உறவினரிடம் சாட்சிகொடுத்தல் நற்பலன்களைக் கொண்டுவருகிறது
தைவான்-லுள்ள டைனனில் ஓரிளம் குடும்பத்தலைவி, பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். அவள் ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்கிறாள்; அவர்களில் அநேகர், பிரஸ்பிட்டேரியன் சர்ச்சில் பிரபலமானவர்களாக இருந்தார்கள். சாட்சிகள் ‘மற்ற மதங்களைத் தாக்குவதாக’ அவளது சர்ச் அடிக்கடி குறைகூறியதால், இதைச் செய்வதை கவனமாகத் தவிர்த்தாள்; ஆனால் கிறிஸ்தவப் பண்புகளை வெளிக்காட்டுவதில் கவனம் செலுத்தினாள். தன் மோட்டார் சைக்கிளைப் பதினாறு கிலோமீட்டர் ஓட்டிச்சென்று கூட்டங்களுக்குப் போகவேண்டியிருந்தாலும், அவள் ஒழுங்காக ஆஜரானாள். சீக்கிரத்தில், அவள் தன்னுடைய ஆளுமையில் செய்துவந்த மாற்றங்களைக் குடும்ப அங்கத்தினர்கள் கவனிக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாகவும் அவளது சாதுரியமான சாட்சிகொடுத்தலின் காரணமாகவும், அவளுடைய நாத்தனார் படிக்க ஆரம்பித்தார். பின்பு, அவளுடைய சொந்த கணவன், அவள் படிப்பது என்னவென்று பார்க்க ஒத்துக்கொண்டார். அடுத்ததாக, அவருடைய சகோதரனும், ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரும் படிக்க ஆரம்பித்தனர். பின்னர், குடும்பத்தின் பல்வேறு அங்கத்தினர்கள் படித்துக்கொண்டிருந்த காரியங்களில் மாமியாரும் அக்கறைகாட்டினார்கள். பின்பு, அந்த இளம் பெண், 322 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் தன் சொந்த பெற்றோருக்குச் சாட்சிகொடுத்தாள். அவர்கள் படிக்க ஆரம்பித்தார்கள். அந்த இளம் பெண்ணும் அவளுடைய கணவரும் இன்னும் இரு உறவினர்களும் தற்போது முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள்; சத்தியத்தைக் கற்றுக்கொள்வதில் மற்றும் பல உறவினர்கள் நன்கு முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்; அதே சர்ச்சிலிருந்த மற்றொரு தம்பதியினர், பிரசங்க வேலையில் பங்குகொள்ளும்படியாக சர்ச்சிலிருந்து இப்போது விலகியிருக்கிறார்கள். வார்த்தையின் மூலமாகவும் சிறந்த நடத்தையின் மூலமாகவும் சத்தியத்தை மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்ததற்காக யெகோவாவிடமிருந்து என்னே ஓர் ஆசீர்வாதம்!