ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
‘வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்’ பிரசங்கித்தல்
போஸ்னியா, ஹெர்ட்ஸகோவினா ஆகிய நாடுகளில் போர் புயல் அடித்து ஓய்ந்திருந்த சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் சொல்லவொண்ணா கஷ்டத்தை அனுபவித்தனர். இந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் யெகோவாவின் சாட்சிகள் மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டவும் நம்பிக்கையெனும் சுடரை அவர்கள் மனதில் ஏற்றவும் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டனர். கொஞ்ச காலம் சரஜெவோவுக்குச் சென்று ஊழியம் செய்த ஒரு சாட்சி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள் இதோ:
“இங்கு வாழ்க்கையை ஓட்டுவது தலையால் தண்ணீர் குடிப்பதைப் போன்று பெருங்கஷ்டம்; ஆனாலும் பைபிள் சத்தியத்தைப் பற்றி பேசும்போது அலுத்துக்கொள்ளாமல் சந்தோஷமாக கேட்கிறார்கள் மக்கள். சகித்துக்கொண்டு வாழ்வது எப்படி என்பதற்கு இலக்கணமாய் திகழ்கிறார்கள் இங்குள்ள சாட்சிகள். காசு பணம் இல்லைதான், ஆனால் குணத்தில் தங்கம். சொல்லப்போனால், சபையிலுள்ள எல்லா இளைஞர்களுமே முழுநேர ஊழியம் செய்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்த உற்சாகம் புதிய பிரஸ்தாபிகளையும் தொற்றிக்கொள்கிறது; இதனால் ஊழியம் செய்ய ஆரம்பித்த முதல் மாதத்திலிருந்தே 60 மணிநேரமோ அதற்கும் அதிகமோ ஊழியத்தில் செலவழிப்பது என்பது அவர்களுக்கு ஒன்றும் புதிய விஷயம் இல்லை.
“ஜனங்களுக்குப் பிரசங்கிக்க வீட்டுக்கு வீடு ஊழியத்தை மட்டுமல்ல, மற்ற ஊழிய முறைகளையும் முயற்சி செய்து பார்த்தோம். நகரத்திலுள்ள அநேக கல்லறைகளுக்கு சென்று பைபிள் பிரசுரங்களை ஜனங்களுக்குக் கொடுத்ததில் எங்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்தது அதற்கு ஓர் உதாரணம்.
“ஆஸ்பத்திரிகளுக்கும் சென்று சாட்சி கொடுத்தோம். சரஜெவோ ஆஸ்பத்திரியின் இருதய சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று தலைமை மருத்துவரை சந்தித்தோம். ‘மாரடைப்பு—என்ன செய்யலாம்?’ என்ற அட்டைப்பட தலைப்புடைய டிசம்பர் 8, 1996 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையை ஏற்றுக்கொண்டார். மற்ற டாக்டர்களுக்கும் கொடுப்பதற்காக கூடுதல் பிரதிகளை கேட்டார். பிறகு, அவருடைய பிரிவில் இருந்த எல்லா நோயாளிகளையும் சென்று சந்திப்பதற்கு சாட்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. ஒவ்வொருவரையும் அவரவர் படுக்கைக்கு சென்று சந்தித்த ஒரு மணிநேரத்திற்குப் பிறகு 100 பத்திரிகைகளுக்கும் அதிகத்தை விநியோகித்திருந்தனர் சாட்சிகள். உற்சாகத்தை வாரி வழங்குவதற்கும் நம்பிக்கையை உசுப்பி விடுவதற்கும் இதுவரைக்கும் அவர்களை யாராவது ஆஸ்பத்திரியில் வந்து சந்தித்திருக்கிறார்கள் என்றால் அது இதுவே முதல் தடவை என்று நோயாளிகளில் அநேகர் சொன்னார்கள்.
“குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கட்டுரைகள் இருந்த பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு குழந்தைகள் நல மருத்துவப் பிரிவுக்குச் சென்றோம். தலைமை மருத்துவர் ரீடிங் ரூமில் வைப்பதற்காக என்னுடைய பைபிள் கதை புத்தகத்தின் சில பிரதிகளையும் ஏற்றுக்கொண்டார். அந்தப் பிரிவிலுள்ள சின்னஞ்சிறுசுகளைப் பார்க்க வரும் அம்மாக்கள் இப்போது, தங்கள் பிள்ளைச் செல்வங்களுக்கு அந்தப் புத்தகத்திலிருந்து சில கதைகளை தினமும் வாசித்துக் காட்டுகிறார்களே. இந்த டாக்டரை மீண்டும் அவர்களுடைய வீட்டில் சந்திப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
“சரஜெவோவில் என்ஏடிஓ என்ற வட அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பில் பல்வேறு இனத்தவரான ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் இருக்கின்றனர். இவர்களுக்கும் பிரமாதமாக சாட்சி கொடுக்கப்பட்டது. சில சமயங்களில், ஆயுதந்தாங்கிய கார்கள் ஒவ்வொன்றினிடமும் நாங்கள் சென்று எல்லா தேசத்தவருக்கும் நற்செய்தி என்ற சிறுபுத்தகத்தை உபயோகித்து காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை கொடுக்க முடிந்தது. இத்தாலிய சிப்பாய்கள் இருந்த இப்பட்டாளங்களில் 200-க்கும் அதிகமான பத்திரிகைகள் விநியோகிக்கப்பட்டன. இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதற்கு முன் எந்த யெகோவாவின் சாட்சிகளிடமும் அவர்கள் பேசியதே இல்லையாம், இதை அங்கிருந்த அநேக இத்தாலிய சிப்பாய்களே சொன்னார்கள். எப்படியோ சரஜெவோவில் அவர்களை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
“ஒருநாள் ரோட்டு ஓரத்தில் ஆயுதந்தாங்கிய கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. என் கையிலிருந்த குடையால் அந்தக் காரின் கதவை நான் தட்டியதும் ஒரு சிப்பாய் வெளியே வந்தார். ‘சமாதான தூதுவர்கள்—அவர்கள் யார்?’ என்ற தலைப்புடைய காவற்கோபுரத்தை அவருக்குக் கொடுத்தேன். அந்தச் சிப்பாய் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘நீங்கள் யெகோவாவின் சாட்சியா?’ எனக் கேட்டார். ஆமாம் என பதில் சொன்னதும், ‘நீங்க இங்கயுமா இருக்கீங்க, என்னால துளிகூட நம்பவே முடியல்லையே!’ என பதிலளித்தார். ‘இந்த உலகத்தில சாட்சிகள் இல்லாத இடம் எங்காவது இருக்கா?’ என்ற கேள்வியையும் கேட்டார்.”
“இறை வார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு” என அப்போஸ்தலனாகிய பவுல் புத்திமதி கூறினார். (2 திமொத்தேயு [தீமோத்தேயு] 4:2, பொது மொழிபெயர்ப்பு) உலகத்திலுள்ள தங்கள் உடன் விசுவாசிகளைப் போலவே சரஜெவோவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளும் பிரசங்கிக்கிறார்கள்; ஆம், ஒவ்வொரு நோயாளிகளிடத்திலும், ஒவ்வொரு ஆயுதந்தாங்கிய காரில் இருப்பவர்களிடத்திலும் சென்று பிரசங்கிக்கிறார்களே!