண்டே இருந்ததாம்.

ரேவன்கள் வணிகக் கட்டடங்களின் சரிவான மெட்டல் கூரைகளின் மேல் அமர்ந்துகொண்டிருந்ததாகவும், வழிப்போக்கர் யாராவது கீழே நடந்துசென்றால், அவர்கள் நினைக்காதபோது, அவர்கள்மீது பனிப்படிவுகள் சரிந்து விழும்படி செய்யக் காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியதாகவும் வடமேற்குப் பகுதியிலுள்ள எலோநீஃப்பிலிருந்து ஒரு ரேடியோ ஒலிபரப்பு கூறியதை கனேடியன் ஜியாக்ரஃபிக் பத்திரிகை எடுத்துக்காட்டுகிறது. கனடாவின் மேற்குக் கடலோரப் பகுதியைச் சேர்ந்த ஹைடா மக்கள் ரேவனை ஒரு மோசக்காரனாக அழைப்பதில் ஆச்சரியமில்லை!

குரலெழுப்புவதும் கற்கும் திறமையும்

ரேவன்களின் “சொற்றொகுதி” மிகவும் அதிகமானதாகவும் பரவலானதாகவும் இருக்கிறது. நன்கு கண்டறியத்தக்க, ஆழ்ந்த, ஊடுருவும் தன்மையுள்ள கரகரப்பான குரலொலியுடன்கூட—வேண்டுமென்றே தொந்தரவு செய்வதற்கான அடையாளமாய் இருப்பதாக புரிந்துகொள்ளப்படும் வகையில்—மென்மைத்தன்மை, மகிழ்ச்சி, ஆச்சரியம், பரபரப்பு, கோபம் ஆகியவற்றைக் காட்டும்படியாகவும் அது குரலெழுப்புவதாய் சொல்லப்பட்டிருக்கிறது. அவை ஒலியெழுப்பும் அளவுக்குள் இருக்கும் மற்ற பறவைகளைப் போலவும் ரேவன்களால் கத்த முடியும். விசேஷமாக, ஒரு காகத்தைப் போலவே நிஜமாக கரையும்.

எந்தளவுக்கு ரேவன்களைப் பேசுவதற்குப் பழக்குவிக்க முடியும் என்பதில் கொஞ்சம் கருத்து வேறுபாடு இருக்கிறது. என்றபோதிலும், கான்டஸ் ஸாவிஜ், பேர்ட் பிரெய்ன்ஸ் என்ற தனது புத்தகத்தில் வீட்டில் வளர்க்கப்படும் ரேவன்கள் மனித பாஷைகளைப் பேசும்படி கற்பிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாய் நிரூபிக்கிறார். கட்டுக்கதை ஒன்றில், ஆங்கில கவிஞர் எட்கர் ஆலன் போவுக்கு ஒரு ரேவன் கிடைத்திருந்ததாகவும், “நெவர்மோர் (nevermore)” என்ற வார்த்தையை அதன் சோகக் குரலில் சொல்லும்படி அவர் சிரமம் எடுத்துப் பழக்கியதாகவும் கூறப்படுகிறது. அவர், புகழ்பெற்ற தி ரேவன் என்ற கவிதையை எழுதினார். அது, “ஓர் இளைஞன் தன் ஆருயிர்த்தோழியின் மரணத்தின்பேரில் துயரப்படுவதை” விளக்குகிறது.

ரேவனின் கற்றுக்கொள்ளும் திறமையை எவரும் மறுக்க முடியாது. அறிவுத்திறனின் அடிப்படையில் பறவைகளை வகைப்படுத்தினால், ரேவனே முன்னணியில் இருப்பதாகத் தோன்றுகிறது. ரேவனுக்குத்தான் “பறவைகளிலேயே அறிவுத்திறன் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது” என்று இயற்கைச் சூழலில் பறவைகளைப் பற்றி ஆய்வு செய்யும் உயிரியலர் பெர்ண்ட் ஹைன்ரிக் குறிப்பிடுகிறார். “பரீட்சித்துப் பார்த்தால், ரேவன்களே நுண்ணறிவு உள்ளதைக் காட்டுகின்றன” என்று அவர் கூறுகிறார். ஒரு நூலில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த இறைச்சித்துண்டை எடுப்பது எப்படி என்பதை ஒரு ரேவன் ஆறு மணி நேரத்தில் கண்டுபிடித்துவிட்டது என்றும், அதே சமயத்தில் காகங்கள் 30 நாட்கள் ஆகியும் தொடர்ந்து அந்தக் கணக்கைப் போட்டுக்கொண்டிருந்தன என்றும் ஓர் ஆய்வு காட்டுகிறது. எண்ணுவதற்கும்கூட ரேவன்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் நீண்ட ஆயுளுக்கு, அவற்றின் அறிவுக்கூர்மையே காரணமாய் இருக்கக்கூடும். ஏனெனில் ரேவன்கள் இயற்கைச் சூழலில் 40 ஆண்டுகளுக்கு மேலாகவும், வீட்டுச் சூழலில் 70 ஆண்டுகள் வரையாகவும் வாழ்கின்றன. உண்மையில், ரேவனுக்கிருக்கும் திறமைகள் எதுவானாலும் அதற்கான புகழ் அதைப் படைத்தவரின் ஞானத்துக்கே உரியது.

இந்தப் பறவை மிகப் பரவலாக அறியப்பட்டுள்ளது. அதன் பிரத்தியேக பண்புகளைப் பற்றி அறிந்துள்ளவர்களால் மதிக்கப்படுகிறது. உலக முழுவதிலும் உள்ள மக்களின் புராணக்கதைகளில் அது காணப்படலாம். முற்காலத்து மற்றும் இக்காலத்து எழுத்தாளர்களால் அது புகழ் பெற்றுள்ளது. (பெட்டியைக் காண்க, பக்கம் 24.) ஆம், ரேவன் மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு பறவை. ஆனால் அதன் அழகைப் பற்றி என்ன சொல்லப்படலாம்?

அதன் அழகே தனி

‘ரேவனைப் போன்ற தலைமயிர்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? (உன்னதப்பாட்டு 5:11, NW) அதன் பளபளப்பான கறுப்பு நிற புறத்தோலும், வானவில்லில் தோன்றும் சாம்பல் கலந்த நீலநிறம் மற்றும் கருஞ்சிவப்பு நிறத் தோலும்—இறகுகளின் கீழ்ப்பகுதியில் சில சமயங்களில் பச்சைநிறம் இலேசாகத் தெரிவதும்—“ரேவன்” என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தத்தைக் கொடுக்கிறது. கவர்ச்சியூட்டும் உருவத்துடனும் பளபளப்பான கறுப்புத் தோகையுடனும் இருக்கும் ரேவன், வெட்டாந்தரையான பாலைவன வீட்டுக்கு முரண்படும் வகையில், உயரப் பறப்பதைக் கற்பனை செய்துபாருங்கள். அல்லது ஒளிவீசும் ஜெட் போன்ற கறுப்புநிறப் பறவைக்கும் புதிதாய் பெய்த, சுத்தமான வெள்ளைநிறப் பனிக்கும் இடையே இருக்கும் முரண்பாட்டைக் கற்பனை செய்துபாருங்கள். கலைஞர்கள் ரேவனின் அழகால் கொள்ளைகொள்ளப்பட்டுள்ளனர். ராபர்ட் பேட்மேன் என்ற கலைஞர் இவ்வாறு நினைவுகூருகிறார்: “யெலஸ்டோன் பூங்காவின் ஆச்சரியமூட்டும் பனிச்சரிவுகளிடம் கவரப்பட்டேன். மிகப் பிரகாசமான இயற்கை நிலக்காட்சியும் ரேவனின் வலிமையான உருவமும் சேர்ந்து என்னைக் கவர்ந்துவிட்டன.”

உண்மையிலேயே, அழகிலும், வரலாற்றிலும், வாழிடத்திலும், பறப்பதிலும், தந்திரத்திலும், திடத்தன்மையிலும் ரேவனே தனித்தன்மை வாய்ந்த பறவையாகும் என்று சொல்லப்படலாம்.

[பக்கம் 24-ன் பெட்டி]

ரேவன், புராணங்களிலும் இலக்கியத்திலும்

புராணங்கள்:

சீன, எகிப்திய, கிரேக்க, செமிட்டிக், மற்றும் சைபீரிய புராணங்கள், ரேவனை புயல்கள் அல்லது மோசமான காலநிலைகளை முன்குறிப்பவையாக சித்தரித்துக் காட்டுகின்றன. ஒருவேளை அப்படிப்பட்ட புராணங்கள் நோவாவையும் ஜலப்பிரளயத்தையும் அவற்றின் ஆதாரமாகக் கொண்டிருந்திருக்கலாம்.

சைபீரிய புராணங்களில் ரேவன் உயிரையும் படைப்பையும் குறிக்கிறது. மேலும் வட அமெரிக்கப் பழங்குடியினருக்கு படைப்பின் கடவுளாய் இருக்கிறது.

ஆப்பிரிக்க, ஆசிய, மற்றும் ஐரோப்பிய புராணங்களில் வரவிருக்கும் மரணத்தை ரேவன் முன்குறிக்கிறது.

இலக்கியம்:

பைபிளில் குறிப்பாக பெயரிடப்பட்டுள்ள முதல் பறவை ரேவன் என்ற வகையில் அது தனிச்சிறப்பு வாய்ந்தது.—ஆதியாகமம் 8:7.

ஷேக்ஸ்பியர் படைத்த இலக்கியங்களில், ரேவன்கள் கெட்டதையும் தீங்கானதையும் குறிக்கும் பறவையாக முதன்மையாய்ச் சித்தரிக்கப்படுகின்றன (ஜூலியஸ் சீஸர், மக்பத், ஒதெல்லோ), ஆனால் கைவிடப்பட்ட சிறார்களுக்கு உணவையளிக்கும் நன்மை செய்பவையாகவும் சித்தரிக்கப்படுகின்றன.—டைட்டஸ் அண்ட்ரோனிகஸ், தி வின்ட்டர்ஸ் டேல்.

சால்ஸ் டிக்கன்ஸ், பார்னபீ ரட்ஜ்-ல் ரேவனை வேடிக்கைப் பறவையாக சித்தரித்தார்.

தி ரேவன் என்ற தன் கவிதையில், எட்கர் ஆலன் போ ரேவனை காதல் தோல்வி மற்றும் ஏமாற்றத்துடன் சம்பந்தப்படுத்துகிறார்.

[பக்கம் 25-ன் பெட்டி]

கற்றுக்கொள்ளும் பாடம்

ரேவனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. கடவுளுடைய சொந்தக் குமாரனே இவ்வாறு சொன்னார்: “காகங்களைக் [“ரேவன்கள்,” NW] கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்.” (லூக்கா 12:24) அதன் வீடு பெரும்பாலும் பாழான வெளிகளில் இருப்பதால், ஒரு பரந்தளவான பகுதிகளில் அவை உணவைத் தேடி அலைய வேண்டும். வாழ்நாள் முழுவதற்குமாக ஒரே ஒரு துணையை ரேவன்கள் தெரிந்தெடுக்கின்றன. அவை பொறுப்புள்ள பெற்றோர்கள். கூட்டிலிருக்கையில், பசியாயிருக்கும் இளம்பறவைகள் எழுப்பும் கரகரப்பான குரலின் அழுகையை நிறுத்துவதற்காக அவற்றிற்குத் தொடர்ந்து உணவளிக்க வேண்டும். படைப்பில் பிரதிபலிக்கப்பட்டுள்ள ஞானத்தைப் பற்றி யோபுவுக்குப் பாடம் புகட்டும்போது, ரேவனை ஓர் உதாரணமாக யெகோவா உட்படுத்தியுள்ளார். (யோபு 38:41, NW) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி அசுத்தமான பறவையாகக் குறிப்பிடப்பட்டிருந்த ரேவன்களுக்குத் தேவையானவற்றைக் கடவுள் அளித்துவருவதால், அவரை நம்பினோரை அவர் மறக்கமாட்டார் என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்