உவாட்ச்டவர் கல்வி மையம் மிஷனரிகளை அனுப்புகிறது
உவாட்ச் டவர் கிலியட் பைபிள் பள்ளி பல்வேறு இடங்களில் அதன் வகுப்புகளை நடத்தியிருக்கிறது. 1943-க்கும் 1960-க்கும் இடையே இருந்த ஆண்டுகளில் அ.ஐ.மா., நியூ யார்க், தென் லான்சிங்கில் உள்ள வசதிகளில் 95 தேசங்களிலிருந்து வந்த மாணவர்கள் அடங்கிய 35 வகுப்புகள், விசேஷ பயிற்சியை பெற்றுக்கொண்டன. பின்னர் அந்தப் பள்ளி நியூ யார்க், புருக்லினில் உள்ள உலகத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு, அது அங்கு சுமார் 28 வருடங்களாக இயங்கி வந்தது. 1988-லிருந்து 1995-ன் ஆரம்பம் வரை, கிலியட் பள்ளி நியூ யார்க், வால்க்கிலில் அதன் வகுப்புகளை நடத்தி வந்தது.
இந்த ஆண்டுகளின்போது அப்பள்ளி அதன் செயல் நடவடிக்கைகளை விரிவாக்கியது. அதன் வழிநடத்துதலின் கீழ் மெக்ஸிகோவில் ஒரு பத்து-வார போதனா திட்டம் மூன்று வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது; அதைப் போன்ற ஐந்து வகுப்புகள் ஜெர்மனியில் நடத்தப்பட்டன; இந்தியாவில் இரண்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. 1987 முதற்கொண்டு, ஊழியப் பயிற்சிப்பள்ளி என்றழைக்கப்பட்ட ஒரு துணைப் பள்ளி 34 தேசங்களில் வகுப்புகளை நடத்தியிருக்கிறது, அதில் தகுதி பெற்றிருக்கும் இளம் ஆண்களுக்கு ஒரு விசேஷ எட்டு-வார பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், நியூ யார்க், பேட்டர்சனில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் உவாட்ச்டவர் கல்வி மையத்தில் 99-வது கிலியட் வகுப்பினருக்கு கொடுக்கப்பட்ட போதனை 20-வார பாடத்திட்டமாக இருந்தது. அதில் முழு பைபிளை விரிவாக படிப்பது, யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன-நாளைய சரித்திரத்தையும், அமைப்பையும் பற்றி கலந்தாலோசிப்பது, அதோடுகூட அயல்நாட்டு மிஷனரி வேலையின் பேரில் மிகுதியான புத்திமதி ஆகியவை அடங்கியிருந்தன.
செப்டம்பர் 2 அன்று 99-வது வகுப்பு பட்டம் பெற்றது. உவாட்ச்டவர் கல்வி மையத்தில் உள்ள புதிய அரங்கத்தில் மூன்று-மணிநேர பட்டமளிப்பு நிகழ்ச்சிநிரல் நடத்தப்பட்டது. அந்த அரங்கம் முழுவதுமாக நிரம்பியிருந்தது. பேட்டர்சனில் உள்ள பெத்தேல் வசதிகள், வால்க்கில், புருக்லின் போன்ற இடங்களில் இருந்தவர்கள் மின்னணு இணைப்புகளால் இணைக்கப்பட்டிருந்தனர். பட்டம் பெறும் வகுப்பினருக்கும் அவர்களோடுகூட அவர்களுடைய உறவினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் மட்டும் அந்த நாள் கிளர்ச்சியூட்டுவதாக இல்லாமல், மிக நேர்த்தியான புதிய பள்ளி கட்டடங்களை கட்டுவதில் வாலண்டியர்களாக பங்குகொண்ட நூற்றுக்கணக்கானோருக்கும் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.
ஆளும் குழுவைச் சேர்ந்த கேரி பார்பர் என்பவர் தன் ஆரம்ப குறிப்புரையில், நடந்துகொண்டிருந்த காரியங்களின் முக்கியத்துவத்தின் பேரில் கவனத்தைத் திருப்பினார். அவர் சொன்னார்: “இந்த பூமியில் நிறைவேற்றப்பட்டதிலேயே மிகப்பெரிய தெய்வீக கல்வி வேலையின் முக்கிய மையமாக இது இருக்கும்.” ஸ்திரீயின் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் இடையே உள்ள யுத்தத்தின் உச்சக்கட்டத்தை நாம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறோம் என்று அவர் விளக்கினார். (ஆதியாகமம் 3:15) கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவைப் பெற்றிருப்பவர்களும் அதற்கு கீழ்ப்படிந்திருப்பவர்களும் மட்டுமே வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தின்போது ஏற்படப்போகும் அதிர்ச்சியூட்டும் மோதலிலிருந்து தப்பிப்பிழைப்பர் என்று அவர் காண்பித்தார்.
“நம்முடைய தற்போதைய கல்வி திட்டம், நீதிமொழிகள் 1:1-4-ல் விவரிக்கப்பட்டிருக்கும் மிகச்சிறந்த முதிர்ச்சியான நிலைக்கு, அதாவது ஞானத்தையும் சிட்சையையும் அறிவது, புரிந்துகொள்ளுதலை பகுத்துணர முடிவது, உட்பார்வை, நீதி, நியாயத்தீர்ப்பு, நேர்மைத்தன்மை, சிந்திக்கும் திறன் ஆகியவற்றை அளிக்கும் சிட்சையை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு எல்லா இடங்களிலுமுள்ள யெகோவாவின் ஜனங்களை கொண்டுவருவதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். அப்படிப்பட்ட ஆவிக்குரிய வள ஆதாரங்களைப் பெற்றிருப்பது என்னே ஒரு பாதுகாப்பு!
பட்டம் பெறும் வகுப்புக்கு புத்திமதி
முன்னுரையில் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பின்தொடர்ந்து, ஐந்து சுருக்கமான தொடர் பேச்சுகள் பட்டம் பெறும் வகுப்பினரை நோக்கி கொடுக்கப்பட்டன. முன்பு கிலியட் போதனையாளராக இருந்த ஹாரல்ட் ஜாக்சன் என்பவர் இப்போது புருக்லினில் தலைமை அலுவலக அங்கத்தினராக இருக்கிறார், அவர் “உங்களுடைய தேவபக்தியுள்ள திருப்தியைப் பற்றிக்கொண்டிருங்கள்” என்று மாணவர்களை ஊக்குவித்தார். நீண்டகாலம் மிஷனரியாக சேவித்து, இப்போது ஆளும் குழுவின் அங்கத்தினராய் இருக்கும் லாய்ட் பேரி என்பவர், “யெகோவாவை மனத்தாழ்மையோடு சேவித்தல்” என்பதன் பேரில் பேசினார். புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இருப்பதிலும், அதோடுகூட உடன் மிஷனரிகளோடும், அவர்கள் சேவிக்கும் சபைகளோடும் உள்ளூர் ஜனங்களோடும் அவர்களுடைய உறவிலும் இந்த குணம் பட்டதாரிகளுக்கு முக்கியமானதாய் இருக்கும்.
கிலியட் செயலாற்றும் குழுவில் தற்போது சேவித்துக்கொண்டிருக்கும் கார்ல் ஆடம்ஸ் என்பவர், “விசுவாசம் உங்களை என்ன செய்ய வழிநடத்தும்?” என்ற கேள்வியின் பேரில் வகுப்பினரோடு காரணம் காட்டி பேசினார். எகிப்துக்கு திரும்ப வரும்படி மிகவும் ஆசையாயிருந்து, வனாந்தரத்தில் இருந்த நிலைமைகளைக் குறித்து முறுமுறுத்த இஸ்ரவேலர்களைப் போல் இல்லாமல், ஆபிரகாமைப் போல் இருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார். பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக கல்தேயர்களின் ஊர் தேசத்துக்குத் திரும்புவதற்குப் பதிலாக, ஆபிரகாம் கடவுளுடைய ராஜ்யத்தை நோக்கியிருந்தார். (யாத்திராகமம் 16:2, 3; எபிரெயர் 11:10, 15, 16) பள்ளி பதிவாளர் யுலிசெஸ் கிலாஸ் என்பவர், “உங்களுடைய ஆசீர்வாதங்களை மறுபடியும் கணக்கிட்டுப் பாருங்கள்” என்ற பொருளில், சங்கீதம் 73-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஆசாப்பின் அனுபவத்தை பட்டம் பெறும் வகுப்பினருக்கு புத்திமதி சொல்ல உபயோகித்தார். ஆளும் குழுவின் போதனா குழுவைச் சேர்ந்த ஆல்பெர்ட் ஷ்ரோடர், “யெகோவா ஏற்பாடு செய்கிறார்” என்ற பொருளின் பேரில் பேசினார். அப்படிப்பட்ட ஏற்பாட்டுக்கு அத்தாட்சியாக, அவர் கிலியட் பள்ளியையும், பிரசங்கிக்கும் மற்றும் சீஷராக்கும் பெரும் வேலையை நிறைவேற்றுவதில் அதன் பங்கையும் குறிப்பிட்டுக் காட்டினார்.
பின்னர் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரஸிடென்ட் மில்ட்டன் ஹென்ஷல் என்பவர், “ஒருவருக்கொருவர் சொந்தமாயிருக்கும் அங்கத்தினர்கள்” என்பதன் பேரில் பேசியபோது, கேட்டுகொண்டிருந்தோர் ஆர்வத்தோடு கவனித்தார்கள். அவர் ரோமர் 12-ம் அதிகாரத்தை வாசித்து அதன் பேரில் விரிவாக குறிப்புகளை சொன்னார். மற்ற காரியங்களோடுகூட அவர் சொன்னார்: “சபையில் இருக்கும் உடன் ஊழியர்களோடு நாம் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறோம் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.” அவர் கூடுதலாக சொன்னார்: “நாம் ஒருவரையொருவர் யெகோவாவின் சொத்தாக எப்போதும் எண்ணுவது நமக்கு நல்லது, குற்றங்காண்கிறவர்களாய் இராமல், நாம் எப்போதும் உதவியாயிருப்போமாக. நாம் கிறிஸ்தவ சபையின் ஆவிக்குரிய ஒற்றுமையை காத்துக்கொள்ளும்போது நமக்கே உதவி செய்துகொள்கிறோம்.” மிஷனரி வீடுகளில் உணவு தயாரிக்கையில் எப்படி அந்த உதவியை வெளிக்காட்டலாம் என்பதை காண்பித்தார், எல்லாருமே ஒரே உணவை உண்ண முடியாது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும். ஏழைகளாயிருக்கும் உடன் கிறிஸ்தவர்களோடு வெளி ஊழியத்தில் பங்குகொள்ளும்போது குறைகூறாமல் அவர்களுக்கு உதவியாயிருக்க வேண்டும் என்றும்கூட அவர் உற்சாகப்படுத்தினார். நாம் உண்மையிலேயே உதவுபவர்களாகவும், கட்டியெழுப்புபவர்களாகவும், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துபவர்களாகவும் இருந்தால், “இதற்காக யெகோவா நம்மை நேசிப்பார்” என்று சகோதரர் ஹென்ஷல் குறிப்பிட்டுக் காண்பித்தார். தாங்கள் விட்டுச்செல்லப் போகும் தேசங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாய் இருக்கப்போகும் தேசங்களில் சேவிக்கப்போகும் மிஷனரிகளுக்கு என்னே மிகச்சிறந்த புத்திமதி!
வகுப்பில் இருப்பவர்களை நன்றாக அறிந்துகொள்ளுதல்
99-வது வகுப்பில் இருந்த 48 மாணவர்கள் சராசரியாக 32 வயதுள்ளவர்களாகவும் ஏற்கெனவே முழு-நேர ஊழியத்தில் 11 வருடங்களுக்கு மேலாகவும் செலவழித்திருந்தனர்.
பட்டமளிப்பு நிகழ்ச்சிநிரலின் பாகமாயிருந்த பேட்டிகள், அவர்களில் சிலரை நன்றாக அறிந்துகொள்ள கேட்டுக்கொண்டிருந்தோருக்கு சந்தர்ப்பத்தை அளித்தன. ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த நிக்கி லீபல், இங்கிலாந்தைச் சேர்ந்த சைமன் போல்ட்டன் என்பவர்கள், யெகோவா தங்கள் சரீரப்பிரகாரமான தேவைகளைப் பூர்த்திசெய்வார் என்பதன் பேரில் அவர்களுடைய விசுவாசத்தை சோதித்த சம்பவங்களை கூறினார்கள். அவர்கள் முழு-நேர ஊழியத்தை முதலிடத்தில் வைத்ததன் காரணமாக யெகோவாவின் கவனிப்பை அனுபவித்தனர்.
இசபெல் காஸான் என்பவருடைய தாய்மொழி பிரெஞ்சு மொழியாக இருந்தபோதிலும், தன் சொந்த நாட்டில் அரபு மொழிபேசும் ஜனங்களுக்கு சாட்சி கொடுப்பதற்காக அரபு மொழி கற்றுக்கொண்டதாக சொன்னார்கள். அவர்கள் 1987-ல் ஆரம்பித்தபோது, பாரிஸில் இருந்த ஒரு சிறிய தொகுதியில் அரபு மொழி பேசும் சகோதரர்கள் நான்கு பேர் இருந்தனர், இவர்களுடன் அந்த சகோதரியும் அரபு மொழியைக் கற்றுக்கொண்டிருந்த மற்றொரு சகோதரியும் இருந்தனர். (அது சுலபமானதாக இல்லை. அவர்கள் ஒவ்வொரு வாரமும் காவற்கோபுர பாடம் தயாரித்து குறிப்புகள் சொல்வதற்காக எட்டு மணிநேரங்கள் செலவழிப்பர்.) அந்த முயற்சி பயனளித்ததா? இன்று பிரான்ஸ் முழுவதும் அரபு மொழி பேசும் சாட்சிகள் ஐந்து வட்டாரங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றனர். மற்றொரு மாணவர், மிக்கோ புரோ, பள்ளியில் தான் படித்த பிரெஞ்சு மொழி, பின்லாந்திலுள்ள ஆப்பிரிக்க அகதிகளுக்கு எவ்வாறு பிரசங்கிக்க உதவியது என்றும் அவர் மிஷனரி வேலை செய்யப்போகும் பெனின் என்ற இடத்திலும் பிரயோஜனமாய் இருக்கும் என்றும் கூறினார். பானி போஸ் என்பவர் கனடா, க்யுபெக்கில் பலன்தரும்விதத்தில் சேவிப்பதற்காக பிரெஞ்சு மொழியை சரளமாக பேசுவதற்கு எவ்வாறு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார் என்பதை நினைவுபடுத்தி சொல்கிறார். பியார்க்கி ராஸ்முஸன், டென்மார்க்கைச் சேர்ந்தவர், ஃபேரோ தீவுகளில் அவரும் அவருடைய மனைவியும் பல வருடங்களாக சேவித்தபோது ஏற்கெனவே கொண்டிருந்த அனுபவங்களை கூறினார். ஆம், இந்த புதிய மிஷனரிகள் அனுபவம் பெற்ற முழு-நேர ஊழியர்கள்.
பட்டதாரிகள் 19 தேசங்களுக்கு அனுப்பப்பட்டனர்—ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, கீழை நாடுகள், மத்திப மற்றும் தென் அமெரிக்கா. முன்பு நடந்த பள்ளிகளின் பட்டதாரிகள் 200-க்கும் மேற்பட்ட தேசங்களில் ஏற்கெனவே சேவை செய்திருக்கின்றனர். அந்தப் பட்டதாரிகளில் அநேகர் இன்னும் தங்கள் நியமிப்புகளில் சுறுசுறுப்பாய் சேவை செய்கின்றனர். பூமியின் கடைசிபரியந்தமும் ராஜ்ய சாட்சி கொடுப்பதை இன்னும் விரிவாக்குவதற்கு இந்த புதிய மிஷனரிகள் இப்போது அவர்களோடு சேர்ந்துகொள்கின்றனர்.—அப்போஸ்தலர் 1:8.
[பக்கம் 25-ன் படங்கள்]
உவாட்ச்டவர் கல்வி மையத்தில் வகுப்பறை காட்சிகள்
[பக்கம் 26-ன் படங்கள்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 99-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன. (1) ஹெஃபி, எஸ்; ரிலி, இ; மார்ட்டென்சன், டி.; ஆனபில், ஏ.; போல்ட்டன், ஜே.; பூல், ஜே.; சீமஸ், ஜி.; சோஸா, எல். (2) பாஷ்னிட்ஸ்க்கி, பி.; ஷெப்பர்ட், டி.; பாஷ்னிட்ஸ்க்கி, டபிள்யூ.; யார்வினன், ஜே.; பால்சன், கே; ராஸ்முஸன், இ.; ஷ்விவே, கே.; ஓல்சன், எல். (3) பால்சன், இ.; சாம்செல், டி.; போஸ், பி.; ஹாரிஸ், இ.; காஸான், ஐ.; லீபல், என்.; சோஸா, பி.; புரோ, ஜே. (4) லாஜர், கே.; லாஜர் வி.; கோல்டன், கே.; போல்ட்டன், எஸ்.; ஜான்சன், எம்.; ஜான்சன், எஸ்.; லீபல், ஏ.; ராஸ்முஸன், பி. (5) ஹாரிஸ், டி.; சாம்செல், டபிள்யூ.; ஷ்விவே, ஓ.; ஹெஃபி, ஆர்.; காஸான், எல்.; ரிலி, டி.; யார்வினன், ஓ.; புரோ, எம். (6) மார்ட்டென்சன், டி.; கோல்டன், ஆர்.; ஆனபில், எல்.; ஷெப்பர்ட், எம்.; போஸ், ஆர்.; சீமஸ், டி.; பூல், இ.; ஓல்சன், ஜே.
[பக்கம் 26-ன் படங்கள்]
இன்னும் தங்கள் நியமிப்புகளில் உள்ளவர்கள்: (இடது புறம்) பிரேஸிலில் சார்ல்ஸ் லீத்கோ தன் மனைவி ஃபெர்னுடன், முதல் மற்றும் ஆறாவது கிலியட் வகுப்புகளின் பட்டதாரிகள்; (கீழே) ஜப்பானில் மார்த்தா ஹெஸ், கிலியட் பள்ளியின் ஏழாவது வகுப்பு பட்டதாரி