அசைவிக்கும் மலை
அயர்லாந்திற்கு மேற்கே இருக்கும் தனித்தன்மை வாய்ந்த, கூம்பு வடிவ க்ரொ பேட்ரிக் மலை சுற்றியுள்ள மலைகளிலிருந்து தனிப்பட்டுக் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று, மலையுச்சியானது அசைவதுபோல் தோன்றும்; அப்போது இளைஞரும் முதியோரும் கலந்த கிட்டத்தட்ட 30,000 ஆட்கள் வருடாந்தர யாத்திரையாக மலைச்சிகரத்தை (765 மீட்டர்) நோக்கி ஏறுவார்கள்.
இந்தத் தினத்தில், யாத்திரீகர்கள் குறுகலான, கரடுமுரடான பாதையில் ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பர்; அவை ஆபத்தான இடங்களாகவும் இருக்கும். உண்மையில் சொன்னால், இறுதி ஏறுதலானது (சுமார் முந்நூறு மீட்டர்) மிகவும் செங்குத்தாக, பெருமளவு நன்கு பதிக்கப்படாத பாறைகளால் நிறைந்திருக்கும்; இதனால் ஏறுதல் ஆபத்தானதாகவும் அயர்வூட்டுவதாகவும் ஆகும்.
சிலர் வெறுங்காலால் ஏறுவார்கள், ஒருசிலர் தங்கள் முழங்காலால் சில பகுதிகளில் ஏறுவார்கள். கடந்த காலங்களில், யாத்திரை இரவு இருளில் துவங்கும்.
க்ரொ பேட்ரிக் ஏன் அவ்வளவு பேருக்கு அத்தகைய முக்கியமான அனுபவமாக இருக்கிறது?
யாத்திரை இடமாக நீண்ட காலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது
பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ரோமன் கத்தோலிக்க சர்ச், பேட்ரிக்கை மிஷனரி பிஷப்பாக அயர்லாந்துக்கு அனுப்பியது. அவருடைய முக்கிய குறிக்கோள் அயர்லாந்து ஆட்களைக் கிறிஸ்தவத்திற்கு மதமாற்ற வேண்டும் என்பதாக இருந்தது; மேலும் மக்கள் மத்தியில் பிரசங்கித்தும் வேலை செய்துகொண்டும் இருந்த ஆண்டுகளின்போது, கத்தோலிக்க சர்ச்சை அங்கே ஸ்தாபிப்பதற்காக பேட்ரிக் புகழ் பெற்றிருந்தார்.
அவருடைய வேலை அந்நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு இடங்களுக்குப் போகும்படிச் செய்தது. ஓர் இடமானது அயர்லாந்திற்கு மேற்கிலுள்ளதாகும்; சில தகவல் மூலங்களின்படி, அங்கே அவர் ஒரு மலை மேல் இருந்துகொண்டு 40 நாட்கள் இரவும் பகலுமாகச் செலவு செய்தார்; இதனால் அந்த மலை க்ரொ பேட்ரிக் (அர்த்தம், “பேட்ரிக் மலை”) என்று அவருடைய பெயரிடப்பட்டது. அங்கே அவர் தன்னுடைய மிஷனின் வெற்றிக்காக உபவாசித்து, ஜெபம் பண்ணினார்.
ஆண்டுகளினூடே அவருடைய வீரச்செயல்களைக் குறித்து பல கட்டுக்கதைகள் உருவாகியிருக்கின்றன. அதில் பிரபலமானது எதுவென்றால், அந்த மலையிலிருக்கையில், பேட்ரிக் அயர்லாந்தை விட்டு எல்லா பாம்புகளையும் ஓட்டினார்.
சிகரத்தில் ஒரு சிறிய சர்ச்சைக் கட்டினார் என்று வழிவழியாக வந்த செய்தி உறுதிப்படுத்துகிறது. அந்தக் கட்டிடம் அங்கு நீண்ட காலமாக இல்லையென்றாலும், மூல அஸ்திவாரம் இன்னும் இருக்கிறது, அவ்விடமும் அம்மலையும் பல ஆண்டுகளாக யாத்திரைக்கான இடமாக இருந்துவந்திருக்கிறது.
யாத்திரையின் அம்சங்கள்
வயதான ஒரு நபருக்கோ மலையேறப் பழக்கமில்லாத ஒரு நபருக்கோ இந்த ஐந்து கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கும் ஏற்றத்தை ஏறிமுடித்து பத்திரமாகக் கீழிறங்கி வருவதுதானே ஒரு சாதனையாக இருக்கிறது.
பாதையின் வழியாக உள்ள மிக முக்கியமான இடங்களில், தீவிரசிகிச்சைக் குழுக்கள் வித்தியாசப்பட்ட காயங்களுக்குச் சிகிச்சையளிக்க ஆயத்தமாயிருக்கின்றன.
அங்கே மூன்று இடங்கள், அல்லது இடை நிறுத்திடங்கள் இருக்கின்றன, இங்கே யாத்திரீகர்கள் பல்வேறு பிராயச்சித்த செயல்களைச் செய்வர். மலையேறத் தொடங்குவதற்கு முன்பாக உள்ள ஒரு நோட்டீஸ் போர்டில் இவை முழுமையாக விளக்கப்பட்டிருக்கின்றன.—பெட்டியைக் காண்க.
ஏன் அவர்கள் ஏறுகின்றனர்?
ஏன் இத்தனை அநேகர் இப்படிச் சிரமப்பட்டு யாத்திரை செய்கின்றனர்? ஏறும்போது ஏன் சிலர் அவ்வளவு மிதமிஞ்சி செயல்படுகின்றனர்?
யாத்திரையின்போது பிரார்த்தனை செய்தால், தனிப்பட்ட நலனுக்காக அவர்கள் செய்யும் வேண்டுதல்கள் பெரும்பாலும் கேட்கப்படும் என்று சிலர் நம்புகின்றனர். ஏதோ தவறு செய்ததற்காக மன்னிப்பு நாடி வேறுசிலர் அதைச் செய்கின்றனர். இன்னும் ஒருசிலருக்கு இது நன்றி செலுத்துவதற்கான வழிவகையாக இருக்கிறது. நிச்சயமாகவே, அநேகர் அதன் களியாட்டத்தை எண்ணி செல்கின்றனர். அது ‘சமுதாய ஆவியின், சமுதாய அன்பின் வெளிக்காட்டாக’ இருந்தது என்று ஓர் அதிகாரி குறிப்பிட்டார். க்ரொ பேட்ரிக் ஏறுதலானது “புனித பேட்ரிக்கின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கான வழியாகவும் தாங்கள் சேர்ந்திருந்த மதத்திற்காக அவருக்கு நன்றி செலுத்த தாங்கள் கடன்பட்டிருப்பதை அங்கீகரிப்பதற்காகவும் ஆகும்” என்று மேலுமாக அவர் சொன்னார். கூடுதலாக, மிக முக்கியமாய், ஏறுவதானது, “ஒரு வகையான நோன்பாக” இருக்கிறது; “ஏனெனில் அதில் உட்பட்டிருக்கிற சரீர சிரமம் ஒரு மெய்யான பிராயச்சித்த செயலாகும். மெதுவாக உச்சி நோக்கி ஏறுவது நீண்டு வருந்துகிற செயலாகும்,” என அவர் சொன்னார்.
ஒரு மனிதன் 25 முறை ஏறிவிட்டதாய் பெருமையாகச் சொன்னார்! “ஏதோ ஒருவிதமான நோன்பாவே!” அதைச் செய்ததாகச் சொன்னார். இன்னொருவர், “பாடில்லாமல் பயனில்லை!” என்று சுலபமாக விவரித்தார்.
அத்தியாவசியமாக இல்லாதபோதிலும், அநேகர் வெறுங்காலில் மலையேறுகின்றனர். ஏன் அதைச் செய்யவேண்டும்? முதலாவதாக, அவர்கள் அந்த ஸ்தலத்தை “புனித”மாகக் கருதுவதால், தங்கள் காலணிகளைக் கழற்றிவிடுகின்றனர். இரண்டாவதாக, ‘ஏதோ ஒருவிதமான நோன்பு’ நோக்கத்திற்கு இசைவாயிருப்பதற்காகும். சிலர் ஏன் இடை நிறுத்திடங்களில் தங்கள் முழங்கால்களைக் கொண்டு ஏறி பிராயச்சித்த செயல்களைச் செய்கின்றனர் என்பதையும் இது விளக்கிக் காட்டுகிறது.
படைப்பாளரைப் போற்ற அசைவிக்கப்படுவது
ஆனால் ஒரு விசேஷ தினத்தன்று ஏறும் யாத்திரீகர்களின் மத உணர்ச்சிவயப்படுதலில் ஒருவர் சேரவில்லையென்றால், அப்போது என்ன? நல்ல சீதோஷ்ண நிலைமையில், திடமான காலணிகளுடன் மலையை எந்தச் சமயத்திலாவது ஏறலாம். அசைவிக்கப்படும் யாத்திரீகர் திரள் ஏறும் தினத்தன்று, நாங்கள் ஏறவில்லை. இளைப்பாறுவதற்காக அடிக்கடி நாங்கள் ஓய்வெடுத்தோம்; அச்சமயத்தில் ஏறுதலைக் குறித்தும் திரளான ஆட்களின் பேரில் அது கொண்டிருந்த பாதிப்பைக் குறித்தும் சிந்தித்துப் பார்த்தோம். ஆயிரக்கணக்கான ஆட்கள் இப்படிக் கஷ்டப்பட்டு ஏறி பலவித பிராயச்சித்த செயல்கள் செய்வதைக் கற்பனை செய்து பார்க்கையில், ‘இதைத்தான் கடவுள் கேட்கிறாரா? ஏறும் இந்தச் சடங்கோ திரும்பத்திரும்ப சில பிரார்த்தனைகளை ஓதிக்கொண்டு நினைவுச்சின்னங்களைச் சுற்றிவருவதும் கடவுளிடம் ஒருவரை உண்மையில் நெருங்கி வரச் செய்கிறதா?’ என்று யோசிக்கும்படி தூண்டப்பட்டோம். மத்தேயு 6:6, 7-ல் அதே ஜெபங்களைத் திரும்பவும் திரும்பவும் சொல்வதன்பேரில் இயேசு கொடுத்த புத்திமதி என்ன?
நிச்சயமாகவே, மத ரீதியிலான அனுபவம் வேண்டி நாங்கள் மலையேறவில்லை. இருந்தாலும், எங்களுடைய படைப்பாளரிடம் நெருக்கமாயிருப்பதை உணர்ந்தோம், ஏனெனில் அவருடைய படைப்பாகிய எவ்விடத்திலுமுள்ள மலைகள் பூமியின் அதிசயங்களின் பாகமாக இருப்பதால், எங்களால் போற்ற முடிந்தது. சிகரத்திலிருந்து எவ்வித இடறலுமில்லாமல் எங்களால் அழகான இயற்கைக்காட்சியை ரசிக்க முடிந்தது, அட்லான்டிக் பெருங்கடலை நிலம் எங்குச் சந்தித்தது என்பதையும் காண முடிந்தது. எங்களுக்குக் கீழாக ஒரு பக்கத்தில் விரிகுடாவில் மினுமினுக்கும் சிறிய தீவுகள் மறுபக்கத்திலிருந்த கரடுமுரடான, வறண்ட மலைப்பகுதியைத் தெளிவாக வித்தியாசப்படுத்திக் காட்டின.
நாங்கள் அந்த மூன்று இடை நிறுத்திடங்களை எண்ணிப் பார்த்தோம். இயேசுதாமே சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன; தம்முடைய உண்மையுள்ள சீஷர்களிடம் அவர் சொன்னார்: “நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.”—மத்தேயு 6:7.
அந்த மலையானது, அதிக வேலையை உட்படுத்தும் சடங்கில் ஆயிரக்கணக்கானோரைக் கட்டுப்படுத்தியிருக்கும் ஒரு பாரம்பரியத்தின் பாகமாக ஆகிவிட்டது என்பதை நாங்கள் உணர்ந்தோம். யோவான் அப்போஸ்தலன் சொன்ன சுயாதீனத்தோடு எந்தளவு அது வேறுபட்டதாயிருந்தது என்று யோசித்துப் பார்த்தோம், அவர் சொன்னார்: ‘நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்கிறோம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.’—1 யோவான் 5:3.
க்ரொ பேட்ரிக் ஏற்றம் அடங்கலாக எங்கள் உல்லாசப் பயணத்தை அனுபவித்து மகிழ்ந்தோம். முழு மனிதவர்க்கமும் பைபிள் சாராத சம்பிரதாயங்களிலிருந்து விடுபட்டு, பூமியின் அன்பான படைப்பாளரை “ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுகொள்ளும் சமயத்திற்காக எதிர்பார்த்திருக்க அது எங்களை அசைவித்தது.—யோவான் 4:24.
[பக்கம் 27-ன் பெட்டி]
யாத்திரையின் பிரதான அம்சங்கள்
புனித பேட்ரிக் தினத்தன்றோ அந்நாளிலிருந்து எட்டு நாளுக்குள்ளாகவோ ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எந்தச் சமயத்திலோ மலையேறுகிற ஒவ்வொரு யாத்திரீகரும் போப்பின் உத்தேசங்களுக்காக சர்ச்சில் அல்லது அதற்குப் பக்கத்திலிருந்து ஜெபிக்கையில் முழு நிறைவான பாவ மன்னிப்புச் சலுகையைப் பெறலாம்; பாவ சங்கீர்த்தனத்திற்கும் நற்கருணைக்கும் கூட்டத்திற்குப் போக வேண்டும் அல்லது அந்த வாரத்திற்குள்ளாகப் போக வேண்டும் என்ற நிபந்தனையில் இதைப் பெறலாம்.
தலைமுறைகளாக இருந்துவந்த இடை நிறுத்திடங்கள்
மூன்று “இடை நிறுத்திடங்கள்” அங்குள்ளன (1) அந்தக் கூம்புக்கு அடிவாரத்தில் அல்லது லெக்ட் பெனனில், (2) சிகரத்தில், (3) மலைப் பக்க [டவுனாகிய] லெகன்வியிலிருந்து கொஞ்ச தூரமிருக்கிற ரலிக் முவெராவில்.
1-ம் இடை நிறுத்திடம் - லெக்ட் பெனன்
யாத்திரீகன் 7 கிறிஸ்து கற்பித்த ஜெபத்தையும் 7 மங்கள வார்த்தை ஜெபத்தையும் ஓர் அப்போஸ்தல கொள்கையையும் சொல்லிக்கொண்டு கற்குவியலைச் சுற்றி ஏழு தடவை நடக்கிறான்
2-ம் இடை நிறுத்திடம் - சிகரம்
(அ) யாத்திரீகன் 7 கிறிஸ்து கற்பித்த ஜெபத்தையும் 7 மங்கள வார்த்தை ஜெபத்தையும் ஓர் அப்போஸ்தல கொள்கையையும் முட்டிபோட்டுச் சொல்கிறான்
(ஆ) போப்பின் உள்நோக்கங்களுக்காக யாத்திரீகன் சர்ச்சுக்கு அருகிலிருந்து ஜெபம் பண்ணுகிறான்
(இ) யாத்திரீகன் 15 கிறிஸ்து கற்பித்த ஜெபத்தையும் 15 மங்கள வார்த்தை ஜெபத்தையும் ஓர் அப்போஸ்தல கொள்கையையும் சொல்லிக்கொண்டு சர்ச்சை 15 முறை சுற்றி வருகிறான்
(ஈ) யாத்திரீகன் 7 கிறிஸ்து கற்பித்த ஜெபத்தையும் 7 மங்கள வார்த்தை ஜெபத்தையும் ஓர் அப்போஸ்தல கொள்கையையும் சொல்லிக்கொண்டு லியாபா ஃபாரிக்கை [பேட்ரிக்கின் படுக்கையை] 7 முறை சுற்றி வருகிறான்
3-ம் இடை நிறுத்திடம் - ரலிக் முவெரா
யாத்திரீகன் 7 கிறிஸ்து கற்பித்த ஜெபத்தையும் 7 மங்கள வார்த்தை ஜெபத்தையும் ஓர் அப்போஸ்தல கொள்கையையும் ஒவ்வொரு கற்குவியலையும் [மூன்று குவியல்கள் இருக்கின்றன] 7 முறை சுற்றி வருகிறான், கடைசியாக ஜெபித்துக்கொண்டு ரலிக் முவெராவின் முழுச் சுற்றளவையும் 7 முறை சுற்றி வருகிறான்.