உண்மையான மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
“சிறுமைப்பட்ட [“மனத்தாழ்மையுள்ள,” Nw] ஜனத்தை ரட்சிப்பீர்.”—2 சாமுவேல் 22:28.
1, 2. உலகை ஆண்ட ஏராளமான அரசர்கள் இடையே என்ன ஒற்றுமை இருந்திருக்கிறது?
எகிப்தை ஒருகாலத்தில் அரசாண்ட ஆட்களைப் பற்றி அத்தேசத்தின் பிரமிடுகள் சான்று பகருகின்றன. சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மற்ற அரசர்களில் சிலர்: அசீரியாவைச் சேர்ந்த சனகெரிப், கிரீஸைச் சேர்ந்த மகா அலெக்சாந்தர், ரோமைச் சேர்ந்த ஜூலியஸ் சீஸர். இந்த எல்லா அரசர்களுக்கும் இடையே ஓர் ஒற்றுமை இருந்தது; அவர்கள் யாருமே உண்மையான மனத்தாழ்மை காட்டியவர்களாகப் பெயரெடுக்கவில்லை.—மத்தேயு 20: 25, 26.
2 மேற்குறிப்பிடப்பட்ட அரசர்கள், தங்கள் தேசத்திலிருந்த ஏழை எளியோரைத் தவறாமல் தேடிச்சென்று ஆறுதலளிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நிச்சயமாகவே முடியாது! மனம் நொறுங்கிய குடிமக்களைத் தேற்றி பலப்படுத்துவதற்காக, சாதாரண குடியிருப்புப் பகுதிகளுக்கு அவர்கள் செல்வதையும்கூட உங்களால் கற்பனை செய்ய முடியாது. ஏழை எளிய மக்களைக் குறித்த அவர்களுடைய மனப்பான்மை, இந்தப் பிரபஞ்சத்தின் பேரரசரான யெகோவா தேவனுடைய மனப்பான்மையிலிருந்து எவ்வளவாய் வேறுபடுகிறது!
மனத்தாழ்மைக்கு மாபெரும் முன்மாதிரி
3. சர்வலோகப் பேரரசர் தம்முடைய குடிமக்களை எவ்வாறு நடத்துகிறார்?
3 ஆராய முடியாதளவுக்கு யெகோவா மகத்துவமும், உன்னதமுமானவர் என்றாலும், ‘தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.’ (2 நாளாகமம் 16:9) வெவ்வேறு பிரச்சினைகளின் காரணமாக நொறுங்கிப்போயிருக்கும் தம்முடைய எளிய வணக்கத்தாரைப் பார்க்கும்போது யெகோவா என்ன செய்கிறார்? “பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும்” தமது பரிசுத்த ஆவியின் மூலம் அவர்களோடு ‘வாசம்பண்ணுகிறார்.’ (ஏசாயா 57:15) இதனால், புத்துயிர் பெறுகிற அவருடைய வணக்கத்தார் திரும்பவும் சந்தோஷத்தோடே அவருக்குச் சேவைசெய்ய பலம் பெறுகிறார்கள். எப்பேர்ப்பட்ட மனத்தாழ்மையுள்ள கடவுள்!
4, 5. (அ) கடவுள் ஆட்சிசெய்யும் விதத்தைக் குறித்து சங்கீதக்காரன் எப்படி உணர்ந்தார்? (ஆ) ‘சிறியவனுக்கு’ உதவுவதற்காகக் கடவுள் தம்மைத் “தாழ்த்துகிறார்” என்பதன் அர்த்தம் என்ன?
4 பாவமுள்ள மனிதர்களுக்கு உதவ உன்னதப் பேரரசர் தம்மைத் தாழ்த்திக்கொள்கிற அளவுக்கு வேறு யாருமே தங்களைத் தாழ்த்திக்கொள்வது கிடையாது. அதனால்தான் சங்கீதக்காரனால் இவ்வாறு எழுத முடிந்தது: ‘யெகோவா எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமானமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.’—சங்கீதம் 113:4-7.
5 “தாழ்த்துகிறார்” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். பரிசுத்தமும் புனிதமும் நிறைந்த யெகோவாவிடம் துளிகூட ‘அகந்தை’ கிடையாது. (மாற்கு 7:22, 23, NW) “தாழ்த்துகிறார்” என்ற வார்த்தை, தன்னைவிட அந்தஸ்தில் குறைந்த ஒருவரின் நிலைக்கு இறங்கி வருவதை அல்லது தன்னைவிட தாழ்ந்த நிலையிலுள்ள ஒருவரோடு பழகும்போது ஒரு பதவியிலிருந்தோ உயர்நிலையிலிருந்தோ கீழே இறங்கி வருவதை அர்த்தப்படுத்தலாம். அதனால்தான், சில பைபிள்களில் சங்கீதம் 113:6-ல் கடவுள் தம்மைத் தாழ்த்துகிறார் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அபூரணமான தம்முடைய வணக்கத்தாரின் தேவைகளை அன்புடன் கவனித்துக்கொள்ளும் தாழ்மையுள்ள நமது கடவுளின் ஆளுமையை இது எவ்வளவு நன்றாகச் சித்தரிக்கிறது!—2 சாமுவேல் 22:36, NW.
இயேசு ஏன் மனத்தாழ்மையாய் இருந்தார்
6. யெகோவாவுடைய மனத்தாழ்மையின் மாபெரும் வெளிக்காட்டு எது?
6 மனிதகுலத்தின் இரட்சிப்புக்குக் கடவுள் தமது நேசத்திற்குரிய முதற்பேறான குமாரனை இந்தப் பூமிக்கு அனுப்பி வைத்து ஒரு மனிதனாக வளர அனுமதித்ததே அவருடைய மனத்தாழ்மைக்கும் அன்புக்குமான மாபெரும் வெளிக்காட்டாகும். (யோவான் 3:16) இயேசு தம்முடைய பரலோகத் தகப்பனைப் பற்றிய சத்தியத்தை நமக்குக் கற்பித்தார், பிறகு “உலகத்தின் பாவத்தை” நீக்கிப்போட தம்முடைய பரிபூரண மனித உயிரைக் கொடுத்தார். (யோவான் 1:29; 18:37) மனத்தாழ்மை உட்பட யெகோவாவின் எல்லாக் குணங்களையும் பரிபூரணமாகப் பிரதிபலித்த இயேசு, பிதா தம்மிடம் கேட்டுக்கொண்ட எல்லாவற்றையும் செய்ய மனமுள்ளவராய் இருந்தார். கடவுளால் படைக்கப்பட்டவர்கள் காண்பித்த மனத்தாழ்மைக்கும் அன்புக்கும் அதுவே மிகச் சிறந்த உதாரணமாகும். இயேசுவின் மனத்தாழ்மையை எல்லாருமே உயர்வாகக் கருதவில்லை, அவருடைய எதிரிகள் அவரை ‘மனுஷரில் தாழ்ந்தவன்’ என்று கருதினார்கள். (தானியேல் 4:17) ஆனாலும், அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய சக விசுவாசிகள் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஒருவரோடொருவர் மனத்தாழ்மையுடன் பழக வேண்டும் என்றே நினைத்தார்.—1 கொரிந்தியர் 11:1; பிலிப்பியர் 2:3, 4.
7, 8. (அ) மனத்தாழ்மையாய் இருக்க இயேசு எப்படிக் கற்றுக்கொண்டார்? (ஆ) தம்முடைய வருங்கால சீஷர்களிடம் இயேசு என்ன வேண்டுகோளை விடுக்கிறார்?
7 இயேசுவின் நிகரற்ற உதாரணத்தை பவுல் பின்வருமாறு சிறப்பித்துக் காட்டினார்: “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார்.”—பிலிப்பியர் 2:5-8.
8 ‘மனத்தாழ்மையாய் இருக்க இயேசு எப்படிக் கற்றுக்கொண்டார்?’ எனச் சிலர் யோசிக்கலாம். யுகாயுகங்களாக இயேசு தம்முடைய பரலோகப் பிதாவோடு நெருங்கிய பந்தத்தை அனுபவித்து, சகலத்தையும் படைப்பதில் ‘கைத்தேர்ந்த வேலையாளாக’ அவருடன் பணியாற்றியதன் அரும் பலனாகவே அதைக் கற்றுக்கொண்டார். (நீதிமொழிகள் 8:30, NW) ஏதேன் தோட்டத்தில் நடந்த கலகத்திற்குப் பிறகு பாவமுள்ள மனிதர்களைத் தமது பிதா மனத்தாழ்மையோடு கையாண்ட விதத்தை அவரால் காண முடிந்தது. அதனால்தான், பூமியில் இருந்தபோது அவர் தமது பிதாவைப் போல் மனத்தாழ்மை காண்பித்து, பின்வரும் வேண்டுகோளை விடுத்தார்: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.”—மத்தேயு 11:29; யோவான் 14:9.
9. (அ) பிள்ளைகளிடம் காணப்பட்ட என்ன விஷயம் இயேசுவைக் கவர்ந்தது? (ஆ) இயேசு ஒரு பிள்ளையைக் காண்பித்து என்ன பாடம் புகட்டினார்?
9 இயேசு உண்மையான மனத்தாழ்மையைக் காண்பித்ததால்தான், சிறு பிள்ளைகள் அவரைக் கண்டு பயப்படவில்லை. மாறாக, அவரிடம் கவரப்பட்டார்கள். அவரும், பிள்ளைகள்மீது விசேஷ கவனம் செலுத்தி அன்பைப் பொழிந்தார். (மாற்கு 10:13-16) பிள்ளைகளிடம் காணப்பட்ட என்ன விஷயம் இயேசுவின் மனதை அந்தளவு கவர்ந்தது? பெரியவர்களாக இருந்த அவருடைய சீஷர்களில் சிலர் அடிக்கடி காண்பிக்கத் தவறிய அருமையான குணங்கள் பிள்ளைகளிடம் இருந்தன. சிறு பிள்ளைகள், பெரியவர்களைத் தங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதுவார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. இதை, அவர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம். ஆம், பெரியவர்களோடு ஒப்பிட, பிள்ளைகளுக்குக் கற்பிப்பது அதிக எளிது, அதோடு பெரியவர்களைப் போல் அவர்களுக்கு அந்தளவு கர்வமும் ஏற்படுவதில்லை. ஒருசமயம், இயேசு ஒரு சிறு பிள்ளையை நடுவில் நிறுத்தி, தம் சீஷர்களைப் பார்த்து, “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். பிறகு, “இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்” என்றும் கூறினார். (மத்தேயு 18:3, 4) இயேசு பின்வரும் நியதியைக்கூட குறிப்பிட்டார்: “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”—லூக்கா 14:11; 18:14; மத்தேயு 23:12.
10. என்ன கேள்விகளை நாம் சிந்திக்க இருக்கிறோம்?
10 இந்த உண்மை முக்கியமான சில கேள்விகளை எழுப்புகிறது. நமக்கு நித்திய ஜீவன் கிடைக்குமா என்பது உண்மையான மனத்தாழ்மையை நாம் வளர்த்துக்கொள்வதன்பேரில் ஓரளவு சார்ந்திருந்தாலும் மனத்தாழ்மை காண்பிப்பது சிலசமயம் கிறிஸ்தவர்களுக்கு ஏன் கடினமாக இருக்கிறது? தற்பெருமையை ‘விழுங்கி,’ சோதனைகளின்போது மனத்தாழ்மை காண்பிப்பது நமக்கு ஏன் சவாலாக இருக்கிறது? உண்மையான மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதில் வெற்றிபெற எது நமக்கு உதவும்?—யாக்கோபு 4:6, 10.
மனத்தாழ்மையாய் இருப்பது ஏன் கடினம்
11. மனத்தாழ்மையாய் இருக்க நாம் போராட வேண்டுமென்பதில் ஏன் ஆச்சரியமில்லை?
11 மனத்தாழ்மையாய் இருக்க ஒருவேளை நீங்கள் போராடுகிறீர்களா? கவலைப்படாதீர்கள், அநேகர் அப்படிப் போராடுகிறார்கள். 1920-ல், மனத்தாழ்மையாய் இருப்பதன் அவசியத்தைக் குறித்த பைபிள் ஆலோசனையை இந்தப் பத்திரிகை கலந்தாலோசித்தபோது இவ்வாறு குறிப்பிட்டது: “மனத்தாழ்மையாய் இருப்பதற்கு கர்த்தர் எப்பேர்ப்பட்ட முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கையில், உண்மையான சீஷர்கள் அனைவரும் இந்தக் குணத்தை அனுதினமும் வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்.” இப்படிக் குறிப்பிட்ட பின்பு ஒளிவுமறைவில்லாமல் அது இவ்வாறு ஒப்புக்கொண்டது: “வேதவசனங்களிலுள்ள இந்த எல்லா அறிவுரைகளையும் கேட்ட பிறகுகூட, கர்த்தருடைய ஜனங்களாக ஆகிறவர்களும் அவருடைய வழியிலே நடக்கத் தீர்மானிப்பவர்களும் மனித இயல்பின் அபூரணத்தன்மை காரணமாக, வேறெந்த குணத்தைக் காட்டிலும் இந்தக் குணத்தைக் காண்பிப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள், மிகவும் போராடுகிறார்கள்.” மனத்தாழ்மை காண்பிக்க உண்மை கிறிஸ்தவர்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதற்கான ஒரு காரணத்தை இது சிறப்பித்துக் காட்டுகிறது. அதாவது, சுயநல ஆசைகளுக்கு அடிபணிந்து, பாவத்தில் விழுந்த ஆதாம் ஏவாளின் சந்ததியாராக நாம் இருப்பதால், மட்டுக்கு மீறிய மகிமை வேண்டுமென்று நம்முடைய பாவமுள்ள மனித இயல்பு ஏங்குகிறது.—ரோமர் 5:12.
12, 13. (அ) கிறிஸ்தவர்கள் மனத்தாழ்மை காண்பிப்பதற்கு இந்த உலகம் எப்படி ஒரு தடையாக இருக்கிறது? (ஆ) மனத்தாழ்மையை வளர்ப்பதற்கான நம் போராட்டத்தை இன்னும் கடினமாக்குவது யார்?
12 மனத்தாழ்மை காண்பிப்பதைக் கடினமாக்குகிற இன்னொரு காரணம், மற்றவர்களைவிட உயர்வானவர்களாக இருக்கத் தூண்டுகிற ஓர் உலகில் நாம் வாழ்வதே. இவ்வுலகம், ‘[பாவமுள்ள] மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை’ போன்றவற்றை அடைய ஏங்கித் துடிக்கிறது. (1 யோவான் 2:16) ஆனால், இயேசுவின் சீஷர்கள் அத்தகைய உலக ஆசைகளால் ஆட்கொள்ளப்படுவதற்குப் பதிலாக, தங்கள் கண்களை எளிமையாய் வைத்துக்கொண்டு, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் குறியாக இருக்க வேண்டும்.—மத்தேயு 6:22-24, 31-33; 1 யோவான் 2:17.
13 மனத்தாழ்மையை வளர்ப்பதையும் காண்பிப்பதையும் கடினமாக்குகிற மூன்றாவது காரணம், அகந்தையின் ஊற்றுமூலமான பிசாசாகிய சாத்தான் இந்த உலகத்தை ஆளுவதே. (2 கொரிந்தியர் 4:4; 1 தீமோத்தேயு 3:6) அவன் தன்னுடைய பொல்லாத குணங்களை ஜனங்களிடையே பரப்புகிறான். உதாரணமாக, இயேசுவின் வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” அவருக்கு அளிக்க முன்வந்தான். எப்போதுமே மனத்தாழ்மையாய் இருக்கும் இயேசு, அவன் அளித்ததை முற்றிலுமாக நிராகரித்தார். (மத்தேயு 4:8, 10) அவ்வாறே, தங்களுக்குத் தாங்களே மகிமை தேடிக்கொள்ள கிறிஸ்தவர்களின் மனதிலும் சாத்தான் ஆசையைக் கிளப்பிவிடுகிறான். ஆனால், மனத்தாழ்மையுள்ள கிறிஸ்தவர்களோ இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, கடவுளுக்கே துதியையும் மகிமையையும் சேர்க்கிறார்கள்.—மாற்கு 10:17, 18.
உண்மையான மனத்தாழ்மையை வளர்ப்பதும் காண்பிப்பதும்
14. “மாயமான தாழ்மை” என்றால் என்ன?
14 அப்போஸ்தலன் பவுல் கொலோசெயருக்குக் கடிதம் எழுதியபோது, மனிதர்களைக் கவருவதற்காகக் காண்பிக்கப்படும் போலி மனத்தாழ்மைக்கு எதிராக எச்சரித்திருந்தார். அதை “மாயமான தாழ்மை” என்று விவரித்திருந்தார். மனத்தாழ்மையாய் இருப்பது போல் நடிப்பவர்கள் ஆன்மீக சிந்தையுள்ளவர்கள் அல்ல. மாறாக, அவ்வாறு நடிப்பதன் மூலம், தாங்கள் ‘இறுமாப்புள்ளவர்கள்’ என்பதைத்தான் உண்மையில் காட்டுகிறார்கள். (கொலோசெயர் 2:19, 23) அத்தகைய பொய்யான மனத்தாழ்மைக்கு இயேசு சில உதாரணங்களைக் குறிப்பிட்டார். பகட்டாக ஜெபங்களை ஏறெடுத்ததற்காகவும், மற்றவர்கள் பார்ப்பதற்காக முகத்தைச் சோகமாய் வைத்துக்கொண்டு உபவாசித்ததற்காகவும் பரிசேயர்களை அவர் கண்டித்தார். ஆனால், கடவுள் நம்முடைய தனிப்பட்ட ஜெபங்களை உயர்வாய்க் கருத வேண்டுமானால், அவற்றை நாம் மனத்தாழ்மையோடு ஏறெடுப்பது அவசியம், பரிசேயரைப் போல் அல்ல.—மத்தேயு 6:5, 6, 16.
15. (அ) மனத்தாழ்மையைத் தொடர்ந்து காண்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) மனத்தாழ்மைக்கு நல்ல உதாரணங்களாகத் திகழ்ந்தவர்களில் சிலர் யார்?
15 மனத்தாழ்மைக்கு மிகச் சிறந்த முன்மாதிரிகளான யெகோவா தேவனையும், இயேசு கிறிஸ்துவையும் கூர்ந்து கவனிப்பதன் மூலம் கிறிஸ்தவர்களால் உண்மையான மனத்தாழ்மையைத் தொடர்ந்து வெளிக்காட்ட முடியும். அப்படிக் கூர்ந்து கவனிப்பதில், பைபிளையும், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலம் அளிக்கப்படுகிற பைபிள் பிரசுரங்களையும் தவறாமல் படிப்பது உட்படுகிறது. (மத்தேயு 24:45, NW) அவ்வாறு படிப்பது கிறிஸ்தவக் கண்காணிகளுக்கு மிகவும் முக்கியம், அப்போதுதான் ‘[அவர்களுடைய] இருதயம் [அவர்கள்] சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமல்’ இருக்கும். (உபாகமம் 17:18-20; 1 பேதுரு 5:1-3) மனத்தாழ்மையுள்ள சிந்தையைக் காண்பித்ததற்காக ஆசீர்வதிக்கப்பட்ட ரூத், அன்னாள், எலிசபெத் போன்ற இன்னும் எண்ணற்றோரின் உதாரணங்களை நினைவுப்படுத்திப் பாருங்கள். (ரூத் 1:16, 17; 1 சாமுவேல் 1:11, 20; லூக்கா 1:41-43) யெகோவாவின் சேவையில் மனத்தாழ்மையோடு நிலைத்திருந்த தாவீது, யோசியா, முழுக்காட்டுபவனாகிய யோவான், அப்போஸ்தலன் பவுல் போன்ற புகழ்பெற்ற ஆண்களின் அருமையான அநேக உதாரணங்களையும் யோசித்துப் பாருங்கள். (2 நாளாகமம் 34:1, 2, 19, 26-28; சங்கீதம் 131:1; யோவான் 1:26, 27; 3:26-30; அப்போஸ்தலர் 21:20-26; 1 கொரிந்தியர் 15:9) அதோடு கிறிஸ்தவ சபையில், மனத்தாழ்மை காண்பித்த நவீன நாளைய பல உதாரணங்களைப் பற்றியென்ன? இந்த உதாரணங்களைக் குறித்து தியானிப்பதன் மூலம் உண்மை கிறிஸ்தவர்கள் ‘ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையை’ காண்பிக்க முடியும்.—1 பேதுரு 5:5.
16. மனத்தாழ்மையாய் இருக்க கிறிஸ்தவ ஊழியம் நமக்கு எப்படி உதவுகிறது?
16 கிறிஸ்தவ ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வதும்கூட மனத்தாழ்மையாய் இருக்க நமக்கு உதவும். வீடுகளிலும் மற்ற இடங்களிலும் முன்பின் தெரியாதவர்களை அணுகி திறம்பட பேசுவதற்கு மனத்தாழ்மை நமக்கு உதவும். முக்கியமாக, வீட்டுக்காரர்கள் ஆரம்பத்தில் ராஜ்ய செய்தியை அசட்டை செய்யும்போதோ கடுகடுப்பாக நடந்துகொள்ளும்போதோ அவ்வாறு மனத்தாழ்மை காண்பிப்பது நல்ல பலனை விளைவிக்கலாம். நம்முடைய நம்பிக்கைகளைக் குறித்து ஆட்கள் அடிக்கடி கேள்வி கேட்கிறார்கள், அந்தக் கேள்விகளுக்கெல்லாம் “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” தொடர்ந்து பதிலளிக்க கிறிஸ்தவர்களுக்கு மனத்தாழ்மை உதவலாம். (1 பேதுரு 3:15, NW) மனத்தாழ்மையுள்ள கிறிஸ்தவர்கள் புதிய பிராந்தியங்களுக்கு மாறிச்சென்று, வித்தியாசமான கலாச்சாரங்களைச் சேர்ந்தோருக்கும் வெவ்வேறு அந்தஸ்தில் இருப்போருக்கும் உதவியிருக்கிறார்கள். தாங்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கிற ஆட்களுக்கு அதிக உதவியாய் இருப்பதற்காக, அத்தகைய ஊழியர்கள் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள பாடுபடுகிறார்கள், அப்படிக் கற்றுக்கொள்ளும்போது ஏற்படும் கஷ்டங்களை மனத்தாழ்மையோடு சமாளிக்கிறார்கள். எவ்வளவு பாராட்டுக்குரிய செயல்!—மத்தேயு 28:19, 20.
17. எந்தெந்த கிறிஸ்தவக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு மனத்தாழ்மை தேவைப்படுகிறது?
17 அநேகர் தங்களுடைய விருப்பங்களுக்குப் பதிலாக மற்றவர்களுடைய விருப்பங்களுக்கு முதலிடம் கொடுத்து, தங்கள் கிறிஸ்தவக் கடமைகளையும் மனத்தாழ்மையோடு நிறைவேற்றியிருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு கிறிஸ்தவத் தகப்பனை எடுத்துக்கொள்ளலாம்; தன் குழந்தைகளிடம் திறம்பட்ட விதத்தில் பைபிள் படிப்பு நடத்துவதற்காகவும் அதற்குத் தயாரிப்பதற்காகவும் சொந்த அலுவல்களிலிருந்து நேரத்தை வாங்க மனத்தாழ்மை அவருக்கு உதவுகிறது. அதோடு, பிள்ளைகள் தங்களுடைய அபூரண பெற்றோரைக் கனப்படுத்துவதற்கும், அவர்களுக்குக் கீழ்ப்படிவதற்கும் மனத்தாழ்மை உதவுகிறது. (எபேசியர் 6:1-4) அவிசுவாசியான கணவரை உடைய மனைவிகள், ‘மரியாதையுடன்கூடிய கற்புள்ள நடத்தை’ மூலம் தங்கள் கணவரைச் சத்தியத்திடம் கவர்ந்திழுக்க முயலும்போது, மனத்தாழ்மையோடு நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலைகளை அடிக்கடி சந்திக்கிறார்கள். (1 பேதுரு 3:1, 2, NW) சுகவீனமாயுள்ள வயதான பெற்றோர்களின் தேவைகளை அன்புடன் கவனித்துக்கொள்கையில்கூட மனத்தாழ்மையும் சுயதியாக அன்பும் மிக உபயோகமாய் இருக்கின்றன.—1 தீமோத்தேயு 5:4.
மனத்தாழ்மை பிரச்சினைகளைத் தீர்க்கிறது
18. பிரச்சினைகளைத் தீர்க்க மனத்தாழ்மை நமக்கு எப்படி உதவலாம்?
18 கடவுளுடைய மனித ஊழியர்கள் எல்லாரும் அபூரணர்களே. (யாக்கோபு 3:2) சில சமயங்களில், இரு கிறிஸ்தவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளோ மனஸ்தாபங்களோ ஏற்படலாம். மற்றவருக்கு எதிராகப் புகார்செய்ய ஒருவரிடம் நியாயமான காரணம் ஏதாவது இருக்கலாம். பொதுவாக, அத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்க பின்வரும் ஆலோசனையைப் பொருத்தலாம்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து [“யெகோவா,” NW] உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (கொலோசெயர் 3:13) உண்மைதான், இந்த ஆலோசனையைப் பின்பற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் அப்படிச் செய்வதற்கு மனத்தாழ்மை உதவும்.
19. நம் மனதை நோகடித்த ஒருவரிடம் பேசப்போகும்போது நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?
19 தன்னுடைய புகார் அந்தளவு முக்கியமானதாக இருப்பதால் அதை வெறுமனே விட்டுவிட முடியாது என ஒரு கிறிஸ்தவர் சில சமயம் நினைக்கலாம். அப்படியானால், தன் மனதை நோகடித்ததாக தான் கருதும் நபரை, சமரச நோக்கத்தோடு அணுகுவதற்கு மனத்தாழ்மை அவருக்கு உதவும். (மத்தேயு 18:15) கிறிஸ்தவர்களுக்கு இடையே பிரச்சினைகள் தொடர்ந்திருப்பதற்கான ஒரு காரணம், அவர்களில் ஒருவர் அல்லது ஒருவேளை இருவரும், அந்தப் பிரச்சினையில் தங்களுக்கும் பங்குண்டு என்பதை ஒத்துக்கொள்ளாமல் தற்பெருமையோடு இருப்பதே. மற்றொரு காரணம், தான் செய்ததே சரி என்று நிரூபிக்கும் விதத்திலும், குற்றங்கண்டுபிடிக்கும் விதத்திலும் ஒருவர் மற்றவரை அணுகுவதே. ஆனால், உண்மையான மனத்தாழ்மை, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பெருமளவு கைகொடுக்கும்.
20, 21. மனத்தாழ்மையாய் இருப்பதற்கான மிகச் சிறந்த உதவி எது?
20 மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதற்கு மிக முக்கியமான படி கடவுளுடைய உதவிக்காகவும் ஆவிக்காகவும் ஜெபிப்பதே. ஆனால், ‘தேவன் . . . தாழ்மையுள்ளவர்களுக்கே [தமது பரிசுத்த ஆவியோடு சேர்த்து] கிருபை அளிக்கிறார்’ என்பதை நினைவில் வையுங்கள். (யாக்கோபு 4:6) எனவே, சக விசுவாசி ஒருவரோடு உங்களுக்கு ஏதாவது மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தால், நீங்கள் செய்த சிறிய அல்லது பெரிய தவறுகளை மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்வதற்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபியுங்கள். உங்கள் மனதைப் புண்பட வைத்த ஒருவர் உங்களிடம் வந்து உள்ளப்பூர்வமாக, “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லும்போது, மனத்தாழ்மையோடு அவரை மன்னியுங்கள். அப்படிச் செய்வது கடினமாக இருந்தால், உங்கள் இருதயத்தில் ஒட்டியிருக்கும் கொஞ்சநஞ்ச அகந்தையைக்கூட முற்றிலும் அகற்றிப்போடுவதற்காக ஜெபத்தில் யெகோவாவிடம் உதவி கேளுங்கள்.
21 மனத்தாழ்மையால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது, இந்த அரிய குணத்தை வளர்ப்பதற்கும் அதைத் தொடர்ந்து காண்பிப்பதற்கும் நம்மை உந்துவிக்க வேண்டும். அதற்கு அருமையான முன்மாதிரிகளாக யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நமக்கு இருக்கிறார்கள்! ஆகவே, “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்” என்ற கடவுளுடைய உறுதியை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.—நீதிமொழிகள் 22:4.
தியானிப்பதற்குச் சில குறிப்புகள்
• மனத்தாழ்மைக்கு மிகச் சிறந்த முன்மாதிரிகள் யாவர்?
• மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வது ஏன் கடினம்?
• மனத்தாழ்மையாய் இருக்க எவை நமக்கு உதவலாம்?
• தொடர்ந்து மனத்தாழ்மையாய் இருப்பது ஏன் மிக முக்கியம்?
[பக்கம் 26-ன் படம்]
இயேசு உண்மையான மனத்தாழ்மை காண்பித்தார்
[பக்கம் 28-ன் படம்]
மற்றவர்களைவிட உயர்வானவர்களாக இருக்க பிரயாசப்படும்படி ஜனங்களை இவ்வுலகம் ஊக்குவிக்கிறது
[படத்திற்கான நன்றி]
WHO photo by L. Almasi/K. Hemzǒ
[பக்கம் 29-ன் படம்]
ஊழியத்தில் முன்பின் தெரியாதவர்களை அணுக மனத்தாழ்மை நமக்கு உதவுகிறது
[பக்கம் 30-ன் படங்கள்]
மனத்தாழ்மையுடன் விஷயத்தை மூடிவிடுவதன் மூலம் மனஸ்தாபங்களை நாம் அன்போடு தீர்க்கலாம்
[பக்கம் 31-ன் படங்கள்]
மனத்தாழ்மை காண்பிக்க கிறிஸ்தவர்களுக்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன