ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
அவருடைய ஆன்மீக பசி திருப்தி செய்யப்பட்டது
மத்தியதரைக் கடலில் வடகிழக்கு கோடியில் உள்ள தீவுதான் சைப்ரஸ். பைபிள் காலங்களில், தாமிரத்துக்கும் சிறந்த மரக்கட்டைகளுக்கும் சைப்ரஸ் புகழ்பெற்றது. முதல் மிஷனரி பயணத்தின்போது பவுலும் பர்னபாவும் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அங்கே அறிவித்தார்கள். (அப்போஸ்தலர் 13:4-12) இன்றும் சைப்ரஸ் வாசிகளின் வாழ்க்கையில் நற்செய்தி நல்ல பலனை தருகிறது. சுமார் நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதுடைய லூக்காஸ் என்பவருடைய விஷயத்திலும் இதுவே உண்மை. அவர் இவ்வாறு சொல்கிறார்:
“கால்நடை பண்ணையில், ஏழு பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தேன். வாசிப்பதென்றால் சிறுபிராயத்திலிருந்தே எனக்கு ரொம்ப இஷ்டம். பாக்கெட் சைஸில் இருக்கும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்தான் எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். பத்து வயது இருக்கும்போது, நானும் என்னுடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து சிறிய பைபிள் படிப்பு தொகுதி ஒன்றை ஆரம்பித்தோம். ஆனால் அது அதிக நாள் தொடரவில்லை, ஏனென்றால் அந்த கிராமத்திலுள்ள பெரியவர்கள் சிலர் எங்களை மதபேதவாதிகள் என அழைத்தார்கள்.
“பிற்பாடு, ஐக்கிய மாகாணங்களில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தபோது, பல்வேறு மதப் பின்னணியைச் சேர்ந்தவர்களை சந்தித்தேன். அது, ஆன்மீக விஷயங்கள்மீது என்னுடைய ஆசையைத் தூண்டியது. பல்வேறு மதங்களைப் பற்றி ஆராய்வதில் பல்கலைக்கழக நூல்நிலையத்தில் பல நாட்களை செலவிட்டேன். பல சர்ச்சுகளுக்கும் சென்றுவந்தேன், ஆனால் எல்லா முயற்சிகள் செய்தும் என்னுடைய ஆன்மீக பசி தீரவில்லை.
“என்னுடைய படிப்பை முடித்தப்பிறகு, சைப்ரஸுக்குத் திரும்பி வந்து, மருத்துவ ஆய்வுக்கூடம் ஒன்றில் இயக்குநராக வேலை பார்த்தேன். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகிய ஆன்டோனீஸ் என்ற வயதான நபர் அடிக்கடி நான் வேலைபார்க்கும் இடத்திற்கு வந்து என்னை சந்திப்பார். ஆனால், அவர் வருவது கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் கண்ணில் பட்டது.
“சீக்கிரத்திலேயே பாதிரியார் ஒருவர் என்னை சந்தித்து யெகோவாவின் சாட்சிகளுடன் பேசுவதை ஆட்சேபித்தார். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுதான் சத்தியத்தைப் போதிப்பதாக சிறு வயது முதற்கொண்டே எனக்கு கற்பிக்கப்பட்டது. அதனால் அவர் சொன்னதற்கு இணங்கி, ஆன்டோனீஸை சந்திப்பதை நிறுத்திவிட்டு அந்தப் பாதிரியாரோடு பைபிளைப் பற்றி பேச ஆரம்பித்தேன். சைப்ரஸிலுள்ள பல துறவி மடங்களையும் சென்று பார்த்தேன். வட கிரீஸுக்கும் சென்று ஏதோஸ் மலையை பார்த்தேன். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் இந்த மலையை மிகவும் பரிசுத்த மலையாக கருதுகிறார்கள். இருந்தாலும், இன்னும் என்னுடைய பைபிள் கேள்விகள் பதிலளிக்கப்படாமலே இருந்தன.
“பின்பு, சத்தியத்தைக் கண்டுபிடிக்க எனக்கு உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்தேன். அதற்குப் பிறகு கொஞ்ச நாளிலேயே நான் வேலை செய்யும் இடத்திற்கு ஆன்டோனீஸ் வந்தார். இதுதான் என்னுடைய ஜெபத்திற்கு கிடைத்த பதில் என நான் நினைத்தேன். எனவே, அந்தப் பாதிரியாரை பார்ப்பதை நிறுத்திவிட்டு ஆன்டோனீஸுடன் பைபிளை படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய படிப்பில் தொடர்ந்து முன்னேற்றம் செய்து, அக்டோபர் 1997-ல் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்.
“என்னுடைய மனைவியும் 14 வயதும் 10 வயதுமுடைய மூத்த மகள்கள் இருவரும் ஆரம்பத்தில் எதிர்த்தார்கள். ஆனால் என்னுடைய நல்ல நடத்தையின் காரணமாக, ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு என்னுடைய மனைவி தீர்மானித்தாள். சாட்சிகள் காண்பித்த அன்பும் தனிப்பட்ட அக்கறையும் அவளை மிகவும் கவர்ந்தது. முக்கியமாக பைபிளை அவர்கள் பயன்படுத்துவது அவளை கவர்ந்தது. அதன் விளைவாக, யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளை படிப்பதற்கு என்னுடைய மனைவியும் மூத்த பிள்ளைகள் இருவரும் ஒத்துக்கொண்டார்கள். 1999-ல், “கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை” மாவட்ட மாநாட்டில் அவர்கள் மூன்று பேரும் முழுக்காட்டப்பட்டபோது நான் அடைந்த மகிழ்ச்சியை கற்பனை செய்துபாருங்கள்!
“ஆம், சத்தியத்திற்கான என்னுடைய பசி திருப்தி செய்யப்பட்டது. இப்பொழுது, என்னுடைய மனைவியும் நான்கு பிள்ளைகளும் உட்பட, எங்களுடைய முழுக் குடும்பமும் யெகோவாவின் தூய வணக்கத்தில் ஐக்கியப்பட்டிருக்கிறது.”