ஏதோஸ் மலை—“பரிசுத்த மலை”யா?
ஏதோஸ் மலை—“ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைச் சேர்ந்த 22 கோடி அங்கத்தினர்களுக்கு மிகவும் பரிசுத்த மலை.” இது, வட கிரீஸிலுள்ள கரடுமுரடான மேட்டுநிலப் பகுதி. ஏதோஸிலுள்ள “பரிசுத்த மலை”க்கு யாத்திரை சென்றுவர வேண்டும் என்பது பெரும்பாலானோருடைய ஓர் ஆசை கனவு. இந்தப் “பரிசுத்த மலை” என்ன? இது எப்படி “மலையளவு” பிரபலமானது? இது, கடவுள் பயமுள்ள மக்கள் ஆவிக்குரிய வழிநடத்துதலுக்கும் மெய் வழிபாட்டிற்கும் நாடிச் செல்ல வேண்டிய “மலை”யா?
“பரிசுத்த மலை”—இந்த வார்த்தை பைபிளில் இருக்கிறது. இது, மெய் கடவுளாகிய யெகோவாவின் பரிசுத்தமும், தூய்மையும் மகிமையும் பொருந்திய வணக்கத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. உடன்படிக்கைப் பெட்டியை தாவீது ராஜா எருசலேமுக்கு கொண்டுவந்தபோது, சீயோன் மலை ‘பரிசுத்த மலையானது.’ (சங்கீதம் 15:1; 43:3; NW; 2 சாமுவேல் 6:12, 17) மோரியா மலையில் சாலொமோனின் ஆலயம் கட்டப்பட்ட பிறகு, ஆலயம் இருந்த இடமும் “சீயோன்” என அழைக்கப்பட்டது. இவ்வாறு, சீயோன் கடவுளுடைய ‘பரிசுத்த மலையானது.’ (சங்கீதம் 2:6; யோவேல் 3:17) கடவுளுடைய ஆலயம் எருசலேமில் இருந்ததால், சிலசமயங்களில் அந்தப் பட்டணமும் ‘பரிசுத்த மலை’ என்றே அழைக்கப்பட்டது.—ஏசாயா 66:20; தானியேல் 9:16, 20.
நம்முடைய நாளைப் பற்றியென்ன? கடவுள் விரும்பத்தக்க விதத்தில் அவரை வணங்க வெள்ளம் போல மக்கள் திரண்டு செல்ல வேண்டிய இடம் “பரிசுத்த மலை” என அழைக்கப்படும் இந்த ஏதோஸ் மலையா—அல்லது வேறேதாவது ஒரு சிகரமா?
“பரிசுத்த மலை”—ஒரு துறவி மடம்
சால்சிடைஸ் தீபகற்பத்தின் கிழக்கு கோடியில்தான் ஏதோஸ் மலை கம்பீரமாக நிற்கிறது. இது, நவீனகால தெசலோனிகியின் கிழக்கிலுள்ள ஏஜியன் கடலுக்குள் நீண்டு செல்லும் குறுகிய நிலத்தின் முனையில் இருக்கிறது. இது மனதை கொள்ளைகொள்ளும் பளிங்குக்கல் முகடு. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 6,667 அடி உயரத்தில் செங்குத்தாக உயர்ந்தோங்கி நிற்கிறது.
வெகு காலமாகவே ஏதோஸ் மலை ஓர் புனித ஸ்தலமாக கருதப்பட்டு வருகிறது. கிரேக்க புராண கதையின்படி, ஒலிம்பஸ் மலை வாசஸ்தலமாவதற்கு முன்பு ஏதோஸ் மலையே தெய்வங்களின் வீடாக விளங்கியது. மகா கான்ஸ்டன்டைனுக்குப் பிறகு (பொ.ச. நான்காம் நூற்றாண்டு), கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கு ஏதோஸ் மலை பரிசுத்த மலையானது. லாசருவை சந்திப்பதற்காக சுவிசேஷகனாகிய யோவானுடன் “கன்னி” மரியாள் சைப்ரஸ் வழியாக சென்றார், திடீரென ஏற்பட்ட பயங்கர புயலின் காரணமாக ஏதோஸில் தரையிறங்கினார்—இப்படியாக ஒரு கட்டுக்கதை சொல்கிறது. அந்த மலையின் அழகில் மயங்கி, இயேசுவிடம் அதை கேட்டார். அதனால், ஏதோஸ் மலை “புனித கன்னியின் தோட்டம்” எனவும் அழைக்கப்பட்டது. பைசான்டியன் காலத்தின் மத்திபத்திற்குள், இந்த முழு மலையும் பரிசுத்த மலை என அறியப்படலாயிற்று. இந்தப் பட்டப்பெயர் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒன்பதாம் கான்ஸ்டன்டைன் பேரரசராகிய மோநாமேக்கஸ் விடுத்த கட்டளையால் 11-ம் நூற்றாண்டின் மத்திபத்தில் உறுதி செய்யப்பட்டது.
இது கரடுமுரடாகவும் ஒதுக்குப்புறமாகவும் இருந்ததால், ஏதோஸ் மலை துறவறத்திற்கு ஏற்ற ஓர் இடமானது. நூற்றாண்டுகளாக ஆர்த்தடாக்ஸ் உலகம் முழுவதிலுமுள்ள ஆண் பக்தர்களை—கிரேக்கரையும் செர்பியரையும் ருமேனியரையும் பல்கேரியரையும் ரஷ்யரையும் இன்னும் பிறரையும்—இது கவர்ந்தது. இவர்கள் தங்களுடைய சர்ச்சுகள் மற்றும் சமுதாயத்தோடு சேர்ந்து அநேக துறவி மடங்களை கட்டினார்கள். இவற்றில் இன்னும் 20 துறவிமடங்கள் இருக்கின்றன.
இன்று ஏதோஸ் மலை
இன்று ஏதோஸ், 1926-ல் உறுதிசெய்யப்பட்ட சாசனத்தைக் கொண்ட சுதேச்சையான ஒரு பகுதி. பல வருடகால வீழ்ச்சிக்குப்பின், அங்குள்ள துறவிகளின் எண்ணிக்கை 2,000-க்கும் மேலாக உயர்ந்துவிட்டது.
ஒவ்வொரு துறவிமடத்திற்கும் சொந்தமாக பண்ணைகளும் கோவில்களும் தங்குமிடங்களும் இருக்கின்றன. துறவிகளின் முக்கிய வசிப்பிடம் காரூல்யா என்ற குடியிருப்பில் உள்ளது. இது ஏதோஸ் மலை உச்சியில் செங்குத்தான சிகரத்தில் அமைந்துள்ளது. இங்கு தனித்தனி குடில்கள் தொகுதி தொகுதியாக உள்ளன, இவற்றை ஒத்தையடி பாதைகள் வாயிலாகவும் கல் படிக்கட்டுகள் வாயிலாகவும் சங்கிலிகள் வாயிலாகவும் மாத்திரமே அடைய முடியும். ஏதோஸ் மலையில் இன்றும் அந்த மடத்துறவிகள் தங்களுடைய அன்றாட சமயச்சடங்கை அனுசரிக்கிறார்கள். பைசான்டைன் கடிகாரத்தையும் (அதாவது, சூரிய அஸ்தமனத்தில் அந்த நாளை ஆரம்பிக்கிறார்கள்) ஜூலியன் நாட்காட்டியையும் (கிரிகோரியன் நாட்காட்டியிலிருந்து 13 நாட்கள் பிந்தியது) பயன்படுத்துகிறார்கள்.
இந்த ஸ்தலத்தின் “பரிசுத்தத்திற்கு” மரியாளே காரணம் என சொல்லப்படுகிறபோதிலும், மனிதரிலும் மிருகங்களிலும் பெண் உயிர்கள் எதுவும், அண்ணகர்களும், தாடியில்லாதவர்களும் இந்த முழு தீபகற்பத்திற்குள்ளும் வரக்கூடாது என 1,000 ஆண்டுகளாக அங்குள்ள துறவிகளும் சன்னியாசிகளும் கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். சமீப காலத்தில், தாடியில்லா மனிதர்களுக்கும் சில பெண் விலங்குகளுக்கும் இந்தக் கட்டுப்பாட்டை தளர்த்தியிருக்கிறார்கள். ஆனால் பெண்கள் கண்டிப்பாக ஏதோஸ் கரையிலிருந்து 500 மீட்டரைத் தாண்டி உள்ளே வரக்கூடாது என தடை விதித்திருக்கிறார்கள்.
அனைவருக்கும் “பரிசுத்த மலை”
“பரிசுத்த மலை”யாகிய ஏதோஸ் மலை கடவுள் பயமுள்ள கிறிஸ்தவர்கள் வழிபாட்டிற்காக செல்ல வேண்டிய இடமா? கெரிசீம் மலையில் கடவுளை வணங்க வேண்டும் என்று நம்பிய சமாரிய ஸ்திரீயிடம் பேசுகையில், சொல்லர்த்தமான எந்த மலையும் இனிமேலும் கடவுளை வணங்குவதற்குரிய இடமாக இருக்காது என்பதை இயேசு தெளிவுபடுத்தினார். “காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபட மாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார். ஏன்? ‘தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்கிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.’—யோவான் 4:21 (பொ.மொ.), 24.
நம்முடைய நாளை குறிப்பிட்டு சொல்கையில், “கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்.” எல்லா ஜனங்களும், அடையாள அர்த்தத்தில், அதற்கு ஓடிவருவார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தார்.—ஏசாயா 2:2, 3.
கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்புகிற ஆண்களும் பெண்களும் யெகோவாவை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்கும்படி அழைக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதிலுமுள்ள லட்சோப லட்சம்பேர் ‘கர்த்தருடைய பர்வதத்திற்கு’ போகும் வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களும் மற்றவர்களும் கிரேக்க வழக்குரைஞரின் உணர்ச்சிகளை எதிரொலிக்கிறார்கள். ஏதோஸ் பற்றி அவர் இவ்வாறு சொன்னார்: “ஆன்மீகம் என்பது நான்கு சுவர்களுக்கு மத்தியிலோ அல்லது துறவிமடங்களிலோ மாத்திரமே கிடைக்கக்கூடிய ஒன்றா என்பது எனக்கு சந்தேகமாயிருக்கிறது.”—ஒப்பிடுக: அப்போஸ்தலர் 17:24.
[பக்கம் 31-ன் பெட்டி]
நெடுநாளாக மறைந்திருந்த பொக்கிஷம்
நூற்றாண்டுகளாக, ஏதோஸ் துறவிகள் மதிப்புமிக்க ஒன்றை திரட்டியிருக்கிறார்கள். அதில் 15,000 கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. இது, நான்காம் நூற்றாண்டிற்குரியது என சிலர் சொல்கின்றனர். இது உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க பொருட்களில் ஒன்றாகும். இவற்றில் சுருள்களும், சுவிசேஷங்களின் முழு தொகுப்புகளும் சில ஏடுகளும், சங்கீதங்களும் துதிப்பாடல்களும் இருக்கின்றன. இவற்றை தவிர, மிகப் பழமையான ஓவியங்களும், உருவச் சிலைகளும், சிற்ப வேலைப்பாடுகளும், உலோக வேலைப்பாடுகளும் உள்ளன. உலகிலுள்ள கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் நான்கில் ஒரு பாகத்தை ஏதோஸ் மலை வைத்திருக்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை சரியான விதத்தில் தொகுக்கப்பட வேண்டும். 1997-ல், தெசலோனிகியில் அந்தத் துறவிகள் தங்களுடைய பொக்கிஷங்களை முதல் முறையாக காட்சிக்கு வைத்தார்கள்.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Telis/Greek National Tourist Organization