‘அன்புமாறா கருணையால்’ உங்கள் நாவைக் கட்டுப்படுத்துங்கள்
“தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள [“அன்புமாறா கருணையுள்ள,” NW] போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.”—நீதி. 31:26.
1, 2. (அ) யெகோவாவை வழிபடுவோர் எந்தப் பண்பை வளர்க்கும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திக்கப் போகிறோம்?
பூர்வத்தில் வாழ்ந்த லேமுவேல் ராஜா தன் அம்மாவிடமிருந்து வலிமைமிக்க ஒரு செய்தியைப் பெற்றார்; அதில், ஓர் இல்லத்தரசிக்கு அவசியமான ஒரு முக்கிய பண்பும் இடம்பெற்றிருந்தது. அவள் “தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள [“அன்புமாறா கருணையுள்ள,” NW] போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது” என்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.a (நீதி. 31:1, 10, 26) ஞானமுள்ள ஒரு பெண் மட்டுமல்ல, யெகோவா தேவனைப் பிரியப்படுத்த விரும்பும் எல்லாருமே தங்கள் பேச்சில் அன்புமாறா கருணையை வெளிக்காட்ட விரும்புவார்கள். (நீதிமொழிகள் 19:22-ஐ வாசியுங்கள்.) உண்மை வணக்கத்தார் எல்லாருடைய பேச்சிலும் அன்புமாறா கருணை பளிச்சிட வேண்டும்.
2 அன்புமாறா கருணை என்றால் என்ன? அதை யாரிடம் காட்ட வேண்டும்? நம் பேச்சில் ‘அன்புமாறா கருணையை’ காண்பிக்க எது நமக்கு உதவும்? நம் குடும்பத்தாரிடமும் சக கிறிஸ்தவர்களிடமும் பேசுகையில் இப்பண்பை எவ்வாறு வெளிக்காட்டலாம்?
பற்றுமாறா அன்பால் தூண்டப்படுகிற கருணை
3, 4. (அ) அன்புமாறா கருணை என்றால் என்ன? (ஆ) இந்தப் பண்பு எவ்வாறு மனிதாபிமானத்தின் பேரிலான கருணையிலிருந்து வித்தியாசப்படுகிறது?
3 அன்புமாறா கருணை என்ற வார்த்தையிலேயே அன்பு, கருணை ஆகிய இரு அம்சங்கள் உட்பட்டுள்ளன. அதன் ஒரு அம்சமான கருணையை எடுத்துக்கொள்ளலாம். மற்றவர்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்டுவதும் அவர்களுக்கு உதவுவதும் அவர்களிடம் யோசித்துப் பேசுவதும் இதில் உட்படுகிறது. அன்பு என்ற அதன் மற்றொரு அம்சம், அன்பால் தூண்டப்பட்டு மற்றவர்களுடைய நலனில் அக்கறை செலுத்துவதை உட்படுத்துகிறது. என்றாலும், அன்புமாறா கருணை என்ற சொற்றொடருக்கான மூல மொழி வார்த்தை, அன்பால் தூண்டப்பட்டு காட்டப்படும் கருணையை விடவும் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது. அன்புமாறா கருணை என்பது, ஒருவரிடம் கருணை காண்பிப்பதற்கான நோக்கம் நிறைவேறும்வரை மனப்பூர்வமாயும் உண்மையாயும் அவரிடம் கருணை காட்டுவதை அர்த்தப்படுத்துகிறது.
4 அன்புமாறா கருணை என்ற பண்பு மற்றொரு கருத்திலும் கருணையிலிருந்து வித்தியாசப்படுகிறது. மனிதாபிமானத்தின் பேரிலான கருணை, முன்பின் தெரியாதவர்களிடம்கூட வெளிக்காட்டப்படுகிறது. அப்போஸ்தலன் பவுலும் அவரோடிருந்த 275 பேரும் கப்பற்சேதத்தில் மாட்டிக்கொண்ட சமயத்தில், மெலித்தா தீவுவாசிகள் அவர்களிடம் இப்படிப்பட்ட கருணையைத்தான் காட்டினார்கள்; அந்தத் தீவுவாசிகள் அவர்களுக்கு முன்பின் தெரியாதவர்கள். (அப். 27:37–28:2) அன்புமாறா கருணையோ, ஏற்கெனவே நெருங்கிய பந்தம் வைத்திருக்கிற நபர்களுக்கிடையே இருக்கிற பிரியா பிணைப்பை வெளிக்காட்டுகிறது.b “இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, . . . அவர்கள் எல்லாருக்கும்” கேனியர்கள் அன்புமாறா கருணையையே காட்டினார்கள்.—1 சா. 15:6.
தியானமும் ஜெபமும் அத்தியாவசியம்
5. நம் நாவுக்குக் கடிவாளம்போட எது நமக்கு உதவும்?
5 நம் பேச்சில் அன்புமாறா கருணையை வெளிக்காட்டுவது அவ்வளவு சுலபமல்ல. நம் நாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் சீடரான யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “எந்த மனிதனாலும் [அதை] அடக்க முடியாது. அது தீங்கு விளைவிப்பது, அடங்காதது, கொடிய விஷம் நிறைந்தது.” (யாக். 3:8) கட்டுப்படுத்துவதற்கே கடினமாக இருக்கும் இந்த உடல் உறுப்புக்குக் கடிவாளம்போட எது நமக்கு உதவும்? தம் காலத்தில் வாழ்ந்த மதத் தலைவர்களிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன. “இருதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது” என்று அவர் சொன்னார். (மத். 12:34) அன்புமாறா கருணையின் உதவியால் நம் நாவைக் கட்டுப்படுத்த, இப்பண்பை நம் இருதயத்தில் விதைப்பது அவசியம். இதற்கு தியானமும் ஜெபமும் நமக்கு எவ்வாறு உதவும் என்பதைப் பார்க்கலாம்.
6. அன்புமாறா கருணையால் யெகோவா செய்துள்ளவற்றை நாம் ஏன் நன்றியுணர்வோடு தியானிக்க வேண்டும்?
6 யெகோவா தேவன் ‘மகா தயை உள்ளவர்’ என பைபிள் குறிப்பிடுகிறது. (யாத். 34:6) “கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங். 119:64) யெகோவா தம்மை வழிபடுவோரிடம் அன்புமாறா கருணையைக் காட்டிய அநேக பதிவுகள் பைபிளில் உள்ளன. நன்றியுணர்வோடு ‘யெகோவாவின் செயல்களையெல்லாம்’ தியானிக்க நேரம் எடுத்தால், இந்தத் தெய்வீக பண்பை வளர்க்க வேண்டுமென்ற ஆசை நமக்குள் துளிர்விடும்.—சங்கீதம் 77:12-ஐ வாசியுங்கள்.
7, 8. (அ) யெகோவா எப்படி லோத்துவிடமும் அவர் குடும்பத்தாரிடமும் அன்புமாறா கருணையைக் காட்டினார்? (ஆ) கடவுள் அன்புமாறா கருணையைத் தன்னிடம் காட்டியதைக் குறித்து தாவீது எவ்வாறு உணர்ந்தார்?
7 உதாரணத்திற்கு, ஆபிரகாமின் அண்ணன் மகனான லோத்துவும் அவருடைய குடும்பத்தாரும் வாழ்ந்த சோதோம் நகரத்தை அழித்தபோது, அவர்களை யெகோவா எவ்வாறு காப்பாற்றினார் என்பதை யோசித்துப் பாருங்கள். அழிப்பதற்கான நேரம் நெருங்கியபோது, அங்கு வந்திருந்த தூதர்கள் தன் குடும்பத்தாரைக் கூட்டிக்கொண்டு நகரத்தைவிட்டு வேகமாக வெளியேறும்படி லோத்துவை அவசரப்படுத்தினார்கள். ‘லோத்து தாமதித்துக்கொண்டிருந்தபோது, கர்த்தர் அவர்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் [தூதர்கள்] அவர் கையையும், அவர் மனைவியின் கையையும், அவர் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவரைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்’ என பைபிள் சொல்கிறது. இவ்வாறு பாதுகாத்ததைப் பற்றி தியானிப்பது நம் இருதயத்தை நெகிழ வைக்கிறது, அல்லவா? இது யெகோவாவின் அன்புமாறா கருணையின் வெளிக்காட்டு என்பதை ஒத்துக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது, அல்லவா?—ஆதி. 19:16, 19.
8 பூர்வ இஸ்ரவேலில் வாழ்ந்த தாவீது ராஜாவின் உதாரணத்தையும் சிந்தித்துப் பாருங்கள். ‘[யெகோவா] உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்’ என்று அவர் பாடினார். பத்சேபாளுடன் செய்த பாவத்தை யெகோவா மன்னித்ததற்கு தாவீது எவ்வளவு நன்றியுள்ளவராய் இருந்திருப்பார்! “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது” என்று அவர் யெகோவாவைப் புகழ்ந்து பாடினார். (சங். 103:3, 11) யெகோவா காண்பித்த அன்புமாறா கருணையைப் பற்றிய இதுபோன்ற பைபிள் பதிவுகளைத் தியானிக்கும்போது, நம் இருதயம் நன்றியால் பெருக்கெடுக்கிறது; அவரைப் புகழவும் அவருக்கு நன்றி சொல்லவும் நம்மைத் தூண்டுகிறது. நம் இருதயம் எந்தளவுக்கு நன்றியால் பெருக்கெடுக்கிறதோ, அந்தளவுக்கு உண்மைக் கடவுளைப் பின்பற்ற நாம் மனமுள்ளவர்களாய் இருப்போம்.—எபே. 5:1.
9. யெகோவாவை வழிபடுவோர் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அன்புமாறா கருணையை வெளிக்காட்ட என்ன வலிமையான காரணம் இருக்கிறது?
9 ஏற்கெனவே தம்முடன் நல்லுறவில் இருப்பவர்களுக்கு யெகோவா அன்புமாறா கருணையை, அதாவது பற்றுமாறா அன்பை, காட்டுகிறார் என பைபிள் உதாரணங்கள் காண்பிக்கின்றன. உயிருள்ள கடவுளுடன் இப்படிபட்ட உறவு இல்லாதவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்களிடம் யெகோவா கனிவற்றவராகவோ கருணையற்றவராகவோ நடந்துகொள்கிறாரா? இல்லவே இல்லை. “நன்றிகெட்டவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும்கூடக் [கடவுள்] கருணை காட்டுகிறார்” என லூக்கா 6:35 குறிப்பிடுகிறது. “அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழை பெய்யச் செய்கிறார்.” (மத். 5:45) ஆம், சத்தியத்தைப் படித்து அதன்படி நடப்பதற்கு முன்பே கடவுளுடைய கருணையை நாம் ருசித்தோம். ஆனால், அவரை வழிபடுவோராக ஆன பிறகு, அவருடைய பற்றுமாறா அன்பை, அதாவது என்றும் நிலைத்திருக்கும் அவருடைய அன்புமாறா கருணையை, ருசிக்கிறோம். (ஏசாயா 54:10-ஐ வாசியுங்கள்.) அதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்! அதுமட்டுமா, நம் பேச்சிலும் வாழ்க்கையின் பிற அம்சங்களிலும் அன்புமாறா கருணையை வெளிக்காட்ட இது வலிமையான காரணத்தை அளிக்கிறது, அல்லவா?
10. அன்புமாறா கருணை நம் சுபாவத்தில் இரண்டர கலக்க ஜெபம் ஏன் பெருமளவில் உதவுகிறது?
10 அன்புமாறா கருணையை வளர்த்துக்கொள்ள ஜெபம் நமக்குப் பெருமளவு உதவுகிறது. ஏனென்றால், அன்புமாறா கருணையில் உட்பட்டுள்ள அம்சங்களான அன்பும் கருணையும் கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படுகிற குணங்களில் அடங்கும். (கலா. 5:22) கடவுளுடைய சக்தி நம்மீது செல்வாக்கு செலுத்த அனுமதிப்பதன் மூலம், நம் இருதயத்தில் அன்புமாறா கருணையை வேரூன்றச் செய்யலாம். யெகோவாவின் சக்தியைப் பெறுவதற்கு நேரடி வழி அதற்காக ஜெபத்தில் கேட்பதாகும். (லூக். 11:13) கடவுளுடைய சக்திக்காகத் திரும்பத் திரும்ப ஜெபிப்பதும், அதன் வழிநடத்துதலை ஏற்பதும் பொருத்தமானது. ஆம், நம் பேச்சில் அன்புமாறா கருணையை எப்போதும் வெளிக்காட்ட வேண்டுமென்றால் தியானமும் ஜெபமும் அத்தியாவசியம்.
மணத்துணையிடம் பேசுகையில்
11. (அ) கணவர்கள் தங்கள் மனைவிகளிடம் அன்புமாறா கருணையை காண்பிக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்ப்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) அன்புமாறா கருணை எவ்விதத்தில் நாவைக் கட்டுப்படுத்த கணவர்களுக்கு உதவும்?
11 அப்போஸ்தலன் பவுல் கணவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கொடுக்கிறார்: “சபைக்காகக் கிறிஸ்து தம்மையே அர்ப்பணிக்கும் அளவுக்கு அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.” (எபே. 5:25) ஆதாம் ஏவாளிடம் யெகோவா சொன்னதையும் பவுல் நினைப்பூட்டுகிறார். “ஒருவன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே உடலாக இருப்பார்கள்” என்று அவர் எழுதுகிறார். (எபே. 5:31) கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு உண்மையுள்ளவர்களாய்ச் சேர்ந்திருந்து, எப்போதும் அன்புமாறா கருணையைக் காண்பிக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. பற்றுமாறா அன்போடு பேசும் கணவர் தன் மனைவியின் குறைகளை மற்றவர்களிடம் சொல்லவும் மாட்டார்; அவளைப் பற்றி இழிவாகப் பேசவும் மாட்டார். அவளைப் புகழ்ந்து பேசுவதில் சந்தோஷம் காண்பார். (நீதி. 31:28, 29) ஏதோ காரணத்தினால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டால், கணவன் தன் மனைவியைத் தரக்குறைவாக பேசாமலிருக்க அன்புமாறா கருணை அவரைத் தூண்டும்.
12. மனைவி தன் பேச்சில் அன்புமாறா கருணையை எவ்வாறு வெளிக்காட்டலாம்?
12 அன்புமாறா கருணை மனைவியின் பேச்சையும்கூட கட்டுப்படுத்த வேண்டும். அவளுடைய பேச்சில் இவ்வுலகத்தின் மனப்பான்மை வெளிப்படக் கூடாது. ‘தன் கணவன்மீது ஆழ்ந்த மரியாதை’ இருப்பதால், அவள் மற்றவர்கள் முன்னிலையில் அவரை உயர்வாகப் பேசுவாள்; அதனால், அவர்மீது மற்றவர்களுக்கு இருக்கிற மதிப்பை இன்னும் அதிகரிக்கச் செய்கிறாள். (எபே. 5:33) பிள்ளைகளுக்குத் தங்கள் அப்பாவின் மீதுள்ள மரியாதை குறைந்துபோகாமல் இருக்க, அவர்களுக்கு முன் கணவரை எடுத்தெறிந்து பேசவோ ஏறுக்குமாறாக பேசவோ மாட்டாள். மாறாக, இருவரும் தனியாக இருக்கும்போது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வாள். “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 14:1) அவளுடைய வீடு, குடும்பத்தார் எல்லாருக்கும் இதமான, இனிய இல்லமாக இருக்கும்.
13. அன்புமாறா கருணையை முக்கியமாக எங்கே காண்பிக்க வேண்டும், அதை எப்படிச் செய்யலாம்?
13 கணவன்-மனைவி வீட்டில் தனிமையாக இருக்கையில்கூட, ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து பேசவேண்டும். “கடுங்கோபம், சினம், தீய குணம், பழிப்பேச்சு ஆகிய அனைத்தையும் அறவே விட்டுவிடுங்கள்; ஆபாசமான பேச்சு உங்கள் வாயிலிருந்து ஒருபோதும் வரக் கூடாது” என்று பவுல் எழுதினார். அதற்கு பதிலாக, “கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் காட்டுங்கள்; . . . அன்பைக் காட்டுங்கள்; எல்லாரையும் பரிபூரணமாகப் பிணைப்பது அன்பே” என்றும் அவர் எழுதினார். (கொலோ. 3:8, 12-14) தங்களிடம் சதா அன்போடும் கருணையோடும் பெற்றோர் பேசுவதைப் பார்க்கிற பிள்ளைகள் தழைத்தோங்குவார்கள்; அதுமட்டுமா, தங்களுடைய பேச்சிலும் பெற்றோரை அச்சுப்பிசகாமல் பின்பற்ற முயலுவார்கள்.
14. தங்கள் குடும்பத்தாரைத் தாங்க குடும்பத் தலைவர்கள் எவ்வாறு தங்கள் நாவைப் பயன்படுத்தலாம்?
14 யெகோவாவைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.” (சங். 94:18) யெகோவா தம் மக்களைத் தாங்குவதற்கு மிகச் சிறந்த வழி என்னவென்றால், அறிவுரையும் வழிநடத்துதலும் கொடுப்பதே. (சங். 119:105) நம் பரலோகத் தகப்பனின் முன்மாதிரியிலிருந்து குடும்பத் தலைவர்கள் எவ்வாறு பயனடையலாம்? அதோடு, குடும்பத்தாரைத் தாங்குவதற்கு தங்கள் நாவை எவ்வாறு பயன்படுத்தலாம்? தேவையான வழிநடத்துதலும் ஊக்குவிப்பும் அளிப்பதன் மூலம் அதைச் செய்யலாம். குடும்ப வழிபாட்டுக்கான மாலைப்பொழுது, இப்படிபட்ட விலைமதிப்புள்ள ஆன்மீகப் பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்க எப்பேர்பட்ட அருமையான வாய்ப்பு!—நீதி. 24:4.
சக விசுவாசிகளிடம் பேசுகையில்
15. சபையில் உள்ளவர்களைப் பாதுகாக்க, கிறிஸ்தவ மூப்பர்களும் ஆன்மீக ரீதியில் முதிர்ச்சியுள்ள மற்றவர்களும் எவ்வாறு தங்கள் நாவைப் பயன்படுத்தலாம்?
15 “உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது” என்று தாவீது ராஜா ஜெபித்தார். (சங். 40:11) சபையிலுள்ள கிறிஸ்தவ மூப்பர்களும் ஆன்மீக ரீதியில் முதிர்ச்சியுள்ள மற்றவர்களும் அன்புமாறா கருணையைக் காட்டுவதில் எவ்வாறு யெகோவாவைப் பின்பற்றலாம்? பைபிளுக்குக் கவனம் செலுத்தும் விதத்தில் நம் நாவைப் பயன்படுத்துவது அன்புமாறா கருணையை வெளிக்காட்டுவதாகும்.—நீதி. 17:17.
16, 17. அன்புமாறா கருணை நம் பேச்சைக் கட்டுப்படுத்துவதை என்ன சில வழிகளில் காண்பிக்கலாம்?
16 ஒரு கிறிஸ்தவர் பைபிள் நியமங்களுக்கு முரணாக வாழ்வதைப் பார்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும்? நம் பேச்சால் அவரைச் சரிசெய்ய அன்புமாறா கருணை நம்மைத் தூண்ட வேண்டும், அல்லவா? (சங். 141:5) சக கிறிஸ்தவர் ஒருவர் படுமோசமான பாவம் செய்தது நமக்குத் தெரியவந்தால், ‘சபையின் மூப்பர்களை வரவழைக்கும்படி’ அவரிடம் சொல்ல பற்றுமாறா அன்பு நம்மைத் தூண்டுகிறது; அப்படிச் செய்யும்போது, ‘அவர்கள் யெகோவாவின் பெயரில் அவருக்கு எண்ணெய் பூசி அவருக்காக ஜெபம் செய்வார்கள்.’ (யாக். 5:14) தவறுசெய்தவர் மூப்பர்களிடம் விஷயத்தைச் சொல்லவில்லை என்றால், நாம் அதை மூப்பர்களிடம் தெரிவிக்க வேண்டும்; அப்படித் தெரிவிக்காமல் போனால், அது அன்புமாறா கருணையை காண்பிப்பதாக இருக்காது. சோர்வு, தனிமை, விரக்தி, அருகதையற்ற உணர்வு ஆகியவை நம்மில் சிலரை ஆட்டிப்படைக்கலாம். இப்படி ‘சோகமாயிருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேசுவது’ அன்புமாறா கருணையை நம் பேச்சில் வெளிக்காட்டுவதற்குச் சிறந்த வழியாகும்.—1 தெ. 5:14.
17 கடவுளுடைய எதிரிகள் சக கிறிஸ்தவர்களைப் பற்றி வதந்திகளைப் பரப்பினால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? நம் சகோதரர்களின் உண்மைத்தன்மையைக் குறித்துச் சந்தேகப்படாமல், அப்படிப்பட்ட பேச்சுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து வந்துவிட வேண்டும்; அல்லது வதந்தியைப் பரப்பியவர் நியாயமானவராக இருந்தால், அவர் அப்படிச் சொல்வதற்குத் தகுந்த காரணம் இருக்கிறதா என அவரிடம் கேட்க வேண்டும். சில சமயம், கடவுளுடைய மக்களின் எதிரிகள் நம் கிறிஸ்தவச் சகோதரர்களுக்கு தீங்கு செய்ய அவர்களைப் பற்றிய விவரங்களை விசாரிக்கலாம்; நம் சகோதரர்கள்மீது பற்றுமாறா அன்பு இருந்தால் நாம் அவர்களுக்கு எந்த விவரங்களையும் கொடுக்க மாட்டோம்.—நீதி. 18:24.
‘அன்புமாறா கருணையைப் பின்பற்றுகிறவன் ஜீவனைக் கண்டடைவான்’
18, 19. சக ஊழியர்களுடன் பேசுகையில் அன்புமாறா கருணையை நாம் ஏன் எப்போதும் வெளிக்காட்ட வேண்டும்?
18 யெகோவாவை வழிபடுவோருடன் நாம் எல்லா அம்சங்களிலும் பற்றுமாறா அன்பை வெளிக்காட்ட வேண்டும். கடினமான சூழ்நிலையிலும்கூட, அன்புமாறா கருணை நம் பேச்சில் பளிச்சிட வேண்டும். இஸ்ரவேலர்களின் அன்புமாறா கருணை ‘விடியற்காலையில் தோன்றும் பனியைப்போல ஒழிந்து போனபோது’ யெகோவா வருத்தப்பட்டார். (ஓசி. 6:4, 6) மறுபட்சத்தில், அன்புமாறா கருணையைத் தொடர்ந்து காண்பிக்கும்போது யெகோவா அதில் சந்தோஷம் காண்பார். அதை நாடுவோரை அவர் எப்படி ஆசீர்வதிக்கிறார் என்பதைச் சிந்திக்கலாம்.
19 “நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்” என நீதிமொழிகள் 21:21 குறிப்பிடுகிறது. அப்படிப்பட்டவர் ஜீவனை, அதாவது வாழ்வைக் கண்டடைவது அவர் பெறும் ஆசீர்வாதங்களில் ஒன்று; அது குறுகிய வாழ்வு அல்ல, முடிவில்லா வாழ்வு. “உண்மையான வாழ்வைக் கண்டிப்பாக” பெற யெகோவா அவருக்கு உதவுகிறார். (1 தீ. 6:12, 19) அப்படியானால், நாம் ‘ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுவோமாக.’—சக. 7:9, பொது மொழிபெயர்ப்பு.
[அடிக்குறிப்புகள்]
a தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு பைபிளில், “அன்புமாறா கருணை” என்ற வார்த்தை “கிருபை,” “தயவு,” “தயை,” “இரக்கம்,” “நற்குணம்” என்றெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இக்கட்டுரையில் காணப்படும் இந்தப் பதங்கள் அன்புமாறா கருணையைக் குறிக்கின்றன.
b அன்புமாறா கருணை என்ற பண்பு எவ்வாறு பற்றுறுதி, அன்பு, கருணை ஆகியவற்றிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு மே 15, 2002 காவற்கோபுரம் பக்கங்கள் 12-13, 18-19-ஐப் பாருங்கள்.
விளக்க முடியுமா?
• அன்புமாறா கருணையை எப்படி விளக்குவீர்கள்?
• நம் பேச்சில் அன்புமாறா கருணையை வெளிக்காட்ட எவை நமக்கு உதவும்?
• மணத் துணைகள் தங்கள் பேச்சில் பற்றுமாறா அன்பை எவ்வாறு வெளிக்காட்டலாம்?
• சக ஊழியர்களிடம் அன்புமாறா கருணையோடு பேசுகிறோம் என்பதை எது காட்டுகிறது?
[பக்கம் 23-ன் படம்]
தாவீது யெகோவாவின் அன்புமாறா கருணையைப் புகழ்ந்து பாடினார்
[பக்கம் 24-ன் படம்]
குடும்ப வழிபாட்டைத் தவறாமல் செய்கிறீர்களா?