ஆன்மீக பலத்தோடிருக்க உதவும் ஊழியம்
1. பிரசங்க வேலை நமக்கு என்ன நன்மைகளைத் தருகிறது?
1 பிரசங்க வேலையில் நாம் மும்முரமாக ஈடுபடும்போது ஆன்மீக ரீதியில் பலம் கிடைக்கும், அதிக சந்தோஷமும் கிடைக்கும். நாம் யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காகவே முக்கியமாக ஊழியம் செய்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், ‘கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்க’ வேண்டுமென்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவதால் நாம் யெகோவாவின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம், மற்ற நன்மைகளையும் பெறுகிறோம். (2 தீ. 4:2; ஏசா. 48:17, 18) பிரசங்க வேலை நமக்கு எவ்விதத்தில் பலத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது?
2. ஊழியம் எவ்விதங்களில் நம்மைப் பலப்படுத்துகிறது?
2 நமக்குப் பலமும் ஆசீர்வாதங்களும் கிடைக்கின்றன: பிரசங்க வேலை, இன்றுள்ள வேதனைகளைப் பற்றியே சிந்திப்பதற்குப் பதிலாக கடவுளுடைய அரசாங்கத்தால் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றிச் சிந்திக்க நம்மைத் தூண்டுகிறது. (2 கொ. 4:18) பைபிள் போதனைகளைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிக்கும்போது, யெகோவாவின் வாக்குறுதிகள் மீதுள்ள நம் நம்பிக்கை பலப்படுகிறது, சத்தியத்தின் மீதுள்ள நம் போற்றுதலும் அதிகரிக்கிறது. (ஏசா. 65:13, 14) மற்றவர்கள் ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்து ‘இந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருக்க’ நாம் அவர்களுக்கு உதவுகையில், இந்த உலகத்திலிருந்து விலகியிருக்க வேண்டுமென்ற நம் தீர்மானம் மேலும் உறுதிப்படுகிறது.—யோவா. 17:14, 16; ரோ. 12:2.
3. கிறிஸ்தவக் குணங்களை வளர்த்துக்கொள்ள ஊழியம் நமக்கு எப்படி உதவுகிறது?
3 கிறிஸ்தவக் குணங்களை வளர்த்துக்கொள்ள ஊழியம் நமக்கு உதவுகிறது. உதாரணத்திற்கு, நாம் ‘எல்லாருக்கும் எல்லாமாவதற்கு’ முயற்சி செய்யும்போது இன்னுமதிக மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்கிறோம். (1 கொ. 9:19-23) ‘மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும்’ இருப்போருக்கு நாம் சாட்சி கொடுக்கையில், இரக்கத்தையும் அனுதாபத்தையும் காட்ட கற்றுக்கொள்கிறோம். (மத். 9:36) மக்கள் ஆர்வம் காட்டாதபோதும், ஒருவேளை எதிர்க்கிறபோதும்கூட நாம் ஊழியத்தை விடாமல் செய்கையில் சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொள்கிறோம். மற்றவர்களுக்காக நம்மையே கொடுக்கும்போது அதிக ஆனந்தத்தை அடைகிறோம்.—அப். 20:35.
4. உங்கள் ஊழியத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
4 நம் வணக்கத்தைப் பெறத் தகுதியுள்ள ஒரே கடவுளுக்குப் புகழ் சேர்க்கும் ஊழியத்தைச் செய்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஆம், ஊழியம் நம்மைப் பலப்படுத்துகிறது. ‘நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுப்பதில்’ முழுமூச்சுடன் ஈடுபடுவோருக்கு அது ஆசீர்வாதங்களை அள்ளித் தருகிறது.—அப். 20:24.