தாவரங்கள் Vs. தூய்மைக்கேடு
மாசுபடுத்தப்பட்ட நிலத்திலிருந்தும் நீரிலிருந்தும் மாசுப்பொருட்களை நீக்குவது சாமானியமல்ல. அது நீண்ட காலமெடுக்கும் வேலை, செலவுபிடிக்கும் வேலை, கடினமான ஒரு வேலையும்கூட. ஆனால், சாதாரண தாவரங்கள் இந்த வேலை அனைத்தையும் தாமாகவே செய்வதில் பெரும் கில்லாடிகள்.
பழைய வெடிமருந்து இடங்களை சுத்தப்படுத்துவதற்கும் நிலத்தை பண்படுத்தப்பட்ட நிலைக்கு கொண்டுவருவதற்கும் நீர்த்தாவரங்களையும் (pondweed) நீல மலர்ப் பசுங்கொடிகளையும் (periwinkle) பயன்படுத்துவதைப் பற்றி விஞ்ஞானிகள் யோசித்துவருகின்றனர். நோய்நுண்மம் நீக்கப்பட்ட கிளி இறகு என்ற செடிவகையும் [Myriophyllum aquaticum] நீல மலர்ப் பசுங்கொடிகளும் [Catharanthus roseus] TNT-ஐ மிக நன்றாக நீக்கிவிட்டதாக பரிசோதனைகள் காண்பிக்கின்றன. ஒரு வாரத்திற்குள் தாவரங்களின் திசுக்களில் வெடிமருந்துக்கான எந்தத் தடயமும் இல்லை, அவற்றை எரிக்கும்போதும் வெடிக்கவில்லை! ஒரு வகை பீட்ரூட் செல்களும் அதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருட்களும் நைட்ரோகிளிசரினை ஈர்த்துக்கொள்ளவும் அதை தரங்குறைக்கவும் முடியும் என மற்ற ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
கதிரியக்கத்தால் மிகவும் மாசுபடுத்தப்பட்ட தண்ணீரைப் பற்றியென்ன? சூரியகாந்தி பூக்கள் உதவியளிப்பதாக தெரிகிறது. ஒஹையோவில் இருக்கும் உபயோகத்தில் இல்லாத யுரேனிய தொழிற்சாலையில் உள்ள மாசுபடுத்தப்பட்ட கழிவுநீரை சுத்தப்படுத்த ஆறு வாரங்கள் வளர்க்கப்பட்ட சூரியகாந்தி பயன்படுத்தப்பட்டது. விளைவு? ஒரு லிட்டருக்கு சராசரியாக 200 மைக்ரோ கிராம் என்ற அளவிலிருந்து ஒரு லிட்டருக்கு 20 மைக்ரோ கிராம் என்ற பாதுகாப்பு அளவுக்கும் கீழான அளவுக்கு யுரேனிய மாசுபடுதல் குறைந்துவிட்டது. பத்து நாட்களுக்குள் கதிரியக்கத் தன்மையுள்ள 95 சதவீத ஸ்ட்ரோன்டியத்தையும் செஸியத்தையும் சூரியகாந்தி உறுஞ்சிக்கொண்டதாக கீவ் என்ற இடத்திற்கு அருகிலுள்ள செர்னோபில் ரியாக்டரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் காண்பித்தன!
தண்ணீர் தடங்களை பூச்சுக்கொல்லிகளாலும் களைக்கொல்லிகளாலும் மாசுபடுத்துவதைத் தவிர்ப்பதற்கு விவசாயிகள் மஞ்சள் ஐரிஸையும் [Iris pseudacorus] பல்ரஷையும் [Typha latifolia] விரைவில் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். மாசுப்பொருட்களை முறியடித்து தண்ணீரை சுத்திகரிக்கும் தாவரங்களின் வேர் அமைப்பு முறைகளில் உள்ள நோய்நுண்மங்களால் முக்கியமாக இந்தச் செயல்முறை சாதிக்கப்படுகிறது.
பூமி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் அற்புத திறமையை மேற்குறிப்பிடப்பட்ட உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.