சில பிள்ளைகளைச் சமாளிப்பது அவ்வளவு கடினமாக இருப்பதேன்
“மரபுவழி செல்வாக்குகள், மூளை ரசாயன செயல்முறைகள், நரம்பு மண்டல வளர்ச்சி ஆகிய இவையெல்லாம் பிள்ளைகளாக இருக்கும்போது நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம், பெரியவர்களாக வளரும்போது நாம் எப்படிப்பட்டவர்களாக வளர்கிறோம் என்பதில் வல்லமைவாய்ந்த பங்கை வகிக்கின்றன.”—ஸ்டேன்லி டுரெக்கி, M.D.
ஒவ்வொரு பிள்ளையும் தனக்கே உரித்தான, தனித்தன்மை வாய்ந்த வழியில் வளர்கிறான்(ள்). குழந்தைகள் பிறப்பிலிருந்தே பெறுவதாகத் தோன்றும் அநேக குணாதிசயங்களையும் மனநிலைகளையும் காண்பிக்கின்றன. இந்தக் குணாதிசயங்களைப் பெற்றோர் சிறிதளவே கட்டுப்படுத்தலாம் அல்லது சிறிதுகூட கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். அடங்காப்பிடாரியான, துருதுருத்த, சேதம் விளைவிக்கும் பிள்ளைகள் எப்போதுமே இருந்துவந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. மிகச் சிறந்த பெற்றோரும்கூட வளர்ப்பதற்கு கடினமாக உள்ள ஒரு குழந்தையை உடையவராக இருக்கமுடியும்.
ஆனால் ஒருசில பிள்ளைகளைச் சமாளிப்பது ஏன் அளவுக்குமீறி கடினமானதாயும், அவர்களை வளர்ப்பது சவாலாயும் இருக்கிறது? கடுமையான நடத்தைப் பிரச்சினைகளை எதிர்ப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. அனைத்துப் பிள்ளைகளிலும் 5 முதல் 10 சதவீதத்தினர் அளவுக்குமீறி துருதுருவென்று இருக்கின்றனர்; இந்தப் பிள்ளைகளால் கூர்ந்து கவனிக்கவோ, மனதை ஒருமுகப்படுத்தவோ, விதிமுறைகளை அனுசரிக்கவோ, உணர்ச்சிவசப்படுதலைக் கட்டுப்படுத்தவோ முடிவதில்லை; இவ்வாறு இருப்பது அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், அவர்களுடைய ஆசிரியர்களுக்கும், அவர்களுடைய சகாக்களுக்கும் எண்ணிலடங்கா இன்னல்களைக் கொடுத்திருக்கிறது என்றெல்லாம் மருத்துவர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் பொதுவாக ஒத்துக்கொள்ளப்படுகிறது.
யேல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் குழந்தை மருத்துவம் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர், டாக்டர் பெனட் ஷேவிட்ஸ், ஒரு முக்கிய பிரச்சினை என்னவாக இருக்கலாம் என்பதன்பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்: மூளை செல்லின் வேலையைச் சீர்படுத்தி, நடத்தையை மூளை எவ்வாறு சீர்படுத்துகிறதோ அதில் உதவிபுரியும் “மூளையின் நரம்புத்துடிப்புக் கடத்தி (neurotransmitter) மண்டலங்களில் உள்ள ஒருசில ரசாயனப் பொருட்களில் ஏற்படும், பிறப்பின்மூலம் பெறப்பட்ட குலைவுகளே” என்பதாக அவர் சொல்கிறார். பிள்ளையைச் சமாளித்து வளர்க்க இயலாத பிள்ளையாக ஆக்குவது எதுவானாலும்சரி, தங்களுடைய இளம் பிள்ளையின் நடத்தையைத் திறம்பட்ட விதத்தில் சமாளிப்பதிலும், குறைகூறி ஒதுக்கித் தள்ளிவிடுவதைவிட உற்சாகமும் ஆதாரமும் அளிப்பதிலும் கைதேர்ந்தவர்களாக ஆவதே பெற்றோரின் முன்னுரிமையாக இருக்கவேண்டும்.
பைபிள் காலங்களில் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கல்விபுகட்டுவதற்கும் பயிற்றுவிப்பதற்கும் பெற்றோரே பொறுப்பாளிகளாக இருந்தனர். கடவுளுடைய நியாயப்பிரமாணத்திலிருந்து போதித்து சிட்சிப்பதானது தங்களுடைய பிள்ளையை ஞானவானாக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். (உபாகமம் 6:6, 7; 2 தீமோத்தேயு 3:15) ஆகவே, எவ்வளவுதான் அதிக வேலைகள் இருந்தாலும், ஒரு பிள்ளையின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு, முக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படாத நடத்தைக்கு முன்னேற்றுவிக்கக்கூடிய விதத்தில் பிரதிபலிப்பதற்கு, முடிந்தளவு முயற்சிப்பது பெற்றோருக்குக் கடவுளால் கொடுக்கப்பட்ட பொறுப்பாக இருக்கிறது. குழந்தை மருத்துவப் பணியில் இன்று காணப்படும் அநேக நடத்தைப் பிரச்சினைகள், மிகை இயக்க (hyperactive), உணர்ச்சிவசப்படும், அல்லது கவனம் செலுத்த இயலாத பிள்ளைகளை உட்படுத்துகின்றன. ஆகவே ADD, ADHD ஆகியவற்றை வளர்ப்பதற்குக் கடினமான பிள்ளைகளில் உள்ள காரணிகளாக கலந்தாலோசிப்பது உதவியாய் இருக்கலாம்.a
1950-களில் இந்தச் சீர்கேடுகள் “குறைந்த மூளை செயல் சீர்குலைவு” (minimal brain dysfunction) என்று அழைக்கப்பட்டன. குழந்தை நரம்பியல் மருத்துவர், டாக்டர் ஜேன் மேத்திசென் கூறியபடி, “ADD என்பது மூளைச் சீர்குலைவே கிடையாது” என்று கண்டுபிடிப்புகள் காண்பித்தபோது, இந்தப் பதம் உபயோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. “ADD மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் கோளாறாக தோன்றுகிறது. உட்பட்டிருக்கும் நரம்பு ரசாயன பிரச்சினைகள் எவை என்பது சரியாக எங்களுக்கு இன்னும் நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் மூளையில் டோப்பமைன் என்று அழைக்கப்படும் ஒரு ரசாயனப் பொருளோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்று கருதுகிறோம்,” என்று டாக்டர் மேத்திசென் கூறுகிறார். இந்தப் பிரச்சினை டோப்பமைன் சீர்படுத்துதலை உட்படுத்துகிறது என்று அவர் கருதுகிறார். “இப்பிரச்சினையின் காரணம் ஒருவேளை ஒரேவொரு ரசாயனப் பொருளாக இல்லாமல், அநேக ரசாயனப் பொருட்கள் சேர்வதினால் ஏற்படும் விளைவாக இருக்கலாம்,” என அவர் மேலுமாக கூறினார்.
ADD-க்கான காரணத்தைப் பற்றிய பதிலளிக்கப்படாத கேள்விகள் இன்னுமநேகம் இருக்கின்றன. இருந்தபோதிலும், கவனம், உணர்ச்சிவசப்படுதல், தசை இயக்கம் ஆகியவற்றை நீண்டகாலமாக சரிவர கட்டுப்படுத்தாதிருப்பதன் தொடக்கம் நரம்பு மண்டலத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதாக, டாக்டர் மேத்திசெனோடு சேர்ந்து ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கின்றனர். மூளையில் உள்ள ஒரு குறிப்பிட்ட வளர்சிதைமாற்ற இயல்பு மாற்றத்திற்கு ADD காரணமாக இருக்கிறது என்பதாக டாக்டர் ஏலன் ஸாமெட்கினும் ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து ஐக்கிய மாகாணங்களில் உள்ள தேசிய மனநல ஆராய்ச்சி நிலையத்தில் (National Institute of Mental Health) நடத்திய ஒரு சமீபத்திய ஆராய்ச்சி முதன்முறையாக கண்டுபிடித்துள்ளது. இருப்பினும், “அதிநிச்சயமான பதில்களைப் பெற இன்னுமதிக ஆராய்ச்சி செய்யப்படவேண்டி இருக்கிறது” என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
பள்ளி ஒரு உண்மையான சவாலாக இருக்கிறது
நீண்டகாலமாக, கவனம்செலுத்த இயலாமலும், எளிதில் கவனத்தை சிதறவிடும், உணர்ச்சிவசப்படும், அல்லது துருதுருவென்று இருக்கும் பிள்ளைகளுக்குப் பள்ளிப்படிப்பு வழக்கமாகவே மிகக் கடினமானதாக இருக்கிறது. காரணம் கவனம் செலுத்துவதற்கும், நீண்டநேரம் அமைதியாக இருப்பதற்குமான தேவை வகுப்பறை பின்னணியில் பேரளவு அதிகரிக்கிறது. அத்தகைய பிள்ளைகள் எந்தவொரு காரியத்திலும் நீண்ட நேரம் கவனம் செலுத்துவதைக் கடினமாகக் காண்கின்றனர். ஆகவே துருதுருவென்று இருப்பதைவிட அவர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்? சிலருக்கு வீட்டிலோ பள்ளியிலோ சாதாரணமாகக் கற்றுக்கொள்வதில்கூட தொடர்ந்திருக்க முடியாத அளவுக்கு, கவனம் செலுத்த முடியாமை அவர்களுக்குக் கடுமையாக இருக்கிறது. அவர்கள் வகுப்புப் பயங்கரவாதியாக அல்லது வகுப்புக் கோமாளியாக இருப்பதற்காகத் தண்டனைப் பெறுவது வழக்கமானதே. ஏனென்றால், அவர்களுக்குத் தங்களுடைய நடத்தையைக் கட்டுப்படுத்துவதும், தங்களுடைய செயல்களின் பின்விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதும் கடினமானதாக இருக்கிறது.
இறுதியில், அவர்கள் தாழ்ந்த தன்-மதிப்பை வளர்த்துக்கொண்டு, தங்களைத்தாங்களே “மோசமானவர்கள்” என்றும் “முட்டாள்கள்” என்றும் பட்டம் சூட்டிக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்கின்றனர். எவ்வளவுதான் கஷ்டப்பட்டுப் படித்தாலும் தோல்வி மதிப்பெண்களையே வாங்குகிற இந்தப் பிள்ளைகள், தாங்கள் தோல்வியடைந்துவிடுவர் என்ற எண்ணமே அவர்களை நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து தோல்வியடையச் செய்கிறது.
கலக்கமடைந்த பெற்றோர் தங்களுடைய பிள்ளையின் நாசகரமான நடத்தையைக் கண்டு மிகக் கவலையுற்றுக் குழப்பமடைகின்றனர். அவ்வப்போது தந்தையும் தாயும் இந்த நிலைமைக்குக் காரணமாக ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொள்கிறார்கள்; கணவனுக்கும் மனைவிக்குமிடையே சண்டைச்சச்சரவு ஏற்படுகிறது. அநேக பெற்றோர் நல்லதையெல்லாம் மறந்துவிட்டு கோபத்தோடு திரும்பத்திரும்ப கெட்டதைப் பேசுவதிலேயே அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். ஆகையால், ஏற்றுக்கொள்ளப்படாத நடத்தைக்கான அவர்களுடைய பிரதிபலிப்புகள் இன்னும் அதிக ஏற்றுக்கொள்ளப்படாத செயல்விளைவையே ஏற்படுத்துகின்றன. இவ்வாறு, பிள்ளையோடு செயல்தொடர்புகொள்ளும் குடும்பத்தினரும், ஓரளவு மற்றவர்களும் எப்பொழுதும் கட்டுப்படுத்துவதற்கான ஒரு போராட்டத்தில் இறங்குகின்றனர். இது சமாளிக்கமுடியாத ஒரு பிள்ளையின்—கவனப் பற்றாக்குறை சீர்கேடு உள்ள பிள்ளையோ, அச்சீர்கேடு இல்லாத பிள்ளையோ, நடத்தையைப் புரிந்துகொள்ளாததனாலும் சமாளிக்காததனாலும் ஏற்படும் விளைவாக இருக்கிறது.
ரோணியோடு ஏற்பட்ட ஒரு தாயின் சொந்த அனுபவம்
“ரோணி இவ்வுலகத்தில் பிறந்த கணத்திலிருந்து அவன் ஒருபோதும் சந்தோஷமாக இருந்ததே கிடையாது. ஆனால் எப்போதும் எரிச்சலடைந்தவனாகவும் அழுதுகொண்டும் இருந்தான். ஒவ்வாமையின் காரணமாக அவனுக்குத் தோலில் தடிப்புகளும், காது நோய்களும், இடைவிடாத வயிற்றுப் போக்குமாக இருந்தன.
“ஆனாலும், ரோணியின் ஆரம்பகால தசை இயக்கங்களெல்லாம் நன்றாகத்தான் வளர்ந்துவந்தன. ஆகவே அவன் வெகு சீக்கிரமே உட்கார்ந்தான், நின்றான், நடந்தான்—ஓடினான் என்றும் நான் சொல்லவேண்டுமா என்ன? அவன் தூங்கும்போதே என் வீட்டுவேலையெல்லாம் அவசர அவசரமாக செய்தேன். ஏனெனில் என் சிறிய ‘சூறாவளி’ தூங்கி எழுந்துவிட்டால், வீட்டில் அங்குமிங்கும் வேகமாக சுற்றித்திரிந்து அவனுக்கு இஷ்டப்பட்ட எதையும் பிடித்திழுப்பான்; பெரும்பாலானவை அவனுக்கு இஷ்டமானவை. அவ்வாறு அவன் சுற்றித்திரிகையில் அவன் தனக்கும் வீட்டுக்கும் சேதம் ஒன்றும் விளைவிக்காதபடி அவனை அடக்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கும்!
“அவனால் மிகவும் குறைந்த நேரத்திற்குத்தான் எதன்மீதும் கவனம் செலுத்தமுடிந்தது. மிகவும் நீண்டநேரத்திற்கு அவனைக் கருத்தூன்றச் செய்தது எதுவும் கிடையாது. ஒரு இடத்தில் சும்மா உட்கார்ந்திருப்பது அவனுக்கு வெறுப்பான காரியமாக இருந்தது. சந்தேகமேயின்றி, எங்கெல்லாம் அவன் அமைதியாய் உட்கார்ந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்த்து நாங்கள் அவனைக் கூட்டிக்கொண்டு போனோமோ அங்கெல்லாம்—மிக முக்கியமாக சபை கூட்டங்களில்—இதே பிரச்சினைதான். அமைதியாய் ஒரு இடத்தில் உட்காராமல் இருப்பதற்கு அவனை அடித்ததெல்லாம் வீணாகப்போயிற்று. அவனால் முடியவே முடியவில்லை. நல்லெண்ணங்கொண்ட அநேகர் எங்களிடம் புகார் செய்தனர் அல்லது அறிவுரை கூறினர், ஆனால் ஒன்றுமே பலனளிக்கவில்லை.
“ரோணி நல்ல புத்திசாலிப் பையனாக இருந்தான். ஆகவே அவனுக்குக் கிட்டத்தட்ட மூன்று வயது ஆனபோது, தினமும் அவனோடு சிறிது நேரம் வாசிக்க நாங்கள் திட்டமிட்டுத் தொடங்கினோம். ஐந்து வயதானபோது அவனுக்கு நன்கு சரளமாக வாசிக்க முடிந்தது. பின்னர் அவன் பள்ளிக்குச் சென்றான். ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு, நான் வந்து ஆசிரியையிடம் பேசும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். அவர் ரோணியை முதன்முதல் பார்த்தபோது அவன் ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதூதனைப்போல் தோன்றினான்; ஆனால் இப்போது அவனைத் தன் வகுப்பில் ஒரு மாதம் வைத்திருந்த பின்னர்தான் அவன் வேறு எங்கோ இருந்து இறங்கி வந்திருக்கிறான் என்று தனக்குப் புரிந்தது என்பதாக என்னிடம் சொன்னார்! அவன் ஓயாமல் குதிக்கிறதும், மற்ற பிள்ளைகளை விழத் தள்ளுவதும், அல்லது அவர்களைப் பிடித்து இழுப்பதுமாகவே இருந்துவந்தான் என்று எனக்குத் தெரிவித்தார். அவன் அமைதியாக ஒரு இடத்தில் இருப்பது கிடையாது, முழு வகுப்புக்குமே அவன் தொந்தரவு கொடுத்துவந்தான். அவன் தன்னடக்கம் இல்லாதவனாக இருந்தான். அவனிடம் ஒரு எதிர்ப்பு மனப்பான்மை வளர்ந்துவந்ததையும் அவர் கவனித்தார். அவனை விசேஷ கல்வி சொல்லித்தரும் ஒரு வகுப்புக்கு அனுப்பும்படியும், அவனை அமைதிப்படுத்தும் ஒரு மருந்தை சிபாரிசுசெய்து பெறுவதற்காக நாங்கள் அவனை டாக்டரிடத்திற்குக் கொண்டுபோகும்படியும் ஆலோசனை கொடுக்கப்பட்டது. நாங்கள் தகர்ந்துபோனோம்!
“ரோணிக்கு மருந்து தகுந்த ஒரு பரிகாரமாக இருக்கவில்லை, ஆனால் அந்தக் குழந்தை மருத்துவர் நடைமுறையான சில ஆலோசனைகளைக் கொடுத்தார். ரோணி புத்திசாலியாக இருந்ததனால் அவனுக்குச் சலிப்புத்தட்டுகிறது என்பது அவரது அபிப்பிராயமாக இருந்தது. ஆகவே ரோணி எப்போதும் ஏதாவது செய்துகொண்டிருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும், அவனுக்கு அதிக நேசத்தையும் இன்னுமதிக பாசத்தையும் கொடுக்கும்படியும், நாங்கள் பொறுமையுடனும் நம்பிக்கை மனப்பான்மையுடனும் இருக்கும்படியும் அவர் ஆலோசனை கூறினார். அவனுடைய உணவில் மாற்றம் செய்வதன்மூலம் மற்றும் அவனுக்கு வயதாக வயதாக ரோணியின் பிரச்சினை குறைந்துகொண்டுவரும் என்பதாக அவர் யோசித்தார்.
“எங்கள் மகனைக் கண்ணும்கருத்துமாக கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் தன்னுடைய சக்தியைப் பலனளிக்கக்கூடிய ஒரு வழியில் செலுத்துவதற்குக் கற்றுக்கொள்ள அவனுக்கு உதவி தேவைப்படுகிறதென்றும் நாங்கள் உணர்ந்தோம். இதற்கு அதிக நேரம் தேவைப்படும்; ஆகவே நாங்கள் எங்கள் தினசரி வேலை அட்டவணைகளை மாற்றியமைத்தோம். பள்ளிப்பாடங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கவும், பொறுமையாக கற்றுக்கொடுத்து விஷயங்களை அவனுக்கு விவரிக்கவும் அதிக மணி நேரங்களைச் செலவழித்தோம். எதிர்மறையான வார்த்தைகளால் அவனைத் திட்டுவதையோ, யோசிக்காமல் செய்யும் காரியங்களுக்காகவும் குறும்புசெய்வதற்காகவும் அவனைக் குற்றம் சுமத்துவதையோ நிறுத்திவிட்டோம். அவனுடைய தாழ்ந்துபோன தன்-மதிப்பை உயர்த்திவிடுவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. கட்டளையிடுவதற்குப் பதிலாக, வற்புறுத்துவதற்குப் பதிலாக, கலந்தாலோசித்தோம். அவனை உட்படுத்தும் தீர்மானங்கள் ஏதாவது எடுக்கவேண்டியிருந்தால், அவனுடைய அபிப்பிராயத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.
“மற்ற பிள்ளைகளுக்குத் தானாகவே வருகிற சில காரியங்கள் ரோணிக்கு அவ்வளவு சுலபமாக வந்துவிடவில்லை. எடுத்துக்காட்டாக, அவன் பொறுமையாயிருப்பது எப்படியென்று கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது; அமைதியாய் இருப்பது எப்படி, அடங்கி ஒரு இடத்தில் உட்காருவது எப்படி, துருதுருவென்று இருப்பதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பவற்றையெல்லாம் அவன் கற்றுக்கொள்ள வேண்டியவனாயிருந்தான். ஆனால் அது கட்டுப்படுத்தப்பட முடிந்ததாகவே இருந்தது. தன்னுடைய வேகத்தைக் குறைக்கவேண்டும், தான் என்ன செய்துகொண்டிருந்தானோ, செய்யப்போகிறானோ அதைச் சிந்தித்துச் செய்யவேண்டும் என்று அவன் உணர்ந்துகொண்டதும் அவனால் எல்லாவற்றையும் சமாளிக்க முடிந்தது. அவனுக்கு 13 வயதானபோது, அவனுடைய நடத்தையெல்லாம் சாதாரணமாகிவிட்டது. சந்தோஷகரமாக அப்போதிலிருந்து, சாதாரணமாகவே எதிர்க்கத் தோன்றும் பருவவயதின்போதும்கூட எல்லாம் சுமுகமாக நடந்தேறிவந்தது.
“ரோணிக்குக் கொடுத்த அளவற்ற அன்பு, சம அளவு நேரம், பொறுமை ஆகியவற்றிற்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக பலன் கிடைத்திருக்கிறது!”
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கட்டுரை முழுவதிலும் ADD என்பது கவனப் பற்றாக்குறை சீர்கேட்டையும் (Attention Deficit Disorder), ADHD என்பது கவனப் பற்றாக்குறை மிகை இயக்க சீர்கேட்டையும் (Attention Deficit Hyperactivity Disorder) குறிக்கின்றன.