எமது வாசகரிடமிருந்து
பாம்புக்கடிகள் தொழில்ரீதியில் ஊர்வன நிபுணனாய் இருக்கும் நான், பாம்புகளைப் பராமரிக்கிறேன், அவற்றைக் கையாளுகிறேன், அவற்றின் விஷத்தையும் எடுக்கிறேன்; இவைதான் என் பொறுப்பு. “நாகப்பாம்பை நீங்கள் சந்திக்க விரும்புவீர்களா?” (மார்ச் 22, 1996), “ஹாபூ—அஞ்சி ஒதுங்கவேண்டிய ஒரு பாம்பு” (ஜூலை 8, 1996), “ஆபத்து! நான் நச்சுள்ளவன்” (ஆகஸ்ட் 22, 1996) ஆகிய கட்டுரைகள் அனைத்தும், யெகோவாவின் சிருஷ்டிப்பிற்கு போற்றுதலைத் தெரிவித்தன. ஆனாலும், கட்டும்-பட்டைகள் (tourniquets) பாம்புக்கடிக்கு சிபாரிசு செய்யப்படுவதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அநேகர் அதை சரியாக பயன்படுத்தத் தவறுகின்றனர், இதனால் சிலர் தங்கள் உடலுறுப்புக்களையே இழக்க நேரிட்டிருக்கிறது. பிரெஷர் பாண்டேஜைப் பயன்படுத்தி, கணுக்காலிலோ மணிக்கட்டிலோ சுளுக்கு ஏற்படும்போது எந்தளவு இறுக்கமாக கட்டுவோமோ அந்தளவு இறுக்கமாக முழு உறுப்பையும் கட்டுவதை நான் பலமாக சிபாரிசுசெய்கிறேன். கடிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி விஷம் பரவியிருந்தாலும், இரத்தவோட்டம் தொடர்ந்து சீராயிருக்கிறது, இவ்வாறு உறுப்பும் “உயிருடன்” காக்கப்படுகிறது.
பி. ஆர்., இங்கிலாந்து
சமீபத்தில் வெளியாகியுள்ள அநேக மருத்துவ பாடப்புத்தகங்கள் இந்தக் குறிப்பை ஒத்துக்கொள்ளுகின்றன; ஆகவே இதைத் தெளிவாக்கியதற்காக வாசகருக்கு எங்கள் நன்றி.—ED.
ரேவன் “ரேவன்—அதை வேறுபடுத்துவது எது?” (ஜனவரி 8, 1997) என்ற கட்டுரை வெளியாகிய சமயத்தில் நான் சுகவீனமாக இருந்தேன். வேறெதுவுமே என்னை சந்தோஷப்படுத்தியிருக்க முடியாது. ஆனால் ரேவனின் தந்திரப் புத்தி என்னை சிரிக்க வைத்தது. அதன்பின், விழித்தெழு! கட்டுரைகளைப் பயன்படுத்தி பறவைகளைப் பற்றி ஒரு ஸ்கூல் ரிப்போர்ட் தயாரித்தேன். அதற்கு மிக அதிக மதிப்பெண்களும் பெற்றேன்!
ஜே. பி., ஸ்லோவாகியா
கற்பதில் குறைபாடுகள் “கற்பதில் குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு உதவி” (பிப்ரவரி 22, 1997) என்ற தொடர் கட்டுரைகளுக்காக நன்றி. நான் ஒரு தனியார் பள்ளியை நடத்துகிறேன், அங்குள்ள ஆசிரியர்களுக்காக சில நகல்களை எடுத்திருக்கிறேன். உங்கள் பத்திரிகையிலுள்ள தகவலுக்கு ஆதாரமான சில செய்திமடல்களையும் நான் கண்டுள்ளேன். இந்த விஷயங்களில் உங்கள் சமநிலையான அணுகுமுறைக்கு என் நன்றி.
ஈ. ஜி., ஹாண்டுராஸ்
ADD-யால் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளுக்காகவும் முதியோருக்காகவும் மும்முரமாய் சேவைசெய்யும், மிகப் பெரிய தேசிய தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நான் பணியாற்றுகிறேன். கவனப் பற்றாக்குறை மிகை-இயக்க கோளாறு (ADHD), கவனப் பற்றாக்குறை கோளாறு (ADD) ஆகியவற்றின் பேரிலான தேவைக்கேற்ற கட்டுரைகளுக்காக உங்களை பாராட்டியே ஆகவேண்டும். இவை பலவீனத்தை உண்டாக்கும் கோளாறுகள்; அடிக்கடி தவறாகவும் புரிந்துகொள்ளப்படுகின்றன. உதவியை நாடும் அநேகர், சரியான கண்டுபிடிப்பு முறையாலும் பலனளிப்பதாய் நிரூபிக்கப்பட்டிருக்கும் சிகிச்சைகளாலும் இப்போது பலன்பெறுகிறார்கள் என நீங்கள் ஒத்துக்கொண்டிருப்பதை நாங்கள் போற்றுகிறோம். அன்பையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றோர் காட்டவேண்டுமென நீங்கள் வலியுறுத்தியிருந்ததும் ஒரு முக்கிய விஷயத்தை உணர்த்துகிறது.
எல். ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
என் மகன் ADHD-யால் பாதிக்கப்பட்டிருக்கிறான்; அவன் வெறுமனே தொல்லைப்படுத்தும் ஒரு பையன் அல்ல என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது எனக்கு மிகவும் கடினமாய் இருந்திருக்கிறது. தயவற்ற பேச்சுக்களை அதிகம் கேட்கவேண்டியதாய் இருந்திருக்கிறது; உதாரணத்திற்கு, “ஏன்தான் அவனை கண்டிக்காமல் இருக்கிறார்களோ” என சொல்லியிருக்கின்றனர். அவனை கண்டிக்க நான் எவ்வளவோ காலம் முயன்றிருப்பதால் அப்படிப்பட்ட பேச்சுக்கள் அதிகம் புண்படுத்துகின்றன. இந்தக் கோளாறைக் குறித்து நீங்கள் அளித்திருக்கும் விளக்கம், உண்மையிலேயே பிரச்சினை இருக்கிறது என்றும் தாங்கள் உற்சாகமளிக்க முயலலாம் என்றும் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவும் என நம்புகிறேன்.
எம். டி., ஐக்கிய மாகாணங்கள்
கற்பதில் குறைபாடுள்ள ஒரு பிள்ளையின் பெற்றோராக, இந்தப் பத்திரிகையை நாங்கள் எந்தளவு போற்றியிருப்போம் என்பதை உங்களால் கற்பனை மாத்திரமே செய்ய முடியும். இது எவ்வாறு பெற்றோரை பாதிக்கிறது என்றும் புண்படுத்தும் பேச்சைக் கேட்கவேண்டியது மட்டுமல்லாமல், ஏற்கெனவே எக்கச்சக்கமான பாரத்தைச் சுமக்கவேண்டியிருக்கிறது என்றும் நீங்கள் குறிப்பிட்டதை நாங்கள் விசேஷமாக மதிக்கிறோம்.
ஜே. சி. மற்றும் பி. சி., கனடா
கடவுளது நண்பர் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் எப்படி கடவுளுடைய நண்பராக முடியும்?” (பிப்ரவரி 22, 1997) என்ற கட்டுரைக்காக மிக்க நன்றி. அது எனக்கு அதிக உதவியளித்தது. இப்போது எனக்கு திருப்தியாக இருக்கிறது; ஏனெனில் யெகோவா என் நண்பர் என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன்! இந்த நட்பை எவ்வாறு காத்துக்கொள்ளலாம் என்பதன் பேரிலான கட்டுரைக்காக காத்திருக்க எனக்கு பொறுமையில்லை. a
டி. ஈ., இத்தாலி
[அடிக்குறிப்பு]
a மே 22, 1997, விழித்தெழு! பத்திரிகையைக் காண்க.