உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 12/8 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எழுத்தறிவும் உடல்நலமும்
  • ஓட்டை மாநாடு
  • ஒற்றுணர்வைக் கற்றுக்கொள்ளுதல்
  • நீண்ட நேரம் உழைப்பது யார் —ஆண்களா, பெண்களா?
  • சீனாவின் மக்கள்தொகை 120 கோடியை எட்டுகிறது
  • நத்தை ஆக்கிரமிப்பு
  • இரண்டாம் உலக யுத்தத்தின் அடிக்குறிப்பு
  • யாருக்காவது டென்னிஸ் விளையாட விருப்பமா?
  • “ஞாபகசக்தி” உள்ள தாவரங்கள்
  • அளவுக்கு அதிகமான பாதிரிகள்
  • குழந்தைகள்—சொத்தா, கடனா?
    விழித்தெழு!—1993
  • உலகைக வனித்தல்
    விழித்தெழு!—1997
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1993
  • பெண்களுக்கு ஆயுள் அதிகம் ஆனந்தமோ குறைவு
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 12/8 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

எழுத்தறிவும் உடல்நலமும்

யுனெஸ்கோவால் (ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாச்சார கழகம்) அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகிறதுபோல, உயர்ந்தளவு எழுத்தறிவு நீண்ட வாழ்நாள் எதிர்பார்ப்புக்கு உதவியளிக்கலாம். “எழுத படிக்க கற்றுக்கொண்ட ஜனங்கள் சுகாதாரத்திற்கும் உடல்நலப் பராமரிப்பிற்கும் அதிக கவனம் செலுத்துகின்றனர்; அவர்கள் விதியின்மீது அவ்வளவாக நம்பிக்கைவைக்கும் மனப்பான்மையற்றவர்களாக இருக்கின்றனர், ஆகவே, வியாதி ஏற்படுமானால், அவர்கள் மருத்துவர்களின் உதவியை பெரும்பாலும் நாடுகிறார்கள்,” என்று யுனெஸ்கோ சோர்சஸ் என்ற பத்திரிகை சொல்லுகிறது. எனினும், வாழ்நாள் எதிர்பார்ப்பை பாதிக்கும் காரணிகளில் எழுத்தறிவு ஒன்று மட்டுமே. “மருத்துவ சிகிச்சையைப் பெறமுடிவது, குடும்பத்தின் பண சூழ்நிலைகள், சமூக சுற்றுச்சூழல்,” ஆகியவையும்கூட மிக முக்கியமான பங்குகளை வகிக்கின்றன.

ஓட்டை மாநாடு

டென்மார்க்கின் கோபன்ஹாகனில், 1995, மார்ச் 6-12 தேதிகளில் ஐக்கிய நாடுகளின் ஆதரவால் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டிற்கு உலக முழுவதிலிருந்தும் சுமார் 20,000 பிரதிநிதிகள் குழுமி வந்திருந்தனர். மாநாட்டின் தலைப்பு: “சமூக வளர்ச்சிக்கான உலக உச்சிமாநாடு.” அவர்கள் கூடி வந்திருப்பதன் நோக்கம்? வளரும் நாடுகளில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், இனப் பிரிவினை ஆகியவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிவகைகளைக் கலந்துபேசுவதே. இருந்தபோதிலும், இதற்கான மிகப்பெரிய ஒரு முட்டுக்கட்டையை—பணமின்மையை—கண்டுபிடிக்க அவர்களுக்கு ரொம்ப காலம் ஆகிவிடவில்லை. வறுமையால் அலைக்கழிக்கப்பட்ட நாடுகளில் அநேகம் தங்களுடைய வட்டித் தொகையைக்கூட திருப்பித் தரமுடியாத அளவுக்கு பணக்கார நாடுகளிடம் ஏகப்பட்ட அளவு கடன்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்திய டென்மார்க், தன்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றி, மிகவும் ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்யும்படி பணக்கார நாடுகளுக்கு ஆலோசனை கூறிற்று. ஆனாலும் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. மிக ஏழை நாடுகளுடைய கடனின் பெரும்பகுதி போர்க்கருவிகளை வாங்கியதனால் ஏற்பட்டதாக இருக்கிறது. ஆகவே, ஐநா-வின் ஆலோசகர் ஒருவர் விவரித்ததுபோல, அவற்றின் கடனை ரத்து செய்தால், இன்னும் அதிக துப்பாக்கிகளை வாங்குவதற்குத்தான் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்துவார்கள்.

ஒற்றுணர்வைக் கற்றுக்கொள்ளுதல்

மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் திறமையானது கற்றுக்கொள்ளுதலால் பெறப்படுகிறது என்பதாக பிள்ளைகளில் உள்ள ஒற்றுணர்வைக் குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். “துர்ப்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிற பிள்ளைகள் மற்ற பிள்ளைகளின் துயரத்திற்கு ஒற்றுணர்வோடு பிரதிபலிப்பதில்லை என்று காண்பிக்கப்பட்டிருக்கிறது,” என்று மான்ஹாட்டனில் உள்ள கான்ஸாஸ் ஸ்டேட் யுனிவர்சிடியைச் சேர்ந்த டாக்டர் மார்க் ஏ. பார்னட் சொன்னதாக தி நியூ யார்க் டைம்ஸ் மேற்கோள் காட்டியது. “அவர்கள் துயரப்படும் பிள்ளைகளைக் காணலாம், ஆனால் ஒன்றும் செய்யமாட்டார்கள், அல்லது அந்தக் குழந்தையிடம் சென்று உரக்க கத்தி அதைப் பிடித்து கீழே தள்ளிவிடலாம்.” மறுபட்சத்தில், “தன்னுடைய சொந்த உணர்ச்சிப்பூர்வ தேவைகள் நன்கு பூர்த்திசெய்யப்பட்ட ஒரு பிள்ளை மற்றவர்களின் உணர்ச்சிக்கு நன்கு பிரதிபலிக்கிறது,” என்று அவர் தொடர்ந்து கூறுகிறார். என்றபோதிலும், உணர்ச்சிப்பூர்வமான பாதுகாப்பு தருவதோடு மட்டுமல்லாமல், ஒற்றுணர்வோடு நடந்துகொள்வது எவ்வாறு என்பதைப் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்குக் காட்டவும் வேண்டும். டாக்டர் பார்னட் கூறுவதுபோல, ஒற்றுணர்வுடைய பெற்றோர்கள் பொதுவாகவே ஒற்றுணர்வுடைய பிள்ளைகளை வளர்க்கின்றனர்.

நீண்ட நேரம் உழைப்பது யார் —ஆண்களா, பெண்களா?

வட அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் தவிர, மற்றெல்லா தேசங்களிலும் உள்ள பெண்கள் வேலையில் ஆண்களைவிட அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று அறிக்கையிடுகிறது, ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதி நிறுவனத்தின் (UNFPA) பத்திரிகையாகிய போப்பூலை. ஆப்பிரிக்காவிலும் ஆசிய-பசிபிக் பிரதேசத்திலும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இந்நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தில் பெண்கள் ஆண்களைவிட வாரத்துக்கு சராசரியாக சுமார் 12 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்கின்றனர். “அநேக வளரும் நாடுகளில் பெண்கள், பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த தங்களுடைய குறைந்தபட்ச வாழ்க்கைத் தராதரத்தைக் காத்துக்கொள்ள மட்டுமே, இப்போது ஒரு வாரத்துக்கு 60-90 மணிநேரம் வேலை செய்கின்றனர்,” என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது. இதற்கிடையில், தொழில் முன்னேற்றமடைந்த உலகில், ஆண்கள் செய்யும் வீட்டுவேலைகளின் பங்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. “ஆனால் சமைத்தல், சுத்தம்செய்தல், துணி துவைத்து சலவை செய்தல் போன்ற வழக்கமாக செய்யும் வேலைகளை ரொம்ப சரிசமமாக பிரித்து செய்கிறார்கள் என்பதனாலல்ல. மாறாக, கடைக்குப் போய்வருதல் போன்ற வேலைகளை செய்ய ஆண்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதினாலேயே ஆகும்,” என்று போப்பூலை விளக்குகிறது.

சீனாவின் மக்கள்தொகை 120 கோடியை எட்டுகிறது

இந்த வருட துவக்கத்தில் சீனாவின் மக்கள்தொகை 120 கோடியைச் சென்றெட்டியது என்று சைனா டுடே அறிவித்தது. 1970-களில் தேசீய குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படாமல் இருந்திருந்தால், மக்கள்தொகை ஒன்பது வருடங்களுக்கு முன்பே இந்த அளவை எட்டியிருக்கும். இருந்தபோதிலும், தற்போதைய வளர்ச்சி வீதம் தொடருமானால், சீனாவின் மக்கள்தொகை அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 130 கோடியை அடையும். உலகிலேயே அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், தானியம், இறைச்சி, முட்டைகள் போன்றவற்றின் உற்பத்தியில் சீனாவின் தலா உற்பத்தி அதிக வளர்ச்சியடைந்த நாடுகளின் உற்பத்தியைவிட குறைவாகவே இருக்கிறது. இது மட்டுமல்லாமல், மாசுபடுத்துதலாலும், நிலம் அடர்த்தியாக குடியிருக்கப்பட்டிருப்பதாலும் மொத்த விளைநிலத்தின் அளவு சுருங்கிக்கொண்டே போகிறது என்று சொன்னது சைனா டுடே.

நத்தை ஆக்கிரமிப்பு

நத்தைகள் எப்பொழுதாவது தப்பித்துப் போகுமானால் பெரும் தொல்லையை விளைவிக்கும் என்பதாக ஆறு வருடங்களுக்கு முன் தென் அமெரிக்க கோல்டன் நத்தைகளை உணவுப் பொருளாக வியட்நாமுக்கு உயிருடன் இறக்குமதி செய்வதற்கு முன்பே விஞ்ஞானிகள் எச்சரித்தனர். விஞ்ஞானிகள் சொன்னது சரிதான் என்று காலம் தெளிவாக்கியிருப்பதாகத் தெரிகிறது. சில நத்தைகள் தப்பித்துப்போய், விரைவில் நெற்பயிரை சாப்பிடுவதற்கான ஆர்வத்தைக் காட்டின. பின்னர் அரசாங்கம் நத்தைகளுக்குத் தடைவிதித்தது, ஆனாலும் சிறு நிறுவனங்கள் தொடர்ந்து அவற்றை எப்படியாவது வளர்த்து, உணவுக்காக விற்றுவந்தன. தி அசோஷியேட்டட் பிரஸ் அறிவிக்கிறதாவது: அதிகாரப்பூர்வமான வியட்நாம் நியூஸ் சொல்கிறபடி, 11 சதுர அடி நிலப்பரப்பில் உள்ள நெற்பயிரை ஒரே நாளில் தீர்த்துக்கட்ட, இந்தச் சிறு பிராணிகளில் எட்டே எட்டு இருந்தால் போதும்! இந்த நத்தைகள் ஏற்கெனவே 77,000 ஏக்கர் நெற்பயிரை அழித்துவிட்டிருப்பதாகவும், நாட்டில் நெல் மிகவும் தழைத்து வளரும் பகுதிகளுக்குப் பரவியிருப்பதாகவும் அறிக்கையிடப்படுகின்றன. ஒரேவொரு பெண் நத்தை ஒரு வருடத்தில் சுமார் நான்கு கோடி முட்டைகளை இடமுடியும்.

இரண்டாம் உலக யுத்தத்தின் அடிக்குறிப்பு

50-க்கும் அதிகமான வருடங்களுக்குமுன், இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டத்தில், அ.ஐ.மா.-வில் உள்ள கொலராடோவின் கிராமப் பகுதியில் வசிக்கும் ஒரு விவசாயி, தான் எதிரிகளின் தாக்குதலில் இருந்து ஓரளவுக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக நினைத்திருக்கலாம். அத்தகைய விவசாயிகளில் ஒருவரது டிராக்டர் குண்டு வெடிப்பினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறிய குழியில் திடீரென விழுந்தபோது அவர் எவ்வளவு ஆச்சரியப்பட்டிருக்கவேண்டும்! பசிபிக் பெருங்கடலின் மறுபக்கத்தில் பலூன் மூலம் ஏவப்பட்டிருந்த குண்டு இங்கு வந்து விழுந்ததாகத் தெரியவந்தது. உலகளாவிய போருக்குப்பின் ஒரு தலையிடும் அடிக்குறிப்பாக, 1942-ல் ஐ.மா. நடத்திய ஆகாய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக, சிறிய வெடிகுண்டுகளையும் ராணுவத்தினருக்கு எதிராக விடப்பட்ட வெடிகுண்டுகளையும் தன்னுள் கொண்டிருந்த 9,000-க்கும் அதிகமான ஹைட்ரஜன் பலூன்களை ஏவிவிட ஜப்பானியர்கள் தீர்மானித்தனர். ஸ்க்ரிப்ஸ் ஹவர்ட் நியூஸ் சர்வீஸ் சொல்லுகிறபடி அதன் நோக்கம், ஐக்கிய மாகாண காடுகளில், ஏறக்குறைய 10,000 கிலோமீட்டர் தூரத்திற்கு, தீயை மூட்டுவதும் பீதியைக் கிளப்புவதுமாகவே இருந்தது. இதில் அநேகர் கொல்லப்பட்டாலும், ஏற்பட்ட பாதிப்பு ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்தது. பலூன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் 285 நடந்திருப்பதாக அறிக்கை செய்யப்பட்டன. அரசாங்கத்தின் ஆணைக்கு இணங்க, பீதி கிளப்பிவிடுவதைத் தவிர்க்க தகவல் தொடர்பு துறை இதைப் பற்றிய செய்திகளை ரகசியமாக வைத்துக்கொண்டது.

யாருக்காவது டென்னிஸ் விளையாட விருப்பமா?

சட்டவிரோதமான போதைப்பொருட்களுக்கு ஆஸ்திரேலியாவின் சிறைச்சாலைகளில் இருக்கும் கிராக்கியானது, போதைப்பொருள் கடத்தலில் புதிய சில முறைகளை அறிமுகப்படுத்திற்று. “மக்கள் டென்னிஸ் பந்துகளில் சட்டவிரோதமான போதைப்பொருட்களை நிரப்பி, அவற்றை டென்னிஸ் மட்டைகளை உபயோகித்து ஆஸ்திரேலிய சிறைச்சாலைகளுக்குள் அடித்துவிடுகின்றனர்,” என்று ராய்ட்டர்ஸ் நியூஸ் சர்வீஸ் அறிவிக்கிறது. “அவர்கள் போதைப்பொருளை பொதிந்துவிட்ட பிறகு (பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து) கட்டுகிறார்கள்,” என்று சிறைச்சாலையின் பிரதிநிதி கீத் ப்ளைத் சொல்லுகிறார். பின்னர் அதை அவர்கள் ஒரு டென்னிஸ் பந்தில் வைத்து, அதை உண்மையிலேயே சுவற்றின்மேல் தூக்கி வீசுகின்றனர் அல்லது அடிக்கின்றனர். போதைப்பொருள் போக்குவரத்தைத் தடைசெய்யும் முயற்சியில் தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம், மற்ற நடவடிக்கைகளோடு சேர்த்து, “சந்தேகத்திற்குரிய டென்னிஸ் பந்தை வைத்திருப்போரை” பிடிப்பதற்காக மாநிலத்தின் சிறைச்சாலைகளுக்கு வெளியில் ரோந்துபணி பார்க்க “போதைப்பொருள் மோப்பம் பிடிக்கும் நாய்களை” உபயோகிக்கின்றனர் என்று ப்ளைத் விவரித்தார். துணிச்சலுள்ள மற்றொரு கடத்தல்காரன் சிறைச்சாலையின் சுவருக்குமேல் போதைப்பொருட்களை தள்ளிவிடுவதற்கு குறுக்குவில்லை (crossbow) பயன்படுத்தினான். இருப்பினும், “போதைப்பொருட்களை கேக்குகளில் ஒளித்துவைத்து” சிறைச்சாலைகளுக்குள் கொண்டுபோகும் “மிகவும் பழைய முறை” இன்னும் பரவலாக பயன்படுத்தப்படுவதாக அந்த அறிக்கை சொன்னது.

“ஞாபகசக்தி” உள்ள தாவரங்கள்

தாக்குதலுக்கு உள்ளாகும்போது, தாவரங்களில் அநேகம் தங்களை தாக்குபவர்களை திசைதிருப்ப ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. சில தாவரங்கள் அந்தத் தாக்குதலை “ஞாபகத்திலும்” வைத்துக்கொள்கின்றன; மீண்டும் தாக்கப்பட்டால், தாக்குபவரைத் தடைசெய்யும் அந்த நச்சுப்பொருளை அதிக விரைவாக உற்பத்தி செய்ய இது உதவுகிறது என்று நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிவிக்கிறது. ஒரு புகையிலையை சவைக்கும் ஒரு கம்பளிப்பூச்சி, ஜேஸ்மானிக் அமிலத்தின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, இந்த அமிலம் அதன் வேர்கள் வரை சென்று பரவுகிறது. இது நிகொடின் உற்பத்தியைத் துவக்கிவிடுகிறது, நிகொடின் இலைகளுக்குத் திரும்பவும் சென்று, திண்ணும் உயிரிகளுக்கு இலைகளை விரும்பப்படாதவையாக ஆக்குகின்றன. அமிலத்தை ஏற்கெனவே வரப்பெற்றிருக்கும் வேர்களைக்கொண்ட தாவரங்கள் தாக்குதலுக்கு உடனடியாக எதிர்வினை புரிந்தன. “உண்மையிலேயே தாவரங்களுக்கு ஞாபகசக்தி இருப்பதை காட்டுகிறது,” என்று பஃபல்லோவில் உள்ள ஸ்டேட் யுனிவர்சிடி ஆஃப் நியூ யார்க்கின் ஈயன் பால்ட்வன் கூறுகிறார்.

அளவுக்கு அதிகமான பாதிரிகள்

கனடாவின் புராட்டஸ்டண்ட் சர்ச்சுகளில் அங்கத்தினர்களின் குறைந்துவரும் எண்ணிக்கை, “ஒருபோதும் இருந்திராத வண்ணம் தேவைக்கு அதிகமான புராட்டஸ்டண்ட் பாதிரிகள் இருப்பதில் விளைவடைந்திருக்கிறது,” என்பதாக தி க்ளோப் அண்ட் மெய்ல் தெரிவிக்கிறது. க்யுபெக்கைச் சேர்ந்த மான்ட்ரீலில் உள்ள ஆங்கிலிக்கன் சர்ச்சில், கடந்த பத்தாண்டுகளில், அங்கத்தினர்களின் எண்ணிக்கை 67,000-ல் இருந்து 27,000-த்துக்கு குறைந்திருக்கிறது; ஆனால் பாதிரிகளின் எண்ணிக்கையிலோ மாற்றமேதுமில்லை. இவ்வாறு பாதிரிகள் தேவைக்கு அதிகமாக மிஞ்சி போயிருப்பதால், சிலர் பகுதிநேர வேலைகளில் சேரும்படியோ அல்லது பிழைப்புக்காக வேலையில்லாதோருக்கான காப்பீட்டுறுதியைக் கோரும்படியோ நேர்ந்திருக்கிறது. ஒன்டாரியோவைச் சேர்ந்த டோராடன்டோவில் உள்ள பிரிஸ்பிட்டேரியன் சர்ச்சிலும் இதே நெருக்கடிதான் ஏற்பட்டிருக்கிறது. “சபைகள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் முழுநேர ஊழியர்களை வைத்திருக்க முடியும் என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என ஊழியம் மற்றும் சர்ச் பாதிரித்துவத்தின் துணைச் செயலாளர், ஜீன் ஆம்ஸ்ட்ராங் சொல்கிறார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்