சரியாக வாசிக்கத் தெரியாதவர்களுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தல்
1. ஊழியத்தில் என்ன சவாலை எதிர்ப்படுகிறோம்?
1 சரியாக வாசிக்கத் தெரியாதவர்களைச் சிலசமயங்களில் நாம் ஊழியத்தில் சந்திக்கிறோம்; அவர்களுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கும் சவாலை எதிர்ப்படுகிறோம். இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கலாம்?
2. சரியாக வாசிக்கத் தெரியாதவர்களை எப்படிக் கண்ணியமாக நடத்துகிறோம், ஏன்?
2 அவர்களைக் கண்ணியமாக நடத்துங்கள்: ஒருவருடைய படிப்பை அல்ல, அவருடைய இருதயத்தைத்தான் யெகோவா பார்க்கிறார். (1 சா. 16:7; நீதி. 21:2) எனவே, சரியாக வாசிக்கத் தெரியாதவர்களை நாம் மட்டமாகக் கருதுவதில்லை. அவர்களிடம் மதிப்பு மரியாதையோடும் பொறுமையோடும் நடந்துகொள்ளும்போது நம் உதவியை ஏற்றுக்கொள்ள அவர்கள் அதிக மனமுள்ளவர்களாய் இருப்பார்கள். (1 பே. 3:15) ஆகவே, ஒரு வசனத்தையோ பாராவையோ வாசிக்கச் சொல்லி அவர்களை வற்புறுத்தாதிருப்பது நல்லது. அருமையான பைபிள் சத்தியங்களை அவர்கள் அதிகமதிகமாகத் தெரிந்துகொள்ளும்போது சரளமாக வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசை அவர்களுக்கு ஏற்படலாம்; “இரவும் பகலும்” கடவுளுடைய வார்த்தையை வாசித்து மகிழ அவர்கள் விரும்பலாம்.—சங். 1:2, 3.
3. சரியாக வாசிக்கத் தெரியாதவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும்போது என்ன கற்பிக்கும் முறைகளைப் பயன்படுத்தலாம்?
3 பைபிள் படிப்புகளின்போது கற்பிக்கும் முறைகள்: கற்பிப்பதற்கு மட்டுமல்ல, மனதில் பதிய வைப்பதற்கும் படங்கள் மிகச் சிறந்த உதவியாய் இருக்கின்றன. படிப்பு நடத்த நீங்கள் பயன்படுத்துகிற பிரசுரத்திலுள்ள ஒரு படத்தை மாணாக்கரிடம் காட்டி, அதில் அவர் என்ன கவனிக்கிறாரென கேட்கலாம். பின்பு, குறிப்பான சில கேள்விகளைக் கேட்டு அந்தப் படத்தின் கருத்தைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவலாம். அந்தப் படத்திலுள்ள குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்ட பொருத்தமான வசனங்களைப் பயன்படுத்தலாம். நடத்திய பாடத்தை மறுபார்வை செய்வதற்கும்கூட படங்களைப் பயன்படுத்தலாம். ஒரே சமயத்தில் அளவுக்கு அதிகமான விஷயங்களைக் கற்றுக்கொடுக்காதீர்கள். பாடத்தின் மையப் பொருளையும் முக்கியக் குறிப்புகளையும் வலியுறுத்திக் காட்டுங்கள்; பாடத்தில் இல்லாத கூடுதலான விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பைபிளிலிருந்து நேரடியாக வசனங்களை வாசித்துக் காட்டுங்கள்; அவற்றை மாணாக்கர் புரிந்துகொண்டாரா என்பதைத் தெரிந்துகொள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள். இது, சரளமாக வாசிக்கக் கற்றுக்கொண்டு இன்னுமதிக பைபிள் சத்தியங்களைத் தானே ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்ற ஆவலை அவருக்கு ஏற்படுத்தலாம்.
4. சரளமாக வாசிக்கக் கற்றுக்கொள்வதற்கு நாம் எப்படி மாணாக்கர்களுக்கு உதவலாம்?
4 சரளமாக வாசிக்கக் கற்றுக்கொள்வதற்கு உதவிகள்: சரியாக வாசிக்கத் தெரியாதவர்களால் அல்லது சரளமாக வாசிக்கக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்காதவர்களால்கூட, விஷயங்களை நன்கு புரிந்துகொண்டு நினைவில் வைத்துக்கொள்ள முடியும். சரளமாக வாசிக்கத் தெரிந்தவர்களை வாசிக்கச் சொல்லி தங்களுடைய பிரசுரத்தில் அதைக் கவனிக்கும்படி அவர்களை நீங்கள் உற்சாகப்படுத்தலாம்; அப்படிக் கவனிக்கும்போது அந்த வார்த்தைகளைத் தாழ்ந்த குரலில் சொல்லிப் பார்க்கும்படி ஊக்கப்படுத்தலாம்; இது, சரளமாக வாசித்துப் பழக அவர்களுக்கு உதவியாய் இருக்கும். சில இடங்களில், வாசிப்பதற்கு உதவும் வகுப்புகளையும் மூப்பர்கள் சபையில் ஏற்பாடு செய்யலாம். இந்த நடைமுறை ஆலோசனைகளை நாம் பின்பற்றினால், சரியாக வாசிக்கத் தெரியாதவர்கள் “பரிசுத்த எழுத்துக்களை” புரிந்துகொண்டு, ஞானமுள்ளவர்களாகி, மீட்பைப் பெற நாம் உதவ முடியும்.—2 தீ. 3:15.