ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
எதிர்ப்பின் மத்தியிலும் நற்செய்தி சீப்புருவில் செழிக்கிறது
அப்போஸ்தலனாகிய பவுல் ராஜ்யத்தின் நற்செய்தியை சீப்புருவில் பிரசங்கித்தான். (அப்போஸ்தலர் 13:4–12) அது பொ.ச. 47–48 ஆக இருந்தது. இன்று நற்செய்தி இந்த அழகிய தீவில் 1,154 யெகோவாவின் சாட்சிகளால் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ஞாபகார்த்த ஆசரிப்புக்கு 2,570 பேர் வந்திருந்தார்கள். இது தீவில் இன்னும் அநேக நேர்மையான இருதயமுள்ளவர்களும் கடவுள் பயமுள்ள ஆட்களும் இருப்பதைக் காண்பிக்கிறது. ஆனால் அநேகர் யெகோவாவின் சாட்சிகள் அளித்துவரும் சமாதான பைபிள் செய்தியை வரவேற்றபோதிலும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் குருவர்க்கம், இயேசுவின் நாளிலிருந்த யூதகுருமாரைப் போலவே வேலையை எதிர்த்துவருகிறார்கள். (யோவான் 15:20) சீப்புரு கிளைக்காரியாலயம் இவ்விதமாக எழுதுகிறது: “முன்னொருபோதும் இல்லாத வகையில், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச், நம்முடைய பிரசங்க வேலையைக் கலைக்க அதன் தீர்மானத்தை காண்பித்துவருகிறது.” குருமார் எவ்விதமாகவாவது சகோதரர்களை அவர்களுடைய வீட்டுக்கு வீடு ஊழியத்தில் தொந்தரவு செய்து அவர்களை ஒரு தர்க்கத்தில் உட்படுத்த, அவர்களை கோபமூட்ட முயற்சி செய்கிறார்கள் என்பதை அறிக்கை விவரிக்கிறது. பின்னர் அவர்கள் இவர்கள் அமளியை உண்டுபண்ணுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் சகோதரர்கள் கோபமூட்டப்படாதவர்களாக விலகிக்கொள்கிறார்கள்.
ஆம், பின்வரும் அனுபவம் காண்பிக்கிறபடியே குருவர்க்க எதிர்ப்பு அநேகமாக அவர்களையே வந்து தாக்குகிறது: “ஒரு சில மாதங்களுக்கு முன்பாக ஒரு பெண் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். சமீபத்தில் அவளுடைய கணவனும் அதில் சேர்ந்துகொண்டார். பின்னர் இறையியல் வல்லுநர் ஒருவர் இவர்கள் பைபிள் படிப்பதை நிறுத்திவிடச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தத் தம்பதியை வந்து சந்தித்தார். இறையியல் வல்லுநர் திரித்துவத்தை அவர்களுக்கு விளக்க முயற்சி செய்தார். சிறிது நேரத்துக்குப் பின் கணவன் இடையில் குறுக்கிட்டு: ‘நீங்கள் சொல்லுகிறபடி இப்பொழுது சரீர உருவில் பரலோகத்திலிருக்கும் இயேசு அதேசமயத்தில் எவ்விதமாக ஆவி ரூபத்திலிருக்கும் கடவுளோடு ஒன்றாக இருக்க முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று சொன்னார். இறையியல் வல்லுநரின் பதில்: ‘ஆம், எல்லாவற்றையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதில்லை.’ அக்கறையுள்ள நபர் சொன்னார்: ‘ஆனால் இயேசு கடவுளின் குமாரன், கடவுள் அல்ல என்பதை நான் புரிந்து கொள்கிறேன். திரித்துவத்தைப் பற்றி வேறு எதையும் நான் கேட்க விரும்பவில்லை.’ இதைக் கேட்ட இறையியல் வல்லுநர் எழுந்து நின்று கோபமாக சொன்னார்: ‘உங்கள் பைபிள் படிப்பில் அதிகமாக முன்னேறிவிட்டீர்கள். உங்களை மாற்ற முடியாது.’”
இப்பொழுது மனைவி எல்லாக் கூட்டங்களிலும் ஆஜராயிருக்கிறாள். “யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்” மாவட்ட மாநாட்டில் அவள் முழுக்காட்டப்பட்டாள். கணவன் தொடர்ந்து படித்து வருகிறார். சில கூட்டங்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்.
“இவ்விதமாக அவர்கள் முயற்சி செய்தபோதிலும், குருவர்க்கம் தங்கள் இலக்கை அடையாமலே இருக்கிறார்கள்” என்பதாக சீப்புரு கிளைக்காரியாலயத்திலிருந்து வரும் அறிக்கை குறிப்பிடுகிறது. “மாறாக, முன்பிருந்ததைவிட இப்பொழுது அதிகமான அக்கறையுள்ள ஆட்கள் கூட்டங்களுக்கு வருவதை நாங்கள் கவனிக்கிறோம். அதே சமயத்தில் சகோதரர்கள் நேர்மையான இருதயமுள்ள ஆட்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவருவதற்கு அதிக தீர்மானமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.” எரேமியா 1:19-ல் (NW) யெகோவா வாக்களித்த விதமாகவே அவர் தம்முடைய உண்மையுள்ளவர்களை ஆதரித்து வருகிறார்: “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.” (w88 10/1)