புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல்
“கடவுளுடைய ஆழமான விஷயங்களை தேடுதல்.” இதுவே செப்டம்பர் 1999-ல் துவங்கும் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரலின் பொருள். (1 கொ. 2:10, NW) மதிப்புமிக்க என்ன விஷயங்களை நாம் கற்றுக்கொள்வோம்?
அறிவு தாகத்தைத் தீர்த்துக்கொள்ள அநேகர் தேடியலைகின்றனர். ஆனால் தாங்கள் கண்டுபிடிப்பதில் புத்துணர்ச்சியையோ திருப்தியையோ அடைவதில்லை. பைபிள் நமக்கு புதுவலுவூட்டுகிறது. “கடவுளுடைய வார்த்தையை தேடுவது புத்துணர்ச்சியளிக்கிறது” என்ற பேச்சில் வட்டாரக் கண்காணி நமக்கு விளக்கிக் காட்டுவார். “ராஜ்ய பிரசங்கிப்பை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், தேவனுடைய ஆழங்களை ஆராய்வதற்கும் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கும் இடையேயுள்ள தொடர்பை சிறப்பு பேச்சாளர் அழகாக விவரிப்பார்.
கடவுளுடைய வார்த்தையை ஆழமாக தோண்டி ஆராய பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம்? “உங்களுடைய பிள்ளைகளின் மனதில் கடவுளுடைய வார்த்தையை ஆழமாக பதியவையுங்கள்” என்ற பகுதியில் நடைமுறையான குறிப்புகள் வழங்கப்படும். கிறிஸ்தவ இளைஞர் ஆரோக்கியமான வழியில் நடக்க சபையிலுள்ள ஆவிக்குரிய முதிர்ச்சிவாய்ந்தவர்களின் கூட்டுறவு உதவுகிறது. “முதிர்ந்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் இளைஞர்கள்” என்ற பகுதியில், இது எவ்வாறு அவர்கள்மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது சிறப்பித்துக் காட்டப்படும்.
மறைந்திருக்கும் ஆவிக்குரிய பொக்கிஷத்தை இச்சமயத்தில் நாம் ஏன் ஊக்கமாக ஆராய வேண்டும்? யெகோவாவே இரகசியங்களை வெளிப்படுத்துபவர். “ஆழமான விஷயங்களை யெகோவா படிப்படியாக வெளிப்படுத்துகிறார்” என்ற பேச்சில், பூர்வ காலங்களிலும் நவீன காலங்களிலும் யெகோவா எதை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை சிறப்புப் பேச்சாளர் விளக்குவார். தொடர்ந்து ‘கடவுளுடைய ஆழமான விஷயங்களை தேடும்’ நம் தீர்மானத்தை இது பலப்படுத்தும்.
மாநாட்டில் கலந்து கொள்ள இப்பொழுதே திட்டமிடுங்கள். முழுக்காட்டுதல் மூலம் தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை காண்பிக்க விரும்புவோர் விரைவில் நடத்தும் கண்காணியிடம் அறிவிக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தையை துருவி ஆராயும் நம் உள்ளப்பூர்வமான ஆவல் நாம் கேட்கும் விஷயங்களால் பலப்படுத்தப்படும். ஆகவே, ஆவிக்குரிய போதனை அளிக்கும் இந்த விசேஷ தினத்தை தவற விட்டுவிடாதீர்கள்!