நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—அடிக்கடி செய்து முடிக்கப்படும் பிராந்தியத்தில் பத்திரிகைகளோடு
1 பேதுருவும் யோவனும் சமாரியாவில் ஒரு முழுமையான சாட்சி கொடுத்தனர், பின்பு “அநேக கிராமங்களில் சுவிசேஷத்தை” அறிவித்தனர் என்று அப்போஸ்தலர் 8:25-ல் நாம் வாசிக்கிறோம். இன்று, நாமும்கூட ஒரு முழுமையான சாட்சி கொடுப்பதற்காக நம் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள பிராந்தியத்தை முற்றிலும் செய்து முடிப்பதில் ஊக்கமாயிருக்க வேண்டும்.
2 பிரஸ்தாபிகளில் விரைவான வளர்ச்சி இருப்பதால், இப்பொழுது அநேக சபைகள் தங்கள் பிராந்தியத்தை அடிக்கடி செய்து முடிக்கின்றனர். அடிக்கடி செய்யப்பட்ட பிராந்தியங்களில் ஊழியம் செய்வதில் நம்முடைய முதல் பிரதிபலிப்பு எதிர்மறையானதாக ஒருவேளை இருந்தாலும், இது அவ்வாறு இருக்கக்கூடாது. காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!வின் ஒவ்வொரு இதழிலும் நம் பிராந்தியத்தில் இருக்கும் ஜனங்களோடு நாம் பகிர்ந்துகொள்ளக்கூடிய புதிய, அக்கறையூட்டும் பேச்சுப்பொருள்கள் எப்பொழுதும் இருக்கின்றன. மேலும், நாம் நம்முடைய பிராந்தியத்தை அடிக்கடி செய்து முடிப்பதால், ஒவ்வொரு வீட்டிலும் கூடுதலான நேரத்தை செலவழிக்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது.
ஜனங்களோடு சம்பாஷியுங்கள்
3 நம்முடைய எல்லா பிராந்தியத்தை முடிப்பதற்கும், பத்திரிகைகளுக்கு விரிவான விநியோகத்தைக் கொடுப்பதற்கும் மிகவும் சுருக்கமான பத்திரிகை அளிப்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. என்றபோதிலும், அடிக்கடி செய்து முடிக்கப்பட்ட பிராந்தியங்களில் வேலை செய்யும் பிரஸ்தாபிகள், வீட்டுக்காரரோடு அதிக நேரமெடுத்து சம்பாஷிக்க விசேஷமாக முயற்சி செய்ய வேண்டும். இளம் பிள்ளைகளும்கூட, கட்டுரையில் தங்களுக்கு அக்கறையூட்டுவதாய் இருந்தவைகளின் பேரில் விரிவாகப் பேசலாம். இது எவ்வாறு நிறைவேற்றப்படலாம்? பத்திரிகைகளில் இருக்கும் கட்டுரைகளோடு அறிமுகமாயிருப்பது அவசியம். இது நேரத்தையும் முன் யோசனையையும் தேவைப்படுத்துகிறது. பத்திரிகைகளை வாசிக்கையில் உங்கள் பிராந்தியத்தில் இருக்கும் ஜனங்களுக்கு எது கவர்ச்சியூட்டுவதாய் இருக்கும் என்பதை நிர்ணயுங்கள். பின்னர், ஊழியத்துக்குச் செல்வதற்கு முன் பத்திரிகைகளை திருப்பிப் பார்த்து நீங்கள் சிறப்பித்துக் காண்பிக்கப் போகும் தலைப்புகளை தெரிந்துகொள்ளுங்கள். வீடுகளில் வெவ்வேறு சூழ்நிலைமைகளை எதிர்ப்படுகையில், எந்தக் கட்டுரையை நீங்கள் சிறப்பித்துக் காண்பிப்பீர்கள் என்பதை சிந்தியுங்கள். ஒரு பத்திரிகையில் இருக்கும் சிறந்த கட்டுரைகளில் ஒன்றை உங்கள் முன்னுரையில் ஒரு மைய குறிப்பாக உபயோகியுங்கள். ஒரு சிநேகப்பான்மையான சம்பாஷணையுடன் வீட்டுக்காரரின் கருத்துக்களை வரவழைத்து, பத்திரிகைகளை அளிப்பதை உற்சாகமாய் செய்யுங்கள்.
நம்முடைய நோக்கத்தை மனதில் வையுங்கள்
4 வீட்டுக்கு வீடு செல்வதில் நம்முடைய நோக்கம் எவ்வளவு பத்திரிகைகள் அல்லது புத்தகங்கள் நாம் விநியோகிக்க முடியும் என்பதைப் பார்ப்பதற்கல்ல. சத்தியத்தின் திருத்தமான அறிவை அடைய மற்றவர்களுக்கு உதவி செய்வது தான் நம்முடைய விருப்பம். பேதுருவும், யோவனும் சமாரியர்களுக்கு யெகோவாவின் வார்த்தையை முழுமையான முறையில் பேசினர், அது போல நாமும் நம்முடைய பிராந்தியத்தில் இருக்கும் ஜனங்கள் சத்தியத்துக்கு பிரதிபலிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களா என்பதைக் காண்பதற்கு தேவையுள்ள நேரத்தை செலவிட விரும்புவோம்.
5 நம்முடைய சம்பாஷணைகளுக்கு ஓர் அடிப்படையாக பத்திரிகைகளை திறம்பட்ட விதத்தில் உபயோகிப்பதன் மூலம், இந்த நோக்கத்தை நாம் நிறைவேற்றலாம். “தைரியமாய் . . . வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு” நமக்கு கொடுக்கப்படும்படி, நாம் நமக்காகவும், மற்றவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும்.—எபே. 6:18–20.