உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 6/15 பக். 27-28
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இதே தகவல்
  • குடும்ப அளவை யார் தீர்மானிக்க வேண்டும்?
    விழித்தெழு!—1996
  • குடும்பக் கட்டுப்பாடு—கிறிஸ்தவ நோக்குநிலை
    விழித்தெழு!—1993
  • பகுதி 21: 1900 முதல்வஸ்திர ஓரங்களில் இரத்தக்கறை
    விழித்தெழு!—1991
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 6/15 பக். 27-28

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

ஸ்டெரிலைசேஷன் என்று அழைக்கப்படும் நிரந்தரமான கருத்தடை முறை, நிரந்தரமானதல்ல என்ற நிலை தற்சமயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே ஒரு கிறிஸ்தவன் இதை ஒரு குடும்பக் கட்டுப்பாட்டு முறை என்று கருதலாமா?

குடும்பக்கட்டுப்பாடு முறைகளில் ஸ்டெரிலைசேஷன் அல்லது மலடாக்குதல் என்ற முறையே மிக அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. சமுதாய மற்றும் கல்வி அடிப்படை, மதக்கருத்துக்கள் போன்றவையே இவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்களாக இருக்க வேண்டும் என்று அநேகர் கருதுகின்றனர். யெகோவாவின் சாட்சிகளைப் பொருத்தமட்டில் மத நம்பிக்கைகள் இந்த விஷயத்தில் என்ன சொல்கின்றன என்பது முக்கியம்; அவர்கள் சங்கீதக்காரனுடைய மனநிலையையே கொண்டிருக்கின்றனர், அவர் சொல்கிறார்: ‘கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] உமது வழியை எனக்குப் போதித்து செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.’ (சங்கீதம் 27:11) ஸ்டெரிலைசேஷன் முறைகளில் என்ன உட்பட்டிருக்கிறது?

குழந்தைப் பிறப்பைத் தடுக்க ஆண்கள் செய்துகொள்ளும் ஸ்டெரிலைசேஷன் முறைக்கு வாசக்டமி என்று பெயர். விரைப்பையில் இருக்கும் இரண்டு சிறிய விந்து குழாய்கள் வெட்டப்பட்டு விந்து செல்வது தடுக்கப்படுகிறது. இது அநேக மருத்துவ முறைகளில் செய்யப்படலாம்; இதன் நோக்கம் விரைகளிலிருந்து விந்து குழாய் மூலம் கடந்து சென்றுவிடக்கூடாது என்பதே. கருத்தடைக்காக பெண்கள் செய்துகொள்ளும் ஸ்டெரிலைசேஷன் முறைக்கு ட்யூபல் லிகேஷன் என்று பெயர். சூலகப்பையிலிருந்து கருமுட்டைகள் வெளியேறும் குழாய்களை வெட்டி பின் அவற்றை கட்டிவிடுவது (அல்லது தீய்த்துவிடுவது); இந்தக் குழாய்கள் வழியாகத்தான் சூலகப்பையிலிருந்து கருமுட்டைகள் கருப்பைக்கு செல்கின்றன.

இப்படிப்பட்ட முறைகள் நிரந்தரமான மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பதாகவே அநேக ஆண்டுகளாக நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், இப்படிப்பட்ட ஆப்ரேஷனை செய்த ஒரு சிலர் சூழ்நிலைகள் மாறியதன் காரணமாக இதற்காக வருத்தப்பட்டு மருத்துவர்களை அணுகி வாசக்டமி அல்லது ட்யூபல் லிகேஷனை மறுபடியும் ஆப்ரேஷன் செய்து பழைய நிலைக்கு கொண்டுவர விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். புதிய, தனித்தன்மை வாய்ந்த கருவிகளைக் கண்டுபிடித்திருப்பதாலும் நுண் அறுவைச் சிகிச்சை (microsurgery) முறைகளாலும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்காக செய்யப்படும் ஆப்ரேஷன்கள் வெற்றி பெறுகின்றன. ஆகவே, வாசக்டமி ஆப்ரேஷன் செய்துகொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மறுபடியும் ஆப்ரேஷன் செய்து விந்து குழாய்களை இணைத்ததில் 50 முதல் 70 சதவீதம்வரை வெற்றிகாண முடிந்தது என்பதாக நீங்கள் ஒருவேளை படித்திருக்கலாம். இதேபோல பெண்களைப் பொருத்தவரை ட்யூபல் லிகேஷன் ஆப்ரேஷன்களில் 60 முதல் 80 சதவீதம் வரை வெற்றி காண்பதாக உரிமை பாராட்டப்படுகிறது. ஆகவே, இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி கேள்விப்படும் ஒரு சிலர் ஸ்டெரிலைசேஷன் என்பது நிரந்தரமான கர்ப்பத்தடை முறை என்று நினைக்க வேண்டியதில்லை என்பதாக எண்ணுகின்றனர். குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள், கருத்தடை மூடி போன்றவற்றை உபயோகிப்பதை நிறுத்திக்கொள்வதைப்போலவே ஸ்டெரிலைசேஷன் முறைகளான வாசக்டமியையும் ட்யூபல் லிகேஷனையும் கருதலாம் என்றுகூட அவர்கள் நம்பலாம். ஆனால் சில தெளிவான உண்மைகளை அவர்கள் புறக்கணித்துவிட முடியாது.

ஒரு முக்கிய குறிப்பு, மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக செய்யப்படும் ஆப்ரேஷன் கீழ்க்கண்ட விஷயங்களை சார்ந்திருக்கின்றது. ஸ்டெரிலைசேஷன் செய்தபோது அந்தக் குழாய்கள் எந்தளவு பாதிப்படைந்தன, எந்தளவிற்கு அந்தக் குழாய்கள் வெட்டப்பட்டன அல்லது தீய்க்கப்பட்டன, ஆப்ரேஷன் செய்யப்பட்டு எத்தனை ஆண்டுகள் கடந்துள்ளன, ஒருவேளை வாசக்டமி செய்யப்பட்டிருந்தால் விந்திற்கு எதிராக அந்த ஆணுடைய உடலில் ஏற்கெனவே எதிர்ப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறதா போன்ற விஷயங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். நுண் அறுவைச் சிகிச்சை செய்யும் வசதி பல இடங்களில் இல்லை என்பதையும் அப்படியே இருந்தாலும் மிக அதிக செலவுபிடிக்கும் என்பதையும் மறந்துவிட முடியாது. ஆகவே, அநேகர் இப்படிப்பட்ட ஆப்ரேஷன் மூலம் ஸ்டெரிலைசேஷன் செய்ததை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவர விரும்பினாலும் அது முடியாத காரியம். அப்படிப்பட்டவர்களுக்கு ஸ்டெரிலைசேஷன் என்பது நிரந்தரமானது. a ஆகவே, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விகிதங்கள் எல்லாம் நடைமுறைக்கு ஏற்றவையல்ல, அவற்றை நம்பத்தக்க சராசரிகள் என்றும் எண்ண முடியாது.

சில உண்மைகளை எடுத்துக்காட்டும் அத்தாட்சிகள்: 12,000 டாலர் செலவு செய்து ஆப்ரேஷன் செய்துகொண்ட பிறகும் “63 சதவீதத்தினரால் மட்டுமே தங்கள் துணையை கர்ப்பமாக்க முடிந்தது” என்று ஐக்கிய மாகாணங்களில் மறுபடியும் ஆப்ரேஷன் செய்து வாசக்டமியை சரிசெய்வதைப் பற்றி பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரை குறிப்பிட்டது. மேலும், வாசக்டமி செய்துகொண்ட ஆண்களில் “ஆறு சதவீதத்தினர் மட்டுமே மறுபடியும் ஆப்ரேஷன் செய்து பழையபடி ஆகவேண்டும் என்று விரும்புகின்றனர்.” மத்திய ஐரோப்பாவைப் பற்றி அறிய ஜெர்மனி மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி ஸ்டெரிலைசேஷன் செய்துகொண்ட ஆண்களில் சுமார் 3 சதவீதத்தினர் மட்டுமே மறுபடியும் பழையநிலைக்கு வரவிரும்பி ஆப்ரேஷன் செய்துகொள்ள வந்தனர். அவர்களில் ஒருவேளை பாதிபேருக்கு ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டாலும், வாசக்டமி ஆப்ரேஷன் செய்துகொண்டவர்களில் 98.5 சதவீதத்தினர் நிரந்தரமான மலட்டுத்தன்மையையே அடைந்திருக்கின்றனர். நுண் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் மிகக் குறைவாக அல்லது இல்லாமலேயே இருக்கும் நாடுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

இதன் விளைவாக ஆண்கள் அல்லது பெண்கள் செய்துகொள்ளும் ஸ்டெரிலைசேஷன் முறைகளை தற்காலிக கருத்தடை முறைதான் என்று துச்சமாக நினைப்பது உண்மைக்குக் கண்களை மூடிக்கொள்வதற்கு ஒப்பாகும். அதே சமயத்தில் உண்மையுள்ள கிறிஸ்தவன் மற்ற உண்மைகளுக்கும் கவனம் செலுத்த வேண்டும்.

கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஒரு காரியம் இனவிருத்தி செய்யும் சக்தி கடவுளிடமிருந்து வந்த ஒரு பரிசாகும். பரிபூரண மானிடர்கள் ‘பலுகிப் பெருகி, பூமியை நிரப்ப வேண்டும்’ என்பது அவருடைய ஆரம்ப நோக்கம். (ஆதியாகமம் 1:28) உலக ஜனத்தொகையை ஜலப்பிரளயம் எட்டாக குறைத்தபோதும் இதே அடிப்படை கட்டளைகளை கடவுள் மறுபடியும் குறிப்பிட்டார். (ஆதியாகமம் 9:1) அதே கட்டளையை தேவன் இஸ்ரவேலர்களிடம் மறுபடியும் கூறவில்லை, ஆனாலும் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களது விருப்பம்.​—1 சாமுவேல் 1:1-11; சங்கீதம் 128:3.

மனித இனவிருத்தியைப் பற்றி கடவுள் எப்படிப்பட்ட மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கான அத்தாட்சிகளை கடவுள் இஸ்ரவேலருக்குக் கொடுத்த சட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணத்திற்கு ஒரு திருமணமான ஆண் தனது வாரிசாக ஒரு மகன் பிறப்பதற்கு முன்பு இறந்துவிட்டால் அவனுடைய தம்பி அவன் மனைவியை மணந்து அதன் மூலம் புத்திரசந்தானம் அளிக்க வேண்டும். (உபாகமம் 25:5) இரண்டு ஆண்கள் சண்டையிடும்போது தனது கணவனுக்கு உதவுவதற்காக முயற்சி எடுக்கும் ஒரு பெண்ணைப் பற்றி கொடுக்கப்பட்ட சட்டம் இதைப் பற்றி இன்னும் தெளிவாக விளக்குகிறது. அவள் தன்னுடைய கணவனுடைய எதிராளியின் மானத்தை கையை நீட்டி பிடித்தாளென்றால் அவளது கை வெட்டப்பட வேண்டும். கடவுள் இந்த விஷயத்தில் கண்ணுக்கு கண் என்ற முறையில் அவளுக்கோ அல்லது அவளது கணவனது இனவிருத்தி பாகங்களுக்கோ இழப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. (உபாகமம் 25:11, 12) இந்தச் சட்டம் இனவிருத்தி உறுப்புகளுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையை தெளிவாக்குகிறது; அவை தேவையின்றி அழிக்கப்படக்கூடாது.b

இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்கள் கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாது என்பது நமக்கு தெரியும், எனவே உபாகமம் 25:11, 12-ல் கொடுக்கப்பட்ட சட்டம் அவர்களுக்கு உரியதல்ல. இயேசு தம் சீஷர்கள் கட்டாயமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றோ எத்தனை பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடியுமோ அத்தனை பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றோ கட்டளையிடவில்லை அல்லது குறிப்பாகவும் சொல்லவில்லை. தாங்கள் கருத்தடை சாதனங்களை உபயோகிக்க வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும்போது அநேக கிறிஸ்தவர்கள் மேலே குறிப்பிட்ட இந்த நியமத்தைத்தான் ஆழ்ந்து யோசித்திருக்கின்றனர். (மத்தேயு 19:10-12) காமவிகாரமுடைய ‘இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப்பெறவும்’ வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். (1 தீமோத்தேயு 5:11-14) கிறிஸ்தவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக தங்களுக்கு இருக்கும் இனவிருத்தி செய்யும் சக்தியை மனமுவந்து அழித்துவிட்டு நிரந்தரமாக மலடாக வேண்டும் என்று சொல்லவில்லை.

இனவிருத்தி செய்யும் முறையைப் பற்றி கடவுள் எப்படிப்பட்ட எண்ணமுடையவராக இருக்கிறார் என்பதற்கு இந்தக் குறிப்புகள் கிறிஸ்தவர்களுக்கு உதவும். பொருத்தமான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை உபயோகிக்க வேண்டுமா, எப்போது உபயோகிக்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு தம்பதியும் சரியான முடிவு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் ஒருவேளை கர்ப்பமானால் அதனால் தாயோ அல்லது குழந்தையோ மிகப்பெரிய அபாயத்தை, ஒருவேளை இறந்தும் போகவேண்டிய நிலையை எதிர்ப்படுவார்கள் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட தீர்மானத்தை அவர்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையின்கீழ் சிலர் விருப்பமின்றி முன்பு குறிப்பிடப்பட்ட ஸ்டெரிலைசேஷன் செய்துகொண்டனர். இதனால் எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் கர்ப்பம் ஏற்பட்டு தாய் மரணமடைவதைத் தடுக்கவும் (இவருக்கு ஏற்கெனவே மற்ற பிள்ளைகள் இருந்திருப்பார்கள்) அல்லது பிறக்கும் குழந்தையின் உயிரை அபாயத்தில் வைக்கும் பிரச்சினையுடன் பிறந்துவிடாமல் இருக்கவும் அவ்விதம் செய்திருக்கின்றனர்.

வழக்கத்திற்கு மாறான, இப்படிப்பட்ட தெளிவாக தெரியும் அபாயத்தை எதிர்ப்படாத கிறிஸ்தவர்கள் ‘அறிவுத் தெளிவை’ பயன்படுத்த விரும்புவர். கடவுள் இனவிருத்தி செய்யும் ஆற்றலை எவ்விதம் மதிப்புடன் நோக்குகிறாரோ அதேவிதமாகவே தங்களுடைய யோசனைகளையும் நடத்தைகளையும் வைத்துக்கொள்வர். (1 தீமோத்தேயு 3:2; தீத்து 1:8; 2:2, 5-8, NW) பைபிள் குறிப்பிட்டுக்காட்டும் காரியங்களுக்கு முதிர்ந்த மதிப்பைக் காட்டுகிறார்கள் என்பதை இது சுட்டிக்காட்டும். ஆனால் ஒரு கிறிஸ்தவன் வேண்டுமென்றே கடவுளுடைய மதிப்பீடுகளை யோசனையற்ற முறையில் அசட்டை செய்தார் என்று அனைவருக்கும் தெரியவந்தால் அப்போது என்ன செய்வது? இப்படிப்பட்டவர் (ஆண் அல்லது பெண்) ஒரு நல்ல முன்மாதிரிதானா என்பதையும் பைபிளுக்கு இசைய தீர்மானங்கள் எடுப்பதற்கு திறமையானவர்தானா என்பதையும் மற்றவர்கள் சந்தேகிப்பார்கள் அல்லவா? ஒருவருடைய நற்பெயருக்கு இப்படிப்பட்ட களங்கம் ஏற்பட்டிருந்தால், அவர் சிறப்பான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் தகுதியை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை; ஒருவேளை அவர் அறியாமையால் இப்படிப்பட்ட ஆப்ரேஷனை செய்துவிட்டார் என்றால் அவரை இவ்வாறு நோக்க வேண்டிய அவசியமில்லை.​—1 தீமோத்தேயு 3:7.

a “விந்துக் குழாயை [வாஸ் டெஃபெரன்ஸ்] மறுபடியும் ஒன்று சேர்ப்பதற்கு செய்யப்படும் அறுவைச் சிகிச்சை முறைகளில் குறைந்தது 40 சதவீதம் வெற்றி பெறலாம். மேம்படுத்தப்பட்ட நுண் அறுவைச் சிகிச்சை மூலம் மேலும் அதிக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதற்கு சில அத்தாட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் ஸ்டெரிலைசேஷன் மூலம் செய்யப்படும் வாசக்டமி நிரந்தரமானது என்றுதான் கருதப்பட வேண்டும்.” (என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா) “ஸ்டெரிலைசேஷன் என்பது நிரந்தரமான மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு முறை என்றுதான் கருதப்பட வேண்டும். இதை மறுபடியும் ஆப்ரேஷன் செய்து சரிப்படுத்திவிடலாம் என்பதாக ஒருவர் கேள்விப்பட்டிருந்தாலும் ரிஅனஸ்டோமோஸிஸ் என்று அழைக்கப்படும், குழாய்களை மறுபடியும் இணைக்கும் முறை அதிக செலவு பிடிக்கும் ஒன்று, அதன் வெற்றிக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. பெண்களில் இவ்விதம் கருமுட்டைக் குழாயை திரும்ப சேர்ப்பதற்கு செய்யப்படும் ஆப்ரேஷனால் எக்டோபிக் கர்ப்பம் (புறக் கர்ப்பம்) ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.”​—கான்டெம்பரரி OB/GYN, ஜூன் 1998.

b இனவிருத்தி உறுப்புகள் சேதப்படுத்தப்பட்ட எவனும் தேவனுடைய சபைக்குள் வரக்கூடாது என்று சொல்லப்பட்ட சட்டம் இதற்கு தொடர்புடையதைப்போல் தோன்றலாம். (உபாகமம் 23:1) ஆனால், வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், இந்தக் காரியம் “ஆண்புணர்ச்சி போன்ற ஒழுக்கக்கேடான செயல்களை செய்வதற்காக வேண்டுமென்றே காயடித்து வீரியமற்றதாக ஆக்குவதைக் குறிக்கிறது” என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அந்தச் சட்டம் காயடிப்பதைப் பற்றியோ அல்லது கருத்தடைக்கு சமமான ஒன்றைப் பற்றியோ குறிப்பிடவில்லை. “அண்ணகர்களை தன்னுடைய ஊழியர்களாக ஏற்றுக்கொள்ளும் சமயத்தைப் பற்றி யெகோவா ஆறுதலளிக்கும் விதத்தில் முன்னுரைத்தார். அவர்கள் கீழ்ப்படிதலுடன் நடந்துகொண்டால் மகன்களுக்கும் மகள்களுக்கும் இருக்கும் பெயரைவிட சிறந்த பெயரைப் பெற்றுக்கொள்வார்கள். இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நீக்கியதால் எல்லோருமே, அவர்கள் முன்பு எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி விசுவாசத்துடன் நடந்துகொண்டால் கடவுளுக்கு புத்திரராகும் வாய்ப்பு திறந்து வைக்கப்பட்டது. எல்லாவிதமான உடல் சம்பந்தமான வேறுபாடுகளும் நீக்கப்பட்டன” என்று உட்பார்வை தொடர்ந்து குறிப்பிடுகிறது.​—ஏசா 56:4, 5; யோவா 1:12.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்