உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 6/8 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நட்சத்திரங்களை எண்ணுதல்
  • ஐக்கிய மாகாணங்களில் முன்னணி கொலையாளிகள்
  • பிள்ளைகளும் போரும்
  • உப்பில் அயோடின்
  • ஸ்டேடியத்திற்கு “மறு ஆசீர்வாதம்”
  • நாற்பது வருடங்களில் 80,000 பூமியதிர்ச்சிகள்
  • பசும் பெருஞ்சுவர்
  • சிறையில் சாத்தானிய வழிபாடு
  • தென் கடலில் அடி நீரோட்டங்கள்
  • கற்பழிப்பின்பேரில் அர்ஜன்டினா ஆராய்ச்சி
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1992
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1993
  • பிள்ளைகளைக் காப்பாற்ற முயற்சிகள்
    விழித்தெழு!—1994
  • இக்கட்டிலிருக்கும் பிள்ளைகள்
    விழித்தெழு!—1993
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 6/8 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

நட்சத்திரங்களை எண்ணுதல்

நட்சத்திரங்கள் நிறைந்த இரவு நேர வானத்தை நீங்கள் எப்போதாவது அண்ணாந்து பார்த்து, நீங்கள் பார்க்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை எத்தனையாயிருக்கும் என்று யோசித்ததுண்டா? காலாகாலமாக இருந்துவரும் இந்தக் கேள்விக்கு, வானமும் தொலைநோக்கியும் என்ற ஆங்கில பத்திரிகை சமீபத்தில் பதிலளித்தது. இதற்கான பதிலைக் கண்டுபிடிப்பது ஒருவர் நினைப்பதைப் போன்று சுலபமல்ல. வானியல் நோக்கீட்டுப் புத்தகங்கள் சொல்லுவதுபோல, வட அட்சரேகை பகுதிகளின் பெருநகரில் ஓரளவு இருட்டாக இருக்கும்போது சாதாரணமாக நோக்கும் ஒருவரால் வானத்தில் 2,862 நட்சத்திரங்களைக் காணமுடியும் என்பதாக இந்தப் பத்திரிகை குறிப்பிட்டது. ஆனால் இவ்வனைத்து நட்சத்திரங்களுமே, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ளூர் தொடுவானத்திற்கு மேல் காணப்படுவதில்லை; அநேகம் தோன்றி மறைகின்றன. மேலும், தலைக்குமேல் நேராக இருக்கும்போது எளிதில் காணப்படுகிற பல நட்சத்திரங்கள், தொடுவானத்திற்கு அருகில் இருக்கும்போது காணப்படுவதில்லை. இது ஏனென்றால், இவ்வளவு குறைந்த உயரத்தில், இந்த நட்சத்திரங்களின் ஒளி நோக்குபவர்களின் கண்களை வந்தடைய பூமியின் வளிமண்டலத்தின் பெரும்பகுதியைக் கடந்து வரவேண்டியிருக்கிறது. 40 டிகிரி வட அட்சரேகையில் இருந்து நோக்கும் ஒருவருக்கு, வருடம் முழுவதும் சுமார் 1,809 நட்சத்திரங்கள் காணப்படுகின்றன என்று வானமும் தொலைநோக்கியும் பத்திரிகை சொல்லி முடிக்கிறது.

ஐக்கிய மாகாணங்களில் முன்னணி கொலையாளிகள்

ஐக்கிய மாகாணங்களில் ஏற்படும் மரணத்திற்கான முக்கிய காரணங்கள் யாவை? அமெரிக்க மருத்துவ சங்க பத்திரிகை என்ற ஆங்கில பத்திரிகையில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று, ஒரு வருடத்தில் ஏற்பட்ட மரணங்களுக்குக் காரணமாயிருந்த முக்கிய புறக்காரணிகளை அல்லது மரபியலல்லாத காரணிகளை ஆராய்ந்தது. பரவலாக எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவர சுற்றாய்வுக்குப் பிறகு இந்த ஆராய்ச்சி கீழ்க்கண்ட முடிவுக்கு வந்தது: 1990-ல் ஐக்கிய மாகாணங்களில் ஏற்பட்ட 21,48,000 மரணங்களில், சுமார் 4,00,000 மரணங்கள் புகையிலையாலும்; 3,00,000 மரணங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சிப் பழக்கங்களாலும்; 1,00,000 மரணங்கள் மதுபானங்களாலும்; 90,000 மரணங்கள் நுண்கிருமிகளாலும்; 60,000 மரணங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்கள் அல்லது உணவையோ தண்ணீரையோ மாசுபடுத்தும் பொருட்கள் போன்ற நச்சுக் காரணிகளாலும்; 35,000 மரணங்கள் வெடி சாதனங்களாலும்; 30,000 மரணங்கள் பாலுறவு பழக்கங்களாலும்; 25,000 மரணங்கள் வாகன விபத்துக்களாலும்; 20,000 மரணங்கள் சட்டவிரோத போதை மருந்து உபயோகத்தினாலும் ஏற்பட்டன. மொத்தத்தில் பார்க்கையில், இப்படிப்பட்ட புறக்காரணிகள் ஒரு வருடத்தில் ஏற்பட்ட அனைத்து மரணங்களில் பாதிக்குக் காரணமாய் இருந்ததாக இந்த ஆராய்ச்சி கண்டுபிடித்தது.

பிள்ளைகளும் போரும்

சேவ் தி சில்ரன் என்ற ஒரு பிரிட்டிஷ் இடருதவி ஏஜன்ஸியின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளின்போது, போரானது, போர் வீரர்களைக் காட்டிலும் ராணுவத்தைச் சேராதவர்களுக்கு—குறிப்பாக பிள்ளைகளுக்கு—மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்கிறது. இந்த ஏஜன்ஸியின் வெளிநாட்டுப் பிரதிநிதி அசோஸியேட்டட் ப்ரஸ் ரிப்போர்ட்டில் இவ்வாறு சொன்னதாக மேற்கோள்காட்டப்பட்டார்: “போரில் உயிரிழக்கும் பத்து பேரில் ஒன்பது பேர் ராணுவத்தைச் சேராதவர்களாக இருக்கிறார்கள். உயிரிழப்பவர்களில் அதிகமானோர் பெரும்பாலும் பிள்ளைகளே—போரில் உயிரிழக்க ராணுவத்தினரைவிட மிக அதிக சாத்தியம் உள்ளவர்கள் பிள்ளைகள் ஆவர்.” இந்த 25-பக்க அறிக்கை, கடந்த பத்தாண்டுகளில் உலகத்தின் பலியான பிள்ளைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து, கீழ்க்கண்ட துயரகரமான புள்ளிவிவரங்களைத் தருகிறது. உலகம் முழுவதிலும் நடந்த போர்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்; 40 லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் ஊனமுற்றனர், குருடாக்கப்பட்டனர், மூளை பாதிக்கப்பட்டனர், அல்லது முடமாக்கப்பட்டனர்; 1.2 கோடி பிள்ளைகள் வீடிழந்தனர்; ஒரு கோடி பிள்ளைகள் அகதிகளாயினர்; 50 லட்சம் பிள்ளைகள் அகதிகள் முகாமில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்; 10 லட்சம் பிள்ளைகள் தங்களுடைய குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் உலகத்தில் ஒவ்வொரு 200 பிள்ளைகளிலும் ஒன்று போரினால் அதிர்ச்சியுற்று, அந்த உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தை சமாளிக்க உதவி தேவைப்படும் நிலையை அடைந்திருக்கிறது.

உப்பில் அயோடின்

உணவில் அயோடின் சத்து பற்றாக்குறை குறைந்தபட்சம் 60 கோடி மக்களின் நலனைப் பாதிக்கிறது என்பதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி கணக்கிடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், இதன் பற்றாக்குறை ஒரு வருடத்தில் சுமார் 1,00,000 குழந்தைகள் வளர்ச்சிக்குறைவுடன் ([cretins] கடுமையான தைராய்டு பற்றாக்குறையால் உடலிலும் மனதிலும் வளர்ச்சி குன்றிப்போய்) பிறக்கக் காரணமாய் இருந்து, மேலும் 5 கோடி குழந்தைகளின் மனம் மற்றும் சரீர வளர்ச்சியை தடைசெய்கிறது. அயோடின் பற்றாக்குறை கழலையையும்—தைராய்ட் சுரப்பி வீங்குதலையும்—உண்டுபண்ணுகிறது. அயோடின் பற்றாக்குறையைத் தவிர்ப்பது எளிதும் செலவற்றதுமாக இருக்கிறது—அயோடின் சேர்க்கப்பட்ட உப்பை உபயோகித்தால் போதும். 1995-ம் ஆண்டின்போது உலகமுழுவதும் உற்பத்தி செய்யப்படும் உப்போடு அயோடின் சேர்க்கப்படுவதற்கும், இவ்வாறு 2000-ம் ஆண்டின்போது அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் கோளாறுகளை ஒழித்துக்கட்டுவதற்குமான முயற்சிகள் நடத்தப்படுகின்றன.

ஸ்டேடியத்திற்கு “மறு ஆசீர்வாதம்”

இத்தாலியின் பேஸ்கராவைச் சேர்ந்த ஒரு கால்பந்தாட்ட அணியினர் தங்களைப் பீடித்துக்கொண்டிருந்த ‘துரதிர்ஷ்டத்தை’ நீக்க உதவும்படி சமீபத்தில் ஒரு கத்தோலிக்க பிஷப்பின் உதவியை நாடினர் என்று அறிக்கை செய்கிறது லா ரேப்பூப்ளிக்கா என்ற செய்தித்தாள். ஸ்டேடியம்தான் காரணம் என்று பொதுவாகக் கருதப்பட்ட நீண்டகால ‘துரதிர்ஷ்டத்தினால்’ வெறுப்படைந்த அந்த அணியின் தலைவர் வலுக்கட்டாயமாகத் தலையிடும்படி குருமாரை வேண்டிக்கொண்டார். கொஞ்ச காலத்திற்கு முன்பு, பாதிரியார் ஒருவர் அந்த ஸ்டேடியத்தை ஆசீர்வதித்தார், அந்த அணியினர் அடுத்தப் போட்டியில் வெற்றிபெற்றனர். ‘மறு ஆசீர்வதிப்பு’ வைபவத்திற்கு வந்திருந்த அலுவலர்கள், ஆதரவாளர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் இம்முறை இந்த அணி நல்லமுறையில் விளையாடும் என நம்புகின்றனர். இவ்வைபவம் ஸ்டேடியத்தின் காலரிகளிலேயே நேரடியாக பிஷப்பே நடத்திய பூசையாக இருந்தது. இந்த ஸ்டேடியம் முதலில் திறக்கப்பட்ட சமயத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டது. ஆனால் “தொடக்க விழாவின்போது காட்டிய தூபம் அதன் வல்லமையை இழந்துவிட்டது போல் தோன்றுகிறது,” என்று சொல்கிறது, லா ரேப்பூப்ளிக்கா.

நாற்பது வருடங்களில் 80,000 பூமியதிர்ச்சிகள்

“கொலோனுக்கு [ஜெர்மனி] பக்கத்தில் உள்ள பென்ஸ்பெர்கில் அமைந்துள்ள நிலநடுக்க ஆராய்ச்சி நிலையம், உலகத்தின் எல்லா பாகங்களிலும் 80,000-க்கும் அதிகமான பூமியதிர்ச்சிகளைப் பதிவு செய்திருக்கிறது,” என்று ஃப்ராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் ட்ஸைட்டுங் அறிக்கை செய்கிறது. இதை இந்நிலையத்தின் தலைவராயிருக்கும் பேராசிரியர் லூட்விக் ஆஹார்னர் அறிவித்தார். இந்நிலையம் 40 வருடங்களாக பூமியில் ஏற்பட்ட அதிர்ச்சிகளையும் நடுக்கங்களையும் ஆராய்ந்துவந்திருக்கிறது. உலகின் மற்ற பாகங்களில் ஏற்படும் பூமியதிர்ச்சிகளை இந்நிலையத்தால் பதிவுசெய்யமுடிந்தது எப்படி? சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வடக்குக் கடற்கரையில் வந்து மோதும் குளிர்கால புயல் அலைகளால் பூமியில் ஏற்படுத்தப்படும் மிகமிக மெல்லிய அதிர்ச்சிகளையும்கூட உணரக்கூடிய மிகவும் நுணுக்கமாக பதிவுசெய்யும் கருவிகளை உபயோகிப்பதன் மூலமே. ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள பூமியதிர்ச்சிகளுள் இந்நிலையத்தால் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகவும் தீவிரமான பூமியதிர்ச்சி ஏப்ரல் 1992-ல் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுமுறையில் 5.9 அளவுடையதாய் இருந்தது.

பசும் பெருஞ்சுவர்

நூற்றாண்டுகளுக்கு முன் ஆக்கிரமிக்க வந்த மங்கோலியப் படையினரைத் தடுப்பதில் ஓரளவு வெற்றியை மட்டுமே தந்த சீனப் பெருஞ்சுவர், இறுதியில் அதற்கு உரித்தான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கலாம். சயன்ஸ் நியூஸ்-ன் பிரகாரம், 1950-கள் முதற்கொண்டு இச்சுவரின் ஓரமாக அடர்த்தியான மரங்கள் நடப்பட்டு வந்திருக்கின்றன. பசும் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் இச்சுவர் சுமார் 30 கோடி மரங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதன் நோக்கம்: கோபி பாலைவனத்திலிருந்தும் மற்ற வறண்ட பகுதிகளிலிருந்தும் சீனாவுக்குள் வீசும் தூசிப் புயல்களுக்குத் தடையாக இருப்பதற்காகவே. அதன் விளைவு? 1950-களில், ஒவ்வொரு வசந்தகாலத்திலும் பீஜிங் நகரம் 10 முதல் 20 தூசிப் புயல்களால் தாக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு மாதமும் 30 முதல் 90 மணி நேரத்திற்கு காணும் நிலை ஒரு கிலோமீட்டருக்குக்கீழ் குறைந்தது. ஆனால் 1970-களிலோ ஒவ்வொரு வசந்தத்திற்கும் ஐந்துக்கும் குறைவான புயல்களையே கொண்டிருந்தது. இது மாதத்திற்கு பத்து மணி நேரத்திற்கும் சற்று குறைந்த காணும் நிலையை ஏற்படுத்தியது. காடுகளாலான பரந்த பகுதிகள், “ஒருவேளை 20-ம் நூற்றாண்டின் தீவிர காலநிலை மாற்றுத் திட்டங்களில் ஒன்றாக இருக்கலாம்” என்று வளிமண்டல ரசாயன நிபுணர் ஒருவர் சொன்னதாக சயன்ஸ் நியூஸ் மேற்கோள்காட்டுகிறது.

சிறையில் சாத்தானிய வழிபாடு

அ.ஐ.மா.-வின் கொலராடோவில் உள்ள சிறை அதிகாரிகள், சிறைக்கைதி ஒருவனுக்குத் தனது அறையில் சாத்தானிய சடங்குகளை நடத்த அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். மத்திய சிறைச்சாலை விதி பேய் வழிபாட்டைத் தடைசெய்தது. மேலும், அந்தச் சிறைக்கைதி வழிபாட்டுக்காக கேட்ட—ஒரு சிறிய மரத்தடி, ஒரு சேமக்கலம், கறுப்பு அங்கி ஒன்று, மெழுகுவர்த்திகள், மெழுகுவர்த்தி ஸ்டேன்ட்டுகள், ஒரு கிண்ணம், சாம்பிராணி போன்ற—சாதனங்களில் சிலவற்றை கருவியாகவும் உபயோகிக்கலாம் என்பதாக அதிகாரிகள் வாதிட்டனர். என்றபோதிலும், டென்வரில் உள்ள ஒரு மத்திய நீதிபதி சமீபத்தில் தீர்ப்பை மாற்றிவிட்டார். அந்தச் சிறைக்கைதிக்கு தனது மதவழிபாட்டைச் சிறையில் நடத்திக்கொள்ள சட்டப்பூர்வமான உரிமையுண்டு என்று தீர்ப்பு வழங்கினார். பேய் வழிபாட்டுக்கு எதிரான விதிமுறை சட்டப்பூர்வமானது அல்ல என்று நீதிபதி மேலும் கூறிமுடித்தார். அசோஸியேட்டட் ப்ரஸ் ரிப்போர்ட் ஒன்றின்படி, “பேய்க்கு உரித்தானதை பேய்க்கு கொடுத்தேயாக வேண்டும்,” என்று அந்த நீதிபதி தனது தீர்ப்பில் எழுதினார். இந்தச் சிறைக்கைதி கடத்திக்கொண்டு போன குற்றத்திற்காக பத்து-வருட தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

தென் கடலில் அடி நீரோட்டங்கள்

தென் பசிபிக்கில் புதுமதத் தொகுதிகள் (New Religious Groups, [NRGs]) என்று அழைக்கப்படுகிறவற்றால் முக்கிய தொகுதிகளின் சர்ச் அதிகாரங்கள் கலக்கமடைகின்றன என்பதாக பிஜி தீவுகளைத் தலைமையிடமாகக் கொண்ட பசிபிக் சர்ச்சுகளின் கூட்டுக்குழு அறிக்கை வெளிப்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட இந்தப் புதுமதத் தொகுதியினர், முக்கியமாக, அசெம்பிளி ஆஃப் காட், செவன்த் டே அட்வன்டிஸ்ட்கள், மார்மன்கள், யெகோவாவின் சாட்சிகள், பாஹாய் விசுவாசத்தினர் ஆகியோராவர். ஏற்கெனவே இத்தீவிலுள்ள சுமார் 20 சதவீதத்தினர் இந்த மதங்களில் சேர்ந்துவிட்டனர் என்று மேன்ஃப்ரட் அர்ன்ஸ்ட் என்பவரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை சொல்கிறது. புதுமதத் தொகுதிகள் அரசியல் மாற்றங்களைத் தடைசெய்கின்றன; ஏனென்றால் அவற்றில் சில அரசியல் கட்சிகளில் சேருவதில்லை அல்லது அரசியல் முயற்சிகளுக்கு எதிராக இருக்கின்றன; இன்னும் மற்றவை தொழில் சங்கங்களில் சேருவதில்லை. “அர்ன்ஸ்ட் சொல்லுகிறபடி, பாரம்பரியமாய் வருகிற முக்கிய தொகுதிகளின் சர்ச்சுகள் கவர்ச்சியற்று போனதன் காரணமாக புதுமதத் தொகுதிகள் மிகப் பிரபலமாகிக்கொண்டு வருகின்றன,” என்பதாக மைனிச்சி டெய்லி நியூஸ் சொன்னது.

கற்பழிப்பின்பேரில் அர்ஜன்டினா ஆராய்ச்சி

ஜனவரி முதல் அக்டோபர் 1994 வரை, கோர்டோபா என்ற ஒரேவொரு அர்ஜன்டின மாகாணத்தில், 254 கற்பழிப்பு சம்பவங்கள் அறிக்கை செய்யப்பட்டன. கோர்டோபாவிலிருந்து வந்த ஒரு போலீஸ் அறிக்கை, “பாலுறவு சம்பந்தமாக கெடுக்கப்படுதலைச் சுற்றியிருக்கும் கட்டுக்கதையை கைவிட்டது” என்பதாக போனஸ் அயர்ஸைச் சேர்ந்த செய்தித்தாள் க்ளாரின் குறிப்பிட்டது. கற்பழிப்பவர்கள் எப்பொழுதுமே மறைவிலிருந்து பதுங்கி முன்பின் தெரியாத, ஒடுக்கப்பட்டிருப்பவர்களை இரையாக்கும், பாலுறவுப் பசியெடுத்து அலைபவர்களாக இருப்பதில்லை. இந்த அறிக்கையின்படி, கற்பழிக்கப்படும் ஒவ்வொரு 10 பேரிலும் 4 பேர் தங்களுடைய சொந்த வீடுகளில் தங்களுடைய சொந்த அப்பாமார்களாலும், மாற்றாந்தகப்பன்மார்களாலும், அல்லது மற்ற உறவினர்களாலும் கற்பழிக்கப்பட்டவர்களாவர். போலீஸ் அறிக்கையில் உள்ள மற்ற புள்ளிவிவரங்கள் கீழ்க்கண்டவற்றை காண்பிக்கின்றன: ‘இந்த வருடத்தில் அறிக்கை செய்யப்பட்ட 254 கற்பழிப்பு சம்பவங்களில், 36 சதவீதம் பலியானவர்களின் வீடுகளிலும், 23 சதவீதம் நடன அரங்கத்திலிருந்து வெளியேறும்போதும், 13 சதவீதம் பொது தெருக்களிலும், 10 சதவீதம் வெட்டவெளிகளிலும், 6 சதவீதம் கட்டடப்பணி நடக்கும் இடங்களிலும், 3 சதவீதம் கால்பந்தாட்ட மைதானங்களிலும், பேருந்து நிலைய கழிப்பறைகளிலும், சிறைச்சாலையின் அறைகளிலும், சுற்றுப்பிரயாண பேருந்துகளிலும் நடைபெற்றன.’ இந்தச் சம்பவங்களில் 66.54 சதவீதத்தைப் போலீஸ் தீர்த்துவைத்தது என்று சொல்லி இந்த அறிக்கை முடிவடைகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்