அவ்வளவாக எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு எப்படி உதவலாம்?
1. அவ்வளவாக எழுதுப் படிக்க தெரியாதவர்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுப்பது ஏன் சவாலாக இருக்கலாம்?
1 அவ்வளவாக எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு ஆன்மீக காரியங்களில் அதிக ஆர்வம் இருக்கலாம். ஆனால் பைபிளிலிருந்தோ மற்ற புத்தகங்களிலிருந்தோ படிப்பதை நினைத்து அவர்கள் பயப்படலாம். அப்படிப்பட்டவர்களுக்கு எடுத்ததுமே பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்தால் அதிக பலன் கிடைக்காமல் போகலாம். இருந்தாலும், அவர்கள் ஆன்மீக ரீதியில் முன்னேற நாம் எப்படி உதவலாம்? கிட்டத்தட்ட 20 நாடுகளிலுள்ள அனுபவமிக்க பிரஸ்தாபிகளிடம் இதைப் பற்றிக் கேட்டோம். அவர்கள் கொடுத்த ஆலோசனைகள் இந்தக் கட்டுரையில் உள்ளன.
2. அதிகம் படிக்கத் தெரியாத ஒருவருக்கு எந்த பிரசுரங்களிலிருந்து படிப்பு நடத்தலாம்?
2 மாணாக்கருக்கு அவ்வளவாகப் படிக்க தெரியாவிட்டால் அல்லது கொஞ்சம்கூட படிக்க தெரியாவிட்டால், கடவுள் சொல்வதைக் கேளுங்கள் அல்லது கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டை அளிக்கலாம். அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பயனியர் இரண்டு சிற்றேடுகளையும் வீட்டுக்காரரிடம் காட்டி எந்த சிற்றேட்டிலிருந்து படிக்கலாம் என்று அவரையே கேட்பார். இந்த சிற்றேடு கென்யாவிலுள்ள மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருப்பதாக அங்குள்ள கிளை அலுவலகம் தெரிவித்தது. ஏனென்றால், ஆப்பிரிக்க நாட்டு மக்கள் பொதுவாக கேள்வி-பதில் மூலம் கற்றுக்கொள்வதைவிட கதைகள் சொல்வதன் மூலம் கற்றுக்கொள்ளத்தான் விரும்புவார்கள். நன்கு படிக்க தெரிந்த ஒருவர் கேள்வி-பதில் மூலம் கலந்துபேசுவதை விரும்புவார், ஆனால் அதிகம் படிக்காதவர்களுக்கு இந்த முறை பிரயோஜனம் அளிக்காமல் இருக்கலாம். ஓரளவு படிக்க தெரிந்த மாணாக்கர்களுக்கு கடவுள் சொல்லும் நற்செய்தி! சிற்றேட்டிலிருந்து அல்லது என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்து அநேக பிரஸ்தாபிகள் பைபிள் படிப்பு நடத்துகிறார்கள்.
3. படிக்க தெரியாதவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்வது சத்தியத்தைக் கற்பிக்க நமக்கு எப்படி உதவுகிறது?
3 மனதார பாராட்டுங்கள்: படிக்கத் தெரியாதவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்கலாம், நம்மோடு பைபிள் படிப்பு படிக்க தர்மசங்கடமாக உணரலாம். முதலில் நீங்கள் இந்த உணர்வுகளையெல்லாம் அவர்களிடமிருந்து எடுத்துப்போட வேண்டும். படிக்கத் தெரியாத நிறைய பேர் புத்திசாலிகளாக இருப்பார்கள், சீக்கிரமாகக் கற்றுக்கொள்வார்கள். படிக்கத் தெரியாதவர்களையும் மதிப்பு மரியாதையோடு நடத்துங்கள். (1 பேதுரு 3:15) தங்கள் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கிறது, ஆன்மீக ரீதியில் முன்னேறுகிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும்போது தொடர்ந்து படிக்க ஆசைப்படுவார்கள். எனவே, அவர்களைத் தாராளமாகப் பாராட்டுங்கள்.
அவ்வளவாக படிக்கத் தெரியாதவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்கலாம், நம்மோடு பைபிள் படிக்க தர்மசங்கடமாக உணரலாம். முதலில் நீங்கள் இந்த உணர்வுகளையெல்லாம் அவர்களிடமிருந்து எடுத்துப்போட வேண்டும்.
4. படிப்புக்குத் தயாரிக்க நாம் எப்படி உற்சாகப்படுத்தலாம்?
4 மாணாக்கருக்குக் கூட்டிப் படிக்க தெரிந்திருந்தால்கூட பைபிள் படிப்புக்காகத் தயாரிக்க சொல்லுங்கள். தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரஸ்தாபிகள் சிலர் தங்கள் மாணாக்கரிடம், நன்கு படிக்கத் தெரிந்த குடும்பத்தாரிடமோ நண்பரிடமோ உதவி கேட்கும்படி சொல்கிறார்கள். பிரிட்டனில் வசிக்கும் ஒரு பிரஸ்தாபி தான் தயாரித்து வந்த புத்தகத்தை மாணாக்கரிடம் கொடுத்து சில பாராக்களை நடத்துவார். கோடிட்டு தயாரிக்கும்போது பதில்களைக் கண்டுபிடிப்பது சுலபம் என்பதை புரியவைப்பதற்காக அப்படிச் செய்வார். இந்தியாவில் உள்ள ஒரு சகோதரர் தன் மாணாக்கரை அடுத்த வாரம் படிக்கப்போகும் பாடத்திலுள்ள படங்களைத் தியானிக்கும்படி சொல்லுவார்.
5. படிப்பின்போது நாம் எப்படி பொறுமையாக இருக்கலாம்?
5 பொறுமையாக இருங்கள்: நீங்கள் எந்த பிரசுரத்திலிருந்து படிப்பு நடத்தினாலும் அதிலுள்ள முக்கிய குறிப்புகளுக்கு அதிக கவனம் செலுத்துங்கள். அவற்றை நன்கு புரிந்துகொள்ள மாணாக்கருக்கு உதவுங்கள். ஆரம்பத்தில், 10 முதல் 15 நிமிடங்கள் வரை படிப்பு நடத்தினாலே போதும். ஒருசில பாராக்களை மட்டுமே நடத்துங்கள். மாணாக்கர் படிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டால் பொறுமையாக இருங்கள். யெகோவாமீது அவருக்கு இருக்கும் அன்பு அதிகரிக்க அதிகரிக்க நன்கு வாசிக்க முயற்சி எடுப்பார். அதற்கு ஆரம்பத்திலிருந்தே கூட்டங்களுக்கு வர அவரை உற்சாகப்படுத்துங்கள்.
6. நாம் எப்படி மாணாக்கருக்குப் படிக்க கற்றுக்கொடுக்கலாம்?
6 மாணாக்கர் சரளமாகப் படிக்க கற்றுக்கொள்ளும்போது ஆன்மீக ரீதியில் சீக்கிரம் முன்னேற்றம் செய்வார். (சங்கீதம் 1:1-3) சில பிரஸ்தாபிகள் பைபிள் படிப்பு முடிந்த பிறகு கொஞ்சம் நேரம் மாணாக்கருக்கு எழுதப் படிக்க கற்றுக்கொடுக்கிறார்கள். எழுத படிக்க சொல்லிக்கொடுக்கும் புத்தகங்களைப் பயன்படுத்தியும் கற்றுக்கொடுக்கலாம். சில சமயம் மாணாக்கர் சோர்வடையலாம். அப்போது அவர் இதுவரை செய்த முன்னேற்றங்களைச் சொல்லி அவரை உற்சாகப்படுத்துங்கள். அவருடைய முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையைக் கொடுங்கள். இதற்காக ஜெபிக்கும்படி ஊக்கப்படுத்துங்கள். (நீதி. 16:3; 1 யோ. 5:14, 15) பிரிட்டனிலுள்ள சில பிரஸ்தாபிகள், எட்ட முடிந்த இலக்குகளை... முன்னேறுகிற இலக்குகளை... வைக்க மாணாக்கரை ஊக்குவிக்கிறார்கள். முதலில் எழுத்துகளை மனப்பாடம் செய்யவும் அதன்பின், குறிப்பிட்ட வசனங்களை பைபிளில் கண்டுபிடித்து வாசிக்கவும், பின்பு எளிய நடையிலுள்ள பைபிள் பிரசுரங்களைப் படிக்கவும் இலக்கு வைக்கச் சொல்கிறார்கள். எப்படி வாசிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது, வாசிப்பதற்கான விருப்பத்தையும் அவர்களுக்குள் நாம் வளர்க்க வேண்டும்.
7. படிக்கத் தெரியாதவர்களுக்கு ஏன் சத்தியத்தைச் சொல்ல தயங்கக் கூடாது?
7 படிக்கத் தெரியாதவர்களை யெகோவா தாழ்வாகப் பார்ப்பதில்லை. (யோபு 34:19) ஒருவருடைய இருதயத்தைத்தான் அவர் பார்க்கிறார். (1 நா. 28:9) எனவே, படிக்கத் தெரியாதவர்களுக்கு சத்தியத்தைச் சொல்லாமல் இருந்துவிடாதீர்கள். அவர்களுக்கு உதவ உங்களிடம் அருமையான பிரசுரங்கள் இருக்கின்றன. வாசிப்பதில் அவர் முன்னேற்றம் செய்யும்போது, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து படிப்பு நடத்தி ஆழமான சத்தியங்களை புரிந்துகொள்ள அவருக்கு நீங்கள் உதவலாம்.