124-வது கிலியட் பள்ளிப் பட்டமளிப்பு விழா
மிஷனரிகள் வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள்
உவாட்ச்டவர் கிலியட் பள்ளியின் பட்டமளிப்பு விழா ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அமெரிக்காவிலுள்ள பெத்தேல் குடும்பத்தினர் அனைவருக்குமே வரவேற்பு அளிக்கப்படுகிறது. மார்ச் 8, 2008 அன்று, 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் பெத்தேல் குடும்பத்தாரோடு சேர்ந்து இந்த 124-வது கிலியட் பள்ளிப் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்தனர். மாணவர்களுக்குப் பொன்னாளான அந்த நன்னாளை, கூடிவந்திருந்த 6,411 பேரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆளும் குழுவின் உறுப்பினரான சகோதரர் ஸ்டீவன் லெட் இந்நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கினார். “அடையாள அர்த்தமுள்ள வெட்டுக்கிளிகளோடு சேர்ந்து செல்லுங்கள்” என்ற தலைப்பில் அவர் ஆரம்பப் பேச்சை அளித்தார். வெளிப்படுத்துதல் 9:1-4-ல், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சிறிய தொகுதியினர் வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கு ஒப்பிடப்படுகிறார்கள். வெட்டுக்கிளிகள் திடீரெனக் கிளம்புவதைப்போல அவர்கள் 1919-ல் மீண்டும் சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்தார்கள். ‘வேறே ஆடுகளின்’ அங்கத்தினர்களாகிய இந்த கிலியட் மாணவர்கள் அடையாள அர்த்தமுடைய அந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தோடு சேர்ந்திருக்கிறார்கள் என்பதை அவர் நினைப்பூட்டினார்.—யோ. 10:16.
அதைத் தொடர்ந்து, அமெரிக்க கிளை அலுவலகக் குழு உறுப்பினரான லான் ஷில்லிங், “சேர்ந்து செயல்படுங்கள்” என்ற தலைப்பில் பேசினார். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ தம்பதியரான ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் பற்றிய பைபிள் உதாரணத்தின் அடிப்படையில் அப்பேச்சைக் கொடுத்தார். (ரோ. 16:3, 4) கிலியட் பள்ளியில் மொத்தம் 28 தம்பதியர் இருந்தனர். தங்களுக்கு நியமிக்கப்பட்ட மிஷனரி வேலையைத் திறம்படச் செய்வதற்குத் திருமண பந்தத்தைப் பலமாக வைத்திருப்பது அவசியம் என்று அந்தப் பேச்சில் அவர்களுக்கு நினைப்பூட்டப்பட்டது. பைபிளில் ஆக்கில்லாவின் பெயர் எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம் பிரிஸ்கில்லாளின் பெயரும் இணைந்தே வருகிறது. ஆகவே, அப்போஸ்தலன் பவுலும் சபையாரும் அவர்களைத் தம்பதியராகவே கணக்கில் எடுத்துக்கொண்டார்கள் என்பது தெளிவாகிறது. அதுபோல, மிஷனரி தம்பதியரும் சேர்ந்தே வேலைசெய்ய வேண்டும், சேர்ந்தே யெகோவாவை வழிபட வேண்டும், வெளி நாட்டில் சேவை செய்யும்போது எதிர்ப்படும் பிரச்சினைகளைச் சேர்ந்தே சமாளிக்க வேண்டும். இவ்வாறு, தம்பதியர் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும்.—ஆதி. 2:18.
அடுத்ததாக, ஆளும் குழு உறுப்பினரான சகோதரர் கை பியர்ஸ், “யெகோவா செய்த நன்மைகளுக்குக் கைமாறாக நன்மை செய்யுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். நல்லவர்களாய் இருப்பதற்கு, கெட்ட காரியங்களைச் செய்யாமல் இருந்தால் மட்டுமே போதாது; மற்றவர்களுக்கு நன்மை தருகிற நல்ல காரியங்களைச் செய்யவும் வேண்டும் என்பதை அவர் விளக்கிக் காட்டினார். நற்குணத்தில், அதாவது நல்லது செய்வதில் யெகோவா தேவனுக்கு நிகர் அவரே. (சகரியா 9:16, 17, NW) மற்றவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்ய கடவுளுடைய நற்குணமும் அன்பும் நம்மைத் தூண்டும். உரையின் முடிவாக, “நீங்கள் நல்லதையே செய்து வந்திருக்கிறீர்கள். வருங்காலத்தில் எந்தெந்த சேவைகளில் யெகோவா தேவன் உங்களை நியமித்தாலும் அவர் செய்த நன்மைகளுக்குக் கைமாறாகத் தொடர்ந்து நல்லதையே செய்வீர்கள் என நாங்கள் நம்புகிறோம்” என்று கூறி மாணவர்களைப் பாராட்டினார்.
அடுத்ததாக, முன்னாள் மிஷனரியும் சமீபத்தில் கிலியட் போதனையாளராக நியமிக்கப்பட்டவருமான மைக்கல் பர்னட், “கண்களுக்கு நடுவாக இருக்கும் நெற்றிப்பட்டமாக இதை அணிந்துகொள்ளுங்கள்” என்ற தலைப்பில் பேச்சு கொடுத்தார். யெகோவா தங்களை எகிப்திலிருந்து அற்புதமாய் மீட்டதை நினைத்துப் பார்ப்பதற்கு இஸ்ரவேலர் “ஒரு நெற்றிப்பட்டத்தை” அணிய வேண்டியிருந்தது. (யாத். 13:16, NW) மாணவர்கள் கிலியட் பள்ளியிலிருந்து பெற்ற ஏராளமான அறிவுரைகளை நினைத்துப் பார்ப்பதற்கு அவற்றைத் தங்களுடைய கண்களுக்கு நடுவே நெற்றிப்பட்டமாக அணிந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். தங்களுக்கும் சக மிஷனரிகளுக்கும் இடையிலோ, அல்லது தங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலோ கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அவற்றைச் சரிசெய்கையில் தாழ்மையோடும் பணிவோடும் பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதன் அவசியத்தை சகோதரர் பர்னட் வலியுறுத்தினார்.—மத். 5:23, 24.
நீண்ட காலமாகவே கிலியட் போதனையாளராக இருக்கும் மார்க் நூமர், “உங்களைப் பற்றி என்ன பாடல் பாடப்படும்?” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். பைபிள் காலங்களில், போரில் பெற்ற வெற்றியைப் பாடல் பாடிக் கொண்டாடுவது வழக்கமாய் இருந்தது. அவ்வாறு பாடப்பட்ட ஒரு பாடல், ரூபன், தாண், ஆசேர் கோத்திரத்தார் போரில் இறங்க மனமில்லாமல் சோம்பேறிகளாய் இருந்ததை வெட்டவெளிச்சமாக்குகிறது; அதே சமயத்தில் செபுலோன் கோத்திரத்தார் போர் முனையில் தங்களுடைய உயிரையும் பணயம் வைக்குமளவுக்குத் துணிந்து நின்றதற்குப் புகழாரம் சூட்டுகிறது. (நியா. 5:16–18) ஒரு பாடலின் வரிகளைப்போல, ஒவ்வொரு கிறிஸ்தவருடைய செயல்களும் மற்றவர்களுக்கு நன்கு தெரியவரும். ஒருவர் ஊழியத்தில் பக்திவைராக்கியத்தோடு ஈடுபடுவதும், அமைப்பு மூலமாகக் கொடுக்கப்படும் அறிவுரைகளின்படி எப்போதும் நடப்பதும் யெகோவாவுடைய மனதைக் குளிர்விக்கிறது; அதோடு, மற்ற சகோதரர்களுக்கு அது சிறந்த முன்மாதிரியாகவும் அமைகிறது. சபையிலுள்ள மற்றவர்கள் நம் செயல்களைப் பார்க்கும்போது, அவ்வாறே செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கும் ஏற்படுகிறது.
இந்த 124-வது வகுப்பு மாணவர்கள், கிலியட் பயிற்சியின் பாகமான பிரசங்க வேலையில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 3,000 மணிநேரத்தைச் செலவிட்டார்கள். அதனால் நிறைய அனுபவங்களையும் பெற்றார்கள்; இவற்றில் பலவற்றை, “பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றுங்கள்” என்ற தலைப்பில் சகோதரர் சாம் ராபர்சன் அளித்த பேச்சின்போது விவரித்தார்கள், சிலவற்றை நடித்துக்காட்டினார்கள். சகோதரர் சாம் ராபர்சன் தேவராஜ்யப் பள்ளிகள் துறையைச் சேர்ந்தவர். ஆர்வத்தைத் தூண்டும் இந்த அனுபவங்களைக் கேட்ட பிறகு, அமெரிக்க கிளை அலுவலகக் குழு அங்கத்தினரான பேட்ரிக் லாஃப்ராங்கா தற்போது பல்வேறு நாடுகளில் சேவை செய்கிற கிலியட் பட்டதாரிகளைப் பேட்டி கண்டார். அவர்களிடமிருந்து பெற்ற நடைமுறையான ஆலோசனைகளை மாணவர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர்.
“பார்க்கிற காரியங்கள் நிலையற்றவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் சகோதரர் ஆந்தணி மாரிஸ் கடைசியாகப் பேசினார். இன்று நாம் அனுபவிக்கிற எந்தவொரு உபத்திரவத்தின் மீதும் கவனம் செலுத்தாமல் எதிர்காலத்தில் யெகோவா தரும் ஆசீர்வாதங்கள்மீது கவனம் செலுத்தும்படி பைபிள் நமக்கு ஆலோசனை வழங்குகிறது. (2 கொ. 4:16–18) கடும் ஏழ்மை, அநீதி, கொடுமை, வியாதி, சாவு இவை யாவும் இன்று நாம் பார்க்கிற நிஜங்கள். இதுபோன்ற சில விபரீதங்கள் மிஷனரிகளுக்கு நேரிடலாம். ஆனால், இவை நிலையானவை அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ளும்போது வாழ்க்கையில் எப்போதும் யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க முடியும், நம்பிக்கையோடிருக்கவும் முடியும்.
பட்டதாரிகள் அனைவரும் மேடையில் அமர்ந்திருக்க, சகோதரர் ஸ்டீவன் லெட் சொன்ன முடிவான குறிப்புகளுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. தங்களுடைய நம்பிக்கையை விட்டுவிடாதபடி மாணவர்களை உற்சாகப்படுத்திய அவர், “யெகோவா நம் பக்கம் இருந்தால், நமது உத்தமத்தன்மையை எதுவும் முறித்துப்போட முடியாது” என்று கூறினார். வெட்டுக்கிளிகளைப்போல யெகோவாவுடைய சேவையில் தொடர்ந்து முன்னேறும்படி இந்தப் புதிய மிஷனரிகளை அவர் உற்சாகப்படுத்தினார். பக்திவைராக்கியத்தோடும், உண்மையோடும் கீழ்ப்படிதலோடும் தொடர்ந்து நிலைத்திருக்கும்படியும் அவர்களை அறிவுறுத்தினார்.
[பக்கம் 30-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 7
அனுப்பப்பட்ட நாடுகள்: 16
மாணவர்களின் எண்ணிக்கை: 56
சராசரி வயது: 33.8
சத்தியத்தில் சராசரி ஆண்டுகள்: 18.2
முழுநேர ஊழியத்தில் சராசரி ஆண்டுகள்: 13.8
[பக்கம் 31-ன் படம்]
உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியில் பட்டம் பெறும் 124-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னாகவும், அவற்றில் பெயர்கள் இடமிருந்து வலமாகவும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) நிக்கல்சன், டி.; மேன், எச்.; செங்கே, ஒய்.; ஸ்னேப், எல்.; வனேகாஸ், சி.; போ, எல். (2) சன்டானா, எஸ்.; ஓ, கே.; லமட்ரா, சி.; வில்லியம்ஸ், என்.; அலிக்ஸாண்டர், எல். (3) உட்ஸ், பி.; ஸ்டேன்டன், எல்.; ஹன்ட்லி, ஈ.; அல்வரெஸ், ஜி.; க்ரூஸ், ஜே.; பெனட், ஜே. (4) வில்லியம்சன், ஏ.; கான்சாலேஸ், என்.; ஸூராஸ்கி, ஜே.; டஹாண்ட், ஐ.; மே, ஜே.; டையம்மி, சி.; ட்டாவனர், எல். (5) லமட்ரா, டபிள்யு.; ஹாரிஸ், ஏ.; வெல்ஸ், சி.; ராஜர்ஸ், எஸ்.; டரன்ட், எம்.; செங்கே, ஜே. (6) ஹன்ட்லி, டி.; வனேகாஸ், ஏ.; போ, ஏ.; சன்டானா, எம்.; பெனட்., வி.; ட்டாவனர், டி.; ஓ, எம். (7) ஸூராஸ்கி, எம்.; ராஜர்ஸ், ஜி.; டையம்மி, டி.; நிக்கல்சன், எல்.; அல்வரெஸ், சி.; ஸ்னேப், ஜே. (8) ஹாரிஸ், எம்.; கான்சாலேஸ், பி.; மேன், எஸ்.; உட்ஸ், எஸ்.; ஸ்டேன்டன், பி.; வில்லியம்சன், டி.; டரன்ட் ஜே. (9) க்ரூஸ், பி.; டஹாண்ட், பி.; வில்லியம்ஸ், டி.; வெல்ஸ், எஸ்.; அலிக்ஸாண்டர், டி.; மே, எம்.
[பக்கம் 32-ன் படம்]
கிலியட் பள்ளி, உவாட்ச்டவர் கல்வி மையத்தில் அமைந்துள்ளது